Home நாவல்அசுரவதம்: 20 – வீழ்ந்த சிறகுகள்

அசுரவதம்: 20 – வீழ்ந்த சிறகுகள்

by Iyappan Krishnan
1 comment
This entry is part 20 of 21 in the series அசுரவதம்

தண்டகாரண்யத்தின் பசுமைப் போர்வைக்கு மேலே, நீலக்கடலென விரிந்திருந்த ஆகாயத்தில் அந்த அதிசயம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

தனக்கு மனிதர்களைத் தவிர யாராலும் அழிவில்லை என்ற மமதை தலைக்கேறியதால், வலியச் சென்று போரிட்டு குபேரனிடமிருந்து பறிக்கப்பட்டதும் தேவசிற்பி விஸ்வகர்மாவினால் வடிக்கப்பட்டதுமான அந்த புஷ்பக விமானம், மேகக் கூட்டங்களைக் கிழித்துக்கொண்டு தெற்கு நோக்கி அம்பு எனப் பாய்ந்து கொண்டிருந்தது.

அந்த விமானத்துக்காக நடந்த போர்தான் எத்தனைக் கொடுமையானது?

கைலாய மலையின் சிகரங்களுக்கு அருகே, மேகங்கள் மோதி மின்னலைத் தெறிக்கவிடும் அந்த உயரத்தில், அண்ணன் குபேரனுக்கும் தம்பி ராவணனுக்கும் இடையே பெரும் போர் மூண்டிருந்தது. யட்சர்களின் தலைவனான குபேரனின் சேனை, ராவணனின் அசுரப் படையை எதிர்கொண்டது. குபேரனின் தளபதியான மணிபத்திரன், ஒரு பெரும் மலைச் சிகரத்தையே பெயர்த்து எறிவதைப் போல ராவணனின் சேனையைத் தாக்கினான். ஆனால், ராவணன் சாதாரணமானவன் இல்லையே? எட்டு திக்கு யானைகளை எதிர்த்து அதன் தந்தங்களை மார்பில் ஏந்திய அவன், இந்தப் போரை ஒரு விளையாட்டைப் போல எதிர் கொண்டான்.

குபேரனுக்கும் இராவணனுக்கும் இடையே நடந்த அந்தச் சண்டையில், ராவணனின் அசுர பலமே மேலோங்கியது. குபேரனின் கதாயுதத்தை ராவணன் தனது தோள்களால் தாங்கியபோது, இடி விழுந்ததைப் போன்ற சத்தம் கேட்டது. ராவணனின் பத்துத் தலைகளும் இருபது கைகளும் ஒரே நேரத்தில் இயங்கத் தொடங்கின.

​இறுதியில், ராவணன் குபேரனை வீழ்த்தி, அவனது மகுட த்தைக் காலால் உதைத்துத் தள்ளினான். குபேரன் நிலைகுலைந்து விழ, அவன் அரியணையாகக் கருதிய அந்த புஷ்பக விமானம் இப்போது ராவணனின் வசமானது.

இராவணன் பெருமையாக அந்த விமானத்தைத் தடவிக் கொண்டிருந்தான். விமானத்தின் பொன்னிறச் செதுக்கல்களில் சூரிய ஒளி பட்டுத் தெறிக்கையில், அது வானில் இன்னொரு சூரியன் சஞ்சரிப்பதைப் போன்ற பிரமையை ஏற்படுத்தியதையும், அதன் மணிகள் காற்றில் அசைந்து எழுப்பிய ஓசையையும், அது கந்தர்வர்களின் வீணை கானத்தையே மிஞ்சும் வகையில் இனிமையாக இருந்ததையும் எல்லாம் இராவணன் மகிழ்வோடும் உற்சாகத்தோடும் கவனித்தான்.

விமானம் மேக மண்டலங்களைத் தாண்டிச் செல்லும்போது, கீழே கோதாவரி நதி ஒரு மெல்லிய வெள்ளிச் சங்கிலியைப் போலத் தெரிந்தது. மலைக்குன்றுகள் சிறு மணல் மேடுகளைப் போலக் காட்சியளித்தன. அத்தனையிலும் அவன் கண்கள் அடிவானத்தைத் துருவிக்கொண்டிருந்தன.

​திடீரென்று, ஒரு மாபெரும் கருமேகம் திரண்டு வருவது போலத் தோன்றியது. ஆனால் அது மேகமல்ல!

