பரத கண்டத்தின் தென்திசை. மாபெரும் நிலப்பரப்பின் தென்கோடி எல்லை அது. பிரபஞ்சத்தின் மார்பில் வரையப்பட்ட ஒரு பிரம்மாண்டமான நாட்டிற்கான வரைபடம் பரதகண்டம் என்றால், அதன் இரும்புக் கோட்டையைப் போல எழுந்து நின்றது மகேந்திர மலை.
பல யுகங்களாகக் கடல் அலைகளின் ஓயாத அன்பும், கோபமும் கலந்த முத்தங்களை ஏற்றுப் பழகிய அந்தப் பழங்கால மலையின் பாறைகளும் சிகரங்களும், மேகக் கூட்டங்களைக் கிழித்துக்கொண்டு மேலெழும்பி, ‘என்னை மீறிச் சந்திரன் எப்படிச் செல்கிறான் பார்க்கிறேன்’ எனக் கர்வத்துடன் சவால் விடுவதைப் போல உயர்ந்து நின்றன.
செங்குத்தான பாறைகளில் தென்னாட்டிற்கே உரிய பிரத்தியேக சந்தன மரங்களும், அகில் மரங்களும், விண்ணை முட்டும் தேவதாரு விருட்சங்களும் அடர்ந்து வளர்ந்திருந்தன. மலையடிவாரத்தில் மோதிச் சிதறும் கடலலைகளின் உப்புக்கரிக்கும் வாசம், மலையுச்சியில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்களின் தேன் வாசனையோடு கலந்து, ஒரு விசித்திரமான மயக்கத்தை அந்தப் பிரதேசம் முழுவதும் பரவச் செய்திருந்தது.
கீழே, எல்லையற்றுப் பரவிக் கிடந்த தென்கடல், தனது நீல நிற அரக்கக் கரங்களை நீட்டி மலையை விழுங்கத் துடிப்பதைப் போலப் பேரிரைச்சலுடன் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. இயற்கை தன் முழு ஆங்காரத்தோடும், அதே சமயம் வசீகரிக்கும் வனப்போடும் காட்சியளித்த அந்தப் பிரம்மாண்டத்தின் மடியில், இப்போது வானரப் பெரும் படை தேங்கி நின்றது.
சீதையைத் தேடி வந்த வானரப் படை வீரர்கள், நிலத்தின் எல்லை முடிந்து நீர் தொடங்கும் அந்தப் புள்ளியில் திகைத்து நின்றனர்.
அத்தனை பெரிய மலைச்சிகரங்களிலும், பள்ளத்தாக்குகளிலும் ஒரு மாபெரும் கடலெனப் பரவி நின்றது வானரப் படை. தூரத்தில் இருந்து பார்த்தால், இது வானர மலை என்றே சொல்லக் கூடும். இரும்பைப் போன்ற தசைநார்களும், மலைப்பாறைகளைப் பெயர்த்தெடுக்கும் தோள் வலிமையும் கொண்ட வானரங்கள் நிறைந்த இடமாக இருந்தாலும், அந்த வீரர்களின் முகங்களில் இதுவரை கண்டிராத ஒரு இருள் படிந்திருந்தது. காரணம், கண்ணெதிரே ஆர்ப்பரிக்கும் எல்லையற்ற தண்ணீர்ப் பிரதேசம்.
இதுவரை அகங்காரத்துடன் இயற்கையின் படைப்புகளை மதிக்காது, மரங்களையும் பாறைகளையும் உதாசீனப்படுத்தி அவற்றை அழித்து முன்னேறிய வானரப் படை, இப்போது என்ன செய்வதென்று தெரியாது திகைத்து நின்றது.
‘என்னதான் செய்தாலும் இயற்கையே தன் இறுதி வல்லமையில் வெல்லும். இது எங்களின் இயற்கை நீதி, வானரங்களே முடிந்தால் என்னை வென்றுவிடுங்கள்’ என்று நீலக்கடலின் அலைகள் முன்வந்து வானரர்களை வம்புக்கு இழுத்தன.
இயற்கையை மீறிய உடல் பலம் என்பது, ஒருவன் தன் மனதின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு மட்டுமே. அந்த இயற்கை தன் உண்மை நிலையைக் காட்டும் போது உள்ளம் தடுமாறி மனம் சுக்குநூறாகிறது. அந்த நேரம், இரும்பைப் போன்ற தசைகளும் பஞ்சாகத் தளர்ந்து போகின்றன. அந்த வானரர்களின் கண்கள் அந்த உண்மையை மெய்ப்பித்துக் கொண்டிருந்தன.
படையின் இளவரசன் அங்கதன், ஒரு பெரிய பாறையின் மீது சாய்ந்தபடி நின்றான். வாலி என்ற மாவீரனின் ரத்தம் அவன் நரம்புகளில் ஓடினாலும், இயற்கையின் முன்பான இயலாமை அவனை அலைகழித்தது. அவனுள் இருந்த தலைமைப் பொறுப்பு அவனைக் கூர்வாளாய்க் கிழித்தது. அவனது குரல் தழுதழுக, சுற்றிலும் நின்றிருந்த கவாட்சன், நீலன், நளன் போன்ற தளபதிகளைப் பார்த்து விரக்தியாகப் பேசினான்.
