Home நாவல்அசுரவதம் 6: – முந்திச் செல்லும் விதி

அசுரவதம் 6: – முந்திச் செல்லும் விதி

by Iyappan Krishnan
1 comment
This entry is part 6 of 12 in the series அசுரவதம்

இராவணனின் மனம், அவமானத்தினால் உண்டான தீயில் எரிந்து கொண்டிருந்தது. தசாணனன், பத்துத் தலையுடையவன், அரக்கர்களுக்கெல்லாம் மன்னன், உலகை ஆளும் பேராண்மையின் உருவம், ஆனால் அவன் இதயம் இன்று அமைதியை இழந்திருந்தது.

மிதிலையின் அரசன் ஜனகன், சானகியின் சுயம்வரத்துக்கு உலகின் எல்லா மன்னர்களையும் அழைத்திருந்தான். பேரரசர்கள், வீரர்கள், தேவர்கள் கூட அந்த மாபெரும் நிகழ்வுக்கு அழைப்பு பெற்றிருந்தனர். ஆனால், இலங்கையின் அரசன், பிரம்மனின் வரங்களால் புனிதமானவன், சிவனின் பக்தன் எனப் புகழப்படும் இராவணனுக்கு அழைப்பு வரவில்லை.

மேலும் அயோத்தியைச் சேர்ந்த ஒரு சிறுவன், அவன் அயோத்தியின் இளவரசனாம், அவன் வில்லை உடைத்து சானகியை சுயம்வரத்தில் வென்று மணந்தான் என்பதெல்லாம் அவனுக்கு கட்டுக் கதையாகத் தோன்றியது. இந்த சனகன் ஏதோ சூழ்ச்சி செய்திருக்கிறான், அதனால் தான் எனக்கு அழைப்பு வரவில்லை. என மனதில் சொல்லிக் கொண்டான்.

இது வெறும் மறதியல்ல; இது அவமானம், அவனது பெருமையை கூறுபோடும் கத்தி. என அவன் மனம் அந்நிகழ்வை நினைந்து நினைந்து கொதித்தது. அதே நேரம் சீதை மீதான ஆர்வம் மெல்ல மெல்லக் கூடிக்கொண்டே போனது

அவன் அரண்மனையின் பொன்மாடத்தில், தனிமையில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தான். அந்த மண்டபம் பலவகையான நேர்த்தியான கற்சிற்பங்களை கொண்டிருந்தது. சிற்பங்களின் மேல் பொன் வேய்ந்து அவை பொன்னாலான சிற்பங்கள் என்றே சொல்லும் அளவிற்கு காட்சியளித்தன. நடு கூடத்தில் இரண்டு ஆளுயரத்தில் வேலைப்பாடுகளுடன் ஒரு வில் அலஙகாரமாய் வைக்கப் பட்டிருந்தது.

இராவணன் புருவங்கள் கோபத்தில் நெறிந்தன; அவன் கண்கள் தீப்பொறிகளை உமிழ்ந்தன.

சானகியின் அழகு பற்றி பேச்சுகள் அவன் காதுகளை எட்டியிருந்தன. அவள் ஒரு தெய்வீக மங்கை, மண்ணில் அவதரித்தவள். அவளின் அழகிற்கு இணை என்று சொல்ல யாருமில்லை, அவளை பிரம்மன் தனியாக கவனம் வைத்து படைத்திருக்கிறான் என சானகியின் அழகு பற்றிய ஊராரின் பேச்சுகள் அவன் கோபத்தை மேலும் தூண்டின.

இவ்வுலகு மட்டுமல்லாது ஏழுலகத்தையும் ஆளும் இராவணனுக்கு அவள், அவனது பெருமைக்கும் கர்வத்துக்கும் ஒரு சவாலாக மாறினாள். ஆகவே அவளை சுயம்வரத்தில் பார்க்கும் வாய்ப்பைக் கூட ஜனகன் மறுத்தது, அவனை மேலும் ஆத்திரப்படச் செய்தது. அத்தனை செல்வங்களும் அத்தனை அழகுகளும் அது இராவணனுக்கே சொந்தமல்லவா? அப்படி இருக்க சீதை எப்படி என்னுடைய அரண்மணையில் இல்லாமல் இருக்கலாம் என்று அவன் மனம் துடித்தது.

அந்த நேரத்தில் அந்த மாளிகையின் மாடத்துக் கதவின் மேல் காவலனால் லேசாகத் தட்டப்படும் ஒலி கேட்டது.

” ம்ம்ம் என்ன” என்றான் உறுமலுடன் தன் கோபம் சற்றும் குறையாமல்.

” தண்டகாரண்யத்திலிருந்து தூதுவர்கள் தங்களைக் காணவந்திருக்கிறார்கள் மன்னவா” என்றான் வாயில் காவலாளி அச்சம் தொனித்தக் குரலுடன்.