“நில் அரக்கனே! தர்மத்தின் விளைநிலத்தை அபகரித்துச் செல்லும் நீ, என் சிறகின் நிழலைக் கூடத் தாண்ட முடியாது!” என்ற பேரிடி முழக்கம் கேட்டது. அவன் ​கழுகு வேந்தன் சடாயு, தனது பிரம்மாண்டமான சிறகுகளை விரித்துக்கொண்டு, புஷ்பக விமானத்தின் பாதையை மறித்து நின்றான். ​சடாயுவின் ஒரு சிறகடிப்பு, நூறு சுழற்காற்றுகளுக்கு இணையான வேகத்தை உண்டாக்கியது. விமானம் நிலைதடுமாறியது.

அவனது இறக்கைகள் விரிந்தால், அது பகல் பொழுதை இரவு போல மறைக்கும் அளவிற்குப் பரந்து விரிந்திருந்தது. கதிரவனின் ஒளியை மறைக்கும் அந்தச் சிறகுகள், மேகக் கூட்டங்களை கிழித்துக் கொண்டு செல்லும் ஒரு பெரும் விமானம் போலத் திகழ்ந்தன. அவனது கண்கள் அக்னிப் பிழம்புகளைப் போலச் சிவந்து, இருளை விரட்டும் ஒளியைத் தந்தன.

இராவணன் அதிர்ந்தான்.. இது பறவையா! இல்லை.. மேரு மலைக்குச் சிறகுகள் முளைத்துப் பறந்து முன் நிற்கிறதா? என்று சந்தேகத்துடன் உற்று நோக்கினான். தன் புஷ்பக விமானத்தை மட்டுமே இதுவரை வானின் அதிசயம் என்று நினைத்த இராவணனுக்குக் கண்முன்னே பேரதிசயமாக நின்றது அந்தப் பறவை.

வானத்தில் மிதக்கும் ஒரு மாபெரும் மலைக்கு இறக்கைகள் முளைத்து வந்தால் எப்படி இருக்குமோ, அத்தகைய பிரம்மாண்டத்தைச் சடாயுவின் உருவம் பிரதிபலித்தது. அவனது கூரிய மூக்கும், வலிமையான நகங்களும் அச்சத்தை விளைவித்தாலும், பின் தன்னைத் தயார் படுத்திக் கொண்டு சினத்துடன் தனது வில்லை வளைத்தான். மின்னல் கீற்றுகளைப் போல அம்புகள் சடாயுவை நோக்கிப் பாய்ந்தன. ஆனால், அந்த முதுபெரும் வீரப்பறவை லாவகமாக மேகங்களுக்குள் மறைந்து, அடுத்த நொடி இராவணனின் தேர்த்தட்டின் மீது குதித்தது.

அவன் ஏவிய ஆயுதங்களைச் சடாயு தனது அலகாலேயே ஒடித்து எறிந்தார். கீழே நின்றிருந்த மரங்கள் இந்த வான் போரின் அதிர்வால் வேரோடு சாய்ந்தன.

சீதை, புஷ்பக விமானத்தில் வைக்கப்படிருந்த தன் குடிலுக்குள் ஒரு மூலையில் அமர்ந்து, அனைத்தையும் பதற்றத்துடன் பார்த்தாள்.

​நேருக்கு நேர் போரிட்டுச் சடாயுவை வெல்ல முடியாது என்பதை இராவணன் உணர்ந்தான். அவன் கண்கள் வஞ்சகமாக மின்னின. போர் சற்றே தற்காலிகமாக நின்ற ஒரு கணத்தில், இராவணன் ஏளனமாகச் சிரித்தான்.

​”ஓ பறவையே, முதுமையால் தள்ளாடும் நீ, மரணத்தை வென்று என்னோடு இவ்வளவு நேரம் போரிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. யாருக்காக நீ போராடுகிறாய்? நான் யாரெனத் தெரியுமா? என்னை எதிர்க்கும் திறன் இம்மூவுலகில் யாருக்குமே கிடையாது” என்றான்.

சடாயு அலட்சியமாகச் சிரித்தான்.

