மருத்துவர் பக்கம் – 32: இளவயது நீரிழிவு

20 வயதுகளில் இருப்பவர்களுக்கே எப்படி நீரிழிவு (சுகர்) ஏற்படுகிறது?

1990களில் 40 வயது முதல் 50 வயது வரை உள்ள வயதினருக்கு நீரிழிவு ஏற்பட்டது.

2000களில் நீரிழிவு கண்டறியப்படும் வயது 30-40 ஆகக் குறைந்தது.

2010களில் இந்த நீரிழிவு கண்டறியப்படும் வயது 20-30 ஆகக் குறைந்து, தற்சமயம் 20 வயதுக்குட்பட்ட சிறார் சிறுமியிடத்திலும் டைப் டூ நீரிழிவு கண்டறியப்பட்டு வருகிறது.

இதற்கான காரணம்தான் என்ன?

நீரிழிவு/டயாபடிஸ் கண்டறியப்படும் நோயர்களிடம் கீழ்க்காணும் விஷயங்கள் முக்கியமாக இடம்பெறுகின்றன:

1. குடும்பத்தில் ஏற்கனவே தாய் தந்தையரில் ஒருவருக்கோ இருவருக்குமோ நீரிழிவு இருப்பது: இது மரபணு சம்பந்தப்பட்ட தொடர்பானது. அதாவது, இவர்களது குடும்பத்தில் நீரிழிவிற்குத் தோதான மரபணுக்கள் இருக்கின்றன என்பது புலப்படுகிறது.

2. தேவைக்கும் அதிகமாக அதீத மாவுச்சத்து உட்கொள்ளல்: பலரும் நீரிழிவு என்பது வெறுமனே சீனி போட்டு அதிகமாக டீ பருகுவதால் வருகிறது என்றும், அதிகமாக ஸ்வீட் சாப்பிடுபவர்களுக்கு வருகிறது என்றும் நினைக்கிறார்கள். ஆனால், நீரிழிவு என்பது தேவைக்கும் மிகுதியாக மாவுச்சத்து என்னும் கார்போஹைட்ரேட்ஸ் அளவுகளை உட்கொள்வதால் ஏற்படுகிறது.

மாவுச்சத்து என்பது சீனியில் மட்டும் இல்லை; தானியங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது மாவுச்சத்து என்பதை நாம் உணர வேண்டும்.

காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் தானியங்களை முழுமையாகச் சார்ந்ததாகவே இங்கு நம் அனைவரின் உணவுத் தேவையையும் அமைத்திருக்கிறோம். கூடவே சீனி / நாட்டுச் சர்க்கரை / வெல்லம் / கருப்பட்டி / தேன் என்று அவரவர் விருப்பம்போல இனிப்புச் சுவை கொண்டவற்றைக் கலந்து தேநீர்/காபி தினசரி ஒன்று முதல் அதிகபட்சம் பத்து வரை பருகுகிறோம்.

கூடவே பேக்கரியிலிருந்து கிடைக்கும் பப்ஸ் / பர்கர் / பீட்சா / சமோசா, டீக்கடைகளிலிருந்து கிடைக்கும் வடை / பஜ்ஜி ஆகியவற்றையும் சாப்பிடுகிறோம். கூடவே துரித உணவுக் கடைகளில் ஒவ்வாத நிறமூட்டிகள் / சுவைக்கூட்டிகள் கலந்த துரித உணவுகளையும் உண்கிறோம். அடிக்கடி பரோட்டா, அடிக்கடி பிரியாணி, அடிக்கடி ஐஸ்கிரீம் என அடிக்கடி அடிக்கடி எப்போதெல்லாம் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் நாம் உண்ணும் அனைத்து உணவுகளிலும் நீக்கமற நிறைந்திருப்பது மாவுச்சத்து… மாவுச்சத்து… மாவுச்சத்து…

இப்படி ஒரு உணவுச் சூழலை நாம் ஏற்படுத்திக்கொண்டிருப்பது நீரிழிவு ஏற்படுவதற்கு உகந்ததாக மாற்றிவிட்டிருக்கிறது.

தினசரி தமிழர்களாகிய நாம் சாப்பிடும் மாவுச்சத்தின் அளவு 250 கிராம் முதல் 400 கிராம் வரை உட்கொள்கிறோம். ஆனால், தினசரி நமது மூளைக்குத் தேவையான குறைந்தபட்ச மாவுச்சத்து என அமெரிக்க நீரிழிவு நோய் சிகிச்சையாளர் சங்கம் குறிப்பிடுவது 130 கிராம் மாவுச்சத்து மட்டுமே.

3. உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை: தினசரி அரை மணி நேரம் நடைப்பயிற்சி கூட இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது; இதனால் நாம் உண்ணும் உணவில் உள்ள மாவுச்சத்திலிருந்து பெறப்படும் “க்ளூகோஸ்” கொழுப்பாக மாறி உடல் பருமனில் சென்று முடிகிறது. இதுவே நாளடைவில் நீரிழிவைக் கொண்டுவருகிறது.

4. போதிய உறக்கமின்மை: நமது உடலின் முக்கிய உறுப்புகளுக்குத் தேவையான ஓய்வை வழங்கவல்லது உறக்கம். இது மிக முக்கியமானது. தற்காலத்தில் உறக்கத்தின் தேவையை நாம் உணராமல் இருப்பது தவறு. தினசரி எட்டு மணி நேர உறக்கம் இன்றியமையாதது. போதிய உறக்கமில்லாமல் உடலில் அழுத்தம் அதிகமாகி கார்டிசால், அட்ரினலின் போன்ற அவசர நிலைக்கான ஹார்மோன்கள் தொடர்ந்து ரத்தத்தில் அதிகமாக இருப்பதால், ரத்தத்தில் க்ளூகோஸ் அளவுகள் எப்போதும் அதிகமாகவே இருக்குமாறு உடல் பார்த்துக்கொள்கிறது. இதனாலும் நீரிழிவு ஏற்படுகிறது.

5. மனப்பதற்றம்: மனம் அமைதி கொள்ளாமல் எப்போதும் சஞ்சல நிலையிலேயே, மனக்கவலை, மனச்சோர்வு நிலையிலேயே இருந்தால் சரியான உறக்கம் வராது. சுய கவனிப்புக்கு இடம் இராது. இதனால் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த இயலாது. இதயத்துடிப்பு அதிகமாகவே இருக்கும். மூளையின் ரசாயனங்கள் சீர்கெட்டிருக்கும். மனச்சோர்வு நிலையை ஈடுசெய்ய அதிகமாக மாவுச்சத்து உட்கொள்ளும் நிலை ஏற்படும். உடல் உழைப்புக்கு மனம் வராது. இதனால் உடல் பருமன் ஏற்பட்டு அதனால் நீரிழிவு ஏற்படலாம்.

மேற்கூறிய பல காரணங்களும் நீரிழிவு விரைவில் ஏற்படக் காரணமாக அமைகின்றன.

எனது நோயர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் சிற்றனுபவத்தில், கடந்த சில மாதங்களாக இருபது வயதுக்கும் குறைவான வளர்இளம்பருவத்தினரிடையே நீரிழிவைக் கண்டறிந்து வருவது வழக்கமாகி வருகிறது. பன்னிரண்டு வயதுச் சிறுவன் ஒருவனுக்கு டைப் டூ நீரிழிவைக் கண்டறிந்தபோது உண்மையில் மிரட்சியுடன் கூடிய கவலையை அடைந்தேன்.

நாம் சென்றுகொண்டிருக்கும் பாதைதான் எங்கே? நமது சந்ததிகளுக்கு எத்தகைய வழியை உணவு விஷயத்தில் நாம் காட்டிக்கொண்டிருக்கிறோம்? என்று உள்ளபடி உளம் நொந்தது உண்மை.

  • அதீத மாவுச்சத்து (தானியங்கள்) உணவு முறை,
  • உடலுழைப்பு சிறிதுமற்ற வாழ்வியல்,
  • மனப்பதற்றம், உறக்கமின்மை,
  • தொழில் / வேலைவாய்ப்பு / எதிர்காலம் குறித்த கவலை / அச்சம் / பதற்றம்,
  • மனச்சோர்வு / மனப்பதற்றம்,
  • நீரிழிவிற்குத் தோதான மரபணுக்கள்,
  • காணுமிடமெல்லாம், செல்லுமிடமெல்லாம் மாவுச்சத்து / இனிப்புச் சுவை நிறைந்த பண்டங்கள் / உணவுப் பொருட்கள் உண்ணக் கிடைப்பது,

என்று சுற்றிச் சுற்றி 360° கோணத்தில் எங்கு திரும்பினாலும் நீரிழிவிற்கான அத்தனை அம்சங்களையும் நமது வாழ்க்கை முறையில் வைத்திருக்கிறோம். இதுவே நீரிழிவு இளம் வயதினருக்கும் ஏற்பட்டு வருவதற்கான காரணங்கள்.

காரணங்களை அறிந்து அவற்றைச் சரிசெய்வதன் மூலமே நம்மால் நோயை வெல்ல முடியும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.

Author

Related posts

வரலாற்றில் பொருளாதாரம் – 32

தமிழே அமிழ்தே – 18

உலகின் பெருவிழா – கால்பந்துப் போட்டி