மாரீசன் மாயமான் உருவெடுத்து காடுகளில் அலைந்துக் கொண்டிருந்தான். உடல் தங்கமாகவும், கொம்புகள் மாணிக்கமும் பதித்தது போலவும், உடலில் புள்ளிகள் பலவண்ணமாய் ஒளிரும் மாயமானாக உருமாறி, அவன் மனம் இராமனின் முன் செல்வதை விரும்பவில்லை. உயிர் பயம் காரணமில்லை. சீதை என்னும் பெண்ணைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதே அவனின் யோசனையாக இருந்தது. சற்று தீவிரமாக யோசித்தவன் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாய் அதே உருவத்துடன் பஞ்சவடியை நோக்கி தீர்க்கமாக நடந்தான்.
சட்டென்று இலக்குவனின் காதுகள் கூர்மையடைந்தன. அவன் மனம் அந்த காலடி ஓசையை உள்வாங்கத் தொடங்கியது. இது தனக்குப் பழக்கமான ஓசை, தான் என்றும் தவறவிடக்கூடாது என்பதற்காக தினமும் நினைவுப் படுத்திப் பார்த்துக் கொண்டிருந்த ஓசை. அன்று வேள்வியை அழிக்க வந்த கூட்டத்தில் தனித்துக் கேட்ட அதே காலடி ஓசை. அந்த ஓசை தங்கள் குடிசையை நோக்கி வருவதை உணர்ந்தான். மிக அருகில் சமீபத்ததும் அந்த ஓசை சட்டென்று நிண்றது.
இலக்குவன் அந்தக் காலைப் பொழுதில் சூரியனின் மெல்லிய முதல் கிரணங்கள் மண்ணில் தொடும் அந்த நேரத்தில் தோன்றும் வானத்தின் செக்கர் நிறத்தைப் போல கண்கள் சிவந்து வாளையும் வில்லையும் எடுத்துக் கொண்டு தான் காவல் இருந்த அந்த இடத்தை விட்டு வெளியே தேட ஆரம்பித்தான். அங்கே அவன் கண்ட காட்சி அவனை அசரடித்தது.
சீதை அங்கே பூக்களைப் பரித்துக் கொண்டிருக்க அவள் கண்களில் படும் படியாக இங்குமங்குமாக உலாத்தியபடி இருந்தது அந்த மான். அதன் உடல் முழுவதும், தூய தங்க நிறத்தில் மின்னியது. சூரிய ஒளி அதன் மேல் படும்போதெல்லாம், ஒருவிதமான தெய்வீகப் பொலிவுடன் தகதகவென ஒளிர்ந்தது. சாதாரண மானின் உரோமங்களைப் போலன்றி, அதன் மயிர்க்கால்கள் ஒவ்வொன்றும் மெல்லிய தங்க இழைகள் போலக் காட்சியளித்தன. அந்தத் தங்க உடலில், வெள்ளிப் புள்ளிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. இந்த வெள்ளிப் புள்ளிகள் ஒளியைப் பிரதிபலிக்கும்போது, வைரங்கள் போல மின்னின. தங்கம் மற்றும் வெள்ளியின் இந்தக் கலவையானது, வனத்தில் உள்ள மற்ற உயிரினங்களைப் போலன்றி, இதற்குக் கண்கவர் அழகையும், அதிசயத் தோற்றத்தையும் அளித்தது.
அதன் கண்கள், நீல மணி உமிழ்ந்த ஒளியின் நிறத்தில் மின்னின. அதன் பார்வை, சீதையின் மனதில் ஆசையைத் தூண்டும் வண்ணம் மோகன அழகை உமிழ்ந்தது. அதன் கொம்புகள், வைரங்கள் பதித்தது போலக் காட்சியளித்தன. கூர்மையாகவும், வளைந்தும் இருந்த அந்தக் கொம்புகள், ஒளிப்படும் திசைக்கேற்ப நிறம் மாறி மின்னின.
