கிடத்திய கிடுகில் வைக்கோல் பரப்பி
அதற்குக் குளிராது வேட்டி போர்த்தி
சுடுசாதம் கொட்டிப்பரத்துகிறாள் நல்லாச்சி
முத்தாய்ச்சொட்டும் துளிகளெல்லாம்
சத்தமில்லாமல் பயணிக்கின்றன கிடுகு வரை
அம்பாரச்சோறு அடங்குகிறது அண்டாவில்
சம்பாரம் பயணிக்கிறது அத்தோடு
முற்றத்து முருங்கை சாம்பார் உசத்தியாம்
கிரீடமாய்ப் பயணிக்கிறது நல்லாச்சி தலைமேல்
சோற்றுப்படையெடுத்துச் செல்கிறாள்
நடவு வயல் வீரர்களை நோக்கி
குழம்பும் கறியுமாய் ஆயுதமேந்தி
‘சோத்துவாசனைக்கு என்னமும் ஒட்டிக்கிட்டு வரும்’
இரும்புத்துண்டைக்காவலுக்குப் பணித்து
பத்திரம் என்கிறாள் பேத்தியிடம்
‘மடத்துக்கிணத்தடியில்தான் அரற்றியபடியே அலைகிறாளாம்
சித்தி கொடுமையால் செத்த செம்பகம்
செத்தபின்னும் தீராப்பசி தொடருதையே
பாவப்பட்ட செம்மத்துக்கு’
புலம்பிய நல்லாச்சி கவனித்தாளில்லை
வரப்பிலும் மேட்டிலுமாய் அமர்ந்து
பசியாறும் நடவு ஆட்களில்
ஒருத்தி மட்டும்
செம்பகத்தின் சாயலாய்.