” அவர்களை உள்ளே வரச்சொல்” என்றான். அந்த மண்டபத்துக்குள் நுழைந்த தூதர்கள் இருவரையும் பார்த்தான். அதில் ஒருவன் தோளில் கட்டுடன் இருந்தான். அவன் முகம் அச்சத்தில் வெளிறிப் போயிருந்தது.

” என் தூதுவர்களைத் தாக்கும் மடமை கொண்டவன் யாரவன்” என்றான் இடியென முழங்கும் குரலில். ஏற்கனவே உள்ளுக்குள் எரிந்துக் கொண்டிருந்த அவமான நெருப்பு, தூதர்கள் இருவரில் தோளில் கட்டுடன் வந்த தூதுவனைக் கண்டதும் அவனை அவமானத்தில் மேலும் மேலும் எரியச் செய்தது.

அவன் மனதில் சனகனும் சானகியும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கினார்கள். புதிய நெருப்பாக தூதர்களின் செய்தி உள்ளுக்குள் கனன்று எழத் தொடங்கியது. அவனுடைய கோபம் அனைத்தும் திரண்டு திசை மாறத் தொடங்கியது.

அவன் உள்ளம் தங்கையின் மீதுள்ள பாசத்தில் அலை பாய்ந்தது. வீட்டில் கடைசியாகப் பிறந்தக் குழந்தை என்பதால் இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகிய மூவரும் அவளின் பாதம் தரையைத் தொடாமல் தாங்கிக் கொண்டிருந்தனர். அவள் இது வேண்டும் என்று கேட்டு முடிக்கும் முன்பே அவள் கேட்டது அவளிடம் இருக்கும்படி பார்த்துக் கொண்டனர்.

அரக்கர் குலத்திலேயே மட்டுமில்லாது இவ்வுலகிலேயே இவள் போன்ற பேரழகி கிடையாது என்று சகோதரர்கள் இறுமாந்திருந்தனர். அவள் பிறந்த நேரத்திலிருந்து இராவணன் விண், பாதள உலகங்கள் அத்தனை தேசங்களையும் வென்று தன் ஆட்சிக் கொடியை பறக்கவிட்டிருந்தான். மன்னுலகத்தினரை, மானிடர்களை அவன் ஒரு பொருட்டாகவே ஏற்காதவன்.

காமவள்ளி, அவர்களின் வெற்றிச் சின்னம் ஆனாள். அவள் முகம் வாடுவதை இராவணன் என்றும் காணச் சகிக்காதவன் ஆனான். அவளைத் தன் உயிராக எண்ணினான்.

இராவணன் மண்டோதரியை மணந்த போதும் தன் தங்கையை, மகள் போல பார்த்துக் கொண்டாள் மண்டோதரி. சமயத்தில் அவர்களிருவரின் பிணைப்பு இவனை பொறாமைக் கொள்ளச் செய்திருந்தது. காமவள்ளி, இலங்கையின் இளவரசி, அந்நாட்டின் மாபெரும் கௌரவத்தின் சின்னம். அவர்களின் அந்த இணக்கமே இராவணனுக்கு மண்டோதரி மீதான அதீதக் காதலை உண்டாக்கியது. தன்னைச் சார்ந்த அத்தனைப் பெண்களிலும் மண்டோதரி மட்டுமே அவனுக்கு தேவதையாகத் தோன்றினாள்.

” என்ன நடந்தது? யார் என் தூதுவனைத் தாக்குமளவுக்கு அறிவீனம் கொண்டவன், அத்தனைத் மமதைக் கொண்ட அந்த வீணன் யார் ?” தன் சீற்றத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான் இராவணன்.

” மன்னவா, இது காலகேய தானவர் வித்யுத்ஜிவா அவர்களின் செயல், நாங்கள் யாரென அறியாமல் தாக்கியதால் ஏற்பட்டது. இதோ இவன் உயிர் அப்போதே போயிருக்கும். ஆனால் அவர் தன் மந்திரங்கள் கொண்டும் மூலிகைச் சாறுகளாலும் இவனை அரை நாழிகைக்குள் மீண்டு எழச் செய்தார்” என்றான் தூதுவனில் ஒருவன்.

இராவணன் நகைத்தான். அவன் நகைப்பில் மண்டபம் அதிர்ந்தது. அவன் மூச்சுக் காற்றும் தீயெனச் சுடும் வகையில் தீய்ந்துக் கொண்டிருந்தது. தூதுவர்கள் அந்த வெப்பத்தை உணர்ந்தார்கள்.

” எதிரியிடம் உயிர் பிச்சை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்”

” மன்னவா, நாங்கள் தூதுவர்கள், மேலும்..”

” என்ன மேலும்” இராவணனில் வலது கை இடையில் இருந்த உடைவாளை வெளியே இழுப்பதும் உள்ளே தள்ளுவதுமாக இருந்தது. அடிபட்டிருந்த தூதுவன் முகத்தில் ஏகப்பட்ட அச்சம். முகம் வெளிறிக் கிடந்தது.

