ஆழ்ந்த வனத்தின் அமைதியைப் பிளந்துக் கொண்டு, “ஓ.. சீதா, ஓ.. இலக்குவா..” என்ற குரல் உதவிக்காகக் கெஞ்சும் அவல ஓசையாய் வெளிவந்தது. இந்தக் குரல் இராமனின் உயிரே அவனது உடலை விட்டுப் பிரிந்து செல்வதுபோல, கேட்பவர்களின் இதயத்தைக் கிழிக்கும்படி ஒலித்தது.
‘யார் இந்தக் குரலில் அலறியது? இதோ என் கண் முன்னே இராமன் குடிலை நோக்கி ஓடி வருகிறானே!’ என்ற குழப்பத்துடன் மலை உச்சியிலிருந்து சற்று நேரம் அங்கும் இங்கும் நோக்கியவனின் பின்புறமிருந்து ஒரு பெண் குரல் கேட்டது.
“அண்ணா.. இராவணா, சாட்சாத் உன் தங்கையின் விளையாட்டு அது. ஹஹஹஹ” என்ற சிரிப்புடன் சூர்ப்பனகை நின்றிருந்தாள்.
இராவணனுக்குக் கோபம் தலையுச்சியைத் தொட்டது.
“மீனாக்ஷி… உன்னை இங்கு நான் எதிர்பார்க்கவில்லை” என்றான் அளவற்ற சினத்துடன்.
“மீனாக்ஷி, இந்தப் பெயரைக் கேட்டு எத்தனை வருடங்கள் ஆகி விட்டன அண்ணா! சகோதரர்களுடன் நாம் விளையாடும்போது, என்னை அனைவரும் ‘காமவள்ளி.. காமவள்ளி’ என்று எனக்கிட்டப் பெயரைச் சொல்லி அழைக்கும் போது நீ மட்டுமே மீனாக்ஷி என்று என்னை அழைப்பாய்..”
அவளின் குரல் கனிந்து இருந்தது. அவளின் அந்த வார்த்தைகளைக் கேட்ட இராவணனின் கோபமும் சற்றுக் குறைந்தது.
“ஆம், என் தங்கையின் கண்களின் அழகுக்கு ஈடு இணை யாருக்கு உண்டு இவ்வுலகில்?!.. அவள் என்றும் எனக்கு மீனாக்ஷிதான்” என்றான் சற்றே உணர்ச்சி மேலிட.
(பிற்கால நாட்டுப்புறக் கதை வழக்குகளில் சூர்ப்பனகைக்கு மீனாக்ஷி என்ற பெயர் உள்ளது)
“ஆனாலும் அந்தத் தங்கையைக் கொல்ல முயன்றாய், அவள் கணவனையும் அவள் கண் முன்னே கொன்று அழித்தாய் இல்லையா அண்ணா”.
அவளின் குரல் உணர்ச்சிகள் அற்று வறண்டு வெளி வந்தது.
“மீனாக்ஷி, எனக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, நடந்து முடிந்ததைக் கிளறுகிறாய். நீ ஏன் இங்கு வந்தாய்? தேவ மருத்துவனிடம் உன் மூக்கைத் திரும்பப் பழைய நிலைக்குக் கொண்டுவரச் சொல்லி ஆணையிட்டல்லவா வந்திருந்தேன்?! சிகிச்சை முடியுமுன் ஏன் வந்தாய்? காயத்தின் வடு இன்னும் ஆறவில்லை” என்று கடிந்தான்.
“அண்ணா, நீ மாரீசனைத் தேடி வந்தாய், அவன் உதவி கிடைக்கும் என நினைத்தாய். நடந்தது என்ன? உன்னை விட இந்தக் காட்டுப் பகுதியில் அதிகம் சுற்றித் திரிந்தவள் நான். மாமா மாரீசனையும் நன்கு அறிந்தவள். பயத்தின் மறு உருவமாக மாறியிருந்த அவனை நான் நம்பவில்லை” என்றாள் சூர்ப்பனகை அவன் விழிகளை நேரடியாகப் பார்த்துக் கொண்டே.
“என்னையும் நம்பவில்லையா நீ” என்றான் இராவணன்.
“உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், ஆம்.. நான் நம்பவில்லைதான். காரணத்தை நீ இப்போது அறிந்துக் கொண்டிருப்பாய்”
இராவணன் சற்று மௌனித்தான்.
“உன்னால் இன்னமும் சீதை இருக்கும் இடத்தை நெருங்க முடியவில்லை. அதனால், நானே காரியத்தில் இறங்க வேண்டிய கட்டாயம்”
“இப்போது மட்டும் காரியம் நடந்துவிடுமா என்ன?” என்றான் இராவணன் இகழ்ச்சியும் சினமும் கொண்ட குரலில்.
“ஆம் அண்ணா, நடந்து கொண்டிருக்கிறது. வா, உனக்கு என் செயலின் விளைவைக் காட்டுகிறேன்” என்று குடிலின் அருகில் இருந்த மறைவிடத்திற்கு அவனை அழைத்துச் சென்றாள் சூர்ப்பனகை.
அங்கே நடந்து கொண்டிருந்த விளைவு, இராவணன் எதிர்பாராத.. ஆனால் அவனுக்குச் சாதகமான விளைவுதான்.
பஞ்சவடியில் இராமன் சென்ற திக்கை நோக்கியே அமர்ந்திருந்த சீதைக்கு, இராமனின் குரலில் வந்த அந்த அலறல் கேட்டு அவளின் இதயம் பெரும் அச்சத்தால் கலங்கியது. சீதை நிலைகுலைந்து போனாள். தனது கணவர், பலம் பொருந்திய அரக்கர்களால் சூழப்பட்டு, இப்போது மரணத்தின் பிடியில் அபயக்குரலெழுப்புகிறார் என்ற எண்ணம் அவளைத் தாக்கியது.
அவளது உணர்வுகள் அனைத்தும் குழப்பமடைந்தன; அவள் தன் நிலை இழந்துவிட்டாள். அவளது மனம் இயல்பை இழந்தது; மயக்கமும் அறிவின்மையும் அடைந்தது.
அவளின் கண்கள் அச்சத்தால் உறைந்து, நடுக்கம் அவள் உடலை ஆட்கொண்டது.
அவள் இராமன் யார் என்பதை மறந்தாள், கரதூஷணர்களின் பதினாறாயிரம் அரக்கர் படையை, ஒரு முகூர்த்த காலத்தில் அழித்ததை மறந்தாள். விராடனை வீழ்த்தியதை மறந்தாள்.. சிவதனுசு அவன் ஆற்றலின் முன் இற்று வீழ்ந்ததை மறந்தாள்.. மொத்தத்தில் அவள் நினைவில் இராமன் ஆபத்தில் சிக்கியிருக்கிறான் என்ற ஒரு நினைவைத் தவிர்த்து மற்றதெல்லாம் மறந்து அச்சத்தால் அழத் தொடங்கினாள்.
அவள் அழுதுகொண்டே இலக்குவனைப் பார்த்தாள். அவன் கண்கள் மூடியிருந்தன. அவனது சிந்தை வேறெங்கோ பயணிப்பதை அறிந்தாள்.
சீதையைப் போல் இலக்குவன் அச்சம் அடையவில்லை. அவன் இயற்கையின் ஒலிகளைப் பிரித்தறியும் ஆற்றலின் மூலம் காப்பாற்றச் சொல்லி வந்த ஒலியை, விலங்குகள் அச்சத்தால் அங்குமிங்கும் ஓடும் ஒலியை எல்லாம் மெல்ல மெல்ல உள் வாங்கினான்.
இலக்குவன் இராமனின் ஆற்றலை உணர்ந்திருந்ததாலும், வந்த குரல், யாரோ ஒருவர் சாமர்த்தியமாக இராமனின் குரலைப் பிரதியெடுத்து அலறினாலும்.. பிறந்தது முதல் இராமனுடனே வாழும் இலக்குவனுக்கு அந்தக் குரலின் வேறுபாட்டை எளிதாக இனம் கண்டு விட முடிந்தது. அது இராமனின் குரல் அல்ல என்பதை அவன் சர்வ நிச்சயமாக உணர்ந்தான்.
