Home நாவல்ஆவன்னா -ருனா -நிர்மல வதனா -2

ஆவன்னா -ருனா -நிர்மல வதனா -2

0 comments

ஆர்வம், ஆசை, அசட்டு தைர்யம் -அவை தோற்றுவிக்கும் அலட்சிய உணர்வு… இதெல்லாம் தான் காரணமா நான் அன்று அதிகாலை ஆற்றில்
இறங்கியதற்கு? இல்லை எனச் சொல்லலாமா? ஆம்,குழப்புகிறேனா என்ன? விதி தான் காரணம்.

அனகா கத்தக் கத்த தோழிகளும் இறங்கப் பயந்து கத்தவாரம்பிக்க நான் கவலையே படவில்லையே.

விடிந்தும் விடியாத பொழுது கருக்கலாம்..ஆஹா எவ்வளவு அழகாக இருக்கிறது..கருமேகங்களைக் கிழித்துக் கொண்டு கொஞ்சம் அழகாய் வெள்ளிக் கீற்றுக்கள் தங்க முலாமிட்டு மென்மையாக ஆற்றுத் தண்ணீரில் பிரதிபலிப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது.

எங்கிருந்து வந்தது இந்த நீரோட்டமான வெள்ளம்..வேகம்.?. வில்லியாறு எப்போதும் இப்படி இல்லையே தூரத்தே தூரத்தே விரிந்த பற்பல ஊர்களில் செல்வதிது என்பார்கள்..அப்படியும் நதி என்று யாரும் பெயர்மாற்றம் செய்யவில்லை… ஒரு வேளை வயதுக்கு வரவில்லையோ என்னவோ, சிறு ஆறு அமைதியான பெண் என நினைத்தார்களா என்ன?

ஆனால் நான் இறங்கவும் அழகாய் இழுத்தது அது. ம்ஹூம் ஒரு காலை இழுக்கப் பார்ப்பதற்குள் இரண்டாவது காலும் உள் சென்றது..

நான் தவறி விழுந்தேன்..விழுந்தாலும் சுதாரித்து நீருள் மூழ்கி எழுந்து நீச்சலிடக் கை கால்களை உதைத்தால் அதை விட ஆற்று நீரோட்டத்திற்கு
அசுர வலு.

ம்ஹூம் முடியவில்லை கொஞ்சம் நீந்த கரை தெரியவில்லை. நீந்த முயற்சிக்கிறேன் நீந்தவும் செய்கிறேன்..ஆனால் என்ன?

அலை அலையாகப் பாய்கிற நீர்ப்பொழிவு. மேலிருந்தும் மழைப்பொழிவு. கொஞ்சம வானம் வெளுக்கிறதா என்றாலும் என் கண்கள் பார்க்க முடியவில்லை… கரை தெரியவில்லை..அடித்துச் செல்லப் படுகிறேன் என்பது மட்டும் தெரிந்தது.

அம்மா அப்பா ஆச்சி. அனகா, எல்லாரும் சில சில புள்ளிகளாக நெற்றிக் கோட்டின் வளைவில் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்க நானும் செல்கிறேன். ஒரு இடத்தில் சுழிப்பாக என்ன அது?

பயந்தேன். சற்றே விலக வேண்டும் என்ன அது சுழல். உள்ளே புகுந்தால் அவ்வளவு தான். சர்ர்ரென்று இழுத்து விடும்..அப்புறம் அவ்வளவு தான்.

நிர்மலவதனா என்ற என் வதனம் நீரின் அடியில் மூழ்கி யாருக்கும் தெரியாமல்..

