5 நான்-கள்: அத்தியாயம் இரண்டு

This entry is part 2 of 2 in the series 5 நான்கள்

முதலில் ஒரு கல்.

கையைக் கொஞ்சம் குவித்து வீசியதில் தொபுக் க்ளக்.

குளத்தில் மூழ்கியது.

இரண்டாவது கல்… தட்டையாகவும் கொஞ்சம் வேகமாகவும் எறிந்ததில் ஒரு இடத்தில் தொபுக் எனச் சத்தமிட்டுப் பின் தாவி சற்றுத் தூரத்தில் விழுந்தது.

“பாவனி. என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

டபக்கென விழித்தாற்போலச் சுற்றுமுற்றும் பார்த்தேன். இது எனது பெயர்.. இல்லை. இதுவரை குளத்தில் தெரிந்த முகம் சொன்னதே என்ன ஒரு கம்பீர முகம். கருகரு மீசை, தலையில் கருகரு கேசங்கள். நான்தான் ஆதித்த கரிகாலன் என்றும், போன ஜன்மத்தில் என்றும் சொல்லித் தன்னைக் கொன்ற நபரைப் பிடிக்க வேண்டும் என்று சொன்னதே.

குளத்தைப் பார்த்தேன்.

கல்லெறிந்த வட்டங்கள் கொஞ்சம் சுற்றிச் சுற்றிச் சுற்றி மனித வாழ்க்கையைப் போல ஓய்ந்தும் விட்டிருந்தன.

ஏன் இப்படி? யார் அந்த முகம்? திடீர் திடீரென வருகிறது. இந்த மாதிரிச் சொல்லி மறைகிறது. கருகரு மீசை. அனிச்சையாய் என் முகத்தைத் தடவினேன்.

ஹஹ்ஹ. சிரிப்பு வந்தது எனக்கு. மொழுக். சும்மாவா? நற்குளத்தூர் இடங்கைக்காரர்களின் தலைவர் இந்திரகுமாரரின் ஒரே குமாரத்தி நான். அதுவும் என் அன்னை மஞ்சள், சந்தனம் மற்றும் சில மூலிகைகள் கலந்த கலவைப் பூசிப் பூசிச் சற்றே இந்த மாலை நேர ஒளியைப் போல மஞ்சள் நிறப் பொன்மேனி கொண்டவள்.

“பாவனி நீ அழகியடி.” எனக்குள் சொல்லிக் கொண்டேன். கூடவே கூடுதலாய்க் கவலை. இந்த ஆதித்த கரிகாலன் முகம் திடுமெனத் திடுமென நினைவில் தட்டுப்படுகிறது. ஆனால் கொஞ்சம் சுயநினைவடைந்து யாருடனாவது பேச ஆரம்பித்தால் நினைவுக்கு வர மறுக்கிறது. சே.. என்ன இது? யாராவது மருத்துவரிடம் செல்லலாமா?

“பாவனி. உன்னை எங்கெல்லாம் தேடுவது?”

சரிதான். சோழன் நினைவுகள் கரைய குரல் வந்த திசையை நோக்கினேன்.

ஆச்சரியம். பரமசிவன். பரமு. என் அழகன்.

கொஞ்சம் ஜிவ்வென எங்கிருந்தோ ரத்தம் கன்னத்தில் ஏறியது.

“என்ன பேசமாட்டேன் என்கிறாய் பாவனி?”

“இருபது புறாக்கள் வானத்தில் பறந்தன. அதில் பதினைந்து வலப்பக்கம், ஐந்து இடப்பக்கமாக. சடசடவென இந்த மரத்தில் வந்து அடைந்த குருவிகளின் எண்ணிக்கை இருநூற்று நாற்பத்தொன்பது. இதுவரை பதினைந்து கற்கள் இந்தக் குளத்தில் எறிந்திருக்கிறேன். நிக் நிக் என மாலை நேரத்திலேயே சுமார் நாற்பத்தைந்து தடவை ராக்கோழி கூவியதாக்கும்.”

“என்ன இது?”

“கணக்கு பரமுப் போக்கிரி” என்றேன்.

“பின்னே. பெண்களை வரச்சொல்லிக் காக்க வைப்பது, பின் நேரங்கழித்து வருவது. பொழுது போகாமல் எண்ணிக் கொண்டிருந்தேண்டா பையா.”

