மதங்க வனத்தின் அந்தப் புண்ணிய பூமியில் அன்று காற்று கூட ஒருவிதப் பரவசத்துடன் வீசிக்கொண்டிருந்தது. சபரிக்கு அன்று காலையிலிருந்தே இருப்புக் கொள்ளவில்லை. காற்று தன் காதில் வந்து தேவ ரகசியம் ஓதியதைப் போல எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஒருவிதப் பதற்றம்; ஆனால் அது அச்சத்தால் விளைந்ததல்ல, பல யுக காலக் காத்திருப்பு கனிந்துவிடப் போகும் தருணத்தின் அதிர்வு. அவள் கண்கள் மங்கலாக இருந்தாலும், அவளது ஆத்மா தீர்க்கமாக விழித்திருந்தது.
சபரி முணுமுணுத்தாள். அவளது இதழ்கள் வறண்டிருந்தாலும் உள்ளம் அன்பால் ஊறியிருந்தது.
“என் இராமன் வருவான். ஆசான் மதங்க முனிவர் சொன்னது பொய்க்காது.”
அவள் கண்களைச் சுருக்கி வானத்தைப் பார்த்து ஏதோ கணக்கிட்டாள்.
“இந்நேரம் வந்திருக்க வேண்டும்.. வருவான் வருவான்..” என்றபடி கர்மசிரத்தையாகப் பழங்களைக் கடித்துப் பார்த்துச் சுவையானவற்றைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் சபரி.
அவள் உடல் அன்று ஏனோ ஒத்துழைக்க மறுத்தது போல் ஆயாசமடைந்தாள். முதுமையின் பாரம் அவளது முதுகெலும்பை வளைத்திருந்தது. இருந்தாலும், மனதிற்குள் ஊற்றெடுத்த பரவசம் அவளைத் தாங்கிப் பிடித்தது.
சபரியின் மனதில் மீண்டும் சொல்லொணா பரவசம் ஊற்றெடுக்க, பழங்களைக் கீழே வைத்தாள். கண்களை மூடிக்கொண்டாள். இரு கைகளை உயர்த்தி அந்தக் காலைச் சூரியனை வணங்கினாள்.
ஒருவேளை இந்த நாள் தான் அந்த நாளா? இருக்கக்கூடும்.
“காற்றின் தேவனே.. கருணையின் வடிவே, அஞ்சனையின் தோழியாக நான் உன்னைக் கேட்கிறேன். இராமன் வரும் வரை என் உடலை விட்டு நீங்கிவிடாதே.
ஞாயிறே, கதிரே, கதிரின் சுடரே, சுடரின் வெப்பமே… என்னுடன் இரு. என் உடலின் வெப்பம் இராமன் வரும் வரைக்கும் நீங்காமல் காத்திருக்கச் செய்.
நிலவே, நிலவின் ஒளியே.. என் இராமனைக் காணும் வரை என் கண்களை விட்டு நீ நீங்காதிரு.. உனக்கும் இராமனைக் காணும் பேறு கிடைக்கும்.
நீல நிற வானமே.. நீதான் என் இராமனா? மதங்கர் சொன்ன பரிபூரணன் நீதானா? என்னை நீ தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறாய். ஆனால் நீதான் நான் வேண்டிய இராமனா என்று தெரியவில்லையே.
வற்றாத நீரே, மலை விட்டு வீழ்ந்திறங்கும் அருவியே, என் இராமனின் திருவடிகளைத் தழுவி வருட உனக்கு அந்தப் பெரும் பேற்றை அளிக்கவே விரும்புகிறேன். அந்தக்காலடி பட்ட நீர் மண்ணைச் சேரும் வரை, என் உடலில் நீ வற்றாமல் இரு.
மழையே, மழையைத் தின்ற மண்ணே.. உன்னிடம் நான் சேரும் நாள், அது இராமனை நான் கண்ட பின்பு என்றே ஆகட்டும்.”
