மனித மனதின் நுட்பமான உளவியல் சிக்கல்களைப் பேசும் இக்கதைகள், கிராமத்து வாழ்வின் எளிய மனிதர்களையும் அவர்களின் ஆன்மத் துடிப்பையும் மிக நெருக்கமாகப் பதிவு செய்கின்றன. மற்றொரு புறம், நகரத்து வாழ்வின் கோர முகங்களையும், நிழல் உலகின் மர்மச் சுவடுகளையும் எதார்த்தமான மொழியில் மிக ஆழமாகச் சித்தரிக்கின்றன.
ஆனந்த விகடனில் வெளியான சமயத்தில் பரவலாகக் கவனத்தை ஈர்த்த கதை ‘சின்னக்கிளி குட்டியப்பன்‘. வளர்ப்புத் தாய்மையின் உணர்வுப் போராட்டங்களை ஆழமாகச் சித்தரிக்கிறது. “உயிரை ஊட்டி வளர்த்தாலும் பிள்ளைதான்” என்ற ஆச்சியின் அளவற்ற அன்பும், தன் தாயின் பெயரையே தன் பெயருக்கு முன்னால் தாங்கும் குட்டியப்பனின் பிரியமும் நெஞ்சைத் தொடுபவை. ஆச்சியின் மௌனம் ஒரு பெரும் ஆலமரத்தின் நிழலைப் போல அந்தப் பெரிய குடும்பத்தையும் கால்நடைகளையும் காக்க முயல்வதும், அதே நேரம் வேட்டையாடத் தொடங்கிப் பின் மதுவுக்கு அடிமையாகும் குட்டியப்பனின் வாழ்வு சிதைவதையும் கவித்துவமான மொழியில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். ஆச்சியின் கனவில் வரும் ‘பாட்டில்கள்’ மற்றும் ‘கடல் அலைகள்’ குறியீடுகளாக, மது ஒரு வாழ்வை எப்படி விழுங்குகிறது என்பதை அழகியல் சிதைவுறாமல் காட்டுவதாக அமைந்துள்ளது. ஆச்சியின் பேரன்பும் அரவணைப்பும் இருந்தும் தன் பலவீனத்தால் குட்டியப்பன் அழிவை நோக்கிச் செல்வதையும், அதைத் தடுக்க முடியாது தவிக்கும் ஆச்சியின் கையறு நிலையையும் இக்கதை உருக்கமாகப் பேசுகிறது. ஒரு நாள் குடித்து விட்டுத் தன் பெற்ற தாயின் சமாதி அருகே குட்டியப்பன் விழுந்து கிடப்பதும், அதைக் கண்டு ‘நான் என்ன குறை வைத்தேன்‘ என ஆச்சி விம்முவதும், வளர்ப்புத் தாய்க்கும் மகனுக்கும் இடையிலான மெல்லிய உணர்வுப் போராட்டத்தையும், ஆழ்மனத் தவிப்பையும், சொல்லப்படாத வலிகளையும் ஒருசேர வெளிப்படுத்துகிறது.
ஒவ்வொரு கதையும் வெவ்வேறு களங்களைக் கொண்டவை. ஆயினும் தலைப்புக் கதையான ‘அறல்‘ களம் ஆச்சரியமூட்டுகிறது. வாசிப்பவரை பதற்றத்தில் வைக்கிறது. பிறகு புன்னகைக்க வைக்கிறது. இறுதியில் மூன்று மலர்களாக அன்றி ‘ஒரே மலராக மலர்வோம்’ என ஒரு குறியீடாக ஈர மண்ணுக்குள் புதைந்து போகும் அறல், மதுக்குட்டி, ஜெனி மூவரும் பனிக்கட்டிகளாக மனதைக் குளிரவே வைக்கிறார்கள்.
திரில்லர் திரைப்படம் போன்ற வேகத்துடன் வாசகரைப் பதற்றத்தில் ஆழ்த்தும் மற்றுமோர் கதை ‘கதவுகள்‘. மாட்டிக் கொண்ட சௌமியா கதவுகள் திறக்கப்பட்டு விடுதலை பெறுகையில், அவளது மனக் கதவுகளும் சேர்த்தே திறந்து கொள்வது கதையின் ஆன்மாவை நுட்பமாகப் பிரதிபலிக்கிறது.
