பயமா.. உனக்கா?!

மெல்லமெல்ல அடியெடுத்துச் சென்றே பார்த்து
மின்னலென மரமதனின் பின்னால் நின்று
சொல்லவொணா உணர்வுகளை அடக்கி மேலும்
தீர்க்கமுடன் பார்வைகளை விட்டு அங்கே
கல்லெனவே முகமிறுக்கிக் கண்கள் கூர்ந்தே
காணுகின்ற இரைதனையே குறியும் வைத்து
பற்கடித்துப் பாய்கின்ற புலிக்கு யாரும்
பயமுண்டு என்றெல்லாம் கூற மாட்டார்..
*
மிச்சமிலா எழிலெல்லாம் கொண்ட பெண்ணே
மேதினியில் உனக்குபயம் உண்டோ சொல்லு
இச்சையுடன் இளமையிலே கணவன் பார்க்க
இதமாகத் தாழ்ந்துவிடும் கண்கள் அங்கே
அச்சத்தில் இறங்கியதா இல்லை இல்லை
ஆழமான வெட்கநெஞ்சால் வந்த தொல்லை
பிச்சியென அவனின்பால் அன்பை எல்லாம்
பெண்ணழகே நீயும்தான் பொழிவாய் அன்றோ..
*
மாற்றங்கள் மாறாமல் இருக்கும் உலகில்
மங்கையென நீபார்க்கும் பலவாம் சூழல்
தேற்றவொணாத் துயரங்கள் சூழும் போது
திகைத்தபடி கண்மயங்கும் பயத்தால் அல்ல
ஆற்றலுடன் அவையெல்லாம் தள்ளி விட்டே
அழகாகச் சமாளித்தே நிற்குங் காலம்
தோற்றலென்ற வார்த்தையினை நீக்கி விட்டுச்
சீராக வெற்றியினை அடைவாய் தானே..
*
தீமையென எவரெனினும் செய்ய வந்தால்
தீஞ்சுவையே நீயென்றும் திகைக்க மாட்டாய்
ஆமையென உணர்வுகளைப் பதுங்க வைத்து
அச்சமின்றிக் கிளர்ந்தெழுந்து எதிர்ப்பாய் அன்றோ
பூமியிலே பரிசெனவே வந்த பொன்னே
புயல்முன்னே அமைதியென நின்றே நீயும்
சூதுகளை வென்றிடுவாய் என்றும் என்றும்
சூழ்நிலைக்குத் தக்கபடி மாறித் தானே..

துச்சமெனத் தீமையில் பொங்கிடும் பாவையே
அச்சமென்றும் இல்லை உனக்கு.

Author

Related posts

பேரன்பின் சாட்சியங்கள் – அமுதவல்லி நாராயணனின் ’என்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பை முன் வைத்து…

*திம்மராஜபுரத்துக் கதைகள்* –  நூல் விமர்சனம்

திருவை மு.இரா. கவிதைகள் – 5