“தனிமையில் இருக்கும் பெண்ணைக் கவர்ந்து செல்லும் மா பாதகன் நீ.. யாராக இருந்தால் எனக்கென்ன? என்னைத் தாண்டிப் பயணிக்க உன்னால் முடியாது. இப் பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனைப் பறவைகளுக்கும் அரசனாக மட்டுமல்ல, இதோ நீ தூக்கிச் செல்லும் அந்தப் பெண் என் மருமகளைப் போன்றவள். என் உயிர் நண்பன் தசரதனின் மகன், இராமனின் மனைவி. அவள் எனக்கு மகளுக்கு ஈடானவள். முடிந்தால் என்னை வென்று பார்” என்று முழங்கினான் சடாயு.

இராவணனின் அம்புகளும் ஆயுதங்களும் பயனற்றுப் போயின சடாயுவின் முன். இராவணன் அயர்ந்தான்.. தந்திரத்தால் மட்டுமே வெல்ல முடியும் இந்தப் பறவையை என உணர்ந்தான்.

“பறவைக்கு அரசனே.. உன் வீரம் மெச்சத் தக்கது. இது போன்ற வீரனைக் கண்டதில்லை என் வாழ்நாளில் நான். உனது இந்த அசாத்திய வலிமையின் ரகசியம் என்ன? உன் உயிர் எங்கே ஒளிந்திருக்கிறது? சொல்.. உன் வீரத்தைப் பாராட்டி உன்னையும், இந்தப் பெண்ணையும் விட்டுவிடுகிறேன்!” என்றான் இராவணன்.

சடாயு, தனது தர்மத்தின் மீது கொண்ட மட்டற்ற நம்பிக்கையில், “அரக்கனே! வீரனுக்கு மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. என் உயிர், என் இதயத்திலோ அல்லது தலையிலோ இல்லை. என் தர்மம் உறையும் என் சிறகுகளின் நுனியில்தான் என் பிராண சக்தி அடங்கியிருக்கிறது. உன்னால் என் சிறகுகளை ஒன்றும் செய்ய முடியாது!” என்று சிம்ம கர்ஜனை செய்தார்.

​சீதை இதைக் கேட்டுப் பதறினாள். “ஐயோ! தந்தையே.. ரகசியத்தை இவனிடம் சொல்ல வேண்டாமே!” என்று கத்த முயன்றாள். அச்சத்தில் அவள் குரல் வெளிவரவில்லை. அவள் உள்ளம் துடித்தது.

​சடாயு சொன்னதைக் கேட்டதும் இராவணனின் இதழ்களில் ஒரு கோரப்புன்னகை அரும்பியது. அவன் தனது மின்னும் சந்திரஹாசம் வாளை உருவினான். சடாயு அடுத்தத் தாக்குதலுக்குத் தயாராவதற்குள், மின்னல் வேகத்தில் இராவணன் சுழன்று சடாயுவின் இரு பெரும் சிறகுகளையும் அடியோடு வெட்டிச் சாய்த்தான்.

​வானமே சரிந்து விழுந்தது போல, சடாயுவின் மாபெரும் சிறகுகள் ரத்த வெள்ளத்தில் மண்ணில் விழுந்தன. சிறகிழந்த அந்த வீரன், “இராமா… இராமா…” என்று முனகியபடி, மேகங்களிலிருந்து கீழ்நோக்கிச் சரிந்தார்.

​சீதையின் அலறல் அந்த ஆகாயத்தையே கிழித்தது. “தந்தையே! எனக்காகவா உங்கள் சிறகுகளை இழந்தீர்கள்?” என்று அவள் கதறினாள். ஆனால் இராவணன், குருதி தோய்ந்த தன் வாளைச் சுழற்றியபடி, வெற்றிக் களிப்புடன் தெற்கு நோக்கிப் புஷ்பக விமானத்தைச் செலுத்தினான்.

​ரத்தச் சகதியில் ஒரு பாறையின் மீது வந்து விழுந்த சடாயு, தனது உயிரை விடவில்லை. “இராமனிடம் இந்தச் செய்தியைச் சொல்லும் வரை காலன் என்னை நெருங்காமல் இருக்கட்டும்” என்று தனது ஒட்டுமொத்தப் பிராணனையும் அலகில் தேக்கிக்கொண்டு, பாறையை இறுகப் பற்றிக்கொண்டான். தூரத்தில் குடில் இருந்த இடத்தை நோக்கி இராமன் ஓடிவருவது தெரிந்தது. குருதி வடிந்து கொண்டே இருக்க, விருப்பத்தையும் மீறி சடாயு மெல்ல மெல்ல தன் கண்களை மூடினான்.