சபரி தன் கைகளை விரித்து, பிரபஞ்சத்தின் அணு ஒவ்வொன்றையும் சாட்சியாகக் கொண்டு வேண்டினாள். அவளது வேண்டுதல் காற்றில் கரைந்து, கானகத்தின் அமைதியில் ஒரு மெல்லிய அதிர்வை உண்டாக்க மனமுருகி வேண்டினாள்.
அவளது பிரார்த்தனை காற்றில் கரைவதற்குள், அந்தத் தபோவனத்தின் பசுமைப் பின்னணியில் வில்லுடன் இருவர் வருவதைக் கண்டாள்.
பல ஆண்டுகள் தனிமையில் உழன்ற சபரியின் கண்கள் ஏற்கனவே சற்று மங்கியிருந்தாலும், கண்ணீர்த் திரையோடு அவர்களைக் கண்டாள். தாகத்தோடும் களைப்போடும் வனத்தில் வழிதவறி வந்திருக்கும் யாரோ இரு சந்நியாசிகள் என்றுதான் அவள் முதலில் நினைத்தாள்.
வந்தவர்களை வரவேற்று அமரச் செய்தவள், பசியோடு வந்திருக்கும் இவர்களுக்குத் தான் கடித்து எச்சில்படுத்திய பழங்களைக் கொடுப்பதா, அதுவும் இராமனுக்காக எடுத்து வைத்ததைத் தருவதா என்று எண்ணினாள்.
அவர்கள் இருவரில் ஒருவன் அடர்ந்த நீலமேகத்தைப் போலவும், மற்றொருவன் உருக்கிய தங்கத்தைப் போலவும் காட்சியளித்தனர். அந்த நீல வண்ணன் மெல்லச் சிரித்தான். அந்தப் புன்னகையில் பிரபஞ்சத்தின் அத்தனை கருணையும் ஒருங்கே திரண்டு வந்து அமர்ந்திருந்தது. அவன் அவள் கைகளைப் பற்றிக் கொண்டான். தன் மேலங்கியால் சபரியின் கண்களைத் துடைத்தான். அவளின் கண்களில் சற்று ஒளி கூடியது போல் இருந்தது.
“அன்னையே, அடியேன் இராமன், தசரத மைந்தன். இவன் என் தம்பி இலக்குவன். உங்களின் உதவி நாடி வந்திருக்கிறோம்,” என்றான் மென்மையான குரலில்.
இராமன் என்ற அந்தப் பெயர்.. எத்தனை பேர் அங்கு வந்து அவளை இப்பெயரால் ஏமாற்றிச் சென்றிருக்கிறார்கள்! சிலர் அவளைக் கிண்டல் செய்வதற்காகவும், சிலர் அவள் பறித்து வைத்திருக்கும் பழங்களுக்காகவும் ஏமாற்றியுள்ளனர். அப்போதெல்லாம் அன்புடன் அவள் அவர்களுக்குத் தான் பறித்த பழத்தை மனம் நோகாமல் தந்திருக்கிறாள்.
“ஓ… இராமன் தானா? சரி சரி, இந்தப் பழங்களில் எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொண்டு போங்கள்,” என்றாள்.
“மன்னிக்க வேண்டும் அன்னையே, நாங்கள் பழம் தேடி வரவில்லை. உங்கள் உதவி நாடி வந்திருக்கிறோம்,” என்றான் இராமன்.
அவளுக்குக் கொஞ்சம் நேரம் கழித்தே உறைத்தது. அவசர அவசரமாக எழுந்தாள். இராமன் கைகளில் இருந்த அந்தச் சுவைக்கப்படாத முழுப் பழங்களைத் தட்டி விட்டாள்.
“ஐயா இராமா, நீதானா? உண்மையில் நீதானா? என் ஆசான் சொன்ன தசரத மைந்தன் தானா நீ? உன்னை நான் பார்த்துவிட்டேனா… ஆம் பார்த்துவிட்டேன்.. பார்த்துவிட்டேன்.. காணாப் பெரும்பொருளைக் கண்முன்னே கண்டுவிட்டேன்!”