கிராமத்து மனிதர்களுக்கே உரிய வெள்ளந்தி மனது, யட்சி குறித்த ஆதி பயம் எனப் பயணிக்கும் ‘கொண்டலாத்தி‘, இறுதியில் சொல்லப்படாது மெளனமாகிப் போன பேரன்பின் ஆதங்கத்தைப் பேசுகிறது. ‘வடக்கத்தி‘, ‘கழுமரம்‘ ஆகிய கதைகள் மனித இயல்பின் இருண்ட மற்றும் மாறுபட்ட வேட்கைகளைச் சித்தரிக்கின்றன.
“பிரபஞ்சத்தின் சாளரங்களெங்கும் பேரன்பைச் சுமந்தபடி பறவைகளாய் பறந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு” சமர்ப்பணமாக்கப்பட்ட இத்தொகுப்பில் மீ டூ அதிர்வுகளைப் பேசும் ‘சித்திரைப்பூ‘ பாதிக்கப்பட்டவர்களின் வலியைப் பதிவு செய்திருப்பதோடு, அநீதி இழைத்தவனுக்குக் காலம் வழங்கிய தண்டனையை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறது.
பிஞ்சுக் குழந்தைகளையும் விட்டு வைக்காமல் நடக்கின்ற மனிதமற்ற பாலியல் அத்துமீறலை வலியோடு பேசும் ‘பனிக்காலத்தின் பகல்‘, சாதி மற்றும் வர்க்கப் பாகுபாடுகளால் முறியடிக்கப்படும் காதலைச் சொல்லும் ‘ஜடேஜாவைக் காதலித்தவள்‘ ஆகிய இரு கதைகளும் வாசிப்பவர் மனதை உலுக்கிப் போடுகின்றன. பனிக்காலத்தின் பகல் சொல்லப்பட்ட பாணி நவீனமானது.
‘பாதங்கள்‘ கதையில், தனது பிறவிக் குறைபாட்டை உருவக் கேலி செய்ததையும், காதல் என்ற பெயரில் தன்னைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றதையும் புரிந்து கொண்டு வலியோடு ஒதுங்குகிறாள் வெண்மதி, அலைகளில் பாதங்களை நனைத்து அமைதி தேடுபவளாய், அந்தப் பாதங்களையே துணையாகக் கொண்டு வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்குப் பயணிப்பவளாய்.
கிரிக்கெட் ஆர்வம், மனிதனின் ஈகோ என இரண்டையும் ஒரு அழகான பின்னணியில் கோர்த்து மிகச் சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது ‘கோல்ட்‘. குறிப்பாக, தண்ணீரில் குதிக்கும் தவளைகளின் குறியீடு, கதையோட்டத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது.
கதைகளுக்கு வலிமை சேர்க்கும் விதமாக ஆசிரியர் கதையின் முதல் மற்றும் இறுதி வாக்கியங்களை ஒன்றாக அமைப்பதை அவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பிலேயே கவனித்திருக்கிறேன். இத்தொகுப்பிலும் இரு கதைகள் அவ்வாறாக அமைந்துள்ளன. இந்தத் தனித்துவமான உத்தியின் மூலம் வாழ்வியல் சூழலை ஒரு முழுமையான வட்டமாக மாற்றி, வாசகரை அதன் பாதிப்பிலிருந்து வெளியே வரவிடாமல் செய்கிறார்.
12 கதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு வகையில் வாசகனின் மனச்சாட்சியைக் கேள்விக்கு உட்படுத்துகிறது. சமகாலச் சிறுகதை உலகில் ‘அறல்’ ஒரு சிறந்த வரவு.
*
‘அறல்’ சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்: ராஜேஷ் வைரபாண்டியன்
வெளியீடு: எழுத்து பிரசுரம்
முதல் பதிப்பு: ஜனவரி 2024
விலை: ரூ. 150; பக்கங்கள்: 125
இணையத்தில் வாங்கிட:
https://www.amazon.com/Aral-Rajesh-Vairapandiyan/dp/9395511567