இலக்குவனுக்குப் புரிந்து விட்டது. அவன் எச்சரிக்கையுடன் தேடி வந்தக் காலடி ஓசை வருவது இந்த மானிடம் என்பதை நொடிப்பொழுதி உணர்ந்து கொண்டான். அந்த மான் குடிலுக்கு மிகவும் அருகில் வந்து புற்களை மேய்ந்தது. வன விலங்குகளுக்கே உரிய அச்சம், தயக்கம் ஆகியவை துளியும் இல்லாமல், அது மனிதர்களைப் பார்த்தும் கூச்சப்படாமல் இருப்பதுபோல நடித்தது. மிக மெதுவாக அசைந்து, இடையிடையே துள்ளியும் விளையாடியது. அதன் ஒவ்வொரு அசைவும், மென்மையும் அழகும் நிறைந்ததாகவும், பார்ப்போரைத் தன்வசம் ஈர்க்கும் விதமாகவும் இருந்தது.
சீதை மெல்ல மெல்ல அந்த மானின் மீது வயப்படுவது இலக்குவனுக்கு அச்சத்தை ஊட்டியது. சீதை அந்த மானுடன் விளையாடத் தொடங்கினாள். அவள் கைக்கெட்டுவது போல அருகில் வந்து சட்டென்று விலகி ஓடியது. அவள் திரும்பிய நேரம் அவள் கால்களை வந்து உரசியது. சீதை தானிருக்கும் சூழலை மறந்து மானுடன் மெல்ல மெல்ல ஒன்றத் தொடங்கினாள்.
” அண்ணா .. அண்ணா ” இலக்குவன் குரல் கேட்டதும் குடிலின் உள்ளிருந்து இராமன் வெளியே வந்தான். அந்த நீல நிற மேனியில் சூரியன் ஒளி பட்டு நீல வைரமணி மின்ன்னுவது போல மின்னியது. இராமன் வெளியே வருவதைக் கண்டதும் சீதை அவனருகில் துள்ளி ஓடினாள். அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மானிருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.
இலக்குவன் தவித்தபடி பின் சென்றான். இராமனும் அந்த மானின் அழகைப் பார்த்தபடி அதிசயத்து நிற்க சீதை கேட்டாள்.
” ஸ்வாமி, எனக்கு அந்த மான் வேண்டும். பிடித்துத் தாங்களேன் ” என்றாள்.
” மன்னிக்க வேண்டும் அன்னையே, அது ஆபத்தான செயல். அண்ணா, உடனே அந்த மானை கொன்றுவிட எனக்கு அனுமதி அளியுங்கள்” என்றான் இலக்குவன்.
சீதை சீற்றத்துடன் இலக்குவனைப் பார்த்தாள். விலங்கினங்கள் மீது அவளின் இயல்பான கருணை கொண்ட உள்ளம் காரணமாக, அந்த மானைக் கொன்றுவிட அனுமதி கேட்ட இலக்குவனைச் சுட்டெரிப்பதைப் போல் பார்த்தாள். இலக்குவன் கண்கள் அவள் பாதத்தை நோக்கியபடி இருந்தன. அவனால் அவள் கோபத்தை உணர முடியவில்லை.
” அண்ணா, இது மாயமான். உண்மையான மான் உலகில் இப்படி எங்கும் இருக்க முடியாது. இது அரக்கர்களின் சூழ்ச்சி. என் கணிப்பு சரி என்றால், இது அன்று நம்மிடமிருந்து தப்பி ஓடிய மாரீசன் என்பது என் எண்ணம். ஆகவே உடனடியாக இந்த மானை அழிக்க எனக்கு அனுமதிக்க வேண்டுகிறேன் ” என்றான் இலக்குவன்.
சீதையின் சீற்றம் கரைபுரண்டது.
” ஆம், அழித்துவிடுங்கள். அது எனக்குப் பிடிக்கிறதல்லவா. உடனே அழித்துவிடுங்கள். ” என்றாள். அவள் குரலின் சீற்றம் இலக்குவனுக்கு அச்சத்தை மூட்டியது. இராமன் நிலைமை சற்று எல்லை மீறுவதை உணர்ந்தான்.
