Home தொடர்உருதுக் கவிதை உலகு – 4: பஹாதுர் ஷா ‘ஸஃபர்’

உருதுக் கவிதை உலகு – 4: பஹாதுர் ஷா ‘ஸஃபர்’

0 comments
This entry is part 4 of 4 in the series உருதுக்கவிதை உலகு

மீர்ஸா அபுல் முஸஃபர் மொஹம்மத் சிராஜுத்தீன் என்னும் இயற்பெயர் கொண்ட ஸஃபரின் பட்டப்பெயர் ‘பஹாதுர் ஷா’. பகதூர் ஷாவின் புனைபெயர் ‘ஸஃபர்‘. புனைபெயரையும் பட்டபெயரையும் சேர்த்து பஹாதுர் ஷா ஸஃபர் என அழைக்கப்பட்டார்.

மன்னனாகவும் கவிஞனாகவும் வாழ்ந்த ஸஃபர் தன் வாழ்க்கையைப் பிரதிபலித்து எழுதிய கவிதைகளுள் இரண்டு கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.

(1) எத்தனை ஊழ்வினை
ஆறடி நிலமும் கிடைக்கவில்லை
என்னைப் புதைக்கb
என் மண்ணில்

ஆங்கிலேயர்களால் நாடுகடத்தப்பட்ட ஸஃபர், ரங்கூனில் இறந்ததும், அங்கேயே அடக்கம் செய்யப்பட்டதும் வரலாறு. அந்த வரலாற்றின் பிரதிபலிப்பு இக்கவிதை.

(2) வியக்கிறேன்
இப்படியொரு புரட்சி
காலத்தின் பிடியில்
ஸஃபரின் கரங்களிலிருந்து
நொடியில் நழுவியது
தில்லி

சிப்பாய்க்கலகம் தோல்வியடைந்த காலகட்டத்தில் ஸஃபர் எழுதியதாகச் சொல்லப்படும் இக்கவிதை, கவிதையாகவும் வரலாறாகவும் நிலைத்தது.

இக்கவிதையில் புரட்சி என்னும் சொல் உருதுவில் ‘இன்குலாப்‘.

// ஏ வாய்’ஏ இன்குலாப் ஸமானே கே ஜோர் சே
தில்லி ஸஃபர் கே ஹாத்சே பல்மேன் நிகல்கயி
//

‘இன்குலாப் ஸிந்தாபாத்’ – புரட்சி ஓங்குக என்பது ஆங்கிலேயருக்கு எதிராக உயர்த்தப்பட்ட கோஷம். அதனை எழுதியவர் ஹஸ்ரத் மோஹானி என்னும் விடுதலைப் போராட்ட வீரர். ஸஃபரின் தோல்வியைப் பாடிய கவிதையில் ஒலித்த அந்தச் சொல் பின்னாளில் இந்திய விடுதலையின் முழக்கத்தில் இடம்பெற்றது அதுவாக நடந்ததெனினும், ஸஃபரின் கவிதைகளின் மீதிருக்கும் பற்றால், இக்கவிதையை முன்வைத்து ‘இன்குலாப்’ என்னும் சொல்லை அணுகுவதில் தவறில்லை.

புலவர்களை ஆதரிப்பது மன்னர்களின் மரபு. கடைசி மொகலாய மன்னர் பகதூர் ஷா, அவரே கவிஞனாக இருந்ததும், அவையின் தலைமைப் புலவரிடம் மாணவனாகக் கவிதை கற்றதும், அவையில் இருந்த கவிஞர்களுக்கு மானியம் தரப்பட்டதும், சிப்பாய்க்கலகத்துக்குப் பின் கவிஞர்களின் மானியம் கிழக்கிந்தியக் கம்பெனியால் நிறுத்தப்பட்டதும் வரலாறு.

அரபி, பாரசீகம், உருது மொழிகளின் வரிவடிவங்கள் வளைவுகளும் புள்ளிகளும் கோடுகளும் கொண்டு, இடமிருந்து வலமாக எழுதுகோல் நகரும் அமைப்பில், ஓரெழுத்தைக் கோடுகளால் நீட்டுவதும், ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகளை இணைத்து எழுதுவதும் இயல்பாக அமைந்துள்ளன. அவை எழுதுகோலால் ஓவிய எழுத்தாக வரைவதற்கு ஏற்றவை. அதனால் அரபி, உருது, பாரசீக மொழிகளில் எழுத்தோவியப் பயிற்சியும் இருந்தது.

ஸஃபர் தேர்ச்சி பெற்ற எழுத்தோவியர். திருக்குர்ஆனின் வசனங்களை ஓவிய எழுத்துகளில் எழுதும் வழக்கம் அவரிடம் இருந்தது.

