இருள் சூழ்ந்த ஒரு குகைக்குள், பழிவாங்கும் தாகத்தோடு காத்திருந்த சூர்ப்பனகையின் காதுகளில் அந்தத் தித்திப்பான செய்தி தேனாகப் பாய்ந்தது. கிஷ்கிந்தையில் இருந்து மூச்சிரைக்க ஓடிவந்த அவளது ஒற்றர்கள், வாலி சாய்ந்ததையும் இராமனின் அம்பு அவனது மார்பைப் பிளந்ததையும் விலாவாரியாகச் சொன்னார்கள்.
சூர்ப்பனகையின் கண்கள் வக்கிரமான மகிழ்ச்சியில் விரிந்தன. அவளது வஞ்சகச் சிரிப்பு அந்த அடர்ந்த வனத்தின் நிசப்தத்தைக் குதறியது.
ஒரு பெண்ணின் உள்ளத்தின் வலி, உலகத்தின் பேரழிவை ஒரு நாடகத்தைப் போல ரசிக்கும் குரூரத்தைக் கொடுத்துவிடுகிறது. தன்னைத் துன்பத்துக்கு உள்ளாக்கிய இரு பெரும் வலிமைகொண்டவர்கள் மோதிக்கொள்ள, தான் உண்டாக்கிய வலை மிகச் சரியாக விரிந்து செல்வதை அவள் அணு அணுவாக ரசித்து மகிழ்ந்தாள்.
இராவணனால் கூட வெல்ல முடியாத, ஆனால் இராவணனின் மிகப்பெரிய வலிமைகொண்ட நட்பாக இருந்த வாலியின் இறப்பு அவளுக்கு மிகுந்த பேருவகையை ஏற்படுத்தியது. இராம இலக்குவர்களால் இராவணன் அழிவது நிச்சயம் என்பதை அவள் பரிபூர்ணமாக உணர்ந்தாள். ஒருவேளை இராவணன் வென்றாலும் கூட, தன்னை அவமதித்த இராம இலக்குவர்களைப் பழிதீர்த்த நிம்மதி அவளுக்குக் கிடைக்கும்.
அதே வேளையில், கிஷ்கிந்தையில் ஒரு மாபெரும் அரசியல் சதுரங்கம் அரங்கேறிக் கொண்டிருந்தது. வாலியின் சிதை எரிந்து முடிவதற்குள், தாரையின் மதியூகம் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது.
வாலி இறந்த பிறகு, கிஷ்கிந்தையின் அரியணை சுக்ரீவனுக்குத்தான் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால், சுக்ரீவனைத் தாரை நம்பவில்லை. பல காலம் மரண பயத்தில் உறைந்து போயிருந்த ஒருவன், திடீரென அதிகாரத்தைக் கையில் எடுக்கும்போது, அவனது முதல் இலக்கு பழைய பகையின் எச்சங்களாகத்தான் இருக்கும். வாலியின் மகனான அங்கதன் உயிருடன் இருக்கும் வரை, சுக்ரீவனின் சிம்மாசனத்திற்கு அது ஒரு மறைமுக அச்சுறுத்தல்தான். ஒரு பேரரசியின் கர்வத்தை விட, ஒரு தாயின் உள்ளுணர்வு மிக வலிமையானது.
தாரை சுக்ரீவனைத் தவிர்த்துவிட்டு, அங்கதனைக் கையில் பிடித்துக்கொண்டு நேராக இராமனிடம் சென்றாள். எந்த இராமனைச் சற்றுமுன் அவள் கொடும் சொற்களால் சபித்தாளோ, அதே இராமனின் காலடிகளில் தன் மகனை விழச் செய்தாள்.
“பேரரசே, இவன் அங்கதன். வாலியின் ரத்தம். அரியணைக்காக அண்ணனையே எதிர்க்கத் துணிந்த சுக்ரீவன், நாளை இவனையும் கொல்லத் தயங்க மாட்டான் என்பதற்கு யாரும் உறுதி அளிக்க முடியாது. என் கணவனைக் கொன்று நீங்கள் அடைந்த தர்மசங்கடத்திற்கு ஒரு பிராயச்சித்தம் தேவை அல்லவா? இவனை உங்கள் அடைக்கலத்தில் விடுகிறேன். இவனது உயிருக்கும் உரிமைக்கும் இனி நீங்களே பொறுப்பு!” என்று கம்பீரமாகக் கூறினாள் தாரை.
அவள் கண்களில் இந்த உலகத்தை ஆளக்கூடிய சக்கரவர்த்தினியின் கம்பீரமும் ஆளுமையும் இருப்பதை இராமன் கவனித்தான்.
அங்கதனின் கண்கள் நெருப்பைக் கக்கின. தன் தாயிடம், “தந்தையைக் கொன்றவனிடம் என்னை அடைக்கலமாக்கத் துடிக்கிறீர்களா?” என்று மிகவும் மெல்லிய, தாரைக்கு மட்டுமே கேட்கும் குரலில் கேட்டான். அவள் கண்களை உற்று நோக்கினான்.
அவளின் கண்கள் மௌனமாகச் சொன்ன அரசியல் விவரங்கள் அவனை ஆற்றுப்படுத்தின. ஒரு தாயின் பெருந்தவிப்பை உணர்ந்த அவன், மீண்டும் இராமனின் பாதங்களில் சரணடைந்தான்.
இராமன் தன் உடைவாளை எடுத்து அங்கதனிடம் நீட்டினான்.
“அங்கதா, இது உன் பொறுப்பு. நீ என் பொறுப்பு. உன்னைத் துன்புறுத்த யார் நினைத்தாலும் இந்த உடைவாள் உன்னைக் காக்கும். இனி நீ கிஷ்கிந்தையின் இளவரசன்,” என்று சொல்லி அவனைத் தன்னுடம்போடு சேர்த்து அழுந்த இறுக அணைத்துக் கொண்டான்.
அடுத்த சில நாட்களில், கிஷ்கிந்தையின் சிம்மாசனத்தில் சுக்ரீவன் முடிசூட்டிக் கொண்டான். பல மாதங்களாகப் பாறை இடுக்குகளில் பதுங்கிக் கிடந்தவனுக்கு, இப்போது அரசனின் கிரீடம் புதியதொரு தோரணையைக் கொடுத்தது. தாரை சுக்ரீவனின் அரசவையில் ஒரு மதியூக மந்திரியாகத் தன் இடத்தை மிக நுட்பமாகத் தக்கவைத்துக் கொண்டாள். தர்மம், சதி, வீரம், துரோகம், சுயநலம் என அனைத்தும் கலந்து கிஷ்கிந்தை ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது.
அதே நேரத்தில், தெற்கே கடலுக்கு அப்பால் அமைதியாகக் கிடந்த இலங்கையில் வேறொரு சூழ்ச்சி வலை பின்னப்பட்டுக் கொண்டிருந்தது.
சூர்ப்பனகை கிஷ்கிந்தையின் நிகழ்வுகளை மகிழ்வுடன் மனதிற்குள் அசைபோட்டபடியே இலங்கையைச் சென்றடைந்தாள். ஆனால், அவள் நேராகத் தன் அண்ணியும் இலங்கையின் மகாராணியும், மயனின் மகளும், பேரழகியுமான மண்டோதரியின் அந்தப்புரத்தைச் சென்றடைந்தாள்.
“வணக்கம் பேரரசியாரே, சூர்ப்பனகை உங்களை அடிபணிகிறேன்,” என்று தலைதாழ்த்தி நின்றாள்.
மண்டோதரியின் அழகிய கண்களில் கருணை நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.
“வா மகளே, இது என்ன புது வழக்கம்? இங்கே பேரரசி என்பவர் யாருமில்லை. என் கையில் தவழ்ந்த குழந்தை அல்லவா நீ..”
சூர்ப்பனகையின் கண்களில் நீர் திரையிட்டது. அவள் எதேச்சையாகத் திரும்புவது போல வேறு பக்கம் திரும்பித் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். மண்டோதரியின் அந்த அன்பு எந்தக் கலப்படமும் இல்லாத உண்மை அன்பு என்பதை அவள் அறிவாள்.
“அண்ணி என்றோ அம்மை என்றழைக்கவோ மனம் நடுங்குகிறது அண்ணியாரே. தங்கள் கணவர் செய்த செயல்…” என்று அவள் பேச முடியாமல் தடுமாறினாள்.
அங்கே கொஞ்ச நேரம் சங்கடம் நிறைந்த மௌனம் நிலவியது. மௌனத்தை சூர்ப்பனகையே உடைத்தாள்.
“அன்னையே, ஒரு உண்மையை நான் உங்களிடம் சொல்லவே வந்தேன்..”
“தயங்காமல் சொல் மகளே… என்னிடம் என்ன தயக்கம்?” என்றாள் மண்டோதரி.
“மகளே.. மகளே என்று அன்புடன் நீங்கள் அழைக்கும்போது என் மனம் அத்தனை ஆனந்தம் கொள்கிறது. ஆனாலும் அந்த வார்த்தைக்குச் சொந்தக்காரி வேறொரு பெண்..”
“என்ன சொல்கிறாய்… எனக்கு மகளா… அது நீ மட்டும் தானே! நான் அண்ணி என்ற இடத்தை விட உன் அன்னை என்ற எண்ணத்துடன் அல்லவா வாழ்கிறேன்,” என்றாள் அவள். குரலில் சந்தேகமும் கூடவே மர்மமும் கலந்திருந்தது.
“இருக்கிறாள் அன்னையே… என்னைத் தவிர்த்தும் உங்களுக்கு மகள் ஒருத்தி இருக்கிறாள்… அவள்… அவள்…”
“யாரவள்?”
அந்தப் பெயரைக் கேட்டதும் மண்டோதரியின் காலடியில் நிலம் நழுவியது போல இருந்தது. அவள் நடுக்கத்துடன் மஞ்சத்தில் சாய்ந்தாள்.
பி.கு:
ஆந்திர ரங்கநாத ராமாயணம் (Ranganatha Ramayana): 13-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு தெலுங்குத் தழுவல் ஆகும். இது பல நாட்டுப்புறக் கூறுகளைத் தன்னுள் கொண்டது. இதில் வாலி இறக்கும் தருவாயில், சுக்ரீவனிடம் அங்கதனை ஒப்படைக்காமல், நேரடியாக இராமனிடமே, “என் மகனை உன்னுடையவனாகக் கொள்” என்று வேண்டுகிறான்.
இராமன் அங்கதனின் கையைப் பிடித்துத் தூக்கி, அவனைத் தன் தம்பியைப் போலக் காப்பதாக உறுதியளிக்கும் செய்தி இதில் இடம்பெற்றுள்ளது. தென்னிந்தியாவின், குறிப்பாகக் கேரளா மற்றும் தமிழகத்தின் ‘தோற்பாவைக்கூத்து’ கலைஞர்களிடம் இதற்கான ‘வாக்கு வரிசை’ (Performance Scripts) உள்ளதாகக் குறிப்புகள் கிடைக்கின்றன. இதில் ‘வாலி வதம்’ முடிந்த பிறகு, அங்கதன் இராமன் மேல் கடும் கோபம் கொள்வதாகவும், அவனைச் சமாதானப்படுத்த இராமன் அவனுக்கு ‘இளவரசுப் பட்டம்’ மற்றும் தன் ‘உடைவாளை’ (Sword) அடையாளமாகத் தந்து அடைக்கலம் அளித்ததாகவும் காட்சிகள் விவரிக்கப்படுகின்றன.
இது ‘அங்கதன் அடைக்கலம்’ என்ற பெயரிலேயே சில கூத்துகளில் தனிப்பகுதியாக நடத்தப்படுவதாகவும் குறிப்புகள் உண்டு.