Home இலக்கியம்ஜப்பானிய சிறுவர் கதைகள் 16 – மொழியாக்கம்

ஜப்பானிய சிறுவர் கதைகள் 16 – மொழியாக்கம்

0 comments
This entry is part 15 of 15 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

சிகாராதாரோ (力太郎)

முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஒரு தாத்தாவும் பாட்டியும் தனியாக வசித்தனர். அவர்கள் தண்ணீரில் குளிப்பதற்கு அச்சப்பட்டனர். நீண்ட நாள்களாக அவர்கள் குளிக்காமல் இருந்தனர். அதனால் அவர்கள் தோல் சொரசொரப்பாகவும் அழுக்காகவும் இருந்தது.

ஒருநாள் அந்தச் சொரசொரப்பை அவர்கள் தேய்த்துக் கீழே உதிர்த்தனர். அது சின்னச்சின்ன உருண்டைகளாக விழுந்தது. உருண்டைகளை ஒன்றாகச் சேர்த்து ஒரு பொம்மையைச் செய்தனர். குழந்தைகள் இல்லாத தாத்தாவும் பாட்டியும் அந்தப் பொம்மையைக் குழந்தையாக நினைத்து அதற்கு அகாராதாரோ என்று பெயர் சூட்டினர். ஒரு தொட்டில் கட்டி பொம்மையை அதில் இட்டுத் தாலாட்டினர்.

ஒருநாள் பாட்டி சோறு சமைத்துப் பொம்மையின் முன்னே நீட்டினார். பொம்மை உயிர் பெற்று எழுந்து அந்தச் சோற்றைத் தின்றது. பாட்டி மிகவும் மகிழ்ந்தார். அகாராதாரோ குழந்தையாகவே மாறிவிட்டான் எனக் கொண்டாடினாள். தாத்தாவும் மகிழ்ச்சி அடைந்தார்.

அகாராதாரோ சோறு சாப்பிட்டதில் ஒரு அதிசயம் நடந்தது. அவன் எவ்வளவு அதிகம் சாப்பிடுகிறானோ அவ்வளவு அதிகம் வளர்ந்தான். எப்போதும் சாப்பிடுவதைப் போல இரண்டு மடங்கு சாப்பிட்டால், அவன் இரண்டு மடங்கு வளர்ந்தான். இப்படியே சாப்பிட்டுக் கிடுகிடுவென அவன் வளர்ந்தான். அவனைப் பாட்டியும் தாத்தாவும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

உயரமாகி நின்று தாத்தாவுடன் பேசினான்.

“தாத்தா எனக்கு முன்னூறு கிலோ எடையில் ஒரு கடப்பாரை செய்துகொடுங்கள்” என்றான்.

“அகாராதாரோ, அத்தனை எடையுள்ள கடப்பாரையை வைத்து நீ என்ன செய்யப்போகிறாய்?” எனத் தாத்தா கேட்டார்.

“செய்துகொடுங்கள் தாத்தா, பிறகு பாருங்கள்” என அவன் பதில் சொன்னான்.

இரும்பைக் காய்ச்சி அடித்துப் பொருள்கள் செய்யும் கருமான் மாமாவிடம் தாத்தா சென்றார். முன்னூறு கிலோ எடையில் கடப்பாரை செய்யச் சொன்னார். கடப்பாரை ஆயத்தமானது. பல ஆள்களை வைத்துக் கடப்பாரையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தனர். இவ்வளவு கனமாக இருக்கும் இந்தக் கடப்பாரையை எப்படி அகாராதாரோ தூக்கப்போகிறான் எனத் தாத்தா நினைத்தார். கடப்பாரையைப் பார்த்த அவனோ ஒரே கையால் அதனைத் தூக்கிச் சுழற்றித் ‘தொம்’ எனத் தரையில் அடித்தான்.

தாத்தாவும் பாட்டியும் தவளையைப் போலத் துள்ளினர். அவனுடைய பலத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

“நீ மிகவும் பலசாலியாக வளர்ந்துவிட்டாய், அதனால் இனிமேல் உன் பெயர் சிகாராதாரோ” என்றனர்.