ஓ இல்லை..அதற்கில்லை நான் சாக வேண்டுமா கூடாது…வணிக குலக் கடவுளே எனை ஆளுகின்ற சிவனே என்னைக் காத்தருளும்

மெல்ல மறுபடியும் கை நீட்டலாமென்றால் மேலிருந்து விழும் மழையும் ஓயவில்லை…

அவ்வளவு தானா.. ஆச்சி..,

ஆல விழுதாக அஞ்சுபத்து பெத்துபுட்டு
..அழகா வாழ்வேன்னு நினச்சேனே எங்கண்ணே
காலம் ஏன்வந்து சுழன்றடிச்சுக் கன்னியுனை
…காத்தில் ஒளிச்சுடுச்சே தெரியலையே என்கண்ணே

என்று பாடி நீரைத் தொடச்சுக்கிட்டு சமாதானமாகிடுவாளா.. ம்ஹூம் நிர்மலா

நீந்து…

ஆனால் சுழலை நான் நெருங்கவில்லை அதற்குள் எங்கிருந்தோ ஒரு கரம். என் பொன்னுடலை வளைத்தது. இழுத்து அதுவும் சேர்ந்து சுழலை
விட்டு விலகி ஒரு விதமாய் நீந்தியது.

இது யார் சிவனா? எனையாண்டவனா? கண்களில் கண்ணீரும் தண்ணீரும் புகுந்ததினால் காட்சிகள் தெளிவில்லையே. ஹச்சோ இது என்ன?
வலதுகாலின் பின்பக்கம் வலி… நீரில் அடித்துச் சென்ற போது ஏதோ பாறையில் அகப்பட்டுக் கொஞ்சம் இழுத்தேனே. அப்போது ஏதோ சத்தம்
போல் கேட்டதே. ஆனால் அப்போது தெரியவில்லையே, இப்போதோ வலி பிராணன் போகிறதே.

என் நினைவுகள் மழுங்க ஆரம்பிக்க அந்த உருவமும் நீந்திக்கொண்டே போக வானம் நன்றாகவே வெளுத்தாற் போல இருப்பதைப் பார்த்து உணர்வுகள் சுத்தமாக அறுந்தன என்னிடம்.

**

மறுபடி முழிப்பு வர எதிரில் சாந்தமான முகம் தீர்க்கமான கண்கள். முகமெல்லாம் முளைத்திருந்த இளமைச் செடிகள்… அத்துடன் என்
மூளையைப் பற்றியிழுத்த வலி.

ஸ்ஸ் ஆ.

டபக்கென எழலாமென்றால் வலது காலின் வலி. பின்னால் நல்ல ஆழமான காயமா என்ன? ரத்தம் கொஞ்சம் காய்ந்தது போல…ஹச்சோ…..

இது என்ன என்னை மறந்தேனே?

படபடவென ஆடையில் கண்ணோட்டினேன் நல்லவேளை. கட்டிய கச்சை இடையாடையெல்லாம் நெகிழ்க்கவில்லை. அப்படியே அவசரமாக இறங்கியது தான். சீலை எப்போதோ போயிருக்கவேண்டும். இருந்தாலும் கொஞ்சம் குறுகிக் கொண்டேன்.

பெண்ணே

என்ன குரல் சிங்கம் பேசுகிறதா? அதுவும் வெண்ணெய் சாப்பிட்டு. ச்சீ

நிர்மலா…

ம்ம்

“யார் நீ?”

“நன்றி ஐயா..என்னால் எழ முடியவில்லை இல்லையெனில் உம்மை
வணங்குவேன்..”

“புரியவில்லை”

“என்னை காப்பாற்றியதற்கு முதலில் நன்றி சொல்கிறேன்…”

“அது சரி பெண்ணே..”

“நான் ஆனை மங்கலத்துக் காரி…” என்றேன். சுற்றுமுற்றும் பார்த்தேன். ஆற்றின் ஒரு கரையிலிருந்தோம்..கொஞ்சம் சற்றுத் தொலைவில்…அது என்ன? அடர்ந்த மரங்கள்…

”ஓ வெகு தொலைவு என்று சொல்”

”வெகு தொலைவா?”

”ஆம்”

”இப்போது என்ன சமயம்?”

”பகல் பொழுது ஆரம்பித்து இரண்டு ஜாமங்கள் ஓடியிருக்கும்.. நாம் இங்கு வந்தே ஒரு ஜாமமாயிற்று.. உன் மயக்கம் தெளியவே இலலை… இந்தா கனிகள்.”

சில மாங்கனிகள் தந்தார் அவர்.

பசி..கடித்தேன்… ”இது வெகு தொலைவென்றால் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?”

”கண்டிப்பாக. பசியாறு முதலில்”

பசியாறி அப்படியே அமைதியாகிவிட்ட ஆற்று நீரில் கைகழுவி..கொஞ்சம் சேலை காய வைக்கலாம் என நடக்கப் பார்க்க ச்சுரீர் வலி..

”ஹச்சோ”

அந்த வாலிபர் “மிக வலிக்கிறதா..ஏதோ எலும்பில் அடி என நினைக்கிறேன். என்னைப் பிடித்துக் கொள்”

”வேண்டாம் ஐயா”

”ஏன்?”

”ஆடவர் கைகள் தொடக் கூடாதாம். உரிமையில்லாதவரின்… என் தந்தை சொல்லியிருக்கிறார்…”

”நான் தானே உன்னைக் காப்பாற்றினேன்.”.

”அதற்கு நன்றி”

”இதோ பார் பெண்ணே…கண்கவரும் அழகுள்ளவள் என்ற அகங்காரம் கொள்ளாதே… என்னைப் பற்றிக்கொள்..அல்லது நான் உன்னைத் தூக்கிக் கொள்கிறேன்..”

”சரி.. என்ன செய்வது என் பாட்டி சொல்லியிருப்பது நினைவுக்கு வருகிறது.”

”என்னவென்று?”

”பெண்கள் பிறந்து வளரும் வரை தந்தைக்குச் சொந்தமானவளாயிருக்கிறாள்..வதுவை- கல்யாணம் முடிந்தால் கணவனைச்
சார்ந்தவளாகிறாள் பின் குழந்தைகள் வளர வளர…. ” சொல்லும்போதே என் நாக்கும் குழறியது … கன்னத்தில் செம்மையும் ஏறியது..என்ன பேசுகிறேன் நான்.

தொடர்ந்தேன்… ”மகன் மகள்களைச் சார்ந்தவளாகிறாள் என்பார்.. இப்போது நான் எப்படி…?

”எதையும் நினைக்காதே பெண்ணே”

”நிர்மல வதனா”

”ஓ நிர்மலவதனா..என்ன அழகுப்பெயர்…”..அவன் சொன்னதில் என் உள்ளம் கள்வெறி கொண்டு ஆற்றுவெள்ளம் போல அலையடிக்க அவன்

தொடர்ந்தான்… ”நிர்மலா..இங்கிருந்து கானகத்தில் சென்றால் ஒன்றரைக் காதம் நடக்க வேண்டும்….”

என் விழிகள் அகல… ”கவலைப்படாதே பெண்ணே நான் உன்னைத் தூக்குகிறேன்…. எப்படியும் அங்கு உள்ள என் முனிவரின் ஆஸ்ரமத்திற்குச்
சென்று விடலாம்…”

சொன்னதோடு நிறகவில்லை அவன் என்னைப் பரிவாகத் தூக்கி அப்படியே ஒருதோளில் போட்டுக் கொண்டான் மாலையைப் போல

”பரவாயில்லை நிர்மலா. பார்க்கத்தான் எடை கூடியவளாய் இருக்கிறாய்..பேச்சும் எடை கூடித்தான் இருக்கிறது. .உண்மையில் நீ வெகு
லேசு… புஷ்பங்கள் சேர்ந்த சின்ன மூட்டை போல.”

எனக்கு நாணம் பிடுங்கித் தின்றது..அவன் அசராமல் அடுத்த ஒரு ஜாமம் நடந்தவண்ணம் இருந்தான்..இரண்டு மூன்று தடவை என்னை அமர்த்தி அங்கங்கு இருந்த சுனை ஜலம் பருக விட்டான்.. பின் தூக்கல்.

எனக்கோ ஏதோ ஒருவித மயக்கம் மயக்கமா இல்லை விழித்த என் பெண்மையின் உணர்ச்சியின் ஓசையா என்ன.?.

பாட்டி மனதுள் வந்தார். “பெண் சார்ந்தவள் தான் வதனா. உன் மனசு மலர்ந்து விட்டதா? இவனைப் பிடித்திருக்கிறதா?..எனக்கு அவன் தாடி
பிடிக்கவில்லை வதுவையின் போது எடுத்துவிடச் சொல்.. நன்றாகத் தான் இருக்கிறான் தூக்கி நடக்கும் போது தோளின் திண்மை..கையின் தசை இறுகல்.. நல்ல பலசாலி தான்.. பேச்சும் தன்மை தான் இல்லை?”

”போ பாட்டி”

”ம் சார்ந்தவள் என்கிறேன்.. ம் யாரை நினைக்கிறாய் நீ .அஸ்தினா புர மகாராணி தேவாயானியையா?. அவள் வேறு விதம் அந்தணப் பெண் தான் இருந்தாலும் அரசர் யயாதியை மதித்ததில்லை என்பது ஊர்ப்பேச்சு..ம்ம் அதற்கும் காலம் வரும்.”..

”பாட்டி”

”ச்சும்மா இரு இவளே.. போய்ப் பழகிப் பார் முடிந்தால் இவனையே மணந்து கொள்.. உனைத் தேடி வந்த எதிர்காலம் இவன்…” எனப் பேசுவது போல் நினைக்க பின் சூழ் நிலையும் உரைத்தது எனக்கு.

.”ஹச்சோ தேடுவார்களே வெள்ளத்தில் போயிருப்பேன் என்று.. பாட்டி என்ன செய்வேன்” என அழுகை முட்ட..” ஐயா..”

ஐயா சிரித்தான்.. ”என் பெயர் புரு”…

”சரி ஐயா பர்ண சாலை?”

”இதோ”

”கொஞ்சம் இறங்கு என் தோள்பற்றி நட..”

வழியில் ஏதோ ஒரு மூலிகைச்சாற்றைப் பிழிந்து காலில் இட்டிருந்ததால் அவ்வளவு வலியில்லை..

சற்று கொஞ்ச தூரத்தில் தெரிந்த பர்ண சாலை அணுக உள்ளே அணைத்துச் சென்றான் அவன் … ஒரு அறையைத் தட்ட ஒரு பெண் எட்டிப் பார்த்தாள்

”புரு”

”அம்மா எங்கே?”

”அம்மா கொஞ்சம் தோட்டம் பக்கம் போயிருக்கிறார்கள். இவள்?”

”நிர்மலா… கன்னிகா இவளுக்குக் கால் காயம் பாரேன்..”

கன்னிகா என்னை உள்ளழைத்தாள்..” நீ வெளியில் போ புரு..இவளுக்கு ஆடை தருகிறேன் முதலில்”

மரவுரி ஆடை கொடுத்தாள்..கொஞ்சம் தட்டையாய்க் கடுமையாய்த்தான் இருந்தது..ஆனாலும் மென்மை..

”நன்றி கன்னிகா”..

”காலைக் காட்டு”

கொஞ்சம் மென் கொதி நீரில் கால் காயத்தைக் கழுவிவிட்டு- ”கொஞ்சம் கஷ்டம் தான்”

”என்ன கன்னிகா?”..

”எலும்பில் சற்றே விரிசல் போல அனேகமாக ரணசிகிச்சை செய்யவேண்டும் காலை வெட்ட வேண்டியும் வரலாம்..”

”ஹச்சோ” அலறினேன்..என்னையும் அறியாமல் என் கண்ணில் நீர் வர இது தான் என்னைத் தேடிவந்த எதிர்காலமாய் இருக்குமா என்ற நினைப்பு வர கூடவே வலியும் வர அப்படியே படுத்து மயங்கினேன்…

(தொடரும்)

Author

You may also like

Leave a Comment