நின்ற கால்கள் நின்றபடி இருக்க, அந்தப் பெரியவரை நோக்கிச் சென்ற கண்களின் பார்வை திரும்பாமலே இருக்க… கொஞ்சம் சிரமப்பட்டுப் பார்வையைத் திருப்பி, மறுபடி அவரைப் பார்த்தான் சுல்தான் மாலிக் ஏஜாஸ்.
தீர்க்கமான, சாந்தமான கண்கள். வயதான உடல். ஆனால் தேஜஸ்… உடலில் தெரிந்த கம்பீரம்… கண்களைக் கொள்ளை கொள்கிறதே!
வழக்கமாய்க் காலை எல்லோருடைய சிரக்கம்பங்களையும் ஏற்று அரியணை ஏறுவது வழக்கம். இன்று ஏறுவதற்கு முன்னாலேயே வந்து நின்றிருந்த பெரியவரைப் பார்க்க, அனிச்சையாய் அவனும் நின்றுவிட்டான்.
”சுல்தான்…”
வேற்று மதச் சன்னியாசிகள் எல்லாம் அவன் முன் வர அஞ்சுவார்கள். இவர் அப்படியில்லை; தவிர, இவரிடம் கொஞ்சம் மரியாதையும் வருகிறதே எனக்கு…
”பெரியவரே… தாங்கள் யார்? வந்த காரணம் என்ன? சொல்லுங்கள்.”
”அடியேன் ராமானுஜன். அமருங்கள்… பின் சொல்கிறேன்.”
”இருக்கட்டும், கேட்டுவிட்டு அமர்கிறேன். உங்களுக்கு என்ன வேண்டும்…?”
”இந்த வயதானவனுக்கு என்னப்பா வேண்டும்? வயதானால் ஆண்டவனைத்தான் அடைய ஒவ்வொருவரும் நினைப்பார்கள் அல்லவா? எனக்கு என் ஆண்டவன் வேண்டும்.”
”பெரியவரே…” சிரித்தான் சுல்தான் ஏஜாஸ். “உங்கள் ஆண்டவன் இங்கு இல்லையே!”
”இருக்கிறான் சுல்தான்… நீங்கள் கொண்டு வந்த விக்ரகங்கள்…”
”அது சரி… பொம்மைகள். ஆண்டவன் என்றதும் குழம்பிவிட்டேன்.”
”உங்கள் ஆண்டவருக்கு நீங்கள் அடையாளம் வைத்திருப்பது போன்று, எங்கள் தெய்வத்திற்கும் தேகம் என்ற அடையாளம் வைத்திருக்கிறோம். அதன் மூலம் எங்களுக்கு அருள்பாலிப்பதாக நினைக்கிறோம்.”
”அது சரி. உங்களது தத்துவங்களை, சிந்தனைகளைக் கேட்பதற்கு எனக்கு நேரமில்லை, மனமுமில்லை. உங்கள் விக்ரகம் என்னிடம் இருக்குமா எனச் சந்தேகம் இருக்கிறது. முக்கால்வாசி உருக்கியாகி விட்டது என நினைக்கிறேன். இந்தாருங்கள் சாவி; கஜானா அதிகாரியுடன் அறைக்குப் போய் இருக்கிறதா எனப் பாருங்கள்…”
ராமானுஜர் கஜானா அறைக்கு அதிகாரியுடன் சென்று தேடினார். மற்றவை இருந்தன; ராமப்ரியரைக் காணோம்.
கஜானா அறை அதிகாரி மெல்லிய குரலில், ”அந்தப்புரத்தில் எங்கள் அரசகுமாரியிடம் இருக்கிறது ஒரு விக்ரகம். அதுவாக இருக்கலாம்… சுல்தானிடம் சொல்லுங்கள்…”
”சுல்தான்!”
”ம்?”
”உங்கள் அரசகுமாரியிடம் ஒரு விக்ரகம் இருக்கிறதாமே?…”
”ஆமாம்… ஆனால் அது அவளது விளையாட்டுப் பொருள் ஆயிற்றே, அவள் தரமாட்டாள்…”
”நான் கேட்டுப் பார்க்கிறேனப்பா…”
”ம்ஹுஹூம்… அது ஹரேம். அந்நிய ஆடவர்கள் செல்ல முடியாது. நான் கூட எப்போதாவது தான் சொல்லியனுப்பிச் செல்வேன். வேண்டுமானால் ஒன்று செய்யுங்களேன்.”
”என்ன?”
”இங்கிருந்தபடி உங்கள் தெய்வத்தை அழையுங்கள். வந்தால் எடுத்துக்கொண்டு செல்லுங்கள்…”
ராமானுஜர் கண்களை மூடிக்கொண்டார். ”என்ன இது ராமப்ரியரே, இது என்ன சோதனை…?”
மூடிய கண்களுக்கும் சின்னப் பிள்ளையாகக் கோபியொருத்தியுடன் ஆடினான் ராமப்ரியன். ”என்ன இது ராமப்ரியரே? கண்ணப்ரியர் ஆகிவிட்டீரா?…
செல்லப் பிள்ளையே சம்பத் குமாரா வாராய் வாராயப்பா…
துன்பங்கள் எல்லாமே உன்னழகில்தான்
…துச்சமெனப் பறந்திடுமே தொலைதூரத்தில்
வண்ணமென வஞ்சியுடன் இருக்கலாமா
…வாகாக வந்திடப்பா செல்லப் பிள்ளை
கண்மயக்கம் கொண்டே நான் கேட்கின்றேனே
…கணப்பொழுதும் நிற்காமல் வருவாயப்பா
பொன்மயிலாய்த் தாவி நீயும் இங்கே நன்றாய்
…பூவிழியின் தரிசனமும் தருவாயப்பா…
செல்லப் பிள்ளாய் சம்பத் குமாரா
…சீக்கிரம் வாருமையா
உள்ளத்திருத்தி உமையே அழைத்தேன்
வந்தருள் தாருமையா
வெள்ளப் பெருக்காய் வழியும் கண்ணீர்
…நின்றிட வாருமையா
துள்ளித் தாவும் மானாய் இங்கே
…துடிப்புடன் வாருமையா…”
ராமானுஜரின் மனம் பாட, அவர் கண்ணுக்குள் ஒரு தோற்றம்… ராமப்ரியர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் விக்ரக ரூபமாய் காற்றில் மிதந்து வர, கூடவே பின்னால் தாவிக்குதித்தபடிச் செல்லப் பிள்ளை கிருஷ்ண ரூபமாய் சம்பத் குமாரன்…
ஒரு கணம் தான், ஒரு கணம் தான் தோற்றம் மறையக் கண் திறக்க, சுல்தான் மாலிக்கின் கண்களிலும் வியப்பு. ஏனெனில் அவனுக்கும் அந்தத் தோற்றம் கண்ணுள் தோன்றி மறைந்திருந்தது.
அரண்மனையிலிருந்து ஹரேம் செல்லும் வழியினைக் கண்கள் நோக்க, கொஞ்சம் வாத்திய ஒலி… சில வேதியர்கள் ராமப்ரியனையும் ஸ்ரீதேவி பூதேவியையும் கொண்டு வர, பின்னால் அழுத விழிகளுடன் ஜபீன் மெஹருன்னிஸா, சித்ராங்கதா, பின் பணிப்பெண்கள்…
”என்னாயிற்று ஜபீன்?”
ஜபீன் குமுறிக் குமுறி அழுதாள்…
“நமது மகள் பீபி லகிமார் இரவு முழுவதும் அரற்றியபடி இருந்தாளாம். சித்ரா சொன்னாள்… ஒரு கணப்பொழுது சித்ராவின் கண்கள் மூடிய பொழுதில், அவள் ப்யாராவின் கால் பற்றியபடி நமது இறைவனிடம் சென்றுவிட்டாள். பற்றிய இவளது கால்கள் செயலற்று நின்றுவிட்டன… கண்கள் ப்யாராவைப் பார்த்தபடியே நிலைத்துவிட்டன… உருவமோ…”
மேலும் பேச முடியாமல் கதற, அழுகை சுல்தானுக்கும் தொற்றிக்கொண்டது.
”ராமானுஜரே… என்ன இது? எனக்கிருப்பது ஒரே மகள்… இப்படியா ஆக வேண்டும்?”
இதே காட்சி பெரியாழ்வாரிடம் இருந்தது நினைவுக்கு வந்தது ராமானுஜருக்கு… ‘ஒரு மகள் தன்னையுடையேன் உலகம் அளந்தான் (செங்கண்மால்) கொண்டு போனான்’ எனப் பெரியாழ்வாரின் துயரம் சுல்தானைப் பற்றிக் கொள்ளக் கண்டார் ராமானுஜர்.
”வாப்பா… உங்களிடம் சொல்லிக்கொள்ளவில்லை என நினைக்காதீர்கள். மன்னியுங்கள். மிகப்பெரிய ஆனந்தம் என்னை அழைக்கிறது… செல்கிறேன். என் ப்யாராவைத் தேடி வரும் பெரியவரிடம் கொடுத்துவிடுங்கள்…”
அழுகையினூடே சித்ரா, லகிமார் எழுதிய ஓலையைப் படித்தாள்…
கலங்கியிருந்த சுல்தானிடம் சொன்னார் உடையவர்:
”அப்பனே கலங்காதே. உன் லகிமார் எங்கும் செல்லவில்லை. இந்த ராமப்ரியரோடு தான் அவளும் இருப்பாள், அவனது திருவடிகளில்… வருங்காலம் நப்பின்னை, ஆண்டாள் போல உன் மகளையும் போற்றும்” எனச் சொல்ல, சுல்தான் கண்கள் மூடிக்கொள்ள, அங்கே லகிமார் சிரித்தாள்.
”வாப்பா… என் கால்கள் நிற்கவில்லையப்பா. உன் நினைவுகளில் நான் ஓடிக்கொண்டே இருப்பேன்.. கலங்காதே.. சரியா…”
கண் மூடியபடியே தலையசைத்தான் சுல்தான்.
முற்றும்.
(கால்கள் நின்றது நின்றது தான்…)
நன்றி : ராமானுஜர்
நம்மாழ்வார்
பெரியாழ்வார்
பஞ்ச நாராயணக் கோட்டம் – காலச் சக்கரம் நரசிம்மா..
ராமானுஜர் சாண்டில்யன்
ஏராளமான இணையப் பக்கங்கள்
ப்ளஸ் கொஞ்சூண்டு எனது கற்பனை..
வாசக தோஷ சந்தவ்யக…