Home நாவல்அசுரவதம் பாகம் இரண்டு: (அத்தியாயம் – 2: மலைக்கோட்டை)

அசுரவதம் பாகம் இரண்டு: (அத்தியாயம் – 2: மலைக்கோட்டை)

by Iyappan Krishnan
0 comments

துங்கபத்திரை நதி, ஒரு நீலநிறப் புடவை அணிந்த பெண்ணைப் போல, பாறைகளுக்கிடையே வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருக்க, அந்தி வானம் செந்நிறக் குருதியைக் கொட்டியது போலக் காட்சியளித்தது.

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், பிரபஞ்சமே ஒரு பெரும் போரில் மூழ்கிக் கிடந்தபோது, இந்தப் பாறைகள் எல்லாம் உருகி ஓடிப் பின் குளிர்ந்து உறைந்தது போலத் தெரியும் அந்த இடம் தான் கிஷ்கிந்தை. ஒருகாலத்தில் வாலியின், சுக்ரீவனின் கரங்களால் தூக்கி எறியப்பட்ட மலைகளும், அனுமனின் பாதங்கள் அழுத்திய பாறைகளும் நிறைந்த வீர பூமி.

இன்று நாம் காணும் கர்நாடக மாநிலத்தின் ஹம்பி (Hampi) மற்றும் ஆணைகுந்தி (Anegundi) பகுதிகள்தான் அன்று வானரங்களின் சாம்ராஜ்யமாகத் திகழ்ந்தன. இராமாயண காலத்தில் கிஷ்கிந்தை என்பது வெறும் குகைகளின் தொகுப்பு என நாம் கருதிவிட இடம் கொடுக்காமல் அது இயற்கையோடு இயைந்த ஒரு ‘கிரிதுர்க்கம்’ அதாவது மலைக்கோட்டையாகத் திகழ்ந்தது.

கிஷ்கிந்தையின் வாலி மற்றும் சுக்ரீவனின் வீரர்கள் இந்தப் பிரம்மாண்டமான பாறை இடுக்குகளையே தங்கள் அரண்களாகக் கொண்டிருந்தனர்.

இன்று இந்தப் பகுதி யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற உலகப் பாரம்பரியச் சின்னம். விஜயநகரப் பேரரசின் தலைநகராகப் பின்னாளில் மாறிய அதே மண்ணில்தான், கிஷ்கிந்தையின் சுவடுகள் புதைந்துள்ளன. இன்றும் அங்குள்ள மதங்க மலை, சுக்ரீவன் குகை, அஞ்சனாத்ரி மலை (அனுமன் பிறந்த இடம்) ஆகியவை அந்தப் பழம்பெரும் கதையை மௌனமாகப் பறைசாற்றுகின்றன.

சுக்ரீவன் ஒளிந்திருந்ததாகச் சொல்லப்படும் ரிஷ்யமுக பர்வதத்தின் உச்சியில் இருந்து பார்த்தால், தூரத்தில் நிம்பாபுரத்தின் அருகே ஒரு விசித்திரமான காட்சி தென்படும். அது ஒரு குன்று போலத் தெரிந்தாலும், உண்மையில் அது காலத்தின் மௌனச் சாட்சியான ஒரு ‘சாம்பல் மேடு’. விபூதி மலை என்று அழைக்கப்படும் இடம் அது.

“இந்தச் சாம்பல் வெறும் எரிந்த கட்டைகளின் மிச்சமல்ல,” என்று அங்கிருக்கும் யாரோ ஒரு முதியவர் நீண்ட கதை சொல்லக்கூடும். “இது வாலியின் வீரமும், அவனது அகங்காரமும் எரிந்து போனதன் அடையாளம்.” என வழி வழியாக இந்தத் தொன்மம் அந்த இடங்களில் பரவி உள்ளது. அந்தச் சாம்பல் மேட்டைத் தொட்டுப் பார்த்தால், இன்றும் அது ஒருவித வெப்பத்தையும், அதே சமயம் ஒருவித அமைதியையும் தருவதாக மக்கள் நம்புகிறார்கள்.

அது வாலியின் சிதை எரிக்கப்பட்ட இடம் என மக்கள் இன்றும் நம்புகிறார்கள். நாம் இராமாயண காலத்துக்கே பயணிப்போம். மதங்க மலை, ஹேமகூடம் என அடுக்கடுக்கான மலைத் தொடர்கள் என இவை எதிரிகளால் நுழைய முடியாதபடி வாலியின் சாம்ராஜ்யத்தைக் காத்து நின்றன. வாலி, சுக்ரீவனின் பிறப்பை நாம் சற்று விரிவாகப் பார்க்கலாம். பின்வரும் நிகழ்வுகளை இணைக்கும் பாலமாக இவை இருக்கின்றன.

அன்றொரு நாள் சூரிய தேவனின் தேரோட்டியான அருணன், ஒரு காலைப் பொழுதில் மேரு மலையின் உச்சியில் தனது ரதத்தை நிறுத்தியிருந்தான். அப்போது, இந்திரலோகத்தில் தேவமங்கையரின் நடனம் நடைபெறப் போவதாகக் கேள்விப்பட்டான். ஆனால் அங்கே ஒரு நிபந்தனை உண்டு. பெண்களைத் தவிர வேறு எவருக்கும் அனுமதியில்லை என்பதுதான் அது. அந்தக் கலைநிகழ்ச்சியைக் காண வேண்டுமென்ற தீராத ஆவல் அருணனுக்கு எழுந்தது. அவன் தனது யோக வலிமையால், ஒரு நொடியில் மிக அழகான பெண்ணாக உருமாறினான். அவளது அழகு, மின்னல் கொடி மண்ணில் இறங்கி வந்தது போல இருந்தது. அவள் தனக்குத் தானே ‘அருணி‘ என்று பெயரிட்டுக் கொண்டு இந்திர சபை நுழைந்தான்.

