வணிகம்தான் உலகத்தை ஆண்டுகொண்டு இருக்கிறது. ஆதிகாலம் முதற்கொண்டு மறைந்த சமூகங்கள், ராஜ்ஜியங்கள், விஞ்ஞான வளர்ச்சிகள் என எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருந்தது, இருப்பது வணிகம்தான். எல்லைதாண்டிய பயங்கரவாதம் என்பது ஏதோ நவீனகாலப் பிரச்சினை இல்லை. ஆதிகாலம் முதலே தலைவன், அவனைச் சார்ந்த சமூகம், அவர்கள் வாழ்கின்ற நிலப்பரப்பு என்ற அமைப்பு உருவான காலத்திலேயே அதுவும் உருவானது.
ஏன், உலகளவில் வளர்ந்த, வளர்கின்ற மற்றும் ஏழ்மை நிலை நாடுகளில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாக அமைந்திருப்பது அந்த வளர்ந்த நாட்டின் வணிகப் பொருளாதாரக் கட்டமைப்பைச் சீர்குலைத்து, அதனால் கிடைக்கக்கூடிய வணிக வாய்ப்புகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள ஆசைப்படும் பக்கத்து நாடுகள்தான்.
உதாரணமாக, பயங்கரவாதத் தாக்குதல், வெடிகுண்டு வெடித்தல் எல்லாம் நடந்தது இந்தியாவின் மும்பையில்தான். யார் நடத்தினது என ஆள்காட்டி விசாரணை செய்து சொல்லப் பலரைக் கைகாட்டுவார்கள். ஆனால், அப்படி கைகாட்டப்பட்டவர்கள் ஏன் இதனைச் செய்தார்கள்? இதனைச் செய்ய யார் பணம் கொடுத்தார்கள்? அப்படிப் பணம் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு என்ன லாபம்? எனப் பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனால், எல்லாவற்றிற்கும் பதிலாய் அமைந்திருப்பது வணிகம்தான்.
அதே வணிகம் காரணமாகத்தான் அக்காலத்தில் பல பயணிகள் கிழக்கத்திய நாடுகள் நோக்கி வந்துள்ளனர். அவர்களுக்குப் பயணச் செலவுக்குப் பணம் கொடுத்தது யாரென்று பார்த்தால் அரசர்களும், பொருளாதார மையங்களாக இருந்த வழிபாட்டு மையங்களும்தான். புதிய கடல்வழி, கடல் கடந்து இருக்கும் புதிய வியாபார மையங்கள், எளிய விலையில் வணிகம் செய்து அதன் மூலம் அதிக லாபம் பார்ப்பதுதான் நோக்கம்.
இந்தியாவிற்கான வழியைக் கண்டுபிடிக்கிறேன் எனக் கிளம்பிய கிறிஸ்டோபர் கொலம்பஸ், அமெரிக்க நிலப்பரப்புக்குச் சமீபத்தில் இருந்த பஹாமாஸ் தீவில் இறங்கி, வளங்களைத் தேடுதலின் ஒரு பங்காய் அங்கு இருந்த பழங்குடி மக்களைக் கொடுமை செய்து, பெண்களைக் கற்பழித்துக் கொலைகள் செய்தது எல்லாம் வணிகம்தான் காரணம். இந்தப் பயணத்திற்கு அவர் பணம் கொடுத்தது யாரெனப் பார்த்தால் அரச குடும்பத்தினர், ஆன்மீக வழிபாட்டு மையங்கள்தான்.
இதே உண்மையாக இந்தியாவைக் கொலம்பஸ் கண்டுபிடித்திருந்தால், இதே போன்ற செயல்களை அவரால் செய்திருக்க முடியாது. ஏனென்றால், ஒரு இடத்தில் வணிகம் வளர்ந்திருக்கிறதென்றால் அதற்கான பாதுகாப்பு கருவிகள், வீரர்கள் என ஒரு பாதுகாப்புக் கட்டமைப்பு இருந்தது. வணிக வளர்ச்சிகள் எதுவும் இல்லாத பஹாமாஸில் அந்தக் கட்டமைப்பு இல்லாததே காரணம்.
எல்லாம் சரி, ஏன் பயணிகள், அரசர்கள், பொருளாதார மையங்கள் எல்லாம் இந்தியாவை நோக்கியே வந்தார்கள்?
அப்படி நோக்கி வந்தவர்களில் போர்த்துகீசிய வாஸ்கோ ட காமாவும் ஒருவர்.
அப்படி என்ன இருந்தது இந்தியாவில்?
போன அத்தியாயத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு எப்படி அரேபியர்கள் இடைத்தரகர்களாக இருந்தார்களோ, அப்படித்தான் கிழக்கத்திய நாடுகளுக்குத் தென்னிந்தியாவின் கடற்கரைகள் சார்ந்த வணிக மையங்களும் இருந்தன.
கொற்கைத் துறைமுகத்தைத் தங்கள் வசம் வைத்திருந்த பாண்டியர்கள், ஏழாம் நூற்றாண்டில் சேரர்களுடன் படையெடுத்துப் போய்ப் போர் புரிந்து இருக்கிறார்கள். அந்தப் போரின் விளைவாக முசிறிப் பட்டினத் துறைமுகத்தைச் சிறிது காலம் தங்களது ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள்.
