பூக்களென்றால் கொள்ளைப்பிரியம் பேத்திக்கு
சூட்டிப்பார்ப்பதில் அதிகப்பிரியம் நல்லாச்சிக்கு
தென்னைமரக்குடுமி வைத்த பிராயத்திலிருந்து
கருநாகம் போல் பின்னலிடும் வயது வரை
விதவிதமாய்ச் சூட்டி அழகு பார்க்கிறாள்
சூட்டும்போதே பயன்களையும் சொல்லிவளர்க்கிறாள்
தாழைப்பூமுடித்து மருக்கொழுந்து சூடிய பொழுதில்
குழந்தை மீனாட்சியாய் வரித்து
சுற்றிப்போட்டும் கொள்கிறாள்
பன்னீர், சண்பகம், ரோஜா, மகிழம், டேலியா என
தாத்தாவின் தோட்டத்தில் பூக்கிறது
அந்தப் பூப்பிசாசிற்காக
எனினும்
தங்கத்தட்டாய் மலர்ந்திருக்கும் சூரியகாந்தி மேல்
ஆயிரம் கண் வைத்திருக்கிறாள் பேத்தி
தராமல்
சிட்டாய்ப்பறக்கும் மாமனை
வீடு காடு எங்கிலும் துரத்திக்கொண்டு ஓடுகிறாள்
நாவுலர்ந்து மூச்சு வாங்க
தட்டட்டியில் ஒளிகிறான் மாமன்
கூந்தல் பறக்க நிற்கிறாள் பேத்தி
ஓர் இசக்கியென
“அதை வித்துக்கு விட்டிருக்கு மக்களே
ஒரு பூவிலிருந்து ஓராயிரம் செடிகள்
பல லட்சம் சூரியப்பூக்கள்
காடெங்கும் மலையெங்கும் சூரியனாப்பூக்கும்
கைகொள்ளாமல் அள்ளிக்கொள்வாய் நீ”
சமாதானப்படுத்திய நல்லாச்சியின் வாக்கால்
சன்னதம் நீங்கி அமைதியடையும் பேத்தியின்
கண்முன் விரிகிறது
அடிமுடி காணவொட்டா ஒரு சூரியக்காடு.