ஜப்பானிய மொழியில் ‘சி’ என்றால் சக்தி, ‘கா’ என்றால் பருமன், ‘தாரோ’ ஆண் குழந்தைக்குப் பொதுப்பெயர். சிகாராதாரோ என்றால் குண்டுப்பையன்.

“தாத்தா! பாட்டி! நான் வெளியூருக்குச் சென்று என்னுடைய பலத்தால் எதையாவது சாதித்து வருகிறேன்” என விடைபெற்றான்.

“நற்படியாகச் சென்று வா” என அவர்கள் வாழ்த்தி வழியனுப்பினர்.

அவன் அவ்வளவு எடையுள்ள கடப்பாரையை எளிதாக வீசி வீசி நடந்து பயணம் சென்றான். மலைப்பாதையில் எதிரில் இன்னொரு பலசாலியைக் கண்டான். அவன் ஒரு மடாலயத்தைத் தூக்கிக்கொண்டு நடந்து வந்தான். சிகாராதாரோவை அவன் மிரட்டினான்.

“ஏய்! நான்தான் மிதாகோதாரோ. நீ என் வழியை மறைக்கிறாய். நான் பெரிய பலசாலி தெரியுமா?” என்றான்.

“என்ன நீ பெரிய பலசாலியா? என் பெயர் சிகாராதாரோ. நானும் பலசாலிதான். என்னுடன் மோதிப்பார்” எனச் சவால் விட்டான்.

இருவரும் சண்டையிட ஆயத்தமானார்கள்.

சிகாராதாரோவின் வேகமான கடப்பாரை வீச்சை எதிர்க்க முடியவில்லை. மிதாகோதாரோ சண்டையில் தோற்றான். எங்கு விழுந்தான் எனத் தெரியவில்லை, அவன் தூக்கிக்கொண்டு வந்த மடாலயமும் எங்கே போனதெனத் தெரியவில்லை. தேடிப் பார்த்தால் மலையிலிருந்து கீழே விழுகையில் ஒரு மரத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தான்.

“என்ன? மிதாகோதாரோ! ரொம்பவும் பேசினாய். எங்கே உன் பலம்?” என அவனைப் பார்த்துச் சிகாராதாரோ கேட்டான்.

“என்னை முதலில் காப்பாற்று” என அவன் வேண்டினான்.

அவன் கேட்டுக்கொண்டபடி மரத்தை வேருடன் பிடுங்கி மேலே இழுத்துக் காப்பாற்றினான்.

“சிகாராதாரோ, என்னால் உன்னுடன் சண்டை போட முடியாது, நீ பலசாலி. என்னை நீ உன்னுடைய உதவியாளனாக ஏற்றுக்கொள்” என்றான்.

இருவரும் சேர்ந்து பயணம் செய்தனர்.

மலைப்பாதையில் அவர்கள் இருவரும் இன்னொரு பலசாலியைப் பார்த்தனர். அவன் பெயர் இஷிகாதாரோ. அவன் மலைகளைத் தர்பூசணிப் பழங்களை உடைப்பது போல உடைத்து வீசிக்கொண்டிருந்தான். சிகாராதாரோ ஒரு கல்லை எடுத்து அவனுடைய நெற்றியைக் குறிவைத்து வீசினான்.

“அடேய்! யாரடா அது ஜப்பானிலேயே பலசாலியான இஷிகாதாரோவின் மீது கல் எறிந்தது?” எனக் கோபமாகக் கேட்டான்.

“நான்தான் எறிந்தேன். நீ பலசாலியென்றால் என்னுடன் சண்டையிடு” என்றான்.

இடையில் மிதாகோதாரோ வந்து, “இவனுடன் நான் சண்டையிடுகிறேன்” என்றான். இருவரும் சண்டையிட்டனர். நீண்ட நேரமாக அந்தச் சண்டை நடந்தது. காலையில் தொடங்கிய சண்டை மாலை வரையில் தொடர்ந்தது. முடியாமல் தொடரும் சண்டையைப் பார்த்த சிகாராதாரோ, சண்டையை நிறுத்தினான்.