இராஜேந்திர சோழன் படையெடுத்துப் பல நாடுகளுடன் போர் புரிந்து வெற்றி பெற்று, மீண்டும் அந்த நாட்டை ஆட்சி செய்கிற உரிமையை அந்த நாட்டின் மன்னர்களுக்கே கொடுத்தார் எனச் சரித்திரப் பெருமை பேசும் புத்தகங்கள் சொல்கின்றன. ஆனால், அவ்வளவு கஷ்டப்பட்டுப் போர் புரிந்து லாபம் இல்லாமல் வந்திருப்பாரா இராஜேந்திர சோழன்?
நமது சரித்திரத்தில் என்ன பிரச்சினை என்றால், அக்காலத்தில் வணிகம் தெரியாத மொழி அறிஞர்களால் குறிப்புகள், கல்வெட்டுகள் எழுதப்பட்டதால் தான். மேலும் அக்காலத்தில் கல்வெட்டுப் பதிக்கும் உரிமை அரசர், அரசர் குடும்பத்தினர் மற்றும் அமைச்சரவையைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இருந்தது. இதனால் கூட அக்கால வணிகத்தைப் பற்றிப் பெரிதும் அறியப்படாமல் உள்ளது. அதுதவிர அரசர்கள் யாரும் அவர்களது நாட்டில் நிகழ்ந்த வணிகப் பரிவர்த்தனைகள் பற்றிப் பெரிதும் பதித்து வைத்தது போல் தெரியவில்லை.
சரி, இராஜேந்திர சோழன் படையெடுத்துப் போரிட்டு வென்று, அதனை மீண்டும் அந்தந்த அரசர்களுக்கே திரும்பத் தந்த ராஜ்ஜியங்களைப் பார்ப்போம்:
ஸ்ரீவிஜயம், பண்ணை, மலையூர், மயிலுடிங்கம், இலங்காசோகம், மாப்பப்பாளம், மேவிலிம்பங்கம், வளைப்பந்தூறு, தலைத்தக்கோலம், மாதமாலிங்கம், இலாமூரிதேசம், மானக்கவாரம், இலங்கை, மாலைத்தீவுகள், லட்சத்தீவுகள், வங்காள தேசம்.
மேலே இருப்பவை பற்றி மட்டுமே குறிப்புகள் இருக்கின்றன. இராஜேந்திர சோழனின் ராஜ்ஜியமெனப் பார்த்தால் அது வங்காள விரிகுடாவில் இருந்த அத்தனை முக்கியத் துறைமுகங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
ஏன் இராஜேந்திர சோழன் அப்படிச் செய்ய வேண்டும்?
அக்காலத்தில் கிழக்கத்திய நாடுகளில் இருந்து பொருட்களை அந்தந்த நாட்டு வணிகர்கள் தமிழகத் துறைமுகத்திற்கு வந்து விற்பனை செய்வார்கள். அதனைச் சோழ நாட்டு வணிகர்களிடமிருந்து கொள்முதல் செய்து, அரேபிய வணிகர்களுக்கு விற்பனை செய்வார்கள்.
அக்காலத் தென்னிந்திய அரசுகளின் துறைமுகங்கள் எல்லாம் கிழக்கத்திய நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் ஒரு வணிகப் பாலமாகச் செயல்பட்டன. இந்த உத்தியின் மூலம் சர்வதேச வணிகத்தைத் தன் கைக்குள் வைத்திருந்தார் இராஜேந்திர சோழன்.
இந்த வணிகம் காரணமாகத்தான் சோழ, சேர, பாண்டியர்களிடையே போர்கள் நிகழ்ந்தன. பின்னர் பெண் கொடுத்துப் பெண் எடுக்கும் திருமண வழக்கமும் நடைமுறைக்கு வந்தன.
இங்குத் தென்னிந்திய அரசுகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றால் கிடைக்கும் வரிகள் மூலம் பெரும் லாபம் அடைந்துகொண்டிருந்த அதே வேளையில், மேற்கத்திய நாடுகளுடன் தங்களது வணிகத்தை அசைக்க முடியாத அளவிற்கு வைத்திருந்தார்கள். தங்களது கடல் பாதையை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தார்கள்.
இராஜேந்திர சோழன் இறந்து சரியாக 22 வருடங்கள் கழித்து, வைக்கிங்களுக்கு எதிராக ஸ்டாம்ஃபோர்ட் பாலத்துப் போர் நடந்தது. இராஜேந்திர சோழனது பேரன் குலோத்துங்க சோழன் காலத்தில் கலிங்கம் மீது படையெடுத்துப் போய்ப் போர் புரிந்ததைக் கலிங்கத்துப்பரணி பேசுகிறது.
சரி, ஏன் கலிங்கம்?
கலிங்கத்துப் போர் பற்றிப் பல சரித்திர நாவல்கள் பல கதைகளைச் சொல்கின்றன. அதெல்லாம் உண்மையா என்று தெரியாது. ஆனால், அந்தக் காலத்தில் கலிங்கம் என்பது கடல்வழி வணிகப் பாதையான நறுமணப் பாதையும், நிலம் சார்ந்த வணிகப் பாதையான பட்டுவழிப் பாதையும் சந்திக்கும் இடமாக இருந்தது.
(தொடரும்)