Home தொடர்வரலாற்றில் பொருளாதாரம் – 22

அராபியர்களின் வணிக ஆதிக்கத்தாலும் அவற்றால் விளைந்த பொருட்களின் விலை உயர்வாலும் பொதுமக்கள் அதிக சிரமத்திற்கு ஆளானார்கள். பொதுமக்கள் என்பதை விடப் பெரும் வணிகர்கள் என்று சொல்லலாம். லாபம் என்பது கிடைத்தாலும் அந்தப் பொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்து வணிகம் செய்தால் அதைவிட அதிக லாபம் கிடைக்கும் என்பதைக் கணக்கிட்டார்கள். ஆனால் நேரடியாகப் போய்க் கொள்முதல் செய்ய இந்திய நிலப்பரப்புக்குச் போகும் கடல் வழி தெரியாது. ‘சரி முயன்று பார்ப்போம்’ எனக் களத்தில் இறங்கலாமெனப் பார்த்தால், அரேபியர்கள் தங்களது வணிகப் பெரும்பான்மையைக் காப்பாற்றிக் கொள்ள உருவாக்கி மக்களிடத்தில் உலாவ விட்டு இருந்த கடல் கடந்த நிலப்பரப்பைப் பற்றிய பயங்கரமான கதைகள் அவர்களைப் பயம் கொள்ளச் செய்தன.

இவற்றையெல்லாம் மீறி கடல் வணிகத்திற்கான வழிகளைக் கண்டுபிடிக்க மேற்கத்திய நிலப்பரப்பின் அரசுகள் ஏன் முயன்றன? மேற்கத்திய அரசுகள் எனச் சொல்வதை விட இங்கிலாந்து அரசு ஏன் முயன்றது? என்பதைப் பார்ப்போம்.

அதற்கு முன்னால், இங்கிலாந்து நாட்டின் தொழில் புரட்சி அல்லது தொழிற்சாலை அலை நடந்தது 18-ஆம் நூற்றாண்டு. அதாவது 15-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாடு ஆசிய நாடுகளுக்கான வணிகக் கடல் பாதையைக் கண்டுபிடிக்க முயற்சிகள் எடுத்தது. அதற்கான நிதியை அரசு, ஆட்சியாளர்கள், வணிகர்கள் மற்றும் முக்கியமாகத் தேவாலயங்கள் கொடுத்தன.

தேவாலயங்கள் வணிகத்தின் பெயரில் நிதி அளித்தனவா? எனக் கேட்டால், ‘இல்லை’ என்பதுதான் பெரும்பாலான நேரங்களில் பதிலாக இருக்கும். இந்த நேரத்தில் அன்றைய கிறித்தவச் சமயத்தைப் பின்பற்றிய அரசர்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அதாவது கிறித்தவ மதத்தை எவ்வளவு தூரம் பரப்புகிறோமோ அந்த அளவிற்கு மரணத்திற்குப் பிறகான மேலுலக வாழ்க்கையில் சிறப்பான இடம் கிடைக்குமென்று. இதனை உதாரணமாகக் காட்டி அன்றைய அரசவையில் அல்லது வணிகச் சபையில் கடல் கடந்த நிலப்பரப்பில் மதப் பிரச்சாரம் செய்ய அனுமதியும் அதற்குத் தேவையான நிதியையும் பெற்றனர். அரச நிதியும் தங்குதடைய இல்லாமல் கிடைத்தது. மதப் பிரச்சாரம் என்கிற மத போதகருடன் வணிகர்களும் சென்றனர். போகிற இடத்தில் என்ன மாதிரியான மத நம்பிக்கை மற்றும் சடங்கு இருக்குமெனத் தெரியாததால் பல சமயங்களில் மத போதகரும் வணிகர் என்கிற முகமூடியில்தான் வந்திருக்கிறார்கள்.