பஞ்சவடியின் மண் இடிவிழுந்தது போல பிளந்து கிடக்க.. குடில் இருந்த தடம் தெரியாமல் பெயர்க்கப்பட்டிருந்த அந்தப் பள்ளத்தைப் பார்த்த இராமனின் உள்ளம், ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றது. “சீதா… சீதா…” என்று அவன் விடுத்த கதறல், காட்டின் மௌனத்தை ஊடுருவித் தெற்கே எதிரொலித்தது.

“பார் இலக்குவா, பார்.. நீ கட்டிய குடில் எங்கே, நான் கொண்ட பெருஞ்செல்வமான என் தேவி எங்கே.. என் சீதை எங்கே” இராமன் கதறினான்.

“இலக்குவா, இதைப் பார்! என் உயிர் அனைய சீதையை யாரோ கவர்ந்து சென்றது மட்டுமின்றி, நம் உறைவிடத்தையே பெயர்த்து எடுத்துள்ளனர். இந்தப் பூமித்தாயின் மகளைப் பூமியோடு சேர்த்து எடுத்துச் சென்ற பாதகன் எவன்?” என்று தாள முடியாத துயரத்தோடும் கோபத்தோடும் அந்த இடத்தைத் தேடினான். பூமியில் தேர்ச் சக்கரங்கள் உருண்டது போன்ற தடயங்களைக் கண்டான். அதைத் தொடர்ந்து ஓடினர் இருவரும். அந்தத் தடமும் சட்டென்று ஓரிடத்தில் நின்று போனது. இலக்கின்றி இருவரும் அந்தத் தடம் சென்ற திசையை நோக்கிச் சென்றனர்.

​இராமன், தூரத்தில் ஒரு பெரும் மலைச் சிகரம் சரிந்து விழுந்தது போலக் கிடந்த அந்த உருவத்தைக் கண்டு உறைந்தான். அது சடாயு. தன் தந்தை தசரதனின் உயிர் நண்பன். பஞ்சவடிக்கு வந்த முதல் நாளில், ஆதுரமாகவும் அன்புடனும் தங்களைச் சொந்த மக்களைப் போல் நடத்திய சடாயு. “இராமா, நீ இல்லாத வேளையில் உன் சீதையை நான் காப்பேன்” என்று உறுதியளித்த தந்தையைப் போன்ற அதே சடாயு, இன்று சிறகுகள் வெட்டப்பட்டு, ரத்தக் கடலில் மிதந்து கொண்டிருந்தான்.

இராமன் ஓடிச் சென்று அந்தப் பெரும் பறவையின் தலையைத் தன் மடியில் கிடத்தினான். “தந்தையே! உங்களுக்கு இந்த நிலை எப்படி நேர்ந்தது? என் சீதை எங்கே? உங்களையும் எதிர்க்கும் துணிவு கொண்டவன் யார்” என்று விம்மினான்.

​சடாயுவின் கண்கள் மெல்லத் திறந்தன. இராமனின் கண்ணீர் அவரது காயங்களில் விழுந்து வெப்பத்தை ஆற்றியது. சடாயுவால் எந்த பதிலையும் சொல்ல முடியாமல் உயிரும் உணர்வும் மங்கிக் கிடக்க, சடாயுவின் ஆவி மெல்ல மெல்லப் பிரியத் தொடங்கி இருந்தது.

இராமன் தன் தந்தைக்கு நிகரான சடாயுவின் உயிரைப் பிடித்து நிறுத்த விரும்பினான். இராமன் துயரம் தாளாமல் அந்தப் பறவையைப் பார்த்து, “எழுந்திருங்கள் தந்தையே! உங்கள் உயிர் இப்போதே போகக்கூடாது! நீங்களாவது எங்களுடன் இருங்கள்” என்று கதறினான்.

​”இராமா.. வருந்தாதே.. உன் சீதையை அந்தத் தசக்கிரீவன் என்னும் அரக்கன் கடத்திச் சென்றான். தடுக்க முன் நின்ற என்னை அவன் வஞ்சகத்தால் என் சிறகுகளை வெட்டிவிட்டான். அவளை குடிலோடு வைத்துக் கொண்டு தெற்கு நோக்கிச் சென்றான்..” என்று தழுதழுத்தார்.

