தண்டகாரண்யத்தின் அந்தப் பகுதி, மாலை முடிந்த முன் இரவுப் பொழுதில் ஒருவித இரம்மியமான நீல நிற ஒளியில் திளைத்திருந்தது. ஆகாயத்தை முட்டும் ஆச்சா மரங்களும், ஆகாயப் பந்தலில் ஊஞ்சலாடும் விழுதுகளும், சுற்றிப் படர்ந்த காட்டுக் கொடிகளும் என எல்லாம் சேர்ந்து நிலவின் பொற்கரங்களை நிலத்தில் விழ விடாமல் தடுத்துக்கொண்டிருந்தன. அதையும் மீறி ‘விட்டேனா பார்..’ என அதிகாரத்துடன் சந்திரன் தன் கிரணங்களை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தான். அந்த அடர்ந்த மரகதப் பச்சைக் குடைக்குக் கீழே, வேடுவத் தலைவன் சபரனின் மனதிலும், குடியிருப்பிலும் இன்று ஒரு புதிய பிரகாசம் உருவாகி இருந்தது. ஐம்பது பிராயத்தைத் தாண்டியும் சற்றும் குலையாத உடற்கட்டும், தோளில் ஏறிய தழும்புகளும், மார்பில் பல வேங்கைகளை வீழ்த்திய வீர வடுக்களும் சுமந்து, ஒரு நடமாடும் குன்றைப் போல நின்றான் வேடுவத் தலைவன் சபரன்.
அவனது விழிகளில் காட்டின் தீட்சண்யமும், புன்னகையில் தன் மகள் சிரமணா மீதான எல்லையற்ற வாஞ்சையும் போட்டி போட்டன. இன்று வீட்டில் உண்டான அந்த ஒளி, அவனுக்கு வெறும் விளக்கின் ஒளி அல்ல; ஒரு குலத்தின் கௌரவம் அரங்கேறப்போகும் திருமணக் கோலத்தின் ஒளி. தன் மகளின் எதிர்காலத்தைக் குறித்து அவன் நெஞ்சில் உண்டான ஒளி.
தான் மிகவும் போற்றி வளர்க்கும் தன் செல்ல மகளின் திருமணத்துக்கான முன்னேற்பாடுகள் கனஜோராக நடந்துக் கொண்டிருந்தன. தனக்கு இணையான வீரத்துடனும், நல்ல அழகும் உடல் வாகும் பொருந்திய வேடுவ இளைஞனை அவன் மகளுக்குக் கணவனாகத் தேர்ந்தெடுத்திருந்தான். வெளியே வேட்டுவக் கூட்டம் மது அருந்திக் கொண்டும் நன்கு தீயில் வாட்டப்பட்ட இறைச்சியைத் தின்று கொண்டும் பெருங்கூச்சலிட்டுக் கொண்டிருக்க, அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்த சபரனின் கண்கள் தன் மகளை அடிக்கடித் தேடித் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தன.
பருவம் அடையும் முன்பு வரைக்கும் அவள் ஓடி வரும் வேகம், காற்றைக் கிழிக்கும் அம்பின் வேகத்திற்கு இணையாக இருந்தது. கையில் ஒரு சிறு வில்லேந்தி, மயில் தோகை சூடி, காட்டு மல்லிகையைத் தன் கூந்தலில் செருகிக் கொண்டு பாய்ந்து வருவாள். அவளுடைய கண்கள் காட்டின் மான்களைப் போல மருண்டிருக்கவில்லை; மாறாக, ஆகாயத்தில் வட்டமிடும் பருந்தின் கூர்மையைக் கொண்டிருந்தன.
அவள் விழுதுகள் பிடித்து ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிச் செல்லும்போது, காட்டின் தேவதையே சிறகுகளுடன் விண்ணில் இருந்து இறங்கி நேரில் வந்தது போல இருக்கும். அவளின் அந்தப் பருவம் கவலைகளற்றது. தாயில்லாத அந்தப் பெண் தந்தையின் மார்பில் தலை சாய்த்து, காட்டுத்தீயின் வெளிச்சத்தில் வீரக் கதைகளைக் கேட்டபடி உறங்கிய அந்த நாட்கள்…
சபரன் தன் தலையை உதறி எண்ணங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான்.
அவள் சிரமணா, அவளது பெயர் அந்தக் காட்டின் காற்றைப் போலவே மென்மையானது. ஆனால், அவளது மனதோ இன்று ஒரு கட்டுக்கடங்காத காட்டாற்றைப் போலச் சுழன்று கொண்டிருந்தது. அங்கே சிரமணாவின் அறைக்குள் நறுமணம் கமழ்ந்தது. காட்டு மல்லிகையும், அகிலும், சந்தனமும் கலந்த அந்த வாசம் ஒரு மயக்கத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது. அவளது தோழிகள் அவளைச் சூழ்ந்து நின்று அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள்.