” மேலும் தூது சென்றதன் செய்தியை தங்களுக்கு தெரிவிக்க எங்களுக்கு உயிர் இருந்தால் தானே வந்து சொல்ல முடியும் மன்னவா” என்றான் முதலாமவன் சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டபடி.

” ஆம் ஆம் .. அதற்கு உயிர் அவசியம் தேவை ” என்றான் அவன் குரலில் இகழ்ச்சி இழைந்தோடியபடி இராவணன்.

” தாங்கள் கட்டளையாக அறிவித்ததை, தங்களின் சகோதரிக்குச் சொன்னோம் அரசே. அவர்.. அவர்..”

” திரும்ப வர மறுத்துவிட்டாள். அதுதானே? இதைத் தான் நான் எதிர் பார்த்தேன். அவள் என்னுடைய தங்கை அல்லவா? என் பிடிவாதம் கொஞ்சம் … கொஞ்சம் என்ன கொஞ்சம் என்னை விட அதிகப் பிடிவாதக் காரி. சரி, அந்த அற்ப தானவன் என் பெயரைக் கேட்டதும் மண்டியிட்டானா இல்லையா”

தூதுவர்கள் மௌனித்தார்கள்.

” ம்ம் .. என்ன நடந்தது” கர்ஜித்தான்.

” பிரபு, இனி நான் சொல்லப் போகும் வார்த்தைகள் அவருடையவை. அவர் சொன்னதை அப்படியே சொல்கிறேன்.

” காமவள்ளி, காலகேய தானவனான வித்யுத்ஜிவாவின் மனைவி, அவள் இலங்கைக்கு வரமாட்டாள் என்று சொல்லிவிடு. பகையென்று வந்துவிட்டால் நேருக்கு நேர் சந்திக்க நானும் தயாரென்றே சொல். “

இது தான் அரசே அவர் சொல்லியனுப்பிய வார்த்தைகள். இளவரசியார் ஒரு வார்த்தை பேசவில்லை. தங்களின் ஓலை கண்டு மனமுருகி அழுது கொண்டே இருந்தார்கள்”

இராவணன் சீற்றம் எல்லை கடந்தது.

” அப்படியாச் சொன்னான் அவன்? என்னை எதிர்க்கும் துணிவு அவனுக்குண்டா? அவ்வளவு பலசாலியா அவன்..” என்று கறுவினான். அந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மாபெரும் வில்லை கோபத்துடன் சர்வ சகஜமாக எடுத்து இருகைகளால் முறித்தான்.

” என் தங்கையை அவன் மந்திரங்களால் மயக்கி தன் கட்டுக்குள் வைத்திருக்கிறான். நானே செல்கிறேன். என் தங்கையை அழைத்துக் கொண்டு அவனைக் கொன்று வருகிறேன். இந்த வில் முறிந்ததைப் போல அவனை முறித்துவிடுகிறேன்” என கர்ஜித்தான்.

” என் தங்கை, என்னிடம் அளவற்ற அன்புடையவள். என்னைக் கண்டு என்னுடன் வராமல் போய்விடுவாளா என்ன? எங்கள் பாசப்பிணைப்பிற்கு முன் அவன் மந்திரம் என்ன செய்யும்” என்று சொல்லிக்கொண்டே அடிபட்ட சிங்கத்தைப் போல இங்கும் அங்குமாக அலைந்தான். இரு கைகளையும் ஓங்கி அறைந்துக் கொண்டான். சுவற்றில் சிற்பிகளால் வடிவமைக்கப்பட்ட யாளியின் சிலையை ஓங்கி குத்த, கருங்கல்லில் செய்யப்பட்ட அந்தச் சிலை துகள் துகளாக சிதறி விழுந்தது.

பின் சற்றே சுயநிலைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டான். தூதர்களை அனுப்பிவிட்டு யோசித்தான். அன்றிரவே தன் மனைவி மண்டொதரியை அழைத்துக் கொண்டு தண்டகாரண்யத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினான். மண்டோதரியின் இருப்பு தன் தங்கையின் மன மாற்றத்துக்கு கட்டாயம் உதவும் என நம்பினான். காமவள்ளி கட்டாயம் தன்னுடன் வந்துவிடுவாள் என்று உறுதியாக தன் பயணத்தைத் தொடங்கினான்.

ஆனால் விதி அவனை முந்திச் சென்றது.

Series Navigation<< அசுரவதம் : 5 – புதுவரவுஅசுரவதம் -7: வழிநடத்தும் வல்வினை >>

Author

You may also like

1 comment

சாந்தி மாரியப்பன் August 20, 2025 - 12:19 pm

சிறப்பாகச்செல்கிறது தொடர்.

அருமை.

Reply

Leave a Reply to சாந்தி மாரியப்பன் Cancel Reply