Home நாவல்இனியவன் – 4
This entry is part 4 of 4 in the series இனியவன்

“கல்யாணம் ஆகாத இளம் பெண்களுக்கும் கல்யாணம் ஆகிப் பல வருடம் ஆன பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தெரியுமா ஜபீன்…?”

கேட்டவன் சுல்தான் ஏஜாஸ் மாலிக். இடம் அந்தப்புரம் ஹரேம். கேட்டது மனைவி ஜபீன் மெஹருன்னிஸாவை.

“என்ன, நிறைய வாய் பேசுவோமாக்கும்?”

“இல்லை.”

“சொல்லுங்கள் நீங்களே..”

நெருங்கி அமர்ந்திருந்த சுல்தான் சற்றே விலகிக்கொண்டான்.

“இரண்டு பேருக்குமே இடை இருக்காது….”

கொஞ்சம் முழித்தவள், அவன் பொருளை உணர்ந்தாலும்.. ”புரியவில்லை ஏஜு”…

மெஹருக்குக் கோபம் வந்தால் சுல்தானைச் சுருக்கித்தான் கூப்பிடுவாள்.

சிரித்தான் ஏஜாஸ்.

“ஆரம்பத்தில் இளம் பெண்களுக்கு இடை சிற்றிடையாய் இல்லாதது போல் இருக்கும். பின்… காலப்போக்கில் கல்யாணம் ஆனபின் காணாமலே போய்விடும்.. என நான் சொல்லவில்லையடி.. ஆன்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள்..”

“அது சரி..” என்று பொய்க்கோபம் கொண்டாள் ஜபீன்.

“ஒடிவது போல் இருந்த இடை இப்போது உனக்கு எப்படி ஆகிவிட்டதடி…”

“என்னுடன் பேச வேண்டாம்..”

“இல்லை இல்லை.. இன்னும் இருக்கிறது.. இந்தா, இந்தத் திராட்சைப் பழத்தை எடுத்துக் கொள்..”

“ம்க்கும்.”

“நன்றாகவே சொல்கிறாய் போ. மது அருந்திய கிளியைப் போல மிழற்றுகிறாய்… ஆமாம், லகியைப் போய்ப் பார்த்து வருகிறேன்..”

“ஆமாம். பெண் என்றால் அப்படியே கண்கள் அகல விரியுமாக்கும்.. அவள் ஒன்றும் சும்மா இல்லை… மிக்க வேலையுடன் இருக்கிறாள்..”

“என்ன வேலையாம்..?”

“ம். உங்களிடம் கேட்டுக்கொண்டு வந்தாளே அந்தச் சிலை, பொம்மை – அதற்கு மாலையிட்டு அழகுபடுத்தி அதன் முன் ஆட்டமென்ன பாட்டென்ன.. அது மட்டுமில்லை ஏஜு.”

“ம்ம்” என்றான் முகம் மாறியிருந்த ஏஜாஸ்.

“அது மட்டுமில்லை.. அவளுக்குத் தரப்படும் ரொட்டி, காய்கறிகள் எல்லாம் முதலில் அந்தப் பொம்மைக்குத்தான்..”

“அது உண்டதா என்ன..?”

“இல்லை. ஆனால் மறுநாள் கோட்டையின் வெளியில் புறாக்களுக்கு இட்டு விடப்படும்.. “

“ம் இரு. செல்கிறேன்” எனப் புறப்பட்டபோது, “இருங்கள். நானும் உடை மாற்றி வருகிறேன்” என்றாள் மெஹருன்னிஸா.

தீர்க்கமான கண்களினால் தீண்டாதேயேன்
….தேடியெந்தன் உணர்வினிலே ஊடாடாதேயேன்
ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் என்னுள்ளத்தை
…அல்லாட விட்டுவிட்டு நிற்காதேயேன்
கோர்த்திருக்கும் மாலையினைச் சூடிக்கொண்டு
…குமரியெனைப் பரிதவிக்க வைக்காதேயேன்
வேர்த்தபடி ஆடுகின்றேன் ப்யாரா கொஞ்சம்
…வேடிக்கை பார்த்தபடி இருக்காதேயேன்..

ஆடினாள் லகிமார் சுழன்று.. கொஞ்சம் நின்றாள்… ராமப்பிரியனின் அருகில் வந்தாள்….

“எந்த ஊரடா உனக்கு? ஓ யதுகிரி… அது சரி… மேல்கோட்டை என்பார்களாம்.. கிராமத்தானா நீ? என் மனம் புரியவில்லையா உனக்கு?

அது சரி.. கண்களால் சிரிக்கின்றாய்.. உதடுகள் கூடக் கொஞ்சம் அவ்வப்போது விரிகிறது.. அது சரி. உனக்கு எப்படியடா கொடியிடை? நிறைய உடற்பயிற்சி செய்வாயா என்ன? எப்படி ஒடித்து நிற்கின்றாய்..?”

தானும் கொஞ்சம் ஒடிந்தபடி இடை ஒசித்து நின்றாள் பீபி லகிமார். ”அழகாக இருக்கிறதாடா உனக்கு? வா சித்ரா, இவன் சொல்லவே மாட்டேன் என்கிறான்..”

வந்த சித்ராவின் கண்களில் தளும்பல்.

“இளவரசி…”

“என்ன இளவரசிக்கு? நான் என் ப்யாராவுடன் இருக்கிறேன்..”

“ப்யாராவுடன் இருக்கிறீர்கள் சரி. எப்படி இருக்கிறீர்கள்?”

“எப்படியாம்..?”

“ஆராதித்தே அழகிய நடனம்
…அனுதினம் செய்கின்றீர்
யாரோ என்றால் ப்யாரா என்றே
..சொல்லிக் களிக்கின்றீர்
நாராய் மெலிதாய் நங்கை உம் உடலும்
… நலிந்தே போனதம்மா
பாராமல் உம் ப்யாரா இருந்தால்
…பதறுதென் உள்ளம்மா..”

“ஹஹ்ஹ…”. கிண்கிணி மணியாய்ச் சிரித்தாள் லகிமார். “அட சந்தம் நன்றாக இருக்கிறதே.. ஆடிப் பார்க்கலாமா..?”

“உங்களைப் பார்க்கையில் எனக்குத் தமிழ்ப் பாடல் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது…”

“விரைவாய்ச் சொல் இவளே.”

“விளரிக் குரலன்றில் மென்படை மேகின்ற முன்றில் பெண்ணை,
முளரிக் குரம்பை இதுவிது வாக, முகில் வண்ணன்பேர்
கிளரிக் கிளரிப் பிதற்றும் மெல்லாவியும்
தளரில் கொலோ வறியேன், உய்ய லாவதித் தையலுக்கே.

அன்றில் பறவைகள் வீட்டின் முன் வாசலில் இருக்கும் பனைமரத்தில் கூடுகட்டி இணையாய் இருக்கின்றன. அதைப் பார்த்த அந்த இன்னொரு தலைவி ஆற்றாமை கொண்டு, கார்மேக வண்ணனான தன் தலைவனின் பெயர் சொல்லியவாறு உடல் தளர்ந்து உடல் மெலிந்து விடுகிறாள்.. என வரும் தலைவி.. அது போல் உங்கள் நிலை.. “

“நன்றாகவே சொல்கிறாய் சித்ரா.. நான் அன்றில் பறவையை எல்லாம் பார்க்கவில்லை.. நான் பார்ப்பது இந்தப் ப்யாராவின் முகத்தைத் தான்..”

“சற்று இருங்கள். கதவு தட்டும் சத்தம் கேட்கிறது.. திறக்கிறேன்..”

திறந்தால் சுல்தான் ஏஜாஸ். பின்னால் ஜபீன் மெஹர்.

“பீபி லகிமார்” என ஜபீன் லகியைப் பற்றிக்கொள்ள, ஏஜாஸ் ராமப்பிரியரைப் பார்த்தான்.

“என்ன இது லகி…?”

“என்ன வாப்பா..?”

“இது தான். இந்த அலங்காரம்.. உனக்கு, இந்தப் பொம்மைக்கு..”

“சும்மா விளையாட்டுக்கப்பா…”

“நிஜமாவா…?” சுல்தான் குரல் கொஞ்சம் தன்மையானது.

“நான் பயந்துவிட்டேன் லகி… சரி. உன் அம்மா உனக்குத் திருமணம் செய்யலாம் என நினைக்கிறார்கள்…”

“நேரம் என்ன இருக்குமப்பா?”

“இரண்டாம் ஜாமம் ஆரம்பிக்கப் போகிறது.. சரி. உனக்கு உறக்கம் வருகிறதா என்ன..?”

“கொஞ்சம் தான். வரும் போல இருக்கிறது.. வாப்பா. ஹாவ்வ்வ்”

“தூங்குவதே இல்லை இவள்.. கண்களைப் பாருங்கள்…”. சீறினாள் ஜபீன்.

“வாப்பா…”

“ஷ்” என்றான் சுல்தான். ”உனக்குத் திருமணம் நிச்சயிக்கலாமா…?”

“தாராளமாக வாப்பா… உங்கள் இஷ்டம்..”

ஜபீனால் எதுவும் பேச முடியவில்லை. ”சரி வா இவளே, செல்லலாம்..” எனச் சொல்லிச் சுல்தான் போக, பின் மெஹர் போக… சித்ரா கேட்டாள்:

“என்ன ஆயிற்று தலைவி?”

“ஷ்” என்றாள் லகி. அறைக்கதவைத் தாளிட்டாள். “என் ப்யாராவின் இரவு உணவிற்கான நேரம்.. எங்கே ரொட்டி… பாவம் அது பசியாய் இருக்கும், அதற்காகத்தான் வாப்பாவிடம் பொய் சொன்னேன்..…”

“தலைவி..”

“நீ போ இவளே” எனச் சொல்லி கதவைச் சாத்திப் ப்யாராவிற்கு உணவு வைத்துப் பின் தானும் கொஞ்சம் விண்டு வாயில் போட்டுக்கொண்டாள். சற்று நேரத்தில் உறக்கம் வரக் கண்ணயர…..

யாரோ ஒரு பெரியவர் ப்யாராவைக் கூப்பிடுகிறார்… ‘சம்பத்குமாரா, செல்லப்பிள்ளை’ என. ப்யாராவும் கொஞ்சம் நகரப் பார்க்கிறான் எனத் தோற்றம் வர, விழித்துக்கொண்டு ப்யாராவின் கால் பற்றி… “என்னை விட்டுப் போகாதே. போக விடமாட்டேன் ப்யாரா. நானும் வருவேன்..” என்று அரற்ற ஆரம்பித்தாள் லகிமார்.

(தொடரும்)

Series Navigation<< இனியவன் – 3

Author

You may also like

Leave a Comment