சடாயுவின் நாக்கு இறுதித் தாகத்தில் வறண்டது. தண்ணீரைத் தேடிய கண்களின் உணர்வை அறிந்த இராமன், அருகில் எங்கும் நீர் நிலை இல்லை என்பதை உணர்ந்தான். இராமன் தனது அம்பினால் பூமியைத் தைக்க, அங்கே ஒரு நீரூற்று பொங்கியது. அது சடாயுவின் இறுதி தாகத்தை தணிக்க, சடாயுவின் ஆவி இராமனின் மடியில் அடங்கியது. இலக்குவன் விறகுகளை அடுக்க, இராமன் ஒரு மகனாக நின்று சடாயுவுக்கு ஈமச்சடங்குகள் செய்தான். எரியும் தீயின் முன் கனலாக நின்றான் இராமன்.

​”இலக்குவா! இதுவரை இராமன் ஒரு அமைதியான தவசி. ஆனால் இனிமேல் நான் காலன். சடாயுவின் ஒரு சொட்டு ரத்தத்திற்கு ஈடாக, அந்த அரக்கர்களின் அத்தனைத் தலைகளையும் அறுத்துச் சிதறடிக்கும் வரை என் வில் ஓயாது! இனி இது சீதைக்கான தேடல் மட்டுமல்ல அல்ல.. இது அசுரவதத்தின் ஆணிவேர்!” என்றான் ஆவேசத்துடன்.

ஆம்.. ஆம்.. என்று அதே ஆவேசத்தை எதிரொலித்தன காடுகளின் மரங்களும் மலைகளும் இலக்குவனின் குரலோடு.

அத்தனையும் தொடர்ந்து மறைந்திருந்த பார்த்திருந்த சூர்ப்பநகை, மகிழ்வோடு இலங்கை நோக்கிப் புறப்பட்டாள்.

முன் நின்று விதி அவளை வழி நடத்திச் சென்றது.

பின்குறிப்புகள் :
(நாட்டுப்புறக் கதைகளின்படி “லே, பக்‌ஷி!” (தெலுங்கில்: ‘லே’ – எழுந்திரு, ‘பக்‌ஷி’ – பறவையே) என்று உரக்கக் கூவிய அந்த இடமே லேபக்‌ஷி என்று நிலைபெற்றது.

மேலும் மஹாராஷ்டிர மக்களின் நம்பிக்கையின்படி, ராமன் வனவாசத்தின்போது பஞ்சவடியில் தங்கியிருந்ததால், தசரதரின் மறைவுச் செய்தியை அறிந்தவுடன் கோதாவரி நதிக்கரையில் உள்ள ராம்குண்ட் பகுதியில் அவருக்குப் பிண்ட தானம் செய்தார். அதேபோல், ராவணனுடன் போரிட்டு உயிர்நீத்த ஜடாயுவை தன் தந்தையாகக் கருதி, அவருக்குரிய இறுதிச் சடங்குகளையும் ராமன் அங்கேயே செய்து முடித்தார். இந்த நம்பிக்கையின் காரணமாகவே, நாசிக் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கும் மிக முக்கிய இடமாகத் திகழ்கிறது. காசிக்கு நிகராகக் கருதப்படும் இந்த கோதாவரி தீரத்தில் இன்றும் மக்கள் தங்கள் பித்ருக்களுக்குச் சடங்குகள் செய்வதை புனிதமாகக் கருதுகின்றனர்.

Series Navigation<< அசுரவதம்: 19 – பறக்கும் அதிசயம்.அசுரவதம்: 21 – நீண்ட கரங்கள். >>

Author

You may also like

1 comment

Nalini Subramanian January 3, 2026 - 10:37 pm

புஷ்பக விமானம், வானைக் கிழித்துப் பறந்திட, ஜடாயு அதனைத்துரத்திட, இராவணனுடன் ஜடாயு, உக்கிரமாகப் போராட, தந ்திரமாக இராவணனன் சிறகுகளை அறுத ்து வீழ்த்திட, ஜடாயு உயிரைத்தாங்கி இராமனிடம் சீதை கவர்ந்து செல்லப்பட்ட சேதி சொல்ல என்று கண்முன்னே விரிகின்றன தங்கள் வர்ணனையில் காட்சிகள் அழக ா க விரிகின்றன. அபாரம்!

Reply

Leave a Reply to Nalini Subramanian Cancel Reply