Home நாவல்அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 6: இரும்பு முகத்தினள்) 

அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 6: இரும்பு முகத்தினள்) 

by Iyappan Krishnan
0 comments
This entry is part 52 of 27 in the series அசுரவதம்

கிரௌஞ்ச வனத்தின் அந்தப் பகுதி ஒரு அமானுஷ்யமான நிசப்தத்தில் உறைந்திருந்தது. அந்திப் பொழுது ஒரு குருதி படிந்த வாளைப் போலச் செந்நிறமாகத் தென்பட, அடர்ந்த மரங்களின் நிழல் கரிய நாகங்களைப் போல நிலத்தில் ஊர்ந்து கொண்டிருந்தது. அங்கே ஒரு பாறை இடுக்கின் மறைவில், இரு அரக்கப் பெண்களின் உரையாடல் ஒரு மகா சதித்திட்டத்தைப் போல அரங்கேறிக் கொண்டிருந்தது.

காமவள்ளியின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்து கிடந்தன. வாலிக்கும் மாயாவிக்குமான அந்தப் போர் குறித்து அயோமுகி சொன்ன விவரங்கள் அவளை அதிரச் செய்தன.

“அப்புறம் என்னவானது தோழி”என்றாள்.

“என்னை மாயாவியிடம் இருந்து வலியக் கவர்ந்து சென்று பின் என்னை இக்கதிக்கு ஆளாக்கியது வாலி. அவனை என் மாயாவியாலும் வெல்ல முடியவில்லை என்பதுதான் சோகம்”என்றாள் அயோமுகி. காதலனை நினைத்து அவள் கண்கள் ஆறெனப் பெருகியது.

காமவள்ளி வித்யுத்ஜிவாவை சந்திக்கும் முன் வரை அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த தோழிகளில் ஒருத்தியான அயோமுகியிடம் பேசிக் கொண்டிருந்தாள். அயோமுகி அரக்கர் குலத்தில் பிறந்தவளாகையால் ஒருவகையில் காமவள்ளிக்கு சகோதரி உறவுமானவள்.

“ஆம் தோழி, யாராலும் வெல்லமுடியாத சக்தியுடைய என் அண்ணன் இராவணனையே தோற்கடித்தவன் அல்லவா அந்த வாலி ” என்ற காமவள்ளியின் கண்களில் கவலையும் வருத்தமும் தெரிந்தது.

“அந்த வாலி கொடியவன் காமவள்ளி, மாயாவியைக் கொன்றதோடு தன் தம்பியையும் அடித்துத் துரத்திவிட்டான்”

“ஏன்?”

“அண்ணனான வாலி இறந்துவிட்டான் என நினைத்து மந்திரிகளால் அரியணையில் ஏற்றப்பட்ட சுக்ரீவனை, வாலி சந்தேகித்தான். அரியணைக்காக வேண்டுமென்றே குகை வாயிலை மூடியதாகக் குற்றம் கூறினான். அரியணையோடு சுக்ரீவனின் மனைவியையும் கவர்ந்து கொண்டான். அன்று வாலியிடம் அடி வாங்கிய சுக்ரீவனின் கதறல் இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அப்பப்பா என்ன கொடூரம் அது”

“பெண்ணைக் கவர்ந்த பேடியா அந்த வாலி” என்றாள் கோபத்துடன் காமவள்ளி.

“இதெல்லாம் பழைய கதைகள்தான் காமவள்ளி. இருந்தும் சொல்கிறேன் கேள், பெண்ணைக் கவர்ந்த பேடி, ஆம் ஆம்.. அந்தப் பெருமைக்கு உரிய மாவேந்தன் இராவணன் மட்டும் அல்ல, அவருக்குப் போட்டியாக முன்பே வாலியும் அதை செய்திருக்கிறான்”என்றாள் அயோமுகி இகழ்ச்சியாக, தொடர்ந்து, “இராவணன் வாலியிடம் அடிபட்ட கதையையும் கொஞ்சம் சொல். ஆசை தீரக் கேட்கிறேன். என் சகோதரியைப் போன்ற தோழியான உனக்கு வஞ்சம் செய்த அந்த வீரன் எப்படியெல்லாம் துன்பப்பட்டான் என்பதைக் கேட்பதில் எனக்கு மகிழ்ச்சியே “என்றாள் அயோமுகி.