“ஹேய்” எனச் சிரித்தான் அவன்.

“கோபத்திலும் நான் அழகாய் இருக்கிறேனாக்கும். அதுவும் இந்தச் சிவப்புச் சீலையில். இந்தச் செம்பருத்திப் பூச் சூடிய கூந்தலில்.”

“ஆமாம்.”

“சற்றே இளைத்தும் இருக்கிறேன் என்பாய்.”

”ஆமாம்.” என்றவன் தொடர்ந்தான். “பாவனி. கோபம் கொள்ளாதே. கொஞ்சம் கங்காபுரிக் கோட்டை வரை சென்று வரவேண்டி விட்டது.”

“என்னது?”

“ஆமாம். வலங்கைக்கும் இடங்கைக்கும் சமாதானம் செய்ய வேண்டுமென மன்னர் ராசேந்திரரிடம் சொல்வதற்கு.”

“ம்க்கும். உமக்கென்ன வேலை?”

“நான்தான் கங்காபுரியில் அரசாங்க அலுவலில் இருக்கிறேனே அன்பே“ என்ற பரமு மெல்ல வந்தான் அருகில்.

நாணினேன்.

“யோவ். தள்ளியே நில்லும்.”

“ஏன் பாவனி ஏன்?” என்றவன் என் தோள் தொட்டு இழுக்கப் பார்த்தபோதுதான் அதைப் பார்த்தேன். திடுக்கிட்டேன்.

“பரமு.”

“சொல் பாவனி.”

“உன் வலது தோளில்…..”

“வலது தோள். ம்ம்.” என வலக்கையை மடக்கி முஷ்டி காண்பித்தான்.

”எப்படிச் சதைகள்? அமுக்கிப் பார். அடங்காது. வாள் சுழற்றி உரங்கொண்ட கையாக்கும் இது.”

“அதில்லைடா. தோளில் புலிமுகம் பச்சை குத்தியிருக்கிறது.”

“ஹஹ்ஹா. நான்தான் இளவரசன் எனச் சொல்ல வருகிறாயா?”

சிரித்தேன் வெறுப்பாக. “பரமு, அதெல்லாம் சரித்திர நாடகங்களில்தான் நடக்கும். ஆனால் இந்த மாதிரி வலது தோளில் புலி, சுற்றிலும் வட்டவடிவில் இரு வாட்கள்… எனக்கொள்வது யார் தெரியுமா?”

அவன் பேசவில்லை.

தொடர்ந்தேன்.

“வலங்கைக்காரர்கள். செல்வந்தர்கள். திமிர் பிடித்தவர்கள். நான் இடங்கைக்காரி. விவசாயி. எளிமையானவள். என்னிடம் பழகி, பொய் சொல்லி வந்து…. ஹ்ஹ்ஹ”

அதிகம் பேசியதால் மூச்சிரைத்தது எனக்கு. “உன்னைப் பார்க்கவே அருவருப்பாய் இருக்கிறது.. போய்விடு. பாவனி பாவம்.”

பரமு வேகமாய் என் கைகளைப் பிடித்து அருகில் இழுத்தான்.

“பாவனி சொல்வதைக் கேள். எனக்கும் இந்தச் சண்டைகள் பிடிப்பதில்லை. படைப்பிரிவுகளில் வலங்கை இடங்கை இருந்து அதுவே ஜாதி போல் ஆகிவிட்டது. அதனால்தான் மன்னரிடம் ஓலை கொடுக்கச் சென்றேன்.”

“தெரியுமடா” எனக் குரல் வந்தது.

நிமிர்ந்தேன். நிமிர்ந்தோம். அதிர்ச்சி.

பத்துப் பதினைந்து பேர், என் தந்தை உட்பட கைகளில் சிலம்பங்கள்.

“என்ன துணிச்சல் இருக்கிறது உனக்கு?” என என் தந்தை பேசி முடிக்குமுன்,

“இதில் என்ன இருக்கிறது? வயதுப் பையன். கட்டுமஸ்தாய் இருக்கிறான். இடங்கையில் அப்படி ஆண்கள் இல்லை என்பதால் உன் மகள் மயங்கியிருக்கிறாள். அவனைக் குற்றம் சொல்லாதே.”

