5 நான்-கள்: அத்தியாயம் மூன்று

This entry is part 3 of 3 in the series 5 நான்கள்

“அனைவருக்கும் வணக்கம்.”

“நான் என்பது என்ன? நான் என்பது இந்த உடல் அல்ல. அப்படிச் சொல்லும்போது, அப்படிச் சொல்லும் இந்த நான் யார்?”

கூட்டம் மௌனித்தது.

“நான் என்றால் ஆத்மா. இப்படி நான் என்பது ஆத்மா என்னும் ஒரு நினைப்பு நம்மகிட்ட வர்றச்சே என்ன ஆறது?”

தஞ்சைப் பெரிய்ய்ய கோவில். பசும்புற்கள் நிறைந்த வெளி. கொஞ்சம் சற்றுத் தள்ளிச் சில மண்டபங்கள். அந்தக் கால ராஜ ராஜனால் எழுப்பப்பட்டது என வழிகாட்டிகள் கூறுவார்கள். அப்படிப்பட்ட மண்டபங்களில் ஒன்றின் வெளியில் நிழல் படர்ந்திருந்தது. அந்த நிழலில் அமர்ந்திருந்தவர்கள் வெகு சிலரே. அதுவும் அந்த மாலை வேளையில்.

“இப்படித்தான் அர்ஜுன்க்கும் ஆச்சு மை டியர் பிரண்ட்ஸ். ஆத்மா தான் ஐ (I). அதாவது நான். பட் அர்ஜுன் நெவர் காட் தட் ஃபீலிங். நான் என்பது உடல்னு நினைக்கிறான்.. என்ன பண்றது? ஹி இண்டல்ஜ்ட் வித் சோ மெனி கேர்ள்ஸ் இன் லைஃப்.”

கூட்டம் சோம்பலாய்ச் சிரித்தது.

“திஸ் பாடி வில் கோ. இந்த உடல் போயிடும்ப்பா என்கிறார் பகவான் கிருஷ்ணர்.. என்னன்னாக்க..”

“குட்டிக் கிருஷ்ண சுவாமிகளே நிறுத்தும். நான் பாவனி. அதற்கு முன் ஆதித்த கரிகாலன். இப்போது நான் நீர்தான். புரிகிறதா?”

தொடர்ந்தது மௌனம்.

“குட்டிக் கிருஷ்ண சுவாமிகளே. ஏன் நிறுத்திவிட்டீர்?”

நான் தாடியைக் கோதிக்கொண்டேன். மௌனமாக எதிரில் அமர்ந்தவர்களைப் பார்த்தேன். வான் செக்கர் வானம். கொஞ்சம் பிசகினால் சற்றே இருபது நிமிடங்களில் கருப்புப் போர்வை போர்த்திக்கொண்டுவிடும் கொள்ளைக்காரன் மாதிரி.

“சுவாமி.. குட்டிக் கிருஷ்ண சுவாமி.. அந்த பகவத் கீதை ஸ்லோகம் சொல்லுங்கோ.”

“உடலாக நானில்லை
உள்ளத்தில் பூட்டி
அடமாக நிற்கும்
அழகாய் – திடமாக
நின்றிடும் உணர்வுதான்
நேரான ஆத்மாவும்
உண்மை அதுதான்
உணர்.”

“ஆஹா ஆஹா” என்றது கூட்டம். கூடவே “நிறுத்தாமல் பேசேன் சுவாமிகளே” என்றது அந்த உருவம்.

நிறுத்தினேன் குட்டிக் கிருஷ்ண சுவாமிகளாகிய நான்.

யாரிவள்..? எதற்காக என்னைத் தொந்தரவு செய்கிறாள், அடிக்கடி? அந்தப் பெண்ணின் முகம் காற்றில் நடுவாக ஒளிர்ந்து எனக்குத் தெரிந்தது.

“சுவாமின். முற்பிறப்பில் நான் பாவனி. இடங்கைப் பெண். வலங்கைப் பரமுவின் மனைவி. ஆனால்.. ஆனால்.. என் மாமனார்?”

அவளே தொடர்ந்தாள்.

“என்னாயிற்றா? அவர்தான் எனது முற்பிறவியில் என்னைக் கொன்றவர். ஆனால் நல்லவேளை சுவாமின். அவர் எங்களுக்குத் திருமணமான ஒரு வருடத்திலேயே நோயுற்று இறந்துவிட்டார். இருந்தவரை எனக்குத் தொல்லையும் எதுவும் கொடுத்ததில்லை.”

தாடியை உருவினேன். அந்த முகம். என்னைத் துறவுகொள்ளச் செய்த முகம்.

பள்ளியில் படிக்கும்போது ஒரு விடுமுறையில் “ஹை. எக்ஸாம்லாம் முடிஞ்சுடுத்தும்மா.. ஜாலி“ என்றால், “போடா. போய் அடுத்த கிளாஸ் புக்ஸ் அண்ணா கிட்ட இருக்கு புரட்டு” என அம்மா சொல்ல, சோகமாய் மொட்டைமாடியில் சென்றால்…

“குட்டிக் கிருஷ்ணா.”