”வீரர்களே, உலகத்தின் இறுதி எல்லை இதுதானா? இதைத் தாண்டி ஏதும் நிலப்பரப்பு இருக்குமா? கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் நீர்… நீர்… நீர் மட்டுமே. ஒன்று நாம் இந்தக் கடலைக் கடக்க வேண்டும், இல்லையேல் கடலரசன் நம்மை உணவாக ஏற்க வேண்டும். சீதையைக் காணாமல் திரும்பிச் செல்வது என்பது இராமனின் அம்புக்கு இரையாகும் மரணத்துக்கு இணையானது,” என்றான்.
அனுமனின் கரங்கள், அவன் சொன்னதை ஆமோதிப்பது போல அவன் தோளில் அழுந்தின. அனுமன் அங்கிருந்து மெல்லத் தளர்வாக நடந்தான். அவனுக்குள் ஒரு பெரும் சூனியம் உண்டானது. சுற்றிலும் நடக்கும் எந்தப் பிரக்ஞையும் அவனது மனதைத் தொடவில்லை. கடலின் ஆர்ப்பரிப்போ, வானரங்களின் அழுகையோ அவனது காதுகளில் விழவில்லை.
”இத்தனை இடர்களைத் தாண்டி இங்கே வந்ததன் பலன் இனி என்ன? அங்கதன் சொன்னது போல இதுதான் இறுதி முடிவா? அங்கே ஏதும் ஒரு நல்ல செய்தி வரும் என்று என்னை முழுதாக நம்பி அனுப்பி, தன் கணையாழியைக் கொடுத்த இராமனுக்கு நான் என்ன சொல்லப் போகிறேன்? எல்லாம் முடிந்தது ராமா, நான் பயனற்றவன் என்றா? அதைக் கேட்டு அந்த மாமனிதன் என்ன செய்வான்…”
அனுமனின் கண்கள் ஆறாய் ஓடின. இராமனின் நிலையை எண்ணி அவனுக்கு இதயமே உடைந்துவிட்டது போலானது. ஏதோ முடிவிற்கு வந்தவன் போல இருப்பதிலேயே உயர்ந்த பாறையின் மேல் ஏறி நின்றான். கடலை நோக்கித் தன் பார்வையை வீசினான். அவன் காலடியில், ‘வா வானரனே, காற்றின் மகனே வா உன்னை நான் ஏற்கிறேன்’ என்று கடலன்னை தன் கரம் நீட்டி அழைப்பது போல உணர்ந்தான்.
மயங்கிக் கலங்கினான்.
”சற்று நில் மகனே!” என்ற வார்த்தை அனுமனை நிறுத்தியது.
அனுமனை நோக்கிச் சாம்பவான் வந்து கொண்டிருந்தார். அனுமனின் கண்களில் இருந்த அந்தச் சூனியத்தை, அந்த மயக்க நிலையை உற்றுப் பார்த்தார்.
”உன்னிடம் சொல்ல வேண்டிய கதை ஒன்று உண்டு மகனே,” என்றார் சாம்பவான்.
”இந்த நேரத்தில் கதையா? அங்கே இராமன் என்ன பாடு படுகிறாரோ! அடியேன் அவருக்கு உதவ இயலாத நிலையில் உங்களிடம் கதை கேட்பது சாலச் சிறந்ததுதான் போங்கள்… இராமா, இலக்குவா, ஏலாத என்னை மன்னிப்பீர்களா,” என்ற அனுமனின் கண்கள், வற்றிய கடலுக்கு நீர் வேண்டும் என்பது போல அருவியாகக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தன.
”இந்தக் கதையைக் கேள் மகனே, நான் பல யுகங்களாக இந்தப் பூமியில் இருப்பவன். பல அதிசயங்களைக் கண்டவன். நான் சொல்லும் ஏதோ ஒன்றில் உனக்குத் தேவையான விஷயங்கள் இருக்கலாமே,” என்றார் சாம்பவான்.
அனுமன் மௌனித்தான்.
சாம்பவான் மூத்தவர், அறிஞரும் கூட. அவர் வார்த்தையைத் தட்ட முடியாமல், அவனுள்ளிருந்த மன மயக்கத்தைச் சட்டென உதறித் தள்ளி மண்டியிட்டுக் கைகூப்பி நின்றான்.
”ஒரு நான்கடி மனிதன், யாக வேள்வியின் முடிவில் யாசகம் பெறச் சென்றான் மகனே, அவன் கதைதான் இது.”
சாம்பவானின் கண்கள் கனவுலகில் மிதப்பது போலப் பாதி மூடி நின்றன. அவர் கண்கள் யுகங்களைத் தாண்டிப் பயணிக்கத் தொடங்கின.