கூடவே அவனின் உணர்வுகளில் மனிதக் காலடித்தடம் ஒன்று தம் குடிலை நோக்கி ஓடி வரும் ஓசை தெளிவாகக் கேட்டது. அந்தத் தடத்தின் ஓசை இராமனின் காலடியோசை என்பதை அவனால் பிரித்தறிய முடிந்தது. அவன் முகம் மலர்ந்து மெல்லிய புன்னகை உருவானது.
சீதை, இலக்குவனின் முகத்தில் மெல்லிய புன்னகை உருவாவதைக் கண்டாள், சினந்தாள்..
“ஏனிந்தச் சிரிப்பு?” என்று கத்தினாள்.
இலக்குவன் பதில் சொல்ல எத்தனிக்கும் முன்பே அவள் பேசத் தொடங்கிவிட்டாள்..
“ஒரு பொழுது உடனிருந்தாலே அவருக்கு ஏதும் அபாயம் என்றால் உயிரையே தரும் பண்புடைய குலத்தில் பிறந்தும், அண்ணன் ஆபத்தில் இருப்பதை எண்ணிச் சிரிக்கலாமா?” என்றாள் சீதை. அவள் கண்கள் கோபத்தில் சிவந்து நெருப்பைக் கக்கின.
இலக்குவன் தாழ்ந்திருந்த தன் தலை நிமிராமல் சொன்னான்.
“அன்னையே, நீங்கள் கவலையடைய ஏதும் முகாந்திரம் இல்லை, அண்ணாவை நான் அறிவேன். அவருக்குத் தீங்கு உண்டாக்க யாரால் முடியும்?”
“உன்னால் முடியும்.. நிச்சயமாக, அதனால்தான் அவர் அலறல் கேட்டும் இங்கேயே நிற்கிறாய்”
“அன்னையே, மன்னிக்க வேண்டும். இது அரக்கர்கள் நிறைந்த வனம். இங்கே இது போன்ற மாயக் குரல்களை அவர்கள் எழுப்புவார்கள். மேலும் அண்ணனின் குரலை நானறிவேன். இது அவரின் குரலல்ல”
இலக்குவனின் இந்தச் சொல் அவளின் ஆழ்மனதில் தன்னை விட இராமனை அறிந்தவர் யாரிருக்க முடியும்? என்ற அகங்காரத்தைச் சீண்டி விட, “என்னையும் விடவா? அவர் குரலை என்னை விட அறிந்தவனா நீ” என்றாள்.
“அன்னையே, மீண்டும் மன்னிக்க வேண்டும். பிறந்தது முதல் அண்ணனின் குரலை அணு அணுவாகக் கேட்டு வளர்ந்தவன் நான். அதனால் உறுதியாகச் சொல்கிறேன், இது அவர் குரல் இல்லை”
“ஓ, அவர் குரல் இல்லையாம். கேளுங்கள் பட்சிகளே, மரங்களே.. சாட்சி பூதங்களே. நன்றாகக் கேளுங்கள். அலறியது என் நாயகர் இல்லையாம்.”அரற்றியவள், “எதுவாகவும் இருக்கட்டும்.. உடனடியாகச் சென்று அவருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது தம்பியாக, சேவகனாக .. ஒரு மனிதனாகவாவது உன் கடமை ஆகாதா?” என்றாள்.
“அண்ணனின் ஆணை, தங்களை விட்டு நகரக்கூடாது. இது ஆபத்தான இடம், தங்களுக்கு ஏதும் ஆபத்து நேரும்படி நான் இங்கிருந்து போக மாட்டேன்”
“புரிந்தது…நன்றாகப் புரிந்தது. அண்ணன் போனதும், காப்பாற்ற ஆளில்லாப் பேதையைக் கவர எண்ணமோ?” என தீயினும் கொடியதாக அவளின் வாயில் இருந்து சொற்கள் வந்தன.
“அண்ணா… இராமா.. இதென்ன கொடுமை!!” என்று இரு காதுகளையும் பொத்திக் கொண்டான் இலக்குவன்.
சீதை தொடர்ந்தாள்.
“இப்போது இந்த இடத்தை விட்டு நீங்காமல் நின்றால், என் சந்தேகம் உறுதியாகிவிடும். அப்படியொரு சூழல் வந்தால்..”
