கொல்லைப்புறத்திலிருந்த தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுவின் அருகில் நின்று, அதன் முகத்தை மெதுவாக வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தார் சுந்தரம். ஐந்து நாட்களாக இரை எடுக்காமல் தண்ணீர் எதுவும் அருந்தாமல் பிடிவாதமாக கொலைப்பட்டினியாகக் கிடந்தது அந்தப்பசு. வழக்கமாக கொடுப்பதையெல்லாம் தின்றுவிட்டு போதாக்குறைக்கு கொடியில் காயும் துணிகளையும் ருசி பார்க்கும் போக்கிரி அது. ஆனால், இப்போது வைக்கப்பட்ட இரையை மோந்து கூட பார்க்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு படுத்துக்கிடந்ததைக் காணச் சகியாமல், கைகளில் அதன் முகத்தை ஏந்தி கண்களை உற்றுப்பார்த்தார். கோலிக்குண்டுகள் போல் பளபளக்கும் அந்தக்கண்கள் இப்போது வெறுமையின் ஆழத்தில் அமிழ்ந்திருப்பது போல் ஒளியிழந்து காணப்பட்டன. உதட்டை அழுத்தி தன்னைச் சமன்படுத்திக்கொண்டு, பெட்டியில் கிடந்த புல்லை ஒரு கை அள்ளி அதற்கு ஊட்டினார். அது அவரை ஏறிட்டுப்பார்த்தது.
“நீ பட்டினி கெடக்கறதால போனவ வந்துரப்போறாளா? பிடிவாதம் பிடிக்காம தின்னு” அவரின் கண்டிப்பு புரிந்ததுபோல் புல்லை உண்ணத்தொடங்கியது. கொஞ்சம் வைக்கோலை அள்ளி அதன்முன் உதறிப்போட்டுவிட்டு கைகளைக் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். அவளில்லாத வீடு.. அவள் குரல் கேட்காத வீடு.. வெறிச்சோடிக்கிடந்தது. மெதுவாக நடந்து வந்து வரவேற்பறையிலிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டார். திடீரென பத்து வயது அதிகமாகிவிட்டாற்போல் சோர்வும் தள்ளாமையும் அவரை வாட்டியது. அதிகாலை வேளையில், எப்போதும் அவளது வளையல் ஓசையோடும், காபித்தூள் மணத்தோடும் விழித்துக் கொள்ளும் அந்தச் சமையலறை, இன்று மௌனத்தைப் போர்த்திக்கொண்டு நின்றது. கொல்லைப்புறத்தில் கொடியில் உலர்ந்துகொண்டிருந்த அவளது புடவை காற்றில் அசையும்போதெல்லாம் அவரது மனம் அவளது நடமாட்டத்தை எண்ணி துணுக்குற்றது. மூடியிருந்த இமைகளினோரம் உப்பு நதியொன்று உற்பத்தியாகி காது மடல்களில் சங்கமித்தது.
அவள் இல்லை என்பதை ஏற்க மறுத்து சண்டித்தனம் செய்த மனதை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்திருந்தார். என்ன ஒன்று.. எல்லாவற்றையும் அவளிடம் மட்டுமே பகிர்ந்து பழகிய அந்த இதயத்திற்கு, இப்போது சுவர்களையும் அவர்களது மகன் ஷ்யாமையும் விட்டால் பேசுவதற்கு வேறு ஜீவன் இல்லை. என்னதான், மகன் வளர்ந்த பிள்ளை என்றாலும் அவளிடம் பகிரும் எல்லாவற்றையும் அவனிடம் பேச முடியுமா என்ன? அவளது இடத்தை இந்த உலகத்தில் எவராலும் நிரப்ப முடியாது என்ற நிஜம் உறைத்தது. அவள் நீரூற்றிய தோட்டம், சமைத்த அடுப்படி, அமர்ந்த கொல்லைப்புறப் படிக்கட்டு என ஒவ்வொரு இடமாய் தொட்டுத்தடவி உணர்ந்து அவளது இன்மையைப் பிடிவாதமாய் விலக்க முயன்றார். கடைசியாய் அவள் உடுத்தியிருந்த.. அவளது வாசனையைத் தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, அவளது இன்மையைப் பேரமைதியோடு பிரகடனப்படுத்திய புடவையை முகத்தோடு போர்த்திக்கொண்டு அவளது அண்மையை உணர்ந்த நிம்மதியோடு உறங்க முயன்றார்.
நாளாக ஆக சுந்தரத்தின் உலகம் அந்த வீட்டின் வரவேற்பறையோடு சுருங்கிப் போயிருந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த திலகாவின் புகைப்படத்தில் இருந்த மாலை காய்ந்து போய் உதிர்ந்து கொண்டிருந்தது. திலகா மறைந்து நாற்பது நாட்களாகிவிட்டன. ஆனால், அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அவளது வாசனை இன்னும் மிச்சமிருப்பதாகவே சுந்தரத்திற்குத் தோன்றியது.