”அந்த வாமனன் மூன்றடி மண் கேட்டான், வேள்வியின் தலைவனான மகாபலி தர ஒப்புக் கொண்டான். அடுத்து நடந்தது அதிசயம்… ஆம், அது மாபெரும் அதிசயம்தான். என் வாழ்வில் நான் கண்ட மாபெரும் ஆச்சரியம்.”
அனுமன் சிரத்தையுடன் சாம்பவானை நோக்கினான்.
”மன்னன் நீரை வார்த்துத் தானம் தந்த மறுகணம், அந்தச் சிறுவன் வானுக்கும் பூமிக்குமாக வளர்ந்து நின்றான் மகனே! அவனது முதல் அடி இந்த ஒட்டுமொத்த பூமியையும் அளந்தது. இரண்டாவது அடி ஆகாயத்தையும் சுவர்க்கத்தையும் அளந்தது.”
அனுமனின் கண்கள் விரிந்தன.
”ஆம், அன்று ஒரு சிறிய உருவத்திற்குள், இந்த அண்ட சராசரத்தையே அளக்கும் மாபெரும் சக்தி உறைந்திருந்ததை நான் என் கண்களால் கண்டேன். இன்றும் அதுபோல ஒரு சக்தி மயக்கத்தில் உறைந்திருப்பதைக் காண்கிறேன்.”
அனுமன் உற்சாகமானான்.
”ஐயா, வாருங்கள், அந்த மாபெரும் புருஷனை அடையாளம் காட்டுங்கள். இந்த உலகம் உய்யட்டும். என் இராமன் வாழட்டும். இராமா… இராமா… இதோ வழி பிறக்கப்போகிறது… ஐயா, அந்த மாபெரும் சக்தி யார்? அங்கதனா… வாருங்கள் அங்கதனை நாம் தொழுது வழிநடத்துவோம்,” என்று பரபரத்தான்.
அந்தப் பேரன்பைக் கண்டு சாம்பவான் நெகிழ்ந்தார்.
சாம்பவானின் குரல் இப்போது தளர்வை விட்டு, ஒரு மாபெரும் இடிமுழக்கத்தைப் போல மாறியது. அவர் அனுமனின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தார்.
”அனுமனே, அந்த வாமனனைப் போலத்தான் நீயும்! நீதான் அந்த மாபெரும் சக்தி. நீதான் அந்தப் பிரபஞ்சத்தின் அணுக்களை அடக்கி வைத்திருக்கும் மூர்த்தி!”
அனுமன் திகைத்து நின்றான்.
அவன் கதையைச் சாம்பவான் சொல்லத் தொடங்கினார்.
பி.கு: நாட்டுப்புற மற்றும் இலக்கியக் குறிப்புகள்
வாமன அவதாரமும் சாம்பவானும்: ராமாயணத்தில் சாம்பவானின் பாத்திரம் மிகவும் தொன்மையானது. அவர் கிருத யுகத்திலேயே பிறந்தவர். திருமால் வாமன அவதாரம் எடுத்துத் திரிவிக்கிரமனாக வானுக்கும் பூமிக்குமாக வளர்ந்து மூவுலகையும் அளந்தபோது, சாம்பவான் ஒரு பறையை (பறை முரசு) அடித்துக்கொண்டு அந்த மாபெரும் உருவத்தை வலம் வந்ததாகப் பல புராணங்களும், நாட்டுப்புற ராமாயணக் கதைகளும் உறுதிபடக் கூறுகின்றன. அந்த அனுபவத்தின் அடிப்படையில்தான், தன் சக்தியை மறந்து சுருங்கிப் போயிருக்கும் அனுமனுக்கு வாமன அவதாரக் கதையைச் சாம்பவான் உதாரணமாகச் சொல்கிறார்.
அனுமன் ஏன் தன் பலத்தை மறந்திருக்க வேண்டும்? உத்தர காண்டம் மற்றும் பரவலான நாட்டார் வழக்காறுகளின்படி, அனுமன் சிறு வயதில் மிகுந்த வால்தனத்துடன் முனிவர்களின் ஆசிரமங்களைச் சேதப்படுத்தினான். இதனால் கோபமடைந்த பிருகு வம்சத்து முனிவர்கள், “உன் மாபெரும் பலம் உனக்கே மறந்து போகட்டும். யாராவது ஒரு மகான் உனக்கு உன் ஆற்றலை நினைவூட்டும் வரை நீ ஒரு சாதாரண வானரமாகவே இருப்பாய்” என்று சாபமிட்டனர். அந்தச் சாபத்தின் விளைவே, கடலைக் கண்டதும் அனுமன் தன் சக்தியை உணராமல் தற்கொலைக்கு முயன்றதும், சாம்பவான் நினைவூட்டியதும் ஆகும்.
ஜைன ராமாயணங்கள் மற்றும் பல நாட்டுப்புறக் காவியங்களில், அனுமனின் மாபெரும் பலமே அவனிடம் ‘நான்’ (Ego) என்ற அகங்காரம் இல்லாததுதான் என்று கூறப்படுகிறது.
(தொடரும்)