“யார் யாரது” திகைத்தேன்.

“உன்னைத்தான்” எனச் சொன்னாள் வளர்ந்திருந்த அந்த நங்கை.

“யார் நீ? யார்க்கா நீ?”

“அக்கால்லாம் வேணாம். நான் தான் நீ. “

“பொய்ய்ய்ய்ய்“ என்று பயந்து கீழே வந்தால் காய்ச்சல்.

பின் விவரமறிந்து கல்லூரியில் பியூசி முடித்து பி.ஏ. சேரும்போது வேறு எதற்கோ ஒரு போராட்டம். என்ன என நினைவில்லை.

“டேய் போகாதடா.”

“யார் யார் நீ?”.

“நான் தான் நீடா.”

அதே போல மறுபடி காய்ச்சல்.

பின் பி.எல். முடித்து மதுரை வந்து கோர்ட்டில் வக்கீலாக வாதாடும் வரைக்கும் வரவில்லை. ஏதோ ஒரு தவறான கேஸோ என்னவோ. வந்துவிட்டது அந்த முகம்.. “டேய் குக்கி.”

“குட்டிக் கிருஷ்ணன் எனச் சொல் டியர் லேடி.”

“ஓஒ“.. கன்னங்குழித்து கண்ணிமை படபடத்துச் சிரித்தது அந்த முகம்.

“டோண்ட் வொர்ரிடா பையா ஐ வில் டெல் யுவர் ஸ்டோரி ஸ்லோலி. தட்டீஸ் மைன் ஆல்சோ!”

தப்பிக்கலாம் என எண்ணி ரிஷிகேஷ் சென்று அங்கே ஒரு துறவியை அடைந்து சந்நியாசம் கொண்டு மறுபடியும் வரும்போது நாட்டிற்குச் சுதந்திரம் வந்துவிட்டது.

ஆம் 1947 ஆகஸ்ட் 15. தஞ்சை வந்து மக்களுக்கு நல்லது செய்யலாம் என நினைத்து ஒரு வருடமும் ஓடிவிட்டது. இன்னும் விடாமல் அது துரத்துகிறதே.

மெல்ல மெல்ல ஆரம்பித்திருந்த பகவத் கீதையை முடித்து எழுந்தேன். கூட்டமும் எழுந்தது.

பாஸ்கரன் அருகில் வந்தான். “சுவாமிகளே”

“சொல் பாஸ்கரா.”

பாஸ்கரன் ராஜவீதியில் இருப்பவன். என் உபதேச உரைகளுக்கு அடிக்கடி வருபவன். என்னிடம் வேண்டுகோள் விடுத்திருந்தான். நினைவுக்கு வந்தது.

“வீட்டுக்கு வரவேண்டுமா பாஸ்கரா?”.

“போ போ “என்றாள் கண்ணுக்குள் வந்து நின்ற பாவனி.

“ச்.. போகிறாயா இல்லையா?” என்றேன் அவளிடம்.

“என்னாயிற்று சுவாமிகளே?”.

“ஒன்றுமில்லை” என்றேன். எனது கதரில் சாயம் தோய்த்த வெளிர் ஆரஞ்சு வண்ண மேற்துண்டை இழுத்துக்கொண்டேன்.

“இப்போது வரட்டுமா?”

“வாருங்கள். கை ரிக்‌ஷா அழைக்கட்டுமா?”

“பாஸ்கரா. இந்தக் கட்டை என என்னைச் சொல்லமாட்டேன்.. ஆனால் எனக்கு உறுதி இருக்கிறது உடலில். வா போகலாம்.”

ராஜ வீதியில் அவனது வீடு இருந்தது. எட்டுக் கட்டு வீடு போல. உள்ளே கார் நிறுத்த போர்ட்டிகோவும் இருக்க, பின் ‘ராஜசேகரன் அட்வொகேட்’ என போர்டு.

“என் அப்பாதான் சார். வாருங்கள்”.

“அவர் எங்கே?”

“மதராஸப்பட்டினம் சென்றிருக்கிறார். ஒரு நிமிஷம் நில்லுங்கள்.”

உள்ளே இருந்து ஒரு மாமி இழுத்துப் போர்த்துக்கொண்டு வந்தாள். மாம்பழக்கட்டு என்ற விதத்தில் சேலை கட்டியிருந்தாள். பளீர் செவேல் என இருந்தாள். கையில் குவளை. என் கால்களில் தண்ணீர் ஊற்றப் பார்க்க தள்ளி நின்றேன்.

“ம்ஹும் வேண்டாம் அம்மா. அப்படியே வருகிறேன்.”

கிடுகிடென்று உள்ளே நுழைந்தேன்.

“வலது பக்கம் போ. அங்குதான் நமது முன்ஜென்மத்தைக் கொன்ற நபர் இருக்கிறார்.”

