Home சிறுகதைநன்றிக்கடன்

“நாம்தான் படு சௌகர்யமாக இருக்கோமே, எதிலும் குறைவில்லை. அதனால், இப்போ நீ வீட்டைக் கவனித்துக் கொண்டு, பிள்ளைகளைப் பார்த்துகிட்டு ராணி மாதிரி இருக்கிறதை விட்டுட்டு இன்னும் எதுக்கு நீ சம்பாதிக்கணும் என்று நினைக்கிறே?” பாஸ்கர் கொஞ்சம் கோபமாகவே கேட்டான்.

“சரி பாஸ்கர், நீங்க இப்போ ஈஸியா சொல்லிட்டீங்க. ஆனா, நான் படித்திருந்தும் வேலைக்குப் போகாமல் இருந்த அந்நாட்களில் உங்க பிசினஸ் திடீர்னு படுத்துட்டது.செலவு கையைக் கடித்தது. ‘வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிச்சு, கணவனுக்கு, அவன் கஷ்டத்துக்கு உபயோகமாக இருக்கணும்ல’ என உங்க அம்மா அப்பா என்னை எப்போதும் நச்சரிப்பார்கள். சரின்னு நானும் நம்ப குட்டிக் குட்டிக் குழந்தைகளை வீட்டில் விட்டுட்டு வேலைக்குப் போனேன். இப்போ நீங்க என்னை வேலையை விடு, ராணி மாதிரி இருன்னு சொல்றீங்க, என் உழைப்பில் வளர்ந்ததுதானே இத்தனை சௌகரியங்களும்? நான் வேலைக்குப் போக ஆரம்பித்த உடன், என் குட்டி குழந்தைகளைப் பார்த்துக் கொண்டது உங்க தங்கை லதாதானே? அப்போ அவளுக்குக் கல்யாணம் ஆகவில்லை.. வீட்டிலிருந்தா.

“இப்போ அவளுக்குக் கல்யாணம் ஆகி ஊரில் இருக்கா. எதுவும் விசாரிக்காமல், ‘நிலமிருக்கு, மாடு, கன்னு இருக்கு’ன்னு அங்கு கல்யாணம் செய்து கொடுத்துட்டீங்க, பாவம், அவள் நம்ம வீட்டில் இருந்த பொழுது படு சுதந்திரமாக வாழ்ந்தவள். கணவன் வீட்டில் ஒரு சௌகரியமும் இல்லை. வயலுக்குப் போய், மாடுகளைப் பார்த்துக்கொண்டு, பால் கறந்து விற்று, கஷ்டப்படுகிறாள். இப்போ அவள் கணவருக்கும் உடம்பு சரியில்லாமல் படுத்த படுக்கை.. பாவம் அவள். நான் இன்றுவரை வேலைக்குப் போய் சம்பாதித்தது, நம் குடும்பப் பொருளாதாரத்திற்கு உதவியாக இருந்தது உண்மை. எல்லாமே உங்க தங்கை இருந்ததால்தான். அவள் நம் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டாள். இன்று, நம் குழந்தைகள் ஓரளவு வளர்ந்து விட்டார்கள், நாமும் பணம், காசு, வீடு, கார், பங்களா, நகை நட்டுன்னு உயர்ந்து விட்டோம். இப்போ, ‘வேலைக்குப் போகாதே, வீட்டிலேயே இரு. பிள்ளைகளைப் பார்த்துக் கொள்’ என்று சொல்கிறீர்களே.. இது சரியில்லைங்க. நான் வேலைக்குப் போகத்தான் போகிறேன் பாஸ்கர்”

“என் சம்பளப் பணம் முழுக்க லதாவின் குடும்பத்துக்குத்தான் கொடுக்கப் போகிறேன். என் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு, தாயாக இருந்து வளர்த்துக் கொடுத்த உங்கள் தங்கைக்கு நான் செய்யும் சிறு கைமாறு இது. என் குழந்தைகளை ஒழுக்கமா, தைரியமாக வளர்த்திருக்கா உங்க தங்கை. பாவம், இப்போ அவள் சின்னச் சின்ன இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு உடம்பு சரியில்லாத தன்னுடைய மாமனார், மாமியார் மற்றும் கணவரையும் பார்த்துக் கொண்டு, தன் கஷ்டத்தை நம்மிடம் கூறாமல் ‘உதவி செய்யுங்கள்’ எனக் கேட்காமல் இருக்கிறாளே, நினைக்கவே கஷ்டமாக இருக்கு பாஸ்கர்”

‘நான் எல்லாத்தையும் விட்டு விட்டு உங்க வீட்டுக்கு வந்திடறேன். என்னையும் என் குழந்தைகளையும் நீங்கதான் காப்பாற்றணும்’னு அவள் சொல்லலை பாஸ்கர், நினைக்கவுமில்லை. பாவம், அவள் இரண்டு குழந்தைகளின் படிப்புச் செலவு, சாப்பாடுச் செலவு, துணிமணி என தன் கஷ்டத்தை யாரிடமும் சொல்லாம இரண்டு வீட்டுக்கு சமையல் வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறாள். எனக்கு வேலை இருக்கு, கை நிறையச் சம்பளம். வேலையை விட்டுட்டு வீட்டில் இருந்து நான் என்ன செய்யனும்? என் அன்பு நாத்தனார்க்காக நான் வேலைக்குப் போகத்தான் போறேன். என் சம்பளத்தில் அவளை ராணியாக வைத்திருப்பேன். இது என் சிறு நன்றிக்கடன்.

பாஸ்கருக்குப் பெருமையாக இருந்தது சித்ராவைப் பார்த்து.

Author

You may also like

Leave a Comment