இலங்கையின் தங்க மாளிகைகள் மாலையின் சூரிய ஒளியில் செந்தீப் பிழம்பாக மின்னின. கடலின் அலைகள், இலங்கையின் கரையை மெல்லத் தழுவியதும் அதனால் எழுந்த ஓசையும் ‘சீதை, சீதை’ என ஒலிப்பதாகவே இருந்தது இராவணனுக்கு. தழுவும் அலைகள், அவை சீதையின் கரங்களா என்று உற்று உற்று. நோக்கினான்.
அரண்மனையின் தனி மண்டபத்தில், சாளரத்தின் வாயிலாகக் கடலை நோக்கி அமர்ந்திருந்த இராவணனின் இதயம், சீதையின் அழகை எண்ணி எண்ணி, காமத் தீயால் முற்றிலும் வெந்து போகும் அளவுக்கு அனல் சூழ்ந்திருந்தது.
சூர்ப்பனகையின் வர்ணனைகள் கொண்டு உருவாக்கப்பட்ட சீதையின் உருவத்தை அவன் மனதால் காணத் தொடங்கினான். அவள் தாமரைக் கண்களும், இரவின் இருளைப் போன்ற கூந்தலும், பவளச் சிலையைப் போன்ற உடலும் என, அவன் சூர்ப்பனகையின் வர்ணனையின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கோர்த்து முழுமையாக்க முயன்றான்.
அவனது பத்துத் தலைகளும் அவள் ஒருத்தியை முழுமையாக உருவகித்துக் கனவில் காண முயன்றன. ஆனால், ஒவ்வொன்றும் சீதையின் ஒவ்வொரு அவயவத்தின் அழகிலேயே ஆழ்ந்து கிடந்தன. அவனது இருபது தோள்களும் அவளை மட்டுமே தழுவத் துடித்தன.
அவன் தன் அதிகார போதையும் அகங்கார போதையும் உச்சத்தை எட்ட, தனக்கே உரிய அதீத காம வேட்கை அவன் அறிவை மறைத்தது. அவனுக்கு முன்பு இராமனின் வீரமோ, சீதையின் கற்போ, அறத்தின் நியதியோ எதுவும் யோசிக்கத் தோன்றவில்லை. அவன் மனக் கண்ணால் கண்டதெல்லாம் சூர்ப்பனகை வர்ணித்ததால் உருவாகியிருக்கும் அந்தக் கனவுலோகப் பெண்ணின் மாய உருவமே.
அவன் பஞ்சு மெத்தையில் அமர்ந்திருந்தாலும், அவனது மனம் பஞ்சவடியில் பறந்துகொண்டிருந்தது.
இரவின் மென் காற்றும், நிலவின் ஒளியும் வீரம் மிகுந்த அவனது மார்பில் உண்டான ‘காம நோய்’ என்னும் புண்ணில் தீக்கங்குகளாக ஆழமாகப் பதிந்தன. அவனது மாபெரும் அதிகாரமும், உலகை ஆளும் வல்லமையும் திடமும் கொண்ட அவன் உள்ளம், ஒரு நாடோடி மனிதனின் மனைவியின் மீது கொண்ட ஆசையால் நிர்மூலமானது.
அவன் தூக்கமின்றித் தவித்தான்; உண்ணாமல் கழிந்த சில இரவுகளிலேயே மெலிந்தான். காமம் அவனது பத்துத் தலைகளுக்குள்ளும் பிரிந்து நின்று, அசுரத்தனமாகப் பேய்களைப் போல நடனமாடியது.
அவன் கண்கள் காமத்தில் செம்பிழம்பாக மாறிக் கிடக்க, இரவின் குளிரைத் தாண்டியும் காமத்தின் வெப்பம் அவன் உடலை வியர்வையால் நனைத்தது, அவன் இதயம் ஒரு கதியில் இல்லாமல் சீரற்றுத் துடித்தது.
“சீதை… என்னுடையவள் ஆக வேண்டும். நான் அவளை இலங்கையின் ராணி ஆக்க வேண்டும்!” என்று அவன் முடிவெடுத்தான்.
கர தூஷணர்களின் பதினான்காயிரம் படைகளை ஒரு முகூர்த்தத்தில் அழித்த வலிமை அவன் மனதில் ஒரு சிறு தயக்கத்தையும் உண்டாக்கவில்லை. அப்படி வந்தாலும், அவன் ஆணவத்தால் அதை நசுக்கி இருப்பான். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவனை மேலும் மேலும் வேதனையில் தள்ளியது.
“நேரடியாக எதிர்த்தால், காலதாமதம் ஆகும். அவர்கள் மானிடர்களே ஆனாலும் கர தூஷணர்களை அழித்தவர்கள். அவர்களுடன் போரிட்டு நேர விரயம் செய்வது வீண். மானிடர்களிடம் போர் புரிவது என் வீரத்துக்கு இழுக்கும் கூட ஆகவே, மாயத்தால் சீதையைப் பறிப்பதே கால விரயத்தைத் தடுக்கும்” என்று தனக்குள்ளே அவன் பேசி முடிவு செய்தான்.
உடனே, தன் எண்ணத்தை நிறைவேற்ற, மாயவித்தையில் வல்லவனான தன் மாமன் மாரீசனை, அந்த அதிகாலைப் பொழுதிலேயே அணுகத் தீர்மானித்தான். உடனே சற்றும் தாமதிக்காமல் செயல்படுத்தவும் ஆரம்பித்தான்.
இராவணன், விரைந்து தண்டகாரண்யத்தின் அருகில், கடற்கரையோரக் காட்டில் துறவு பூண்டு வாழ்ந்து வந்த மாரீசனின் ஆசிரமத்தை அடைந்தான். அந்த ஆசிரமம், பல விதமானப் பூஞ்சோலைகள் சூழ்ந்து, மரங்களின் குளிர் நிழலில், கடல் அலைகளின் மென்மையான ஓசையுடன் அமைதியாக இருந்தது.
கதிரவனின் ஒளி தெரிய இன்னும் ஒரு நாழிகை நேரம் இருந்த அந்த நேரத்தில் அத்தீவை அடைந்தான் இராவணன்.
அதிகாலