Home கவிதைவழி நடத்தும் நிழல்கள்

வழி நடத்தும் நிழல்கள்

by Ramalakshmi Rajan
0 comments

மந்தையில் ஆடுகள் ஒன்றாக நகருகின்றன
தலை குனிந்து குளம்புகளின் தூசியைத் தட்டி
மேய்ப்பனின் நிழலைப் பின்தொடருகின்றன.
அதுவே சத்தியம் என
கூட்டம் கூட்டமாகக் குவிகின்றன.
அவற்றின் காதுகள்
பொய்யான உறுதிமொழிகளுக்கு மட்டுமே
செவிமடுக்கப் பழகி விட்டன.

செல்லும் பாதை குறித்து எந்தக் கேள்வியுமில்லை
அடைய வேண்டிய தூரம் பற்றி அளவீடு ஏதுமில்லை
கோலை உயர்த்தி முழங்கும்
மேய்ப்பனின் குரலில் கிட்டுகிற ஆறுதலுக்காக
கடும் பாறைகளை, பள்ளத்தாக்கை நோக்கி
நீர்சுழிகளை, சுழல்காற்றை நோக்கி
ஓநாய்களின் விரியத் திறந்த வாய்களை நோக்கி
தாம் பாதுகாப்பாக இருப்பதாக நம்பியபடி
அணிவகுத்துச் செல்கின்றன.

மந்தையைப் போலவே பார்வையற்றவனாக,
யாரை யார் வழிநடத்துகிறார் எனும் புரிதலின்றி,
மேய்ப்பனும் பின்தொடருகிறான்
இருளை நோக்கித் தன்னை வழிநடத்தும்
மற்றொரு நிழலை.

Author

You may also like

Leave a Comment