சிகையெங்கும் மயில்தோகைகளும், வண்ணமயமான காட்டு மலர்களும் சூட்டப்பட்டன. கழுத்தில் கோர்க்கப்பட்டிருந்த அபூர்வமான மணிகள், அவளது தேக்கு மர நிறத்து மேனியில் பட்டுத் தெறித்து, நிலவின் ஒளியைப் பிரதிபலித்தன. சிரமணா ஒரு தேர்ந்த சிற்பியின் உன்னதப் படைப்பைப் போல அமர்ந்திருந்தாள்.
அவளது கண்கள் அவை வெறும் கண்கள் அல்ல; காட்டின் ஆழமான சுனைகளைப் போலத் தெளிந்தும், அதே சமயம் ஏதோ ஒரு ரகசியத்தைச் சுமந்தும் நின்றன. அவளது நெற்றியில் பூசப்பட்டிருந்த செம்மண் திலகம், வரப்போகும் திருமணத்தின் மங்கலத்தைக் கட்டியம் கூறியது. நள்ளிரவைத் தாண்டி அதிகாலையில் திருமணம் நடக்கும் வரை அவள் விழித்துக் கொண்டிருக்க வேண்டும்.
அங்கே, வேடுவக் குலத்தின் பெருமையைப் பறைசாற்ற, திருமண விருந்துக்கான ஆயத்தங்கள் வேகமாக நடந்து கொண்டிருந்தன. வேடுவக் குல வழக்கப்படி, ஒரு தலைவனின் மகளின் திருமணம் என்றால், அந்தக் காட்டில் உள்ள பெரும்பாலான உயிரினங்களும் ஒருவிதத்தில் பங்குகொள்ள வேண்டும் உணவாக!
நூற்றுக் கணக்கில் ஆடுகள், மான்கள், காட்டுப் பன்றிகள் – அனைத்தும் குறுகிய வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருந்தன. பசியாலும், பயத்தாலும் அவை எழுப்பிய ஓசை, அந்தச் சுற்றுப்பகுதியில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.
சபரன், சிரமணா இருந்த அறையை நோக்கி நடந்தான். நெடுநாள் கழித்து இன்று வேடுவக் குலத்தின் முறைப்படி நடக்கப் போகும் திருமணம். இவள் தாயின்றி தானே வளர்ந்த மகள். ஒரு காட்டுக் கொடி போல, ஒரு தப்புச் செடி போல செழித்து வளர்ந்து நிற்கிறாள்.
“மகளே… மகளே” என்றழைத்தபடி நின்றான் சபரன். தலைவனின் வருகையைக் கண்ட தோழிப் பெண்கள் அவனை வணங்கி அறையை விட்டு வெளியே சென்றனர்.
சிரமணா நிமிர்ந்து தன் தந்தையைப் பார்த்தாள். அந்தக் கண்களில் சற்று நீர் துளிர்த்திருந்தது.
“அப்பா, … அப்பா..” என விம்மினாள். அவள் மார்புக் கச்சையைத் தாண்டி கண்ணீர் நிலத்தில் விழுவதற்காக காத்திருந்தது. சபரன் பதறினான்.
“அப்பா, எனக்கு இந்தத் திருமணம் வேண்டாம், பலமுறை சொல்லிவிட்டேன். நீங்கள் ஏன் கேட்க மறுக்கிறீர்கள்?” என்றாள் விம்மல் தணியாமல்.
“மகளே, ஏன் இப்படி பேசுகிறாய்? உன் தந்தை உனக்குத் தீங்கு செய்வேனா சொல்? நீ நினைப்பது போலத் திருமணம் கொடியதல்ல. திருமணம் என்பது, ஒரு தந்தை தன் ரத்தமும் சதையுமாக வளர்த்தெடுத்த உயிருக்கு நிகரான மகளை வேறொரு கரங்களில் ஒப்படைப்பதென்பது வெறும் சடங்கல்ல, அது அவன் கௌரவத்தையும், தன் வாழ்நாள் பயனையும் தாரை வார்ப்பதாகும். ஒரு தந்தைக்குத் தன் மகள் தகுதியானதொரு வீரனின் நிழலில் பாதுகாப்பாக இருக்கிறாள் என்கிற நிம்மதியையும், அவனது வம்சவிருட்சம் தழைக்கும் என்கிற பெருமிதத்தையும் ஒருசேர வழங்குவது இந்தத் திருமண பந்தம். காட்டின் வேங்கையாகத் திரிந்தவள் ஒரு இல்லத்தின் விளக்காக மாறும் அந்தத் தருணம், அவளைப் பெற்றவனுக்குப் புகழையும், அவளைக் கொண்டவனுக்கு ஒரு முழுமையான வாழ்வையும் பரிசாக அளிக்கிறது. இது தான் மகளே நிறைவு” என்றான் சபரன்.