“என்னாயிற்று அம்மா, ஏன் பழங்களைத் தட்டிவிட்டீர்கள்?”
“இராமா.. இராமா.. இரு இரு, அந்தப் பழங்கள் புளிப்பாக இருக்கக்கூடும். இதோ உனக்குத் தேர்ந்தெடுத்த இனிப்பான பழங்கள்,” என்று கூடையில் தான் கடித்துச் சுவைத்து மீதம் வைத்திருந்த பாதிப் பழங்களைக் கொடுத்தாள்.
“எடுத்துக்கொள் இராமா.. இவை அனைத்தும் சுவையானவை. நான் தேடித் தேடி உனக்காக இன்று எடுத்து வைத்த பழங்கள்,” என்றாள்.
இராமன் அந்த அன்பில் கரைந்தான். ‘யாரிவள்? இவளுக்கும் எனக்கும் எந்தக் காலத்துப் பந்தம்? என் பெயர் ஒன்றினால் மட்டுமே என்னை அறிந்தவள் இவள். ஆனால் என் மீது காட்டும் அன்பு தாயினும் உயர்ந்த அன்பு இல்லையா…’
அவன் கண்கள் நீரினால் நிறைந்தன.
“மகனே இராமா, புளிப்பான பழத்தைத் தந்துவிட்டேனா?” என்று அவன் கடித்த அந்தப் பழத்தைப் பிடுங்கி கீழே எறிந்துவிட்டு, வேறொன்றை மீண்டும் லேசாகச் சுவைத்துப் பார்த்துவிட்டு, “இது மிகவும் சுவையானது, இதை எடுத்துக்கொள்,” என்றாள்.
இலக்குவன் திகைத்து நிற்க, இராமன் சற்றும் தயங்காமல் அந்த எச்சில் கனிகளை எடுத்து உண்டான்.
இங்கே பேதங்கள் அனைத்தும் தவிடுபொடியாகின்றன. மனிதர்கள் வார்த்தைகளால் வகுத்தளிக்கும் தூய்மை என்பது வெறும் புறவயமானது. ஆனால் பக்தி என்பது அகவயமான பெருநெருப்பு.
கடிக்கப்படாத அந்த முழுப் பழங்களில் இருந்த தூய்மையை விட, கடிக்கப்பட்டக் கனிகளில் இருந்த பேரன்பின் சுவையே இராமனுக்குத் தித்தித்தது. ‘நான்’ என்ற அகங்காரம் முழுமையாக அழிந்த ஒரு ஜீவனின் எச்சில், இறைவனுக்குப் படைக்கப்படும் அதி உன்னத உணவாக இராமனுக்கு மாறியது.
நெஞ்சடைக்கும் ஆனந்தத்தில் திளைத்த சபரி, தன் வாழ்வின் ஒட்டுமொத்த லட்சியமும் நிறைவேறியதை உணர்ந்தாள்.
அவனை உபசரித்த பின்பு, சீதையைத் தேடும் பயணத்திற்குத் துணையாகச் சுக்ரீவன் இருக்குமிடமான ருசியமுக மலையைக் காட்டி இராமனுக்கு வழிகாட்டினாள் சபரி. தன் ஆசான் மதங்க முனிவரின் வாக்கை நிறைவேற்றிய மகிழ்விலும், இராமனின் தரிசனம் கிடைத்த பெரும் பேற்றிலும் அவளது பிறவிப் பெருங்கடல் வற்றியது. இராமனின் திருவுருவத்தைக் கண்ட மாத்திரத்திலேயே அவளது முன்வினைகள் யாவும் எரிந்து சாம்பலாகிட, அவள் பிறவியின் வேர் அறுபட்டு முக்தி அடைந்தாள்.
இராமன் பார்த்திருக்க அவளது உடல் மண்ணில் சரிந்தது. இராமன் திகைத்து நின்றான்.
(தொடரும்)