“நிலா காய்கிறது மேலும் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே”.. எங்கிருந்தோ தூரத்திலிருந்து மிதந்து வந்த அந்தப் பாடல் வரிகள் அவர் காதில் விழுந்தன.
சாளரத்தின் ஓரம் அமர்ந்திருந்த அவர் எழுபதுகளைத் தாண்டியவர். முகத்தில் ஏகப்பட்ட சுருக்கங்கள். சரிந்து விழும் மாலையின் வெயில் அந்த ரேகைகளை இன்னும் ஆழமாகக் காட்டியது.
“மாலை சூரியன் உரிக்காத ஆரஞ்சுப் பழம் போல இருக்குது. நிலா எங்கே காய்கிறது… தரையிலா, இல்லை மொட்டை மாடியிலா?” தனக்குள் தற்செயலாகத் தோன்றிய அந்த வெகு சாதாரணமான நகைச்சுவையை நினைத்து அவரே லேசாகச் சிரித்துக் கொண்டார்.
‘வயசானாலே இந்த மூளைக்குக் கொஞ்சம் லூசுப் பிடித்து விடுகிறது’ என்று செல்லமாகக் கடிந்துகொண்டார்.
சாளரத்திற்கு வெளியே வளைந்து சென்ற கறுப்பு நிறச் சாலை ஏதோ சில நினைவுகளை மேலெழுப்ப முயன்று தோற்றுப்போனது. தலையை உலுக்கிக் கொண்டார். நேற்றைய மனிதர்களின் காலடிச் சுவடுகள் அங்கே அவருக்குத் துல்லியமாகத் தெரிந்த காலமும் உண்டு. இப்போது, சில நினைவுகள் மட்டும் திரும்பத் திரும்ப மூளைக்குள் ஏதோ ஓவியம் போலக் கண்ணாமூச்சி காட்டி மறைகின்றன.
இது வெறும் மூளையின் ரசாயனக் கோளாறு என்று தர்க்கம் இடித்தாலும், மனம் அந்தப் பழைய சுவடுகளைத் தேடி ஓடுவதை நிறுத்தவில்லை. மெல்ல எழுந்து அடுக்களைக்குச் சென்றார். காலையில் வேலைக்காரி காய்ச்சி வைத்திருந்த பாலின் மிச்சம் இருந்தது.
ஒரு டீ குடித்தால் தேவலாம் போலிருக்க, டீத்தூள் டப்பா உடனே கிடைத்துவிட்டது. ஆனால், அந்த இன்னொரு டப்பா? அதிலிருக்கும் அந்த வெள்ளையான பொடி? பெயர் நாக்கு நுனியில் நிற்கிறது, ஆனால் வெளிவர மறுக்கிறது.
“உப்பு? இல்லை. ச… ச… சப்ளிமெண்டரியா?”
மூளை ஒருவிதமான இருட்டுக்குள் தட்டுத்தடுமாறித் தேடியது.
‘போச்சு, இதுக்குப் பேரு என்ன?’
என்று ஒரு சிறு பதற்றம் தொற்றிக்கொண்டது.
டப்பாவைத் திறந்து ஒரு சிட்டிகை எடுத்து நாக்கில் வைத்தார். இனித்தது.
‘அப்பாடா.. நீ என்ன பெயராய் இருந்தால் எனக்கென்ன, எனக்குத் தேவை உன் இனிப்பு’ என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டு தேநீரைக் கலக்கினார்.
கையில் கோப்பையுடன் சுவர்களை வெறித்தார். அந்த வீடு ரொம்பவே மௌனத்தைப் பழகியிருந்தது. மூடினாலும் அவ்வப்போது கத்தும் கவுளி, சில்வண்டின் ஓசைகள் மட்டுமே இப்போதைய பேச்சுத் துணை.
சுவரில் சில புகைப்படங்கள். அவர் போலீஸ் உடையில். யாரோ யாருக்கோ சல்யூட் அடிக்கிறார். யார் அவர்? என்ற எண்ணம் ஓடியது, அது தானென்பதை உணர்ந்துகொள்ள சிறிது நேரம் பிடித்தது.
இன்னொரு படத்தில் யாரோ அவரிடமிருந்து ஒரு கோப்பையை வாங்குகிறார்கள். ‘நான் யாருக்கு சல்யூட் அடிக்கிறேன்? எப்போது நடந்தது இது?’ மூளையைக் கசக்கினார்.
அந்தப் படங்களுக்குப் பின்னால் இருந்த உணர்வுகள் எல்லாம் தண்ணீரில் கரைந்து போன சுவரோவியங்கள் போலப் பிடிபடாமல் நழுவின.
வெளிநாட்டில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட மகனின் திருமணப் படமும், ஏழு வருடங்களுக்கு முன் இறந்துபோன மனைவியின் முகமும் மட்டும்தான் மூளையில் இன்னும் அழியாத மிச்சங்கள். தேநீர் சில்லிட்டுப் போயிருந்தது. ஒரே மடக்கில் குடித்துவிட்டு மீண்டும் சாளரத்தின் அருகே வந்து அமர்ந்தார்.
மனம் இப்போது தன்னிச்சையாக அந்த இருண்ட குகைக்குள் நுழையத் தொடங்கியது. ஒரு எண்ணத்தை வலுக்கட்டாயமாக மறக்க நினைத்தால் அது பல மடங்கு வீரியத்துடன் மீண்டும் மீண்டும் வரும். ஆனால், நினைவுகூர நினைப்பது மட்டும் ஏன் இப்படி ஆழத்தில் புதைந்து விடுகிறது?
நிச்சலனமான குளத்தில் கல் எறிந்தால் ஏற்படும் அலை வட்டம் எப்படிப் பரவி, கரைகளில் மோதி மீண்டும் உள்நோக்கித் திரும்புமோ, அப்படி ஒரு மனப்போராட்டம் அவரை அலைக்கழித்தது.
வெளியே மெல்லக் கவியத் தொடங்கிய இருளின் பின்னணியில், சாளரக் கண்ணாடியில் இப்போது அவரது முகத்தின் பிரதிபலிப்பு மங்கலாகத் தெரிந்தது. சுருக்கங்கள் விழுந்த அந்த முகத்தின் கண்களை அவரே உற்றுப் பார்த்தார். மூளைக்குள் இருக்கும் சில ஞாபகங்களை மட்டும் உருவி எடுத்துவிட்டால், கண்ணாடியில் தெரியும் இந்த வெறும் சதை யாருடையது?
ஒருவேளை தன் மகனின் முகமும் இந்தப் பிரதிபலிப்பைப் போல மங்கலாய்த் தேய்ந்து ஒருநாள் முற்றிலுமாக அழிந்துபோய்விட்டால்? தன் மனைவியின் பெயர் கூட மூளையின் அடுக்குகளிலிருந்து நிரந்தரமாக அழிந்துவிட்டால்? எந்தப் பற்றுதலும் இல்லாத, வெறும் உணர்வற்ற பிண்டமாக இதே நாற்காலியில் எஞ்சி விடுவோமோ?
சாளரக் கண்ணாடியில் தெரிந்த பிம்பம் லேசாகக் கலங்கியது. நெஞ்சுக்குள் ஏதோ ஒரு பாறை இறங்கியது போன்ற பாரம். மூச்சு லேசாகத் திணறியது.
“இரவு நேரம் பிறரைப் போலே என்னையும் கொல்லும்.. துணை இருந்தும் இல்லை என்று போனால் ஊரென்ன சொல்லும்…”
வாய் தானாக முணுமுணுத்தது. இந்தப் பாட்டில் வரும் நடிகர்… ஏதோ கணேசன்தானே? ஆமாம் சிவாஜி கணேசன். ஒரு கணம் மூளைக்குள் அந்தப் பெயர் மின்னியதில் ஒரு சிறு வெற்றி மிதப்பு, கொஞ்சம் ஆறுதல் பிறந்தது.
மாலை இருள் அறையை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. சில்வண்டின் ரீங்காரம் பெரியதாகக் கேட்டது. வெளியே தெரிந்த சாலையை வெறித்துப் பார்த்தார்.
அறைக்குள் மௌனம் ஒரு பெரும் பாறையாய் இறங்கி அவரை அழுத்திக் கொண்டிருந்தது. அந்த நிசப்தத்தில், சுவரில் இருந்த கடிகாரத்தின் சத்தம் ஒரு ராட்சத இதயத் துடிப்பைப் போலக் கேட்டது. அவர் தன் மார்பைத் தொட்டுக்கொண்டார். அங்கே துடிப்பது தானா? அல்லது அந்தச் சுவரா? என்ற சந்தேகம் எழுந்த அந்த ஒரு கணத்தில், எஞ்சியிருந்த சில நினைவுகளில் ஒன்று ஒரு நீர்க்குமிழியைப் போலச் சத்தமில்லாமல் உடைந்து மறைந்தது.
சாளரத்தின் பக்கத்தில் இருந்த காக்கிச் சட்டையில் பெயர் பொறிக்கப்பட்ட வில்லை இருந்தது. அவர் தன் நடுங்கும் விரல்களால் அந்தப் பெயர் பலகையில் இருந்த எழுத்துகளைத் தடவிப் பார்த்தார். அந்த உலோகத்தின் குளிர்ச்சி அவர் உடல் முழுவதும் பரவியது. எழுத்துகள் அவர் விரல்களுக்குப் பிடிபட்டன, ஆனால் அவற்றின் அர்த்தம் மூளைக்குள் இறங்க மறுத்தது. அவை வெறும் வளைவுகளாகவும் கோடுகளாகவும் மட்டுமே தெரிந்தன.
சிறிது நேரத்திற்கு முன்பு அவர் மனக்கோட்டையில் மின்னிய அந்தத் திரைக்கலைஞரின் முகம் கூட இப்போது மெல்ல மறைந்து போயிருந்தது.
“நான் யார் நான் யார் நீ யார்” தூரத்தில் பாட்டொலி மெதுவாக அறையின் மௌன உரையாடலுடன் கலந்துகொண்டது. அவர் இப்போது ஒரு வெற்றுப் பிம்பமாக, இருளும் மௌனமும் சூழ்ந்த அந்த அறையின் ஒரு பகுதியாக மாறிப் போயிருந்தார்.