அந்தக் கதையை சொல்ல ஆரம்பித்தாள், சூர்ப்பனகை என்று பின்னாளில் நிலைத்த பெயர் கொண்ட காமவள்ளி. அவள் கண்கள் கனவில் மிதப்பது போல பாதி மூடிக் கிடந்தன. அந்தக் காட்சிகள் அவள் கண் முன்னே தெரிந்தன..

“வலிமை என்பது ஒரு போதை தோழி. அது கண்களை மறைக்கும் ஒரு மாயத்திரை. தான் நின்றிருக்கும் இடமே உலகின் மையம் என்றும், தன் நிழலே அனைவரையும் காக்கும் குடை என்றும் ஒருவனை நம்ப வைத்துவிடும். இராவணன் அந்த நம்பிக்கையின் உச்சியில் இருந்த நேரம் அது.

அது ஒரு காலைப் பொழுது. என் அண்ணன் இராவணன் மூவுலகுக்கும் அதிபதி என்ற கர்வம் கொண்டவன், கைலாயத்தையே அசைத்த அந்த மாவீரன், நர்மதை நதிக்கரையில் சிவபூஜையில் ஆழ்ந்திருந்தான்.

அவனது பத்துத் தலைகளிலும் சூடியிருந்த மணிமகுடங்களின் ரத்தினங்கள், காலைக் கதிரவனின் ஒளியில் பட்டுத் தெறித்து, நதி நீரையே செந்நிறமாக்கிக் கொண்டிருந்தன. சுற்றிலும் வேத கோஷங்கள் முழங்க, காவலுக்கு நின்ற அரக்கர் படை அசைவற்று நிற்க, அந்தப் பிரதேசமே அவனது ஆளுமைக்குக் கட்டுப்பட்டுக் கிடந்தது.

அப்போதுதான் அங்கே வந்தான் வாலி. கிஷ்கிந்தையின் அரசன். அவனது வருகையே ஒரு புயலின் சீற்றத்தைப் போல இருந்தது. இராவணன் இருந்த இடத்துக்குச் சற்றுத் தொலைவில் அவன் வந்து சேர்ந்தான். கணிசமான தூரம் இருந்தும் அவன் வந்த வேகத்தால் இராவணனே உடலுமே சற்று அதிர்ந்தது. வாலி இராவணனைக் கவனிக்கவில்லை போல, கவனித்திருந்தாலும் அவனை ஒரு பொருட்டாகவும் மதிக்காமல் தன் சிவ பூஜையைத் தொடங்கினான் வாலி.

அவனுடைய ஆகிருதிக்கு நர்மதையின் அந்த நீரோட்டம் சிற்றோடை போல இருந்திருக்க வேண்டும். சிவபூசைக்கு தேவையான நீர் இல்லை என எண்ணி என்ன செய்தான் தெரியுமா? தன் இரு பெரும் தோள்களையும் குறுக்கி, ஓர் அணையைப் போல நதியின் குறுக்கே நின்றான்.

அவன் நதியைத் தடுத்த மறுகணமே, நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது. ​கரைபுரண்டு ஓடிய வெள்ளம், என் அண்ணன் இமைமூடி பூசை செய்துகொண்டிருந்த சிவலிங்கத்தை அடித்துச் சென்றது. பூஜைப் பொருட்கள் சிதறின. தியானம் கலைந்த இராவணன், சீறியெழுந்த நாகம் போலக் கண்களைத் திறந்தான்.

அவனது இருபது கரங்களும் கோபத்தில் துடித்தன. சந்திரஹாசம் மின்னியது.

ஆனால் வாலி? அவன் சலனமே இல்லாமல் கண்கள் மூடி சிவனை வழிபட்டுக் கொண்டிருந்தான். அந்த அமைதிதான் இராவணனை மேலும் உசுப்பியது. ஆக்ரோஷத்துடன் வாலியை நோக்கிப் பாய்ந்தான் என் தமையன்.