சபையில் ஆடிக்கொண்டிருந்த ரம்பை, ஊர்வசியை விட, ஓரத்தில் நின்றிருந்த அருணியின் காந்தக் கண்கள் இந்திரனை ஈர்த்தன. தேவேந்திரன் தனது நிலையை மறந்து அந்தப் பெண்ணழகியின் பின்னால் சென்றான். பெண்ணாசையின் அந்த விளைவு? இந்திரனின் அம்சமாக ஒரு குழந்தை பிறந்தது. வாலி என்று பெயரிட்டு, இந்திரன் அக்குழந்தைக்கு ஒரு தங்க மாலையை (காஞ்சன மாலை) அணிவித்து, பின் தன் உலகிற்குச் சென்றான். வாலி பிறந்தபோது, அவனது வாலில் இந்திரனின் வஜ்ராயுதத்தின் ஒரு பகுதி மறைந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால்தான் அவனது வால் இரும்பைக் காட்டிலும் வலிமையாக இருந்தது. மேலும், வாலியின் வாலில் ஒரு விசித்திரமான ‘மணி’ (சக்தி மையம்) இருந்தது.

போர்க்களத்தில் அவன் வாலைச் சுழற்றும்போது ஏற்படும் காந்த சக்தி, எதிரிகளின் ஆயுதங்களைப் பறித்துக் கொள்ளும் வல்லமை கொண்டது. அவன் வாலால் ஒருமுறை பூமியை அடித்தால், கிஷ்கிந்தையின் பாறைகள் எல்லாம் அதிர்ந்து எதிரொலிக்கும் என்று தேவர்களும் மனிதர்களும் நம்பத் தொடங்கினர். அதற்கும் மேலாக, தான் அளித்த காஞ்சன மாலையை அணிந்திருக்கும் போது, வாலியை எதிர்ப்போரின் பாதி வலிமையை வாலிக்கு வழங்கும் என்றும் வரம் கொடுத்திருந்தான் இந்திரன்.

பின்பு அருணி மீண்டும் அருணனாக மாறி சூரியனிடம் திரும்பினான். “ஏன் இன்று தேரோட்டத் தாமதம்?” என்று சூரியன் வினவ, அருணன் நடந்த உண்மையை மறைக்காமல் கூறினான். “உன் பெண்ணுருவம் அவ்வளவு அழகாகவா இருந்தது? எனக்கும் அதைப் பார்க்க வேண்டுமே!” என்று சூரியன் பிடிவாதம் பிடிக்க, ​மறுக்க முடியாமல் அருணன் மீண்டும் ‘அருணி’யாக மாறினான்.

விடியலின் அழகை ஒரு பெண்ணின் வடிவில் கண்ட சூரிய தேவன், அவளது எழிலில் சொக்கிப் போனார். அப்போது சுக்ரீவன் பிறந்தான்.

இந்திரனுக்கும் சூரியனுக்கும் உண்டான அந்த அதீத ஈர்ப்பு, இயற்கையின் நியதியை மீறிய ஒரு எதிர்பாராத மாயத் தருணத்தில் நிகழ்ந்ததால், இருவரின் ஆற்றலைத் தாங்கிக் கொள்ள மனித உருவம் போதாது என்று கருதிய பிரம்மன், அவர்களுக்கு ‘வானர’ (வா-நர: மனிதனா அல்லது இல்லையா என்ற விசித்திரத் தோற்றம்) உருவத்தைக் கொடுத்தார்.

இப்படி இரு வெவ்வேறு தேவர்களால் பிறந்த இந்தக் குழந்தைகளை என்ன செய்வது? என்று திகைத்த அருணன், பிரம்ம தேவனின் உதவியை நாடினான். பிரம்மன் அந்த இரு குழந்தைகளையும் இரிக்சராஜன் (Riksharaja) என்ற வானர மன்னனிடம் ஒப்படைத்தார். இவரே வாலி மற்றும் சுக்ரீவனைத் தனது பிள்ளைகளாக வளர்த்தார். அருணி என்னும் தாயின் கண்ணீரே அங்கே பம்பை வாவியாக உருவானது என இன்றும் மக்கள் நம்புகிறார்கள்.

காலம் செல்லச் செல்ல மேருவின் அடிவாரத்தில், அந்த இரு வானரர்களும் விளையாடுவதைப் பார்த்தால், ஒருவன் உதிக்கும் சூரியனைப் போலவும் (சுக்ரீவன்), இன்னொருவன் இந்திரனின் வஜ்ராயுதம் போலவும் (வாலி) காட்சியளித்தனர். வாலியின் கழுத்தில் இருந்த காஞ்சன மாலை, இருள் சூழ்ந்த தண்டகாரண்யக் காடுகளில் ஒரு கலங்கரை விளக்கத்தைப் போல ஒளிவீசியது.

பிற்காலத்தில் இவர்களின் அரசவையின் மந்திரியாக விளங்கிய அனுமனின் பிறப்பும் தெய்வீக சம்பந்தம் உடையதே.

ஆக, இந்த மூவர்களின் பிறப்பில் இருந்த அந்தத் தெய்வீக மர்மமே, கிஷ்கிந்தையை ஒரு மகா சாம்ராஜ்யமாக மாற்றப் போகிறது என்பது அப்போது எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

Author

You may also like

Leave a Comment