இந்தியாவிற்கு வந்த முதல் புனித தோமையர், அப்பான்ஸ் என்கிற வணிகருடன் சக வணிகர் என்கிற போர்வையில்தான் வந்தார். புனித தோமையர் மதப் பிரச்சாரம் என்கிற ஆன்மீக நம்பிக்கையில் வந்திருந்தாலும் அவருடன் வந்தவர் ஒரு வணிகர். மேலும் அவரைப் பற்றிய விவரங்கள் அதிகம் இல்லை என்பதால் தோமையர் இறந்த இடத்தை வைத்துச் சில விஷயங்களைப் பார்க்கலாம்.

புனித தோமையர் வாழ்ந்தது சின்னமலை மற்றும் பரங்கிமலையில். அவர் இறந்தது பண்டைய மயிலாப்பூரும் இன்றைய சாந்தோம் பகுதியும் ஆகும். பண்டைய காலத்தில் மயிலாப்பூர் ஒரு வணிகத் துறைமுகமாக விளங்கியது. அங்கிருந்து பண்டைய ரோமானிய நாடுகளுக்குப் பல்வேறு பொருட்களை வணிகம் செய்து கொண்டிருந்தனர்; அவற்றில் முக்கியப் பொருட்கள் ஜவுளித் துணி மற்றும் பட்டுத் துணி ஆகியவை.

பண்டைய காலத்தில் சைதாப்பேட்டைக்கு இராகுநாதபுரம் என்று பெயர். மாங்காடு பகுதிக்குப் பக்கத்தில் மேல் இராகுநாதபுரம் என்று ஒரு பகுதி இருக்கிறது. மேல் இராகுநாதபுரம் என்று இருந்தால் கீழ் இராகுநாதபுரம் ஒன்று இருக்க வேண்டும்தானே? அப்படி எதுவும் இல்லை. சரி, சைதாப்பேட்டைக்குப் பக்கத்தில் எங்கோ இருந்திருக்க வேண்டும். இப்போது பிரச்சனை அது இல்லை.

ஒரு பேச்சுக்குச் சைதாப்பேட்டையில் தொடங்கி மாங்காடு வரைக்கும் ஒரே பகுதியாக இருந்தது என வைத்துக்கொண்டால் பரங்கிமலை அதில் தான் வருகிறது. அந்தக்காலத்தில் சைதாப்பேட்டை முக்கிய வணிக மையமாக இருந்துள்ளது. இங்கிருந்து ரோமானிய நாட்டுடன் வணிகம் செய்திருக்கிறார்கள் என்பது நூறு வருடங்களுக்கு முன்பு இங்கு நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட 2000 ஆண்டுகளுக்குப் பழமையான பண்டைய ரோமானிய நாணயங்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. அப்பொழுது அடையாற்று நதிக்கரை பக்கம் இருந்த சைதாப்பேட்டை என்கிற இராகுநாதபுரம் கைத்தறி நெசவுத் தொழிலுக்குப் பெயர் போனது.

இங்குச் சில அத்தியாயங்களுக்கு முன்பு ஐரோப்பாவில் கிறித்தவ மதத்திற்கு மாறிய முதல் ஐரோப்பியரான தியத்தீராவின் லீதியாள் பற்றிச் சொல்லி இருந்தேன்; அதனை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

லீதியாள் தியத்தீராவின் பிரபல துணி வியாபாரி. புனித தோமையர் தமிழ்நாட்டில் 20 வருடங்கள் வாழ்ந்தது அன்றைய பிரபல கைத்தறித் துணியின் வியாபார மையமான இராகுநாதபுரமான இன்றைய சைதாப்பேட்டையில். தியத்தீராவுக்கும் இராகுநாதபுரத்திற்கும் இருந்த ஒரே தொடர்பு, இரு இடங்களிலும் ரோமானியத்துடன் வணிகம் செய்திருக்கிறார்கள் என்பதே.

ஆக, புனித தோமையருடன் வந்த அப்பான்ஸ் என்கிற வணிகர் இங்குத் தமிழ்நாட்டில் மதத்தைப் பரப்பிக் கிறித்தவத் தேவாலயங்களை எழுப்பி அவற்றை பொருளாதார மையமாக உருவாக்கத் திட்டமிட்டு இருக்கலாம்.

ஆனால்…

தொடரும்.

Author

You may also like

Leave a Comment