அவளது இதயம் ஒரு புயலில் சிக்கிய சிறு ஓடத்தைப் போலத் தத்தளித்தது.
“அப்பா, நான் திருமண வாழ்விற்கானவள் இல்லை. தாயில்லாமல் நான் வளர்ந்தது பெரும்பாலும் தவசியர் ஆசிரமங்களில். எனக்குத் தவ வாழ்வே பெரிதாகப் படுகிறது அப்பா.. மேலும் என் வாழ்வின் தொடக்கம், இத்தனை அப்பாவி உயிர்களின் முடிவாக இருக்க வேண்டுமா? என் மணக்கோலம், இந்த ஊமைப் பிராணிகளின் குருதியால் நனைய வேண்டுமா? சொல்லுங்கள் அப்பா சொல்லுங்கள்” என்றாள்.
இப்போது மடை திறந்து பாயும் நதியென அவள் கண்கள் நீரைச் சுரந்து கொண்டிருந்தன. சபரன் திகைத்து நின்றான்.
இந்தக் கேள்வி அவளது ஆழ்மனதில் பலகாலமாக ஒரு மனப் போராக உருவெடுத்திருந்தது. ஏதோ விளையாட்டாக திருமணம் வேண்டாம் என்கிறாள் என்றிருந்த சபரனுக்கு இது அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டு பண்ணியது.
தன் திருமணம் நடந்தால் தன் தந்தைக்கு உண்டாகப் போகும் பெரு மகிழ்ச்சியை அவள் அறிந்து இருந்தாள். தன் மகள் ஒரு வீரனுக்கு மனைவியாகப் போகிறாள் என்ற கர்வத்தில் அவர் அங்கும் இங்கும் உலா வந்து கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். தான் சொன்ன வார்த்தைகள் அவனைக் காயப்படுத்தும் என்பதை அவள் வெகு நிச்சயமாக உணர்ந்திருந்தாள்.
ஆனால், சிரமணாவின் சிந்தனைத் தராசில் ஒரு பக்கம் தந்தையின் பாசமும், மறுபக்கம் உயிர்கள் மேல் அவள் கொண்ட அளவற்ற கருணையும் ஊசலாடின.
சிரமணா அந்தக் கணத்தில் ஒரு பெரும் மாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருந்தாள். ஒரு வேடுவக் குலப் பெண்ணுக்கு வேட்டை என்பது ரத்தத்தில் கலந்த ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால், அவளுக்குள்ளே இருந்த மென்மையான அந்த ஆன்மா, ‘அஹிம்சை’ எனும் அறியப்படாத ஒரு மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கியது.
“அப்பா, இந்தத் திருமணம் நடந்தால், நான் ஒரு வீரனின் மனைவியாவேன். ஆனால், என் இதயம் என்றென்றும் இந்தக் கொலைகளின் நிழலிலேயே வாழும். ஒவ்வொரு முறை நான் உணவு உண்ணும்போதும், அந்தப் பிராணிகளின் இறுதிப் பார்வை என் நினைவுக்கு வரும் அப்பா ” என்று அவள் காருண்யமும் அச்சமும் கலந்தக் குரலில் சொன்னாள்.
அவள் சாளரத்தின் வழியாக வெளியே பார்த்தாள். அங்கே ஒரு சிறு மான் குட்டி, தன் தாயின் மடியைத் தேடித் தவித்துக் கொண்டிருந்தது. அதன் கண்கள் சிரமணாவின் கண்களைச் சந்திப்பது போலத் தோன்றியது.
“அங்கே பாருங்கள் அப்பா, அந்த மான் குட்டி எங்களைக் காப்பாற்ற மாட்டாயா? என்று என்னைக் கேட்பது போல என்னைப் பார்க்கிறது” என்று சொல்லி அழுதாள்.
சபரன் முகம் இறுகியது.