தன்னுடைய ஆர்வத்தாலும், ஸௌக், மீர்ஸா காலிப் போன்ற தேர்ந்த கவிஞர்களிடம் கவிதை கற்றதாலும் ஸஃபர் எழுதிய கஜல்களில் ஆழ்ந்த பொருளுள்ள சொற்களும் அழகியலும் நிறைந்துள்ளன.

சிலைகளின் அழகைப் பாடும் ஒரு கஜலில் இறைத்தன்மையைத் தொடர்புபடுத்தியது அவருடைய ஆழ்ந்த சூஃபியிசத் தன்மையின் வெளிப்பாடு.

அல்லா!
அச்சிலைகளின் கர்வம்
தெய்வீகமல்லால் வேறென்ன

// அல்லா அல்லாரே உன் புத்தோன்கா குரூர்
யே குதாயி நஹீன்தோ ஃபிர் கியா
//

ஆட்சியாளராகவும் சூஃபிக் கோட்பாட்டாளராகவும் இரண்டு எல்லைகளையும் கண்ட அவருடைய கஜலில் தனக்கு எதுவும் தேவையில்லை, தான் இறைவனின் மீது அளவில்லாக் காதல் கொண்டால் அதுவே போதும் என ஒரு கஜல் இயற்றினார்.

அடியார்களின் காவி வேண்டேன் அரசர்களின் மணிமுடி வேண்டேன்
உன் மேல் காதலாகியிருக்கும் உணர்வை மட்டும் எனக்குத் தா!
புத்தகங்களில் எழுதியெழுதி வெளுத்ததென்ன?
என் நெஞ்சமெனும் கல்லில் செதுக்கப்பட்டவை உன் கட்டளைகள்
பள்ளிவாசல்களில் கோயில்களில் தேடினேன் கிடைக்கவில்லை
இதயக்கருவறையில் கண்ட ஒளியை வேறெங்கும் காணவில்லை

மீர்ஸாவின் கவிதைகளிலும் சூஃபியிசம் காணப்படுவதை இங்கு நினைவிற்கொள்ளலாம். கடுங்கோட்பாட்டு மார்க்க வழிகள் வருமுன் இறைநேசர்களாக இருந்த சூஃபி ஞானிகளிடம் மார்க்கத்தில் நெகிழ்வுத்தன்மை காணப்பட்டது. ஞானிகளிடம் பயின்ற மொகலாய மன்னர்களின் அணுகுமுறையிலும் அது பிரதிபலித்தது. மன்னனாக முடிசூடுவதற்கு முன் ஸஃபரின் உடைகள் ஒப்பீட்டளவில் எளிமையாக இருந்தன. அரச குடும்பத்தில் இருந்த மற்றவர்கள் ஆடம்பரமாக இருக்கையில் அவர் ஆடம்பரத்தைத் தவிர்த்திருக்கிறார்.

உருதுவில் எழுதப்படும் காதல் கவிதைகளில் லைலாவும் மஜ்னூனும் இடம்பெறுவது மரபு. ஸஃபரும் அந்த அரேபியக் காதலர்களைத் ‘திறந்தது’ (திறந்துகொண்டது) என்னும் சொல்லை இயைபாகக் கொண்ட காதல் கஜலில் நுட்பமாக எழுதினார். இந்த கஜலில் லைலா மஜ்னூன் மட்டுமல்லாது ஒவ்வோர் இரண்டடியிலும் அவர் நிகழ்த்தியிருக்கும் அற்புதம் அவரைத் துயரக் கவிஞர் எனச் சிலர் குறிப்பிடுவதை அசைத்துப் பார்க்கும்.

என்ன வேடிக்கை
லைலாவின் நரம்பைத் துளைத்தப் பீற்றுக்குழலில்
மஜ்னூனின் குருதி
காதல் நடுக்கக் கொதிப்பில்
திறந்துகொண்டது

//கியா தமாஷா ஹை ரக்-ஏ-லைலா மேன் டூபா நெஷ்தார்
ஃபஸ்த்-ஏ-மஜ்னூன் பாயிஸ்-ஏ-ஜோஷ்-ஏ-மொஹப்பத் குல்கயி
//

இதயப் பரிமாற்றம்
உன் ஒரு பார்வையால் தடைபட்டதோ
மதிப்பீடா கேட்கிறாய்?
விலையின் ரகசியம்
திறந்துகொண்டது

//தில் கா சௌதா ஏக் நிகாஹ் பர் ஹை தேரி டெஹ்ரா ஹுவா
நர்க் து க்யா பூச்தா ஹை அப்தோ கீமத் குல்கயி
//