” தம்பி, இது சாதாரண மான், இதற்கு ஏன் இத்தனை அச்சம். அப்படியே அரக்கர்கள் மாயமாக இருந்தாலும் என் கணையில் மாண்டுவிடுவர். ஆகவே கவலை வேண்டாம். சீதைக்காக அந்த மானை நான் பிடித்துத் தருகிறேன்” என்றான் இராமன்.
” அண்ணா, வேண்டாம். அப்படி பிடித்துத் தரவேண்டும் என்றால் நானே பிடித்து வருகிறேன். நீங்க அண்ணிக்குக் காவலாக இங்கே இருங்கள்” என்றான் இலக்குவன்.
சீதை இப்போது இலக்குவனைப் பார்த்து பேச முற்படவில்லை. இராமனைப் பார்த்துச் சொன்னாள்.
” நான் உங்களை நம்பித் தான் வந்திருக்கிறேன். எனக்குத் தேவையானது என்று நீங்கள் அல்லவா தரவேண்டும் ஸ்வாமி? அரண்மனை சுகபோகங்களையா கேட்கிறேன். அற்ப மான் அதையும் உங்களால் தரமுடியாதா? ஒரு கணவனிடம் மனைவி விரும்பிக் கேட்பதை அந்தக் கணவன் தருவது தானே நியாயம்? அந்த மானை நீங்கள் கொண்டு வந்து தருவதென்றால் தாருங்கள். இல்லையென்றால்… உங்கள் தம்பி சொன்னதைப் போலக் கொன்றழித்துவிடுங்கள்” என்று கோபத்துடன் கூறிவிட்டு அவள் விருட்டென்று குடிலுக்குல் கண்ணீருடன் சென்றுவிட்டாள்.
இராமன் நிலை தர்மசங்கடத்துக்குள்ளாகியது.
” தம்பி இலக்குவா, பெண்களின் பிடிவாதம் பொல்லாதது. அந்த மானை நான் பிடித்து வருகிறேன். நீ இங்கே சீதைக்குக் காவலாய் இரு. உன்னைத் தாண்டி எந்த ஆபத்து வந்துவிடப் போகிறது சொல்? இந்த மானை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு இலக்குவன் பதிலையும் எதிர் பாராமல் இராமன் மானைத் துரத்திச் சென்றான். அது அவனை அலைகழித்தவாறு காட்டின் அடர்ந்த பகுதிக்குள் சென்றுவிட்டது.
அந்தக் குன்றின் உச்சியில் இருந்து இவர்களின் அத்தனைச் செயல்களையும் பார்த்துக் கொண்டிருந்த இராவணன் தன் பின்னால் நின்றிருந்தப் பெண்ணைப் பார்த்து சொன்னான்.
” அன்னையே, கரதூஷணர்களின் தாய் நீங்கள். மாரீசன் என் சொல்லை மீறி நடக்க மாட்டான் என்று சொன்னீர்களே.. கவனித்தீர்களா? மாரீசன் இராமனைக் காட்டின் அடர்ந்த பகுதிக்குள் அழைத்துச் சென்றுவிட்டான். இனி சீதை என் வசம் தான்” என்று உற்சாகமாகச் சொன்னான் இராவணன்.
அவனை அற்பமாகப் பார்த்தவாறு சொன்னாள் அவள்.
” இப்போதும் சொல்கிறேன் இராவணா. உனக்கான மிகப்பெரிய தடையைப் பார் ” அங்கே வேதனையுடன் இராமன் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டு நின்ற இலக்குவனைச் சுட்டியபடி சொன்னாள்.
” மேலும் மாரீசன் உனக்கு உதவமாட்டான். உன் எண்ணம் அவனால் ஈடேறாது. அவனை நான் நன்கறிவேன்” என்றாள்.
இராவணன், அவளை சந்தேகத்துடன் உற்று நோக்கினான்.