அந்தக் குரலுக்கானவரைப் பார்த்துப் பரமுவும் பதறினான். ”இளங்கோ மாமா என்ன இது?”.

“சண்டைதான்” என்றார் இளங்கோ. அவர் கையசைக்க அவரது ஆட்களும் என் தந்தையின் ஆட்களும் மோதினர். இளங்கோவின் சிலம்பமும் என் தந்தையின் சிலம்பமும் மோத புழுதி பறந்தது.

பரமுவும் களத்தில் இறங்கி என் ஆட்களை அடிக்க என் கோபம் கட்டுக்கடங்காமல் போனது. நானும் சுற்றிலும் பார்த்து மரக்கிளை ஒடித்து இறங்கினேன். எதிர்த்தவர் ஒரு பெரியவர். அவரிடம் சிலம்பம், என்னிடம் மரக்கிளை.

டக் டக் டக் டக்

சுழற்றினேன். சுழற்றினார். ஒரு கூரிய கணத்தில் ”ஹா” என்றார் பெரியவர். அவர் கைகளிலிருந்து பறந்தது சிலம்பு. அத்துடன்
“நிறுத்துங்கள்” என்றார்.

வலங்கையர் உடனே நிறுத்த என் தந்தையும் அவர் ஆட்களும் சற்றே ஜாக்கிரதையாய் நிறுத்தினர்.

“என்ன பெண் நீ? என்னமாய்ச் சுழற்றுகிறாய்?”.

“அப்பா” என வந்தான் பரமு.

பரமுவின் அப்பா சிரித்தார். ”நற்குளத்தூர் இந்திரகுமாரரே. நல்லாபுரத்து நமச்சிவாயம் நான்.”

“ம்..” என் தந்தை உறுமினார்.

“உம் பெண்ணின் வீரம் எனக்கு மிகப் பிடித்து விட்டது.”

என் தந்தை முன்னால் வந்தார்.

“அதனால்?”

“அதனால் நாம் சண்டையை விட்டுச் சமாதானமானால் என்ன?”

“எப்படி?”. யாரோ ஒருவன் கத்தினான். என் தந்தை அடக்கினார்.

“அதற்கு?”.

“உம் பெண்ணை என் பையனுக்குக் கொடும்.”

நானும் பரமுவும் முழி முழி என முழித்தோம்.

“கொடுமைப்படுத்த மாட்டீர் என என்ன நிச்சயம்?”.

“அப்படியெல்லாம் இல்லை.. வாள் கொண்டு வாரும். ரத்தத்தில் ஆணையிடுகிறேன். அவ்வளவு கெட்டவனெல்லாம் இல்லை நான்” – எனச் சீறினார் பரமுவின் அப்பா.

என் தந்தை அடங்கி வந்தார். “சரி நமச்சிவாயம் முறைப்படி வந்து பெண் கேளும்..” எனச் சொல்லி என்னை ஜாடை காட்டி வரச்சொல்லிக் கிளம்பினார் என் தந்தை.

பரமுவின் அப்பாவும் ஆட்களுடன் கிளம்புகையில் என்னைப் பார்க்க… சடாரென என் கண்களில் ஆதித்த கரிகாலனின் முகம் – பரமுவின் அப்பாவைச் சுட்டிச் சொன்னது. ”பாவனி. பாவனி. இவன்தான். இவன்தான் என்னைக் கொன்ற நபர். பார்த்துக்கொள்.. அவனைப் பழி வாங்கு.”

என் கை வேகமாய் அழுந்தப்பட விழித்தேன். பரமு. அவன் அப்பாவும் மற்றவர்களும் கொஞ்சம் தொலைவில் இருக்க இவன் தொட்டிருந்தான். “என்ன பயம் பாவனி? நானன்றி யார் இங்கே இருக்கிறார்கள்? வா போகலாம்.”

சட்டென நாணம் சூழ. ”ம்” என்றேன் நான்.

(தொடரும்)

Series Navigation<< 5 நான்-கள்: அத்தியாயம் ஒன்று

Author

Related posts

தொலைவிலிருந்து கேட்கும் பாடல்

வலைப்பூ – 5

மருத்துவர் பக்கம் – 25:  அவசர கால மாத்திரைகள்