Home தொடர்வரலாற்றில் பொருளாதாரம் – 18

வரலாற்றில் பொருளாதாரம் – 18

by Viswanaath Thyagaraajan
0 comments

​சென்ற அத்தியாயத்தில், ரோமானியர்கள் பிரிட்டன் நிலப்பரப்பை விட்டு வெளியேறும்போது, “உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்” எனக் கூறிச் சென்றதையும், ஆனால் அதற்குள்ளாகவே அவர்கள் பிரிட்டானிய மக்களிடம் நறுமணப் பொருட்களின் சுவையை ஆழமாக அறிமுகப்படுத்தியிருந்ததையும் பார்த்தோம். ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சிக் காலத்தில், வர்த்தகம் மற்றும் பணப் பரிமாற்ற முறைகள் அவர்களின் நிர்வாக வசதிக்கேற்பச் செம்மையாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

பிரிட்டனின் இருண்ட காலம் (Dark Ages)

​தமிழக வரலாற்றில் களப்பிரர் காலத்தை எவ்வாறு ‘இருண்ட காலம்’ என்று அழைக்கிறோமோ, அதேபோல் பிரிட்டானிய வரலாற்றிலும் ரோமானியர் வெளியேறிய கி.பி. 410 முதல், ஸ்டாம்ஃபோர்ட் பாலப் போர் நடந்த கி.பி. 1066 வரையிலான காலம் ‘இருண்ட காலமாக’க் கருதப்படுகிறது.

​ரோமானியர்கள் வெளியேறியவுடன், இங்கிலாந்தின் பல்வேறு நிலப்பரப்புகளில் இருந்த சிறு குறு தலைவர்கள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கினர். ஐந்தாம் நூற்றாண்டு (கி.பி. 500) முதல் ஒன்பதாம் நூற்றாண்டு (கி.பி. 900) வரையிலான காலகட்டத்தில், இங்கிலாந்தில் ஏழு முக்கிய அரசுகள் ஆட்சி புரிந்தன. இவர்கள் வடக்கு ஜெர்மனி, டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய பகுதிகளிலிருந்து ரோமானிய ஆட்சிக் காலத்திலேயே இங்கிலாந்தில் குடியேறிய ஆங்கிள்ஸ் (Angles), சாக்சன்ஸ் (Saxons) மற்றும் ஜூட்ஸ் (Jutes) ஆகிய பழங்குடி இனத்தவர் ஆவர். இக்காலகட்டம் ஹெப்டார்ச்சி’ (Heptarchy) என்று அழைக்கப்படுகிறது.

வைக்கிங்களின் வருகையும் வணிகமும்

​இவர்களுக்குப் பிறகு வந்தவர்களே ‘வைக்கிங்குகள்’ (Vikings). இவர்கள் உலக வணிக வரலாற்றில் மிக முக்கியமான கடலோடிகள். கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அந்த நிலப்பரப்பைக் கண்டறிந்து வணிகம் செய்தவர்கள் இவர்கள் என்பது இவர்களின் தனிச்சிறப்பு.

​வணிகம் அவ்வளவாக வளர்ச்சியடையாத அந்தச் சூழலில், வைக்கிங்குகள் என்ன மாதிரியான வர்த்தகத்தில் ஈடுபட்டனர்?

​உண்மையில், வைக்கிங்குகளின் முக்கியத் தொழிலாக இருந்தது ‘கொள்ளையடிப்பது’ தான். தாங்கள் கொள்ளையடிக்கச் சென்ற இடங்களில் இருந்த மக்களைப் பிடித்து வந்து, அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த டப்ளின் (Dublin) அடிமைச் சந்தையில் விற்பனை செய்தனர். ஒருவேளை, அமெரிக்க நிலப்பரப்பைக் கண்டுபிடித்த வைக்கிங்குகள், அங்கிருந்த பழங்குடியினரையும் அடிமைகளாகப் பிடிக்க முயன்றிருக்கலாம். ஆனால், அமெரிக்கப் பழங்குடியினர் அதை எதிர்த்துப் போர் புரிந்ததால், வைக்கிங்குகளால் அங்குத் தங்களது ராஜ்ஜியத்தை நிலைநாட்ட முடியாமல் போனது.

​கடல் வழியாக இவர்கள் மற்ற சந்தைகளுக்குக் கொண்டு சென்ற முக்கியப் பொருட்கள்:

  • ​விலங்குகளின் உரோமம் (Fur)
  • ​செம்பழுப்பு நிற ரத்தினக் கற்கள் (Amber)
  • ​யானைத் தந்தங்கள்
  • ​தேன்

​இவற்றைப் பார்க்கும்போது, வைக்கிங்குகள் தொழில் ரீதியாகவோ அல்லது வணிக ரீதியாகவோ பெரிய அளவில் நவீனமடையவில்லை என்பது புலனாகிறது.