“என்ன இது இவ்வளவு நேரம் சண்டையிடுகிறாய்? இவனுடன் நானே சண்டையிட்டு ஜெயிக்கிறேன்.” என்று சொன்னான். சொன்னபடியே இஷிகாதாரோவைத் தூக்கித் தலைகீழாக வீசினான்.

கீழே விழுந்தவன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டான். அவனும் தன்னை உதவியாளனாக ஏற்கச் சொன்னான்.

அதன் பின்னர் மூவரும் அருகில் இருக்கும் ஊருக்கு உள்ளே சென்றனர். அந்த ஊரில் யாரும் தெருவில் இல்லை. எல்லாரும் வீட்டுக்குள் சென்று கதவை அடைத்திருந்தனர். யோசித்துக்கொண்டே நடந்த மூவரும் ஒரு பெரிய வீட்டின் முன்னே நின்றனர். அந்த வீட்டு வாசலில் ஒரு பெண் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள்.

“பெண்ணே! நீ யார்? ஏன் அழுகிறாய்?” எனக் கேட்டனர்.

அதற்கு அந்தப் பெண், “மாதத்திற்கு ஒருமுறை இந்த ஊருக்கு ஒரு அரக்கன் வருவான். அவன் வரும்போது யாரையாவது தூக்கிச் செல்வான். இன்று என்னைத் தூக்கிச் செல்வதாகச் சொன்னான்.” என்றாள்.

“உன் வீட்டில் யாரும் இல்லையா?” சிகாராதாரோ கேட்டான்.

“இருக்கிறார்கள். ஆனாலும் அரக்கனை எதிர்த்து யாராலும் எதுவும் செய்ய முடியாது” என்றாள்.

“நாங்கள் உன்னை அரக்கனிடமிருந்து காப்பாற்றுகிறோம்” எனக் கூறினர்.

அங்கே ஒளிந்துகொண்டு அரக்கனுக்காகக் காத்திருந்தனர்.

“ஹஹ்ஹஹ்ஹா! பெண்ணே நான் வந்துவிட்டேன்” எனப் புயலைப் போல அரக்கன் வந்தான்.

பெண் பயந்துபோனாள்.

அரக்கன் பெண்ணைத் தூக்குவதற்குள் ஒளிந்துகொண்டிருந்த மூவரும் அரக்கன் முன்னே வந்து நின்றனர்.

“ம், தாக்குங்கள்” எனச் சிகாராதாரோ கட்டளையிட்டதும், மிதாகோதாரோவும் இஷிகாதாரோவும் அரக்கனின் இரண்டு பக்கமும் பாய்ந்து அவனுடைய விரல்களை மடக்கினர். முதலில் வலியால் துடித்த அரக்கன் பிறகு சமாளித்துக்கொண்டான். அவர்கள் இருவரையும் பிடித்து விழுங்கிவிட்டான்.

சிகாராதாரோ பயப்படவில்லை. அரக்கனுடன் சண்டையிட்டான். தன்னுடைய கடப்பாரையால் அரக்கனைத் தாக்கினான். அரக்கனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை, கீழே விழுந்தான். அரக்கனின் வயிற்றில் ஏறி மிதித்தான். வயிறு அழுந்தியதால், அரக்கன் மிதாகோதாரோவையும் இஷிகாதாரோவையும் வெளியே துப்பினான். இனி இங்கு வரமாட்டேன் எனச் சொல்லிவிட்டுப் புகையாக மாறி மறைந்தான்.

காப்பாற்றப்பட்ட பெண்ணின் அப்பா அவர்கள் மூவருக்கும் பெரிய விருந்து வைத்தார். அந்த ஊர்மக்கள் அவர்களுக்கு நன்றி சொன்னார்கள். சிகாராதாரோ அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.

Series Navigation<< ஜப்பானிய சிறுவர் கதைகள் 15 – மொழியாக்கம்

Author

You may also like

Leave a Comment