மூன்று மந்திரக்காகிதங்கள் (三まいのおふだ)
முன்னொரு காலத்தில், மலையில் இருந்த ஜப்பானியத் துறவிகளின் மடாலயத்தில் ஒரு பையன் சீடனாகச் சேர்ந்தான். அவன் குறும்புக்காரப்பையன். துறவி கற்றுத்தரும் பாடங்களைப் படிக்காமல் விளையாட்டுச் சிறுவனாக இருந்தான். பாடங்களைப் படிக்காமல் முயல்குட்டிகளின் பின்னால் ஓடுவது அவனுக்குப் பிடித்தது. மடாலயத்தில் அனைவரிடமும் குறும்புகள் செய்து விளையாடுவது அவனுக்குப் பிடிக்கும். அவன் திருந்துவதற்கு வேளை வரட்டும் என ஜப்பானியத் துறவி அவனுடைய குறும்புகளை மன்னித்தார்.
ஒரு நாள் மலைக்கு எதிர்ப்பக்கத்தில் கசுகொட்டை மரத்தில் ருசியான கசுகொட்டைகள் விளைந்திருப்பதைப் பார்த்தான். அங்கு சென்று அவற்றைப் பறித்து வேகவைத்துச் சாப்பிட விரும்பினான். துறவியிடம் அங்கு செல்வதற்காக அனுமதி கேட்டான்.
அந்தக் கசுகொட்டை மரத்தின் பக்கத்தில் ஒரு சூனியக்காரக் கிழவி வசித்தாள். இது துறவிக்குத் தெரியும், ஆனாலும் தன் சீடனுக்கு அங்கு செல்ல அனுமதி அளித்தார். சூனியக்காரியிடம் மாட்டினாலும் எப்படியும் தப்பித்து வருவான். அதன் பிறகு அவன் தன் குறும்புகளை விட்டுவிட்டு ஒழுங்காகப் படிப்பான் எனத் துறவி நினைத்தார்.
மரத்தின் பக்கத்தில் சூனியக்காரக் கிழவி வசிப்பதை அவர் சீடனுக்குச் சொன்னார். அவளிடம் மாட்டிக்கொண்டால் தப்பிப்பதற்காக மூன்று மந்திரக்காகிதங்களை அவனிடம் தந்தார். மூன்றும் அவன் வேண்டுவதை ஒவ்வொரு முறை நிறைவேற்றும் என்றும் சொன்னார். இந்த மூன்று காகிதங்களை வைத்து அவன் அவளிடமிருந்து தப்பித்து வரவேண்டும் என்று அறிவுரை சொல்லி அனுப்பினார்.
சீடன் மலையின் எதிர்ப்பக்கம் வந்து கசுகொட்டைகளைச் சேகரித்து விளையாடினான். அவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை. சூரியன் மறைந்து இருட்டிவிட்டது. அப்போது திடீரென்று அங்கு ஒரு பெண் தோன்றினாள். அவள் சூனியக்காரியைப் போல இல்லை; அழகாக இருந்தாள். குறும்புக்கார சீடனிடன் அன்பாகப் பேசினாள்.
“பையா, நீ இவற்றைச் சேகரித்தாயா? என் வீட்டுக்கு வா, நான் இவற்றை உனக்கு வேகவைத்துத் தருகிறேன். நீ வயிறார இவற்றைச் சாப்பிடலாம்.” என அழைத்தாள்.
அவளுடைய பேச்சில் மயங்கிய அவன், அவள் பின்னாலேயே சென்றான்.
அவள் வேகவைத்துத் தந்த கசுகொட்டைகளை வயிறார உண்ட பின், களைப்பில் அவன் அப்படியே தூங்கிவிட்டான்.
நடுஇரவில் ‘கர் கர்’ என எதுவோ உராயும் சத்தம் கேட்டு விழித்தான். பக்கத்து அறையிலிருந்து சத்தம் வந்தது. மெதுவாகச் சென்று சன்னலின் வழியாகப் பார்த்தான். அந்தப் பெண் சூனியக்காரக் கிழவியாக மாறியிருந்தாள். அவள் ஒரு கத்தியைத் தீட்டிக்கொண்டிருந்தாள். அந்தச் சத்தம்தான் அது. அவன் பார்ப்பதை சூனியக்காரியும் பார்த்துவிட்டாள்.
“மாட்டிக்கொண்டாயா? இதோ உன்னை வெட்டித் தின்னப்போகிறேன்” என்று பயங்கரமாகச் சிரித்துக்கொண்டே அவனைப் பிடித்தாள்.
அவன் பயந்தான். பயத்திலும் யோசித்தான். மூன்று மந்திரக்காகிதங்களை வைத்துத் தந்திரமாகத் தப்பிக்க நினைத்தான்.
“சரி நீ என்னை வெட்டித் தின்றுவிடு. ஆனால், அதற்கு முன்னால் நான் கழிப்பறைக்குச் செல்லவேண்டும். எனக்கு ஒன்றுக்கு முட்டிகொண்டு வருகிறது. உடனே கழிப்பறைக்குச் செல்லாவிட்டால் என் உடையெல்லாம் ஈரமாகிவிடும்.” என யோசித்துப் பொய் சொன்னான்.
சூனியக்காரி அவன் கையில் ஒரு கயிற்றைக்கட்டி அவனைக் கழிப்பறைக்கு அனுப்பினாள். அவன் வேண்டுமென்றே தாமதம் செய்தான். அவள் வெளியில் இருந்து கத்தினாள்.