அரேபிய வணிகர்களின் மாயக் கதைகள்

​வைக்கிங்குகள் சிறந்த கடலோடிகளாக இருந்தும், ஏன் அவர்களால் கிழக்கத்திய நாடுகளுக்கு நேரடியாகச் சென்று வணிகம் செய்ய முடியவில்லை?

​அதற்கு முக்கியத் தடைக்கல்லாக இருந்தது ஆப்பிரிக்கக் கண்டத்தின் நிலப்பரப்பு. மேலும், அரேபிய வணிகர்கள் தாங்கள் நறுமணப் பொருட்களை எங்கிருந்து கொள்முதல் செய்கிறோம் என்பதை மிக ரகசியமாக வைத்திருந்தனர். இதற்குக் காரணங்கள் பல:

  1. ​அதிக விலையை நியாயப்படுத்த.
  2. ​வணிகப் போட்டியாளர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள.
  3. ​லாபத்தைத் தக்கவைக்க.

​தங்கள் வணிக மூலத்தை ரகசியமாக வைக்க அவர்கள் கையாண்ட வழி – நறுமணப் பொருட்கள் கிடைக்கும் இடங்களைப் பற்றிப் பயங்கரமான கதைகளைப் பரப்புவது. அத்தகைய சில கதைகள் இதோ:

  • இலவங்கப்பட்டைப் பறவை (Cinnamologus): மனிதர்கள் நெருங்க முடியாத உயரமான மலைகளில், ‘சினமொலோகஸ்’ என்ற ராட்சதப் பறவைகள் இலவங்கப்பட்டைக் குச்சிகளைக் கொண்டு கூடு கட்டியிருக்குமாம். அரேபிய வணிகர்கள் பெரிய இறைச்சித் துண்டுகளை மலையடிவாரத்தில் போட்டுவிட்டு மறைந்து கொள்வார்களாம். அந்தப் பறவை இறைச்சியைத் தூக்கிக் கொண்டு கூட்டில் வைக்கும்போது, அதன் எடை தாங்காமல் கூடு உடைந்து இலவங்கப்பட்டைகள் கீழே விழுமாம். அதைத்தான் இவர்கள் சேகரித்து வருவதாகக் கதை விட்டனர்.
  • பறக்கும் பாம்புகள்: சாம்பிராணி மரங்கள் அடர்ந்த காடுகளில் இருக்கும் என்றும், அவற்றைப் ‘பறக்கும் பாம்புகள்’ காவல் காப்பதாகவும் கூறினர். ஒரு ரகசிய மூலிகையைப் புகையச் செய்து, அந்தப் பாம்புகளை மயக்கமடையச் செய்த பிறகே சாம்பிராணியைச் சேகரிக்க முடியும் என்று நம்ப வைத்தனர்.

​இது தவிர, இந்தியப் பெருங்கடல் பகுதியில் டண்டான்’ (கப்பலையே விழுங்கும் விலங்கு), தீவு போன்ற பிரம்மாண்ட ஆமை (ஜஸராத்), பஹமுத் போன்ற கற்பனை மிருகங்கள் உலவுவதாகக் கதைகளைப் பரப்பினர்.

ஏகபோக உரிமையும் லாபமும்

​இப்படியான கதைகள் அரேபிய வணிகர்களுக்கு ஒரு ‘ஏகபோக உரிமையை’ (Monopoly) வழங்கின. இதுவே அவர்களை ‘மசாலாப் பாதை’யின் (Spice Route) மன்னர்களாக மாற்றியது. பல கைகள் மாறி ஐரோப்பிய வாடிக்கையாளரிடம் செல்லும்போது, நறுமணப் பொருட்கள் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தும் ஆடம்பரப் பொருட்களாக மாறின.

​இந்த அபரிமிதமான லாபத்தைக் கண்ட பிற சாம்ராஜ்ஜியங்கள், அந்த லாபத்தைத் தங்கள் வசப்படுத்தத் துடித்தன. அரேபிய வணிகர்களுக்கு இது புதிய சவாலாக உருவெடுத்தது. முன்னதாக ரோமானியர்கள் கொடுத்த நெருக்கடி, அவர்களின் வீழ்ச்சிக்குப் பின் நீங்கியிருந்தது. ஆனால் இப்போது புதிய சக்திகள் முளைத்தன.

​லாபத்தைத் தங்கள் வசப்படுத்த அந்த ராஜ்ஜியங்கள் எடுத்த முயற்சிகள் என்ன?

​(தொடரும்…)

Author

You may also like

Leave a Comment