சீதை சற்று நிறுத்தினாள். இலக்குவனின் கண்களில் அச்சமும் இயலாமையும் மெல்ல மெல்ல குடியேறியது.
“உறுதியாகச் சொல்கிறேன் கேளும். அப்படியொரு நிலை வந்தால், அடுத்த நொடி இங்கே முனிவர்கள் வளர்த்திருக்கும் யாகத்தீயில் இறங்கிவிடுவேன்”
“அன்னையே..” அலறினான் இலக்குவன்.
சீதை ஒரு முடிவோடு யாகத்தீ இருக்கும் பக்கம் தன் கண்களை ஓட்டினாள். அந்தப்பக்கம் நகரவும் துணிந்தாள்.
இலக்குவன் கண்களில் ஆறென ஓடிய கண்ணீரை அவள் பொருட்படுத்தவில்லை.
“நில்லுங்கள் அன்னையே. இப்போதே நான் செல்கிறேன். அண்ணனின் ஆணையை மீறுவதற்காகவும்.. இப்படி ஒரு கொடும்பழியைக் கேட்டு என் உயிர் இன்னும் பிரியாது இருப்பதற்கு நான் எத்தனையே பாவங்கள் செய்திருக்க வேண்டும். அழும் குழந்தையின் உணவைத் தின்றிருக்க வேண்டும். மக்களும், பசுவும் குடிக்கும் நீர் நிலையில் நஞ்சு கலந்திருக்க வேண்டும். என் அன்னை அழும்போது கண்ணீரைத் துடைக்காது இரசித்திருக்க வேண்டும். தெய்வம் இல்லை என்று நிந்தித்திருக்க வேண்டும்… இன்னும் இன்னும் பல கொடும் பாவங்களைப் புரிந்திருக்க வேண்டும்…” என்று அரற்றினான். இயலாமை மட்டுமே அவன் கண்களில் மிஞ்சி இருந்தது. அழுத கண்ணும் தொழுத கையுமாய் நின்றான்.
“நேரம் கடந்து கொண்டே இருக்கிறது. இப்படிப் பேசிப் பேசி நேரத்தை வீணடித்து மேலும் மேலும் அவரை ஆபத்தில் இருந்து மீட்கும் நேரத்தை வீணடிக்கிறாய்” என்றாள் சீதை.
இலக்குவனுக்குப் புரிந்துவிட்டது. இவள் தன்னிலையில் இல்லை, இவளை அச்சம் முழுமையாக ஆட்கொண்டுவிட்டது. இனி பேசுவதில் எந்தப் பயனுமில்லை என்பதை உணர்ந்தான்.
“அன்னையே, நான் கிளம்புவதற்கு முன்பு சொல்ல ஒன்று உண்டு. இந்தக் குடிலைச் சுற்றி, இராமநாமத்தைச் சொல்லி மூன்று கோடுகள் வரைந்திருக்கிறேன். எந்தச் சூழலிலும் நானோ அண்ணனோ வரும் வரை அந்தக் கோட்டைத் தாண்டி வெளியேற வேண்டாம். இதற்கு மட்டுமாவது உறுதியளியுங்கள்” என்றான் இலக்குவன்.கோடுகளையும் வரைந்து முடித்தான்.
“இன்னுமா கிளம்பவில்லை!?” என்றாள் சீதை.
“மரங்களே, பட்சிகளே, வனத்தின் விலங்குகளே, வானத்தின் தேவர்களே, நடந்தவை அனைத்திற்கும் நீங்களே சாட்சி. இதோ நான் கிளம்புகிறேன், அன்னையைக் காக்கும் பொறுப்பு உங்களுடையது” என்று சொல்லியபடி அவன் இராமன் சென்ற திசையை நோக்கி ஓடினான்.
“விளைவு புரிந்ததா அண்ணா இராவணா?”என்றாள் சூர்ப்பனகை.
“புரிந்தது.. புரிந்தது. சீதையைக் கவர ஏதுமினி தடையில்லை” என்று சிரித்தான்.
“ஆம்.. ஆம்” என்று சிரித்தாள் சூர்ப்பனகை.
மூன்றாவதாக விதியும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தது.