பாவனி காதுகளில் குரலாய் ஒலித்தாள்.

கொஞ்சம் கண்களை மூடினேன். அவனிடம் கேட்டேன்.

“உன் தங்கைக்குத்தானே உடல்நிலை சரியில்லை?”

“ஆமாம் சுவாமி.”

“அவளைப் பார்க்கலாமா?”

வலதுபுற அறையைக் காட்டினான். சென்றேன். சென்றோம். கதவு வெளியில் பூட்டியிருந்தது.

“ஏன் பாஸ்கரா. உன் தங்கை பூர நட்சத்திரம் தானே?”

“ஆம் சுவாமி.”

அதற்கான ஸ்லோகத்தைச் சொல்லி – “திற” என்றேன். திறந்தால் உள்ளே வெறிச்.

பெரிய அறை. நடுவில் ஊஞ்சல். ஊஞ்சலில் எனக்கு முதுகைக் காட்டியபடியே இருந்தாள் அவள். அதுவே என் மனதில் சொல்ல இயலா உணர்வுகளைத் தூண்டிவிட்டது.

பின்னந் தலைக்கூந்தல்
முன்னால் பிறைநெற்றி
வண்ணமாய்த் தான்மறைத்து
வாகாய் இருந்தாலும்
அன்னம் அவளழகை
ஆசைப் படவைத்து
என்னை அலைக்கழித்த
தேன்.

மெல்லத் திரும்பினாள். முகமா அது?

நிலவைக் கடைந்தபின்னர்
நீரைப் பிரம்மன்
கலந்தே படைத்துவிட்ட
கட்டழகோ என்றால்
வளம்பல கொண்டிருந்த
வண்ண விழிகள்
களம்பல சொல்லிற்றே காண்.

ச்ச்.. நான் யார்? குட்டிக் கிருஷ்ணன் துறவறம் கொண்டவன். மனநிலை சரியில்லாத பெண்ணிடம் மனம் ஈர்க்கப்படாது. நான் காதல் துறவியா என்ன?

‘பூரணி’ – என பாஸ்கரன் அழைக்க, அவள் முகத்தில் கருவண்டுகள் சுழன்றன. சாந்துப் பொட்டு கொஞ்சூண்டு கலைந்து தீற்றலாய் பிறை நெற்றியில் செக்கர் சூரியனாய்த் தெரிந்தது. இதழ் ரோஜாக்கள் மடிந்தன. கருவண்டுகள் என்னைப் பார்வையால் கொத்தின.

“யார்.. அண்ணா இவர்?”

ஆஹா குரலா அது? ”கிருஷ்ணா அலையாதே நீ ஒரு துறவி” என நான் எனக்குள் சொல்லிக்கொண்டிருக்கையில் பாவனி காதில் கத்தினாள்.

“வெளியே போடா. இவள் உன்னையும் கொன்று விடுவாள்.”

”என்ன?” – என அதை அலட்சியப்படுத்தியபோதுதான் அது நிகழ்ந்தது.

பூரணி மெல்ல எழுந்தாள். அந்த மெல்லவை விட்டு வேகம் பிடித்து என்மேல் தாவினாள். தள்ளினாள். அவளது வாழைத்தண்டுக் கரங்களின் வலிமை பிரமிக்க வைக்கக் கீழே விழுந்தேன். அவளும் என்மேல் விழுந்து கைகளை உயர்த்தி என் கழுத்தில் இறக்கப் பார்க்க, பாஸ்கரன் பாய்ந்து இழுக்க, நானும் சுதாரித்துத் தடுக்க, அவள் கரத்தில் இருந்த கத்தி தள்ளி விழுந்தது.

“தப்பித்தாய் நீ “ என பாவனி காதில் சொல்ல அலட்சியப்படுத்தினேன்.

“பாஸ்கரா. நான் தங்கி இவளைக் குணப்படுத்துகிறேன்.”

“அடேய் குட்டிக்கிருஷ்ணா. நீ இவளைக் கொல்லவேண்டும்” என பாவனி கத்த, கொஞ்சம் அறையை விட்டு வெளியே வந்து சொன்னேன் மனதுக்குள் கண்ணை மூடி. “பாவனி. போன முந்தின ஜென்மத்துப் பகையெல்லாம் இப்போது என்னால் தீர்க்க முடியாது. எனில் இனி வராதே. இவளை இப்போது நான் குணப்படுத்தியே தீருவேன். ஓகே.”

எனச் சொல்லிவிட்டு அறையினுள் நுழைந்தேன். குணப்படுத்தி அவளுக்குப் பிடித்திருந்தால் துறவறத்தை விட்டுவிடலாம் என எனக்குத் தோன்றியது!

(தொடரும்)

Series Navigation<< 5 நான்-கள்: அத்தியாயம் இரண்டு

Author

Related posts

கவிதை வாசிப்புகள் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

இயற்கையின் இறைஞ்சல்

மௌனத்தின் நறுமணம்