அயோமுகி… இந்த உலகத்தில் வலிமைக்கு என்றுமே ஒரு எல்லை உண்டு. நாம் ஒருவரை பலசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, பிரபஞ்சம் அதைவிடப் பெரிய ஒரு சக்தியை எங்கோ ஒரு மூலையில் தயார் செய்து கொண்டிருக்கும். எளியாரை வலியார் அடித்தால், அந்த வலியாரை அதைவிடப் பெரும் வலிமை கொண்ட ஒன்று சூழ்ந்து சிதைக்கும் என்பது இயற்கையின் விதி. இராவணனுக்கு அந்த விதி வாலியின் ரூபத்தில் வந்தது.

போர் பெரிதாக நடக்கவில்லை. அது ஒரு நொடிப் பொழுதுதான். இராவணன் நெருங்குவதைக் கண்ட வாலி, சற்றும் பதறாமல், தன் நீண்ட வாலைச் சுழற்றினான். கருநாகம் ஒன்று இரையைச் சுருட்டுவது போல, அந்த வால் மின்னல் வேகத்தில் இராவணனின் பத்துத் தலைகளையும், இருபது கைகளையும் சேர்த்து இறுக்கிக் கட்டியது.

என் அண்ணனின் பலம் அவனிடமிருந்து வற்றிப்போவதை அவன் உணர்ந்தான். மூச்சுத் திணறினான். கைலாயத்தையே அசைத்தவனால், ஒரு வானரத்தின் வாலிலிருந்து விடுபட முடியவில்லை. அவனது அகம்பாவம் அந்த நொடியில் சுக்குநூறாக உடைந்தது.

​வாலி அவனை ஒரு சிறு பூச்சியைப் போலத் தன் வாலில் கட்டிக்கொண்டு, வானில் பறந்தான். கிஷ்கிந்தையின் நான்கு திசைகளிலும் உள்ள கடல்களில் அவனைத் தோய்த்து எடுத்து, ஒரு விளையாட்டுப் பொருளைப் போல நடத்தினான். அப்போது அவன் கிரீடம் எங்கே விழுந்தது என்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது.

உலகின் பார்வையில் மாவீரனாக இருந்த இராவணன், அன்று வாலியின் வாலில் கட்டுண்டு ஒரு சிறு பூச்சியைப் போல கிடப்பதை உணர்ந்து அவமானத்தின் உச்சியில் கிடந்தான். அந்த அவமானம் போதாதென்று வாலி தன் மகன் அங்கதனுக்கு விளையாடும் தொட்டில் பொம்மையாகக் கட்டித் தொங்கவிட்டான். அப்போது அவன் வீரமும் எங்கோ விழுந்து தொலைந்து போயிருந்தது.

இறுதியில் வேறு வழியின்றி, வாலியிடம் சரணடைந்து, அவனோடு நட்பு உடன்படிக்கை செய்துகொண்டு திரும்பினான் என் தமையன். ‘வாலியின் வால் செல்லும் இடத்துக்கும் நான் செல்ல மாட்டேன்’ என உறுதி அளித்திருந்தான்” என ​சூர்ப்பனகை இதைச் சொல்லி முடித்தபோது, அவள் கண்களில் கண்ணீர் தளும்பியது. பெருமூச்சு விட்டாள்.

“அண்ணன் மீது பாசம் பொங்குகிறதே காமவள்ளி”என்றாள் அயோமுகி சற்றே சீற்றம் கொண்ட குரலில்.

“உன்னுடைய இந்த நிலைக்கு உன் அண்ணன்தான் காரணம் என்பதை நீ மறந்துவிட்டாயா? அல்லது உன் நாசி, பழைய நிலைக்குத் திரும்பியதும் உன் கணவனையே நீ மறந்துவிட்டாயா”என்றாள் அயோமுகி.

சூர்ப்பனகையின் கண்களில் பெருமாற்றம் நிகழ்ந்தது. சோகத்தில் நிறைந்திருந்த கண்கள் சட்டென்று ஒரு கணம் தணல் பொழியும் கண்களாக மாறின, பின்பு அந்தக் கண்கள் வறண்ட நிலையில் வஞ்சம் கொண்ட பழைய சூர்ப்பனகையின் கண்களாக மாறிவிட்டன.

“சற்று நேரம் நான் பழைய காமவள்ளியாகிவிட்டேன் அயோமுகி. உன்னிடம் இப்போது நான் வந்திருப்பது என் வெஞ்சினத்தின் பழி தீர்க்கத்தான். நீதான் உதவப் போகிறாய்” என்றாள் சூர்ப்பனகை.

