Home கவிதைஅவன் வராமல் போன அன்று..

அவன் வராமல் போன அன்று..

by Uma Shakthi
0 comments

அந்தக் கடற்கரை
சாலையின் மதிய வெயில்
இதமாய்க் குளிர்ந்தது
அலைபேசி அழைப்புகளை
நிராகரித்த அவனுடைய
அவசர வேலையை சபிக்கிறேன்
ஆயினும்
இத்தனை கருணையாய்
இத்தனைத் தனிமையாய்
ஒரு சுதந்திர தினத்தை
இன்று அவன் எனக்காக பரிசளித்துள்ளான்
ஆனால்
ஒருவர் பரிசளிப்பதுதான் சுதந்திரமெனில்
என்னிடம் இருப்பது என்ன?
இப்படி எல்லாம் எண்ணங்கள்
அலைமோதிக் கொண்டிருக்கையில்
அந்தக் கடல் காகங்கள்
ஒவ்வொரு முறையும்
நீரில் மூழ்கி
மீனைக் கொத்திச் செல்கின்றன.

Author

You may also like

Leave a Comment