Home இதழ்கள்இதழ் 11அனு பாப்பச்சன் கவிதைகள்

தமிழாக்கம்: ஆசிஃப் மீரான்

அனு பாப்பச்சன் ஒரு புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர், ஊடகவியலாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளர். திருச்சூரில் உள்ள விமலா கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கல்வியிலும் இலக்கியத்திலும் பல விருதுகளையும் பதக்கங்களையும் வென்றவர். இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் மனித உணர்வுகள், சமூக அநீதிகள் மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்துப் பேசுபவை.

கண்கள்
அடைவதற்கும் முன்பே
அவசரப்பட்டு
உள்ளுக்குள்
ஏறி வந்தது

மேல்கூரையின்
நட்சத்திரங்களைப் பார்த்து
கை வீசியது

பகல்
சொல்லமுடியாத
மனதில் ஒடுங்கிய
ஒரு வார்த்தை
கூட்டத்தில் அடையாளமென்பது போல
மினுங்கி நின்றது

படுக்கைக்கருகில்
மஞ்சள் நாற்காலியில்
கால் நீட்டி
வழக்கமான இருப்பு

விரல்கள்
நெட்டி முறிக்கின்றன
ஒவ்வொரு நெட்டி ஒலியிலும்
ஒரு நினைவுமணி
நிலத்தில்
வீழ்ந்து மறைகிறது

மழலையாயிருந்த காலத்தில்
என்னைப் பாலூட்டிய
நிசப்தம்
மடியிலிருந்து
ஊர்ந்து இறங்கியது

இடையில்
ஒளிந்து பார்த்த
மழையின் விரலில்
தொட்டு கொஞ்சியது

ஜன்னல் திறந்ததும்
நீர் தளும்புகின்ற
நிலா வெளிச்சத்துக்கு
ஓடிப் போனாள்
ஒரு சிறுமி

கூப்பிட்டால்
திரும்பிப் பார்க்கக் கூடும்
அழைக்கவில்லை

உறக்கத்தின் வாயிலை
விரியத் திறந்து
இரவினோடு
ஒட்டிச் சேர்ந்து
கிடந்தது.

Author

You may also like

Leave a Comment