“நானா! உன்னை இந்நிலைக்குத் தள்ளிய உன் அண்ணனை எப்படி எதிர்க்க முடியும்? அல்லது அந்த இரு மானிடர்களை நான் கொன்று விட்டால் உன் அண்ணன் எப்படி இறப்பான்?”

சூர்ப்பனகை இடி இடியென நகைத்தாள்.

“அந்த மானுடர்களை உன்னால் கொல்ல முடியும் என நினைக்கிறாயா?” என்றாள். அவள் குரலில் எரிச்சலும் கேலியும் விரவிக் கிடந்தன.

“மானுப் பதர்களைக் கண்டு நீ பயப்படுகிறாய் காமவள்ளி, அவர்களை அழிப்பது எளிது. கர தூஷணர்கள் ஓடி வந்து ஆயுதம் கொண்டு போரிட வேண்டிய அவசியம் என்ன? அந்த மானுடர்களைப் பிடித்து அப்படியே விழுங்குவதுதானே சரியான செயலாக இருந்திருக்க வேண்டும்.. அறிவிலிகள்” என்று கொதிப்புடன் சொன்னாள்.

சூர்ப்பனகை சற்று நேரம் கண்களை மூடிக் கொண்டாள். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “மூடர்களுக்கு எல்லாம் ஒரு தலைவர் வேண்டுமென்றால் நான் உன்னைப் பரிந்துரை செய்வேன் அயோமுகி” என்றாள் வெறுப்புடன்.

அயோமுகியின் கருத்த, பாறை போன்று இறுகி கொல்லன் உலையில் தட்டித் தட்டி உருவான இரும்புக் குடுவையைப் போலக் கிடந்த முகத்தில் எந்த உணர்வும் வெளிப்படாவிட்டாலும், பொழுது சாயும் அந்த அந்தி நேரத்திலும் அவளின் கண்களில் ஆவேசமும், தன்மானத்தைச் சீண்டிய அந்த வார்த்தைகளால் உண்டான நெருப்பும் தெளிவாகத் தெரிந்தது.

“இதோ நான் உடனே சென்று இருவரையும் அழித்துவிட்டு வருகிறேன். பிறகு பேசுவோம்” என்று சூர்ப்பனகை தடுப்பதையும் பொருட்படுத்தாது கிளம்பினாள்.

அங்கே இராமனும் இலக்குவனும் தங்கள் பயணத்தை தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் அயோமுகி இருந்த அந்தக் காட்டுக்குள் நடுவில் இருந்தனர். வழக்கமாக அந்தக் காட்டின் பகுதியில் அந்தி சாய்ந்தாலும் இத்தனை இருட்டு உடனடியாகச் சூழ்வதில்லை. காற்றின் போக்கும் சட்டென்று தீவிரமாகவும் அடுத்த சில நொடிகளில் எந்தச் சலனமும் இன்றியும் இருந்தது..

இராமனிடம் இலக்குவன் சொல்ல ஆரம்பித்தான்.

“அண்ணா, இந்தச் சூழலும், இயற்கையின் ஒலி அரவங்களும், காற்றின் மொழியும் ஏதோ தீங்கு நம்மைச் சூழப்போவதை உணர்த்துகிறது “என்றான்.

அந்தத் தீங்கு சற்று தூரத்தில் இருந்து இவர்கள் அறியாத வகையில் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது.


பின்குறிப்பு: அயோமுகி சூர்ப்பனகையின் தோழி என்பதற்கான நாட்டுப்புறப் பாடல் / கதை குறிப்புகள்.

Ramayana Vishavruksham (முப்பால ரங்கநாயகம்மா) – வால்மீகிக்கு மாறான folk versions தொகுத்த நூல்.

Molla Ramayanamu – Upakathalu – மொல்லா ராமாயணத்தோடு வரும் உபகதைகள்.

Representation of Subaltern Women in Telugu Folk Ramayana – ஆய்வுக் கட்டுரை. இதில் அரக்கிகளை “ஒடுக்கப்பட்ட பெண்கள்” ஆகக் காட்டி, சூர்ப்பனகை-அயோமுகி தோழமை பற்றி விவாதம் இருக்கிறது.

Series Navigation<< அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 5: விதியா? வஞ்சனையா?) 

Author

You may also like

Leave a Comment