Home தொடர்சமன்பாடில்லா சமவெளிப் பயணங்கள்: 8

சமன்பாடில்லா சமவெளிப் பயணங்கள்: 8

by Padma Arvind
0 comments
This entry is part 5 of 5 in the series பயணக்கட்டுரைத் தொடர்

போவோமா சிங்கப்பூர்

முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சிக்கான திட்டம் ஒப்புதல் பெற்றுவிட்டது. அப்போது எனக்கான ஊதியம் இந்திய மருத்துவக் கழகத்தில் இருந்து வந்தது. ஏன் நாமே இந்திய அறிவியல் கழகத்தில் ஒரு திட்டத்தை அனுப்பக்கூடாது? என நினைத்தேன். இளம் விஞ்ஞானிகளுக்கான நிதிக்கான அறிவிப்பு வந்தவுடன் விண்ணப்பித்திருந்தேன்.

என்னுடைய திட்டம் நிராகரிக்கப்பட்டது. ஆனால், சொன்ன காரணங்கள் விநோதமாக இருந்தன. என் திட்டத்தைப் பரிசீலித்தவர்கள் திட்டத்தைப் பாராட்டி இருந்தார்கள். அற்புதமான திட்டம். நிச்சயம் செய்ய வேண்டிய ஒன்று. படிக்க வேண்டிய ஒன்று. நம்முடைய காசநோயாளிகளின் அடிப்படை மரபணு மாற்றங்களை அறிய இயலும் என்றெல்லாம். ஆனால் எனக்கு இன்னமும் வயதாகவில்லை என்பது — நான் மிக இளைய வயதிலேயே ஆராய்ச்சி செய்ய வந்ததும் அனுபவம் இன்மையுமே நிராகரிப்புக்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.

திட்டம் சமர்ப்பிக்கும் நிபந்தனைகளைப் பார்த்தேன். வயது குறித்த நிபந்தனை ஏதும் இல்லை. முப்பத்தைந்து வயதுக்குக் கீழானவர்கள் என்றுதான் இருந்தது. மறுநாளே இந்திய அறிவியல் கழகத்திற்குச் சென்று நீண்ட நேரம் காத்திருந்து தலைவரைச் சந்தித்ததெல்லாம் தனிக் கதை. ஆனால், விதிமுறைகளை மீறாத ஒரு படிவத்தை, சின்னக் காரணமாக ‘உனக்கு வயது குறைவு’, ‘நீ இளம் பெண்’, ‘உன்னால் இந்த வேலையைச் செய்ய இயலாது’ என்றெல்லாம் சொல்லித் தடுப்பது தவறல்லவா? என்று சொல்லிப் புரியவைத்தேன். பல விவாதக் கூட்டங்கள். கேட்ட வினாக்களுக்கான விளக்கங்கள். இறுதியில் நிதி ஒப்பந்தத்தோடு வெளியேறினேன்.

அந்த ஒப்பந்தத்தோடு ஓரு நிபந்தனை இருந்தது. பத்து நாள்கள் மும்பையில் ஓர் உயர்தர ஆய்வகத்தில் பயிற்சி பெற வேண்டும் என்பதே அது. புதுதில்லி பேருந்துப் பயணத்துக்கு பழகியிருந்த நான் இப்போது மும்பைப் பயணத்துக்குப் பழகத் தொடங்கினேன். பத்து நாள்கள்தான். ஆனால் கூட்டம் என்னை உள்ளே வாங்கி அதுவே துப்பியது. நீண்ட வரிசைகளும் பொறுமையாக ஏறும் மக்களும் ஆச்சரியப்படுத்தினார்கள்.

மீண்டு வந்த என்னை ஆச்சரியப்படுத்தியது, எனக்கு சிங்கப்பூரில் நடந்த உயிர் வேதியியல் விஞ்ஞானிகளுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள கிடைத்த அழைப்பு.

அழைப்பிதழைக் கையில் பிடித்துக் கொண்டு, என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று யோசித்தேன். முதல் வேலை — பாஸ்போர்ட் எடுப்பது. இதுவரை வெளிநாடு சென்றதில்லை என்பதால் என் கையில் பாஸ்போர்ட் இல்லை. விண்ணப்பப் படிவங்கள், சான்றிதழ்கள், புகைப்படங்கள் எனக் குவிய ஆரம்பித்தன. பாஸ்போர்ட் அலுவலகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பம் சமர்ப்பித்தேன்.

நாட்கள் கடந்தன. மாநாட்டுக்கான தேதி நெருங்கி வந்தது. பாஸ்போர்ட் வரவில்லை. காரணம் தேடினேன். போலீஸ் வெரிஃபிகேஷன் நடைபெறவில்லை என்று தெரிந்தது. அந்தக் காலகட்டத்தில் பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன்பு உள்ளூர் போலீஸ் கேந்திரம், வீட்டில் விசாரணை செய்து சான்றளிக்க வேண்டும். அந்த விசாரணை தாமதமாகிக் கொண்டிருந்தது.

காவல் நிலையத்திற்குச் சென்றேன். ‘வரும், வரும்’ என்று சொன்னார்கள். நாட்கள் கடந்தன. வெரிஃபிகேஷன் வரவில்லை. பாஸ்போர்ட் வரவில்லை. சிங்கப்பூர் செல்லும் தேதி நெருங்கியது. எனக்கு மிகுந்த கவலையாக இருந்தது. நான் பணியாற்றிய மருத்துவப் பல்கலைக்கழகம் என்னை இந்த மாநாட்டுக்கு அனுப்புகிறது என மகிழ்வாக இருந்தது. அந்தத் தருணம் தவறிவிடுமோ என்ற பயம் உள்ளத்தை அரித்தது.

திடீரென்று ஒரு முடிவெடுத்தேன். நேரடியாக அமைச்சரகம் செல்ல வேண்டும் என்று. உள்துறை அமைச்சரகம். அப்போது புதுதில்லியில் நான் பணியாற்றினேன் என்பதால் அது சாத்தியமாகத் தோன்றியது. சிங்கப்பூர் மாநாட்டு அழைப்பிதழை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.

அமைச்சரகத்தில் நுழைவது இலகுவான காரியம் அல்ல. மருத்துவர் அணியும் வெள்ளைக்கோட்டுடனேயே சென்றேன். படிகள் ஏறி, காவலர்களிடம் பேசி, காத்திருந்து, அனுமதி பெற்று உள்ளே நுழைந்தேன். அமைச்சரின் தனிச் செயலரிடம் நேரடியாகப் பேசினேன். சிங்கப்பூர் மாநாட்டுக்கான அழைப்பிதழைக் காண்பித்தேன். நான் எந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறேன் என்று கேட்டார். ‘ஆல் இந்தியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ்’ என்று சொன்னேன்.

அந்தப் பெயரே போதுமானதாக இருந்தது. ‘எய்ம்ஸ்’ என்று அழைக்கப்படும் அந்த மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு நாட்டில் மதிப்பு மிக உயர்ந்தது. ஆராய்ச்சியாளர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் அந்த நிறுவனத்தை மதிக்கிறார்கள். அதனால் அமைச்சரிடமே நேரடியாக என்னை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார் அவர்.

மத்திய அமைச்சர் என்னை அமர வைத்துப் பேசினார். அழைப்பிதழைப் பார்த்தார். ‘இது மிகவும் நல்ல வாய்ப்பு. நீங்கள் செல்ல வேண்டும்’ என்று சொன்னார். தக்க அதிகாரியிடம் உடனடியாக போலீஸ் வெரிஃபிகேஷன் முடிக்கும்படி அறிவுறுத்தினார். அந்த அலுவலகத்திலிருந்தே தொலைபேசி அழைப்பு சென்றது.

மூன்று நாளில் பாஸ்போர்ட் என் கையில் வந்தது. அதை வாங்கும்போது என் கண்கள் ஈரமாயின. ஒரு சிறு புத்தகம். ஆனால் அதில் உலகம் திறந்து கிடந்தது. அதன் வழியே எத்தனை கனவுகள் தொடங்கும் என்று அப்போது தெரியவில்லை.

விமான டிக்கட்டும் வந்தது. வாழ்க்கையில் முதல் முறையாக விமானத்தில் பயணிக்கப் போகிறேன் என்ற நினைவே உடல் சிலிர்க்கச் செய்தது. புதுதில்லி விமான நிலையம். சிங்கப்பூர் நோக்கிப் புறப்பாடு. தேதி நிர்ணயமாகிவிட்டது. அந்த நாளுக்காக மனதாரக் காத்திருந்தேன். அதன் பிறகு உலகில் பல நாடுகளுக்கும் பயணம் செய்திருக்கிறேன்.. ஆனால், முதல் வான்வெளிப் பயணம் என்றளவில் மறக்க இயலாத ஒன்று.

(தொடரும்)

Series Navigation<< சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 4

Author

You may also like

Leave a Comment