“அடேய் பையா. உள்ளே என்ன செய்கிறாய்?”
“இதோ வந்துவிட்டேன், ஒரு நிமிடம்” என்றான்.
ஓரு மந்திரக்காகிதத்தை எடுத்து அவள் கேட்கும்போதெல்லாம் ‘இதோ வந்துவிட்டேன், ஒரு நிமிடம்’ என்று அவனுடைய குரலில் பதில் சொல்லச் சொன்னான். சன்னலின் வெளியே குதித்துத் தப்பித்து ஓடினான்.
மூன்று நான்கு முறைகள் கேள்வி கேட்டு, அதே பதிலைக் கேட்ட கிழவிக்குக் கோபம் வந்தது. கழிப்பறைக் கதவை உடைத்துத் திறந்து பார்த்தாள். பையன் சன்னல் வழியாகத் தப்பித்து ஓடியதைப் புரிந்துகொண்டாள். அவன் ஓடிய தடத்தைப் பார்த்து, கிழவியும் துரத்திக்கொண்டு ஓடினாள். அவனைவிட அவள் வேகமாக ஓடி அவனை நெருங்கினாள்.
அப்போது அவன் இரண்டாவது மந்திரக்காகிதத்தை எடுத்து அதை நீரோடும் ஆறாக மாறச் சொன்னான். அந்த ஆறு, சூனியக்காரிக்கும் பையனுக்கும் இடையே பெரிய நதியாக ஓடி அவளைத் தடுத்தது. அதனுடைய மந்திர சக்தியால் அந்த ஆற்று நீர் முழுவதையும் அவள் குடித்தாள். அதன் பின்னர் அவனைத் துரத்திக்கொண்டு சென்றாள்.
அவன் தன்னிடம் இருந்த மூன்றாவது மந்திரக்காகிதத்தை எடுத்து அதைக் கடலாக மாறச் சொன்னான். பெரிய கடல் இடையில் வந்ததும் சூனியக்காரி நின்றாள். பையன் ஓடிக்கொண்டே இருந்தான். சூனியக்காரி தான் குடித்த ஆற்று நீரை நெருப்பாக்கி உமிழ்ந்து கடலில் வழி அமைத்து அவனைத் துரத்தினாள்.
அதற்குள் பையன் துறவிகளின் மடாலயத்தை அடைந்துவிட்டான். மடாலயம் வரை அவனைத் துரத்திய சூனியக்காரியைத் துறவி தடுத்து நிறுத்தினார். அப்போது அவர் உணவருந்திக்கொண்டிருந்தார்.
“சூனியக்காரியே, அவன் என் சீடன், அவனை விட்டுவிடு. வா நாம் சாப்பிடலாம்” என சூனியக்காரியை அழைத்தார்.
“எனக்கென்ன? அவனை விட்டுவிடுகிறேன். இதோ உன்னைச் சாப்பிடுகிறேன்.” என்று சொல்லிவிட்டுத் துறவியை நெருங்கினாள்.
“சரி, என்னை நீ சாப்பிடு. ஆனால், அதற்கு முன் உருவம் மாறுவதில் உனக்கும் எனக்கும் போட்டி வைக்கலாமா?” என்று கேட்டார்.
“உருவம் மாறுவதில் என்னுடன் போட்டியா? சரி, பார்க்கலாம்.” என்று சிரித்துக்கொண்டே ஒப்புக்கொண்டாள்.
“நீ இந்தக் கூரையை எட்டும் அளவுக்கு உயரமாக மாறுவாயா?” எனக் கேட்டு மடாலயத்தின் கூரையைக் காட்டினார். உடனே சூனியக்காரி மந்திரம் போட்டுத் தன்னைக் கூரைவரையில் உயரமாக்கிக் காட்டினாள்.
“சரி, அந்த மலை அளவுக்கு உன்னால் உயரமாக முடியுமா?” எனக் கேட்டு மலையைக் காட்டினார். உடனே அவள் மந்திரம் போட்டு மலையளவுக்கு உயரமானாள்.
“சரி சரி, உன்னால் உயரமாக மட்டும்தான் முடியும் போலிருக்கிறது” என ஏளனம் செய்தபடி, “உன்னால் சிறியதாக முடியுமா? இதோ இந்த கசுகொட்டையளவுக்கு நீ சிறியதாக முடியுமா?” எனக் கேட்டார்.
சூனியக்காரக் கிழவியும் சிரித்துக்கொண்டே உடனே கசுகொட்டை அளவுக்குச் சிறிய உருவமாகி நின்றாள்.
“சரி, நான் உருமாறிவிட்டேன். இப்போது நீ உருமாறு” எனத் துறவியிடம் சொன்னாள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் துறவி சூனியக்காரக் கிழவியை எடுத்து சோற்றுக்குள் வைத்து விழுங்கிவிட்டார். துறவியின் வயிற்றுக்குள் விழுந்த சூனியக்காரியால் எந்த மந்திரத்தையும் சொல்ல முடியவில்லை. அவருடைய வயிற்றிலேயே சிக்கிக்கொண்டாள்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்து குறும்புக்காரப் பையன் மனம் திருந்தி துறவியிடம் மன்னிப்புக் கேட்டான். அன்றிலிருந்து ஒழுங்காகப் பாடங்களைப் படித்துப் பெரிய மனிதனாக வளர்ந்தான்.