தன்னுடைய அறுபத்திரண்டாம் வயதில் மன்னராகப் பதவியேற்ற ஸஃபர், அரசாட்சிக்கு வரும் முன்னரே கிழக்கிந்தியக் கம்பெனியின் கரங்கள் இந்திய அரசியலில் ஓங்கியிருந்தன. எதிர்ப்புகள் நிறைந்த அரசியல் சூழலை ஸஃபர் எதிர்கொள்வதற்கு முன் எழுதிய கஜலாகவும் இது இருக்கலாம். அதன் பின்னர் விதி அவருக்கு வழங்கியது கடுமையான சூழலையும் கவலை தோய்ந்த வாழ்க்கையையும்தான். மன்னனாக இருந்து, கைது செய்யப்பட்டு, நாடுகடத்தப்பட்டு யாருமற்ற சூழலில் வாழ்ந்த கொடுமையை அனுபவித்தவர் ஸஃபர். இயலாமையும் வெறுமையும் அவருடைய கவிதைகளில் வெளிப்பட்டன.

நசீர், ஸௌக், காலிப் ஆகிய மூன்று பெருங்கவிஞர்களைத் தன் முன்னோடிகளாகவும், தன் அரசவையிலும் அவர் கொண்டிருந்ததால், அவருடைய சில கவிதைகளில் அம்மூவரின் தாக்கம் மட்டுமல்லாமல் அவர்களின் படைப்புகளாக இருக்கவும் வாய்ப்புள்ளதாகச் சிலர் கருதுகின்றனர்.

தன் கவித்துவத்தை நிரூபிக்காத ஒரு மன்னன் அவைப் புலவர்களின் பாடல்கள் ஒன்றிரண்டைத் தன் பெயரில் வெளியிட்டான் எனில் ஒரு பார்வையில் அதை ஏற்கலாம். ஸஃபர் தன்னுடைய ஆழ்ந்த புலமையை நிரூபித்த கவிஞர், அவருடைய சில கவிதைகள் அவருடைய வாழ்க்கையைத் தவிர வேறெவரின் வாழ்க்கையிலும் பொருத்திப் பார்க்க இயலாதவை. அப்படியிருக்கையில், தன் ஆசான்களுள் ஒருவர் எழுதியதைத் தான் எழுதியதென வெளியிடும் அவசியம் அவருக்கு ஏற்பட்டிருக்காது. அதனால், அக்கருத்தைப் புறந்தள்ளலாம்.

சிப்பாய்க்கலகத்தின் தோல்வியைக் குறித்து வீரர்கள் துவளாமலிருக்கவும், அவர்களின் வீரத்தைப் பாராட்டவும் எழுதப்பட்ட இரண்டு அடிகளை ஸஃபர் எழுதியதாகச் சிலர் அங்கங்கே மேற்கோள் காட்டுகின்றனர். விடுதலை வேட்கையும், இந்தியர்களின் வீரமும், கடைசி மூச்சு இருக்கும் வரையில் போராடுவோம் என்னும் முழக்கமும், அது எழுதப்பட்ட காலகட்டமும் அக்கவிதை ஸஃபரால் எழுதப்பட்டிருக்கும் சாத்தியங்களைக் கொண்டிருந்தாலும், அவருடைய தொகுப்புகளில் அக்கவிதை இடம்பெறவில்லை. வெவ்வேறு இடங்களில் கவிதையின் தொடக்க வார்த்தை வேறுபட்டிருப்பதாலும் அது அவர் எழுதியதாக இருக்காது என்னும் முடிவுக்கு வரலாம்.

இந்தியரிடம்’ நம்பிக்கையின் மணம் வீசும் வரையில்
லண்டனின் அரியணை வரையில் இந்தியாவின் வாள் உயரும்
இப்படியோர் இடத்திலும், இன்னோர் இடத்தில்,
‘வீரரிடம்’ நம்பிக்கையின் மணம் வீசும் வரையில்
லண்டனின் அரியணை வரையில் இந்தியாவின் வாள் உயரும்

என்றும் பதிவாகியுள்ளன.

ஹிந்தியோன் – இந்தியர்கள், காஸியோன் – வீரர்கள் என வெவ்வேறு சொற்கள் இருப்பினும் இரண்டும் குறிப்பிடுவது ஆங்கிலேயரின் அரியணையை நோக்கி வாளை உயர்த்துவதைத்தான்.

அவர் எழுதியதை மற்றவர் எழுதியிருக்கலாம் என்றும், அவர் எழுதாததை அவர் எழுதினார் என்றும் இரண்டு வகையிலும் அவருடைய கவிதைகள் பேசப்படுகின்றன.