“தாயில்லாப் பெண் என்று செல்லம் கொடுத்து வளர்த்தது மாபெரும் தவறாகிப் போய்விட்டது. சிரமணா, இந்தத் திருமணம் என்பது உன் ஒருத்திக்காக மட்டும் நடப்பதல்ல. இது குலப் பெருமை, என் கௌரவம், வேடுவக் குலத்தின் நாளைய நலன் என எல்லாம் கருதியே நடக்கிறது. திருமணம் கட்டாயம் நடந்தே தீரும். நான் மிச்ச வேலைகளைக் கவனிக்கிறேன். நீ தயாராக இரு” என்று சொல்லிவிட்டு வேகமாகக் குடிலின் கதவை மூடிவிட்டுச் சென்றான்.
இரவு முற்றியது. வேடுவர்கள் மதுவிலும், இசையிலும் திளைத்துக் களைத்துப் போய் உறங்கத் தொடங்கினர். காடே ஒரு அமானுஷ்ய மௌனத்தில் ஆழ்ந்தது. சிரமணா மெல்ல எழுந்து நின்றாள். அவளது திருமண ஆபரணங்கள் ஒன்றோடொன்று மோதி மெல்லிய ஓசையை எழுப்பின. அவள் மெல்ல அந்த ஆபரணங்களைக் கழற்றி வைத்தாள். மயில்தோகைகளும், மணிகளும் சிம்மாசனத்தில் அநாதையாகக் கிடந்தன.
ஒரு சாதாரண மரவுரியை அணிந்து கொண்டாள். அவளது கையில் இப்போது அலங்காரப் பொருட்கள் இல்லை. இருளில் ஒரு நிழலைப் போல அவள் வேலிகளை நோக்கி நடந்தாள். இன்னும் பத்து நாழிகைப் பொழுதில் திருமண வேலைகள் மீண்டும் ஆரம்பம் ஆகும். அதற்குமுன் அவள் செயலாற்ற வேண்டும்.
காவலாளிகள் உறக்கத்தின் பிடியில் இருந்தனர். சிரமணா ஒவ்வொன்றாக வேலிகளைத் திறந்தாள். “ஓடுங்கள்… சுதந்திரமாக ஓடுங்கள்… உங்கள் காடு உங்களை அழைக்கிறது” என்று அவள் மனதிற்குள் முணுமுணுத்தாள்.
நூற்றுக்கணக்கான பிராணிகள் சத்தமின்றி, ஆனால் மின்னல் வேகத்தில் அந்த இடத்தை விட்டு ஓடின. அவற்றின் காலடி ஓசை சிரமணாவிற்கு ஒரு மகா சங்கீதமாக ஒலித்தது. அவை காட்டின் ஆழத்திற்குள் மறைந்தபோது, அவளது மனதில் இருந்த பாரம் ஒரு நொடியில் கரைந்தது.
வேலை முடிந்தது. ஆனால், இனி அங்கே அவளுக்கு இடமில்லை. காலை விடிந்தால் அவள் செய்த ‘குலத்துரோகம்’ அம்பலமாகும். தந்தையின் கோபத்திற்கும், குலத்தின் தண்டனைக்கும் அவள் ஆளாக வேண்டியிருக்கும். அவள் திரும்பித் தன் குடியிருப்பைப் பார்க்கவில்லை. தன் கையில் இருந்த சிறு குறுவாளை உறையிலிட்டு இடுப்புக் கச்சையில் வைத்துக் கொண்டாள், பம்பா நதியை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
விலங்குகளின் ஓசையைக் கேட்டு சபரன் எழுந்து வந்து பார்த்தான். சிரமணா குடிலைத் தாண்டி சற்று தூரம் கடந்துவிட்டிருந்தாள்.
“சிரமணா… என் மகளே..” என்று அவன் இதயம் கதறியது. அவனுக்குப் புரிந்துவிட்டது. அவளை இனி தடுத்துப் பயனில்லை. அவள் பயணம் அவள் விரும்பியவாறு இருக்கட்டும் என்று நினைத்தபடி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஏதும் தெரியாதது போல் கூட்டத்தில் கலந்து படுத்துக் கொண்டான்.
சிரமணாவின் பாதங்கள் கற்களிலும் முட்களிலும் சிரமப்பட்டன, ஆனால் அவளது இதயம் காயப்படவில்லை. அது ஒரு பெரும் விடுதலையை அனுபவித்துக் கொண்டிருந்தது. அந்த நள்ளிரவில் அவள் ஒரு வேடுவப் பெண்ணாகப் புறப்படவில்லை; ஒரு ஞானியாக, இறைவனைத் தேடுபவளாக உருமாறியிருந்தாள். சிரமணா என்ற பெயர் மறைந்து, பிற்காலத்தில் ‘சபரி‘ என்று போற்றப்படப்போகும் அந்தப் புனிதம், அந்த இருண்ட காட்டில் ஒரு சிறு ஒளியாகத் தன் பயணத்தைத் தொடங்கியது.