அப்பாவின் ஸ்கோர்

பையனின் சிறிய கைகளுக்கு
மிகப் பெரியதாக இருந்தது
கிரிக்கெட் மட்டை

ஒவ்வொரு மாலையும்
அதைத் தெருவுக்கு இழுத்து வருவான்
மூன்று செங்கற்களை
ஸ்டம்புகளாக நிற்க வைப்பான்

பிறகு வரும் வழக்கமான அழைப்பு
‘அப்பா, ஒரு மேட்ச்’

அப்பா அப்போதுதான்
வீட்டுக்குள் நுழைந்திருப்பார்
முகத்தில் படர்ந்திருக்கும்
சாலை நெரிசலின் களைப்பு
மனதில் நிறைந்திருக்கும்
முடிக்காத வேலைகளின் பளு

புன்முறுவலுடன் பந்தை எடுப்பார்
பையனுக்கு சிக்ஸர்கள் வேண்டும்
அப்பா எளிதான பந்துகளை வீசுவார்
பையனுக்கு ரன்கள் வேண்டும்
அப்பா கேட்சுகளை தவற விடுவார்
பையனுக்கு வெற்றி வேண்டும்
அசாத்திய நிலைத்தன்மையுடன்
அப்பா தோற்பார்

அக்கம் பக்கத்தினர் பார்ப்பது
ஒரு கிரிக்கெட் விளையாட்டை.
அந்த மாலையின் ஸ்கோர் கார்ட்
இப்படியாக இருக்கலாம்
அப்பாவுக்கு தோல்வி
பையன் – 88 நாட் அவுட்

அங்கு சத்தமின்றி
பதிவாகிக் கொண்டிருக்கும்
மற்றொரு ஸ்கோர்.
ஒன்று ரன்களை எண்ணுகையில்
இன்னொன்று நினைவுகளை
அடுக்கிக் கொண்டிருக்கும்.

பல வருடங்கள் கழித்து
பையன் மறந்து போகலாம்
எந்தப் பந்து சுவரைத் தாண்டியது
எந்தப் பந்து ஜன்னலை உடைத்தது
எந்தப் போட்டியில் சென்சுரி அடித்தான் என்று.
நிச்சயம் அவனுக்கு நினைவிருக்கும்
ஒவ்வொரு நாளும்
சோர்வாக வீடு திரும்பிய போதும்
தன்னுடன் விளையாடுவதற்கான சக்தியை
எப்படியோ கண்டுபிடித்த மனிதரை.
*

தந்தையர் தின கவிதை: ராமலக்ஷ்மி

Author

  • ராமலக்ஷ்மி :
    எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார்.

    இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

உலகின் பெருவிழா – கால்பந்துப் போட்டி

உருதுக் கவிதை உலகு – 7: கைஃபி ஆஸ்மி

எண்ட் டோஹ் த்ரெ – 3