வேறு எந்த மொகலாய மன்னருக்கும் இல்லாதபடி இரண்டு மாறுபட்ட எல்லைகளில் இவருடைய படங்கள் இரண்டு காணக்கிடைக்கும். மன்னரின் உடையில் ஓவியமும், நோய்ப்படுக்கையில் ஒரு புகைப்படமும் பொதுவெளியில் இருப்பது இவருக்கு மட்டுமே. இரண்டு படங்களிலும் அவருடன் ‘ஹுக்கா’ இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசு தபால்தலை வெளியிட்டதும், அவரை மையமாக வைத்து நாடகங்கள் எழுதப்பட்டதும், தொலைக்காட்சி நாடகங்கள் வெளியானதும், சிப்பாய்க்கலகம் தொடர்பான திரைப்படங்களில் அவருடைய கதாபாத்திரம் சேர்க்கப்படுவதும் தகவல்கள்.

அடையாளம் தெரியாத இடத்தில் ஆங்கிலேய ராணுவத்தால் புதைக்கப்பட்டு, ஆண்டுகள் கழித்து அந்தச் சமாதி அடையாளம் காணப்பட்டு, அதன் மீது ‘தர்கா’ எழுப்பப்பட்டு, நூற்றாண்டுகளுக்கு முன் புதைந்த வரலாறு வெளிப்பட்ட புகழும் ஸஃபருக்கு உண்டு.

முடிசூட்டப்படுவதற்கு முன் எளிமையானவராகவும், கவிஞராகவும், மன்னனான பின் கவிஞர் கூட்டத்தை அவையில் வைத்திருந்தும், தில்லி வரைதான் மொகலாயர் எனச் சுருங்கிவிட்ட எல்லையில், குழப்பமான அரசியல் சூழலில் ஆட்சி செய்தும், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான சிப்பாய்க்கலகத்தில் தோற்றுத் தேசத்துரோகியெனப் பழி சுமத்தப்பட்டு, நாடுகடத்தப்பட்டு, நோய்வாய்ப்பட்டு இறந்த பஹாதுர் ஷா, கவிஞராக இல்லாதிருந்தால் கடைசி மொகலாயர் என்னும் அடையாளத்துடன் மட்டும் வரலாற்றில் இருந்திருப்பார். அவருடைய வலிகளும், போராட்டமும், விரக்தியும், அவராலேயே கவிதைகளாக வடிக்கப்படாமல் இன்னொரு வரலாற்றுப் பக்கமாகப் புத்தகங்களில் குறிப்புகளாக வாழ்ந்திருப்பார்.

பகதூர் ஷா என்னும் மன்னனை மிஞ்சி வரலாற்றில் நிற்பவர் ஸஃபர் என்னும் கவிஞர். ஸஃபரின் கவிதைகள் திவான்-ஏ-ஸஃபர், குல்லியாத்-ஏ-ஸஃபர், எனத் தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளன. வில்லியம் டால்ரிம்பிள் எழுதிய ‘த லாஸ்ட் மொகல்’ புத்தகம் ஸஃபரின் வாழ்க்கை வரலாற்றுக்குச் சமகாலத்தில் முக்கியமான ஆவணம்.

ஆண்டு 1862இல் ஸஃபர் இறந்த பிறகு, பர்மாவிலிருந்து பிரிட்டிஷ் ஆணையர் லண்டனுக்குக் கீழ்க்காணும் செய்தியை அனுப்புகிறார்.

“முதியவரின் மரணம் அவருடைய குடும்பத்தார் யாரையும் பாதிக்கவில்லை. வயோதிகத் தளர்ச்சியும் தொண்டையில் ஏற்பட்ட வாதமும் அவருடைய இறப்புக்கான காரணங்கள்.”

கடைசி மொகலாய மன்னனின் மரணம் யாரையும் பாதிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அவருடைய கவிதைகள் வருங்காலத்திலும் பலரிடம் தாக்கத்தை உண்டாக்கும்.

கறைபடிந்த என்னுடைய இதயத்தில் இனி யாருக்கும் இடமில்லை, அவர்களை வேறு எங்காவது சென்று தங்கச் சொல்லுங்கள். புல்புல் பறவைகளுக்கு வேட்டைக்காரனிடமும் தோட்டக்காரனிடமும் எந்தப் பிரச்சனையும் இல்லை, அவற்றின் விதி சிறைப்படுவதென ஒரு வசந்தகாலத்தில் எழுதப்பட்டது. தோட்டத்தில் களையெடுக்க வேண்டாம், அவையும் பூக்களுடன் தானே ஒன்றாக வளர்ந்தன எனத் தொடரும் கஜலின் கடைசி இரண்டடிகள்தான்,

எத்தனை ஊழ்வினை
ஆறடி நிலமும் கிடைக்கவில்லை
என்னைப் புதைக்க
என் மண்ணில்

// கித்னா ஹை பத்-நசீப் ஸஃபர் தஃபன் கே லியே
தோ கஸ் ஸமீன் பி நாமிலா கூ-ஏ-யார்மேன்
//

Series Navigation<< உருதுக் கவிதை உலகு – 3: மீர்ஸா காலிப்

Author

You may also like

Leave a Comment