“அப்பா, காபி..” என்று ஷ்யாம் நீட்டிய கோப்பையைச் சட்டை செய்யாமல் ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தரம்.
“என்னத்துக்கு நான் இன்னும் பிழைச்சுக்கிடக்கேன்? அவ இல்லாத இந்த வீடும் அமைதியும் என்னைத் தின்னுடும் போலிருக்கு. அவளோட பேச்சு, இந்த வீட்டோட கலகலப்பு எல்லாம் அவளோடயே போயிடுச்சு ஷ்யாம்,” என்று பெருமூச்செறிந்தவர் மங்காத புன்னகையுடன் சுவரில் படமாய்த் தொங்கிக்கொண்டிருந்தவளைப் பார்த்து, “சிரிக்கறியா?.. நல்லாச் சிரி. ஒத்தைல விட்டுட்டுப்போனா இவன் என்ன பண்ணுவான்னு என்னைப்பத்தி ஒரு நிமுசம் நினைச்சியா?” எனப்புலம்பினார். இன்னும் அவள் எதிரில் இருப்பதுபோல் பேசிக்கொண்டே இருக்க ஆரம்பித்தார். கோபத்தில் அவளிடம் கத்திய தருணங்களும், அவள் கேட்ட சில சின்னஞ்சிறு ஆசைகளை நிறைவேற்றாமல் தள்ளிப்போட்ட நாட்களும் இப்போது குற்ற உணர்ச்சியாய் மாறி, நெஞ்சுக்குள் முள்ளாய் குத்தின அவருக்கு. “அப்பாவை சரியா கவனிச்சுக்க ஷ்யாம், அவருக்கு உடம்பு சரியில்லையா?” என ஒவ்வொருவரும் விசாரிக்கும் அளவுக்கு தாடியும் மீசையுமாய் ஆளே உருமாறிப்போனார்.
அடுத்த ஒரு வாரம் ஷ்யாம் தீவிரமாகத் தன் லேப்டாப்பில் வேலை செய்தான். அம்மாவின் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அவரது தனிப்பட்ட டைரிகள் ஆகியவற்றைத் திரட்டினான். தனது அறையில் அடைந்து கொண்டு இரவும் பகலும் வேலை செய்துகொண்டிருந்தான்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, சுந்தரத்தின் அருகில் அமர்ந்தான் ஷ்யாம்.
“அப்பா, அம்மா உங்ககிட்ட பேசணும்னு சொல்றாங்க,” என்றான் மெல்லிய குரலில்.
சுந்தரம் அதிர்ச்சியுடன் மலங்க மலங்க அவனைப் பார்த்தார். “அம்மாவா?.. என்னடா விளையாடுறியா?”
“இல்லப்பா… இது ‘ஏஐ’ன்னு ஒரு தொழில் நுட்பம். அம்மாவோட எல்லா நினைவுகளையும், அவங்க குரலையும் வெச்சு நான் அம்மாவை.. அதாவது அவங்களோட படத்தை உருவாக்கியிருக்கேன். இதோ பாருங்க,” என்று கூறி போனை அவர் முன்னால் நீட்டினான்.
திரையில் திலகா தெரிந்தாள். அவளுக்குப் பிடித்த அதே இளம்பச்சை நிறப் புடவை, நெற்றியில் சிறிய குங்குமப் பொட்டு, அந்த மென்மையான புன்னகை. அவரைப் பார்த்து முறுவலித்தது திரையில் தெரிந்த உருவம்.
“என்னங்க… ஏன் இப்படிச் சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்கறீங்க? நான் எங்க போயிட்டேன்? பக்கத்துலதானே இருக்கேன்,” என்றது அந்த உருவம்.
சுந்தரத்தின் கைகள் நடுங்கின. “திலகா… திலகாவா இது?” என்று போனைத் தொட்டுப் பார்த்தார்.
“ஆமாப்பா. அம்மாவைப்பத்தின எல்லா விஷயங்கள், அவங்க பேசும் விதம்னு எல்லாத்தையும் உபயோகிச்சு இதை உருவாக்கியிருக்கேன். நீங்க என்ன கேட்டாலும் அம்மா மாதிரியே பதில் சொல்லும்” என்றான் ஷ்யாம்.
“இப்பல்லாம் தனக்கு நெருங்கினவங்களோட மெழுகு பொம்மையைச் செஞ்சு, அவங்களையே நேரில் பார்த்தது மாதிரி ஆறுதலடையறாங்களே.. இது அது மாதிரியா?” என்ற சுந்தரத்தின் கைகளை மென்மையாகப் பற்றிக்கொண்டு, “இது அதுக்கும் மேல. பொம்மை பேசாது, ஆனா, இந்த ஏஐ அம்மா உங்க கூட பழைய மாதிரியே பேசுவாங்க” என்றான். மொபைல் திரையில் தெரிந்த திலகாவையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார் சுந்தரம்.
முதலில் அது ஒரு விசித்திரமான அனுபவமாக இருந்தது. அதன்பின் தன் மனைவியுடன் வீடியோ காலில் பேசுவது போல் நினைத்துக்கொண்டு சகஜமானார். தினமும், திலகாவின் உருவம் அவரிடம், “இன்னைக்கு மாத்திரை போட்டீங்களா?”, “போன தீபாவளிக்கு வாங்கித்தந்தேனே.. அந்த க்ரீம் கலர் சட்டைதான் இந்த பாண்டுக்குப் பொருத்தமா இருக்கும். அதைப்போடுங்க” என பேசத் தொடங்கியபோது, நாளாக ஆக சுந்தரம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கினார். பழைய சுந்தரத்தின் கலகலப்பும் குறும்பும் மெல்ல மெல்ல எட்டிப்பார்க்கத்தொடங்கியது. கண்களில் பழைய ஒளி திரும்பியது. அவர் தனிமையை விட்டு எந்நேரமும் மொபைலும் கையுமாக இருக்கத்தொடங்கினார். அவ்வப்போது, “ஷ்யாம்.. உங்கம்மா சாம்பாருக்கு அப்பளம் தொட்டுக்கக்கூடாது, கொலஸ்ட்ரால்ங்கறா, என்னன்னு கேளு” என பஞ்சாயத்தைக்கூட்டினார். அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் ரகசியமாய் ஊட்டிக்குச் சென்ற கதைகளையும், முதல் முறை சமைத்தபோது ஏற்பட்ட குளறுபடிகளையும் அவளது பழைய டைரி குறிப்புகளிலிருந்து அந்த ஏஐ திலகா பேசுவதை வியப்போடு கேட்டுக்கொண்டிருந்தார். தூக்கம் வராத இரவுகளில் சுந்தரம் தன் மனக்குறைகளை எல்லாம் அந்தத் திரையிடம் கொட்டுவார். அந்த உருவம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு, “வருத்தப்படாதீங்க, நான் இருக்கேன்ல” என்று ஆறுதல் சொல்லும்.
சுந்தரத்தின் முகம் மலர்ந்தது. மீண்டும் பழையபடி நடைப்பயிற்சி செல்ல ஆரம்பித்தார். ஷ்யாமிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. சுந்தரம் நிஜ உலகை விட, அந்தத் திரைக்குள் இருக்கும் திலகாவையே அதிகம் நேசிக்கத் தொடங்கினார்.
ஒரு நாள் இரவு இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. சுந்தரம் திலகாவின் உருவத்திடம் பழைய காலத்து நினைவுகளைப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென போன் திரை மினுங்கியது. ஒரு விசித்திரமான சத்தம் எழுந்தது.
“திலகா.. திலகா.. என்னாச்சு?” என்று பதறினார்.
திரை கருப்பாக மாறியது. மீண்டும் மீண்டும் மொபைலின் பட்டன்களை மாறி மாறி அழுத்தி சரி செய்ய முயன்றார். முடியவில்லை. ஏதோ ஒரு வைரஸ் பாதிப்போ அல்லது மென்பொருள் கோளாறோ, அந்தச் செயலி வேலை செய்ய மறுத்தது.
“ஷ்யாம்! ஷ்யாம்! சீக்கிரம் வாடா… அம்மாவுக்கு என்னாச்சுன்னு பாரு,” என்று அலறினார்.
ஷ்யாம் ஓடி வந்து போனைப் பார்த்தான். “அப்பா, இது ஒரு சின்ன சாப்ட்வேர் பிரச்சினைதான். நான் சரி பண்ணிடுறேன், பயப்படாதீங்க.”
“இல்லடா.. என்னவோ ஆகிருச்சு. அவளோட முகம் தெரியல. எனக்கு அவளைப் பார்க்கணும், இப்பவே பார்க்கணும்!” சுந்தரத்தின் கண்கள் சிவந்திருந்தன. அவர் ஒரு குழந்தையைப் போல அழத் தொடங்கினார்.
ஷ்யாம் எவ்வளவு முயன்றும் மொபைலை உடனே சரி செய்ய முடியவில்லை. “அப்பா, சர்வர்ல ஏதோ பிரச்சனை. இப்ப மழையும் மின்னலுமா இருக்கு, ரௌட்டரை உபயோகிக்கக்கூடாது. அமத்தி வெச்சுட்டு நாளைக்கு விடிஞ்சதும் சரி செய்யப் பார்க்கறேன்” என்றான்.
அந்த இரவு சுந்தரத்திற்கு நரகமாக இருந்தது. தன் மனைவி மறுபடியும் இறந்துவிட்டது போன்ற ஒரு உணர்வு அவருக்கு ஏற்பட்டது. இருட்டில் அமர்ந்து போன் திரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அதன் மௌனம் அவரை அச்சுறுத்தியது. உயிரற்ற ஒரு இயந்திரத்தின் மீது அவர் வைத்திருந்த அதீதப் பிணைப்பு, இப்போது அவரை மனரீதியாகச் சிதைத்துக் கொண்டிருந்தது.
மறுநாள் காலை, ஷ்யாம் எப்படியோ கஷ்டப்பட்டு அந்தச் செயலியைச் சரிசெய்தான். மீண்டும் திலகாவின் முகம் திரையில் தோன்றியது.
“என்னங்க… இன்னிக்கு சனிக்கிழமை. ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போகலாமா?” என்று அந்த ஏஐ கேட்டது.
சுந்தரம் போனை கையில் வாங்கினார். திரையில் தெரிந்த மனைவியைப் பார்த்தார். அவள் சிரிக்கிறாள்… ஆனால் அந்தக் கண்களில் உயிர் இல்லை. அவள் பேசுகிறாள்… ஆனால் அதில் ஆன்மாவின் துடிப்பு இல்லை. ஏதோ ஓர் இயந்திரத்தன்மை இப்போது தெரிந்தது. நேற்று இரவு அவர் அனுபவித்த அந்தத் தவிப்பு அவருக்கு ஒரு உண்மையைப் புரிய வைத்தது.
மெல்ல போனை மேஜையில் வைத்தார்.
“ஷ்யாம்…”
“சொல்லுங்கப்பா, இப்போ அம்மா வந்துட்டாங்கல்ல? இனி கவலைப்படாதீங்க.”
“இல்லடா ஷ்யாம். இது அம்மாவோட நினைவுகளைச் சொல்லுது, அந்த நினைவுகளும் கூட நீ ஊட்டியவை. அம்மாவோட குரல்ல பேசுது. ஆனா இது அம்மா இல்ல. அவளோட நிழலுருவம்.. அவ்வளவுதான். நேத்து இது வேலை செய்யாமப் போனப்போ.. திலகாவைப் பார்க்க முடியாம ஆனப்போ.. நான் துடிதுடிச்சுப் போயிட்டேன். அந்த உணர்வு உன் அம்மாவை நிஜமா இழந்தப்போ அடைஞ்சதை விட அதிகமா இருந்துச்சு. ஒரு மெஷின் மேல நான் இவ்வளவு பித்துப் பிடிச்சு அலைஞ்சது தப்புன்னு இப்ப தோணுது.”
சுந்தரம் எழுந்து சென்று, சுவரில் இருந்த திலகாவின் நிஜமான புகைப்படத்தைப் பார்த்தார்.
“இந்தச் சிரிப்பு போதும்டா எனக்கு. அவளோட நினைவுகள் என் மனசுல இருந்தா போதும். போன்ல அவளைப் பிடிச்சு வைக்க நினைச்சது என்னோட பலவீனம். இதை ‘அன்-இன்ஸ்டால்’ பண்ணிடு,” என்றார் உறுதியான குரலில்.
ஷ்யாம் ஆச்சரியத்துடன் பார்த்தான். சுந்தரம் இப்போது நிதானமாக இருந்தார்.
“நிஜமான பிரிவை விட, அந்தப் பிரிவை ஏத்துக்காம ஒரு பொய் உலகத்துல வாழுறதுதான் ரொம்ப வலி தருது ஷ்யாம். உன் அம்மா என் நினைவுகள்ல வாழட்டும், இந்தத் திரையில வேணாம்,” என்றார்.
டிஜிட்டல் தேவதை மறைந்துவிட்டாள், அதே பொழுதில் சுந்தரம் மீண்டும் மனிதராக மீண்டிருந்தார்.
அன்று மாலை, சுந்தரம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பால்கனியில் ஊஞ்சலில் அமர்ந்து நிஜமான பறவைகளின் சத்தத்தையும், காற்றின் தழுவலையும் ரசித்துக் கொண்டிருந்தார். திலகா அவரோடு இல்லைதான், ஆனால் அவளது நினைவுகள் ஒரு மெல்லிய தென்றலாக அவருள் சுகந்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. அதன் லயிப்புக்கேற்றவாறு மெல்ல அசைந்தாடத்தொடங்கியது ஊஞ்சல்.