போன அத்தியாயத்தில் ஹுண்டி பத்திரங்களைப் பற்றிப் பேசினது உங்களுக்கு ஞாபகம் இருக்குமென நினைக்கிறேன். அதனை வாசித்த ஒருவர், ‘ஹுண்டி பத்திரங்கள் நமது பாரதத் திருநாடு பொருளாதாரத்தில் எத்தகைய உயர்ந்த இடத்தில் இருந்திருக்கிறதென்பதற்குச் சான்றாகும்’ என்று என்னிடத்தில் சொன்னார். இந்த இடத்தில் ஒன்றைத் தெளிவு படுத்துவது அவசியமென நினைக்கிறேன். வேட்டையாடிகளாக இருந்த மக்கள் சமூகமாக எப்படி வாழத் தொடங்கினரென்று சொல்லி இருந்தேன். அதுபோன்ற மாற்றம் உலகத்திலுள்ள எல்லா நிலப்பரப்புகளிலும் நடந்து கொண்டு இருந்தது எனவும் சொல்லி இருந்தேன். பொருளாதார வளர்ச்சியும் அதே போன்றுதான்.
பொருளாதார வளர்ச்சி, வழிபாட்டு மையங்கள் வணிக மையங்களாகச் செயல்பட்டதும், வணிக நோக்கங்களுக்காக வணிகச்சாலை அமைக்கப்பட்டதும், வணிக நிதி கருவிகள் உருவாக்கப்பட்டதும் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன. அத்தகைய நிகழ்வுகள்தான் சமூக வளர்ச்சியை அடுத்தடுத்த கட்டங்களுக்குக் கொண்டு போயின.
நமது இந்திய நிலப்பரப்பில், எப்படி.. அன்றைக்கு ஹுண்டி பத்திரங்கள் பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன் படுத்தப்பட்டதோ.. அது போல பல்வேறு சமூகங்களில் பல்வேறு பெயர்களில் பணப் பரிமாற்றத்திற்கான பத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
எப்படி சைவ, வைணவ சமயக் கோயில்கள் பொருளாதார மையங்களாகச் செயல்பட்டனவோ, மத்திய கிழக்கு நிலப்பரப்புப் பகுதிகளில் இஸ்லாம் ஆதிக்கம் செலுத்திய இடங்களில் ஷக் பத்திரங்கள் நடைமுறையில் இருந்தன. இவற்றை நிர்வகித்தது பையத் அல் மால் / பைத்துல் மால் என்கிற இஸ்லாமிய வழிபாட்டு மையம் சார்ந்த நிதி அமைப்பு. இது போல ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் ஒவ்வொரு நிதிக் கருவிகள் பயன்பாட்டில் இருந்தன. அந்த நிதிக் கருவிகளை நிர்வகிக்க ஒரு அமைப்பு இருந்தது.
கடல் சார்ந்த வணிகத்தில் பெரும்பாலும் பண்டமாற்று முறைதான் அதிகக் காலம் பயன்பாட்டில் இருந்தது. பிறகு எல்லைகள் கடந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப் பட்டன.
சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கடல் வணிகத்தில் பண்டமாற்று முறை தோற்றுப் போனதற்குச் சில காரணங்களைச் சொல்கிறார்கள். அவற்றை நாம் ஏற்கனவே பண்டமாற்று முறை தோற்றுப் போன காரணங்களில் பார்த்திருக்கிறோம்.
சுமார் கி.மு. 3000 – கி.மு. 1500 காலத்தில் பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்தது. கடல் வணிகமென்பது உள்ளூர் வணிகம் போல அடையாளக் கற்களை வைத்து எல்லாம் கணக்கிடுவது சாத்தியம் இல்லாத ஒன்றென்பதால் வேறு விதமாகப் பரிவர்த்தனை செய்தார்கள். இரு வெவ்வேறு விதமான நிலப்பரப்பில் வாழும் மக்களுக்குத் தேவைகள் வெவ்வேறு மாதிரியாக இருக்கும். அதனால், வணிகர்கள் பண்டமாற்றுப் பொருட்களைத் தவிர்த்துவிட்டு பொதுவாய் எல்லா இடங்களிலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பொருட்களைக் கட்டணமாக ஏற்றுகொண்டனர். சோழிகள், ஒரே சீராக வெட்டப்பட்ட உலோகக் கட்டிகள் அல்லது உப்பு.
உப்பு ஒரு வணிக நிதிக் கருவியாகப் பயன்பட்டது என்பது வரலாற்றில் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
உப்பு ஒரு வணிக நிதி கருவியாகப் பயன்பட்டது என்பதால்தான் பெரிய வழிபாட்டு மையங்களாகவும், பொருளாதார மையங்களாகவும் இல்லாத சிறு தெய்வ கோயில்களில், கிராமத்துக் கோயில்களில் உப்புக் காணிக்கை என்பது கொண்டு வரப்பட்டது. அதிகமான உப்பு கைவசம் இருந்ததால் பொருளாதார மையங்களாக இல்லாத கோயில்கள் வணிகத் திறன் கொண்டவையாக மாறின. நவீன பொருளாதாரக் கொள்கையில் இதனை PURCHASING POWER என்பார்கள்.
கொஞ்சம் கவனித்துப் பார்த்தீர்களென்றால் அம்மன் கோயில்களில் உப்புக் காணிக்கை அதிகம் நடைமுறையில் இருப்பது தெரியும். சில முருகன் மற்றும் சிவன் கோயில்களில் உப்புக் காணிக்கை ஏற்றுக்கொள்ளப் படுகிறது.
உப்பைத் தவிர்த்து மற்றொரு உணவுப் பொருள் வணிக நிதிக் கருவியாக இருந்தது என்றால் அது மிளகுதான். முன் சொல்லியது போல மிளகும் காணிக்கைப் பொருளாக பல கோயில்களில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
பண்டைய எகிப்தியர்கள் மிளகைப் பல வகைகளில் பயன்படுத்தினர். முக்கியமாக இறந்த உடல்களைப் பதப்படுத்தப் பயன்படுத்தினார்கள். பண்டைய எகிப்தை ஆண்ட மன்னர் ராம்சேவின் பதப்படுத்தப்பட்ட இறந்த உடலின் நாசி துவாரங்களில் மிளகு இருந்ததை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தார்கள். பண்டைய எகிப்தியர்கள் மிளகை நறுமண எண்ணெய் தயாரிக்கப் பயன் படுத்தினார்கள். மேலும் மிளகை வைத்திருப்பதை சமூகக் கௌரவமாகவும், அந்தஸ்தாகவும் கருதினார்கள்.
முசிறி துறைமுகத்தில் இருந்தும், மற்றும் கொற்கைத் துறைமுகத்தில் இருந்தும் பண்டைய எகிப்தியர்களுடன் அக்காலத் தமிழ்நாடு மற்றும் கேரள நிலப்பரப்பில் வாழ்ந்த வணிகர்கள் வணிகம் செய்தார்கள்.
முசிறித் துறைமுகம் சேரர்களின் ராஜ்ஜியத்தின் கீழ் இருந்தது. கொற்கைத் துறைமுகம் பாண்டியர்களின் ராஜ்ஜியத்தின் கீழ் இருந்தது. இந்த இரு ராஜ்ஜியங்களுடனும் சோழர்களின் உறவு என்பது இந்த இரு துறைமுகங்கள் மூலம் நடைபெற்ற வணிகமும், அதன் மூலம் கிடைத்த லாபம் மற்றும் வரிகளே காரணம் என்பது பெரிதும் பேசப் படாத உண்மை.
இந்த வணிகத் தொடர்புதான் இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தக் காரணமாக அமைந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா ?
ரோமானிய மன்னர் அகஸ்தஸ் பண்டைய எகிப்தைப் படையெடுத்து கைப்பற்றினார். இந்தப் படையெடுப்பின் மூலம் ரோமானியர்களுக்குக் கிடைத்தது வெற்றி மட்டுமல்ல, மிளகு போன்ற பொருட்களுக்கான அடிமைத்தனமும்தான்.
அந்த அடிமைத்தனம் எந்தளவிற்கு இருந்தது என்றால் பண்டைய ரோமானிய வரலாற்று ஆசிரியர் பிளினி மூத்தோன் ‘ரோமானிய ராஜ்ஜியத்தின் தங்கம் மொத்தமும் இந்தியாவிற்குச் செல்கிறது’ என தனது இயற்கை வரலாறு என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
ரோமானியர்கள் மிளகை எவ்வளவு விரும்பினார்கள், அதனை எப்படி எல்லாம் கொண்டாடினார்கள் என்று பின்னர் பார்க்கலாம்.
ரோமானிய மன்னர் கிளாடியஸ் கி.பி. 43 ஆம் ஆண்டு பிரிட்டனைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் ரோமானியக் கலாச்சாரம் மட்டுமல்ல அவர்களது சுவை ரசனையும் அறிமுகமானது.
பின்னர் கி.பி. 410 ரோமானிய மன்னர் ஹொனோரியஸ் ரோமானியப் படைகளை, பிரிட்டனில் இருந்து வெளியேறி திரும்பி வரச் சொல்லி உத்தரவிட்டார். பின்னர் பிரிட்டன் மக்களுக்கு எழுதிய அறிவிப்பில் அவர்களை அவர்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என அறிவித்தார்.
ரோமானிய ராஜ்ஜியம் பிரிட்டனில் இருந்து வெளியேறியது, அதன் பின் பிரிட்டன் ராஜ்ஜியம் சக்தி வாய்ந்த ராஜ்ஜியமாக உருவானது எல்லாம் உலகப் பொருளாதார வரலாற்றில் அவசியம் சொல்லப்பட வேண்டிய ஒன்று. ஆனால், அதனைப் பின்னர் பார்க்கலாம். அதற்கு முன்னால் பல விஷயங்களை உங்களுக்குச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது.
உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் நவீன உலகம் அதன் தன்மையை அடைந்ததற்கு, பண்டைய கால வணிகப் பொருளாதாரம்தான் காரணம்.
பண்டைய காலத்தில், பல நிலப்பரப்புகளுக்கிடையான வணிகப் பரிவர்த்தனைகள், சமூக மக்களின் வாழ்வியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. கலாச்சாரத்தையும், மக்களது நம்பிக்கையையும் வடிவமைத்ததில் வணிகப் பொருளாதாரம் பெரும் பங்கு வகித்தது என்றால் அது மிகை இல்லை.
பண்டைய மெசபடோமியாவிற்கும், சிந்து சமவெளி நாகரிகத்திற்கும், பண்டைய தமிழகத்திற்கும் வணிக ரீதியான தொடர்பு இருக்கிறது. நிலம் சார்ந்த வணிகப் பாதையான பழைய நறுமணப் பாதை மூலமாகவும் (OLD SPICE ROUTE) மற்றும் கடல் சார்ந்த வணிகப் பாதை மூலமாகவும் இந்த இரு நிலப்பரப்புகளுக்கு இடையே வணிகம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அதன் தாக்கம் இன்றைய வழிபாட்டு முறையிலும் குறிப்பாக இந்து சமய வழிபாட்டு முறையிலும் காண முடிகிறது.
மெசபடோமியா லாமாஸ் – பாரத காமதேனு.
இரு புராண மிருகங்களின் படங்களையும் உங்களது பார்வைக்குத் தருகிறேன்.
காமதேனு பற்றிய புராணக் கதைகள் பல இருந்தாலும் அதன் முக்கிய அம்சமாகச் சொல்லப்படுவது என்னவெனில்.. ‘எத்தனை வரங்களை வேண்டிக் கேட்டாலும் அந்த வரங்களைத் தரும்’.
‘லாமாஸ் மெசபடோமியா அசிரிய ராஜ்ஜிய அரசர்கள் தங்களுக்குத் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு தந்து எதிரிகளைப் போரில் வெல்வதற்கான வலிமையைக் கொடுக்கும்’ என நம்பினார்கள்.
லாமாஸ் மற்றும் காமதேனு ஆகிய இரு புராண மிருகங்களுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமைகள் என்னவென்று பார்த்தால் –
லாமாஸ் – மனித ஆண் தலை, காளையின் உடல் மற்றும் பறவையின் இறக்கைகள்.
காமதேனு – மனித பெண் தலை, பசுவின் உடல் மற்றும் பறவை இறக்கைகள்.
என்ன ஒரு வித்தியாசம் என்றால் காமதேனுவின் காலம் குறித்த தகவல்கள் இல்லை.
பாரத நிலப்பரப்பில் இருந்து மெசபடோமியாவிற்குப் போனதா? இல்லை, அங்கிருந்து இங்கு வந்ததா? என்று இனி வரப் போகும் அத்தியாயங்களில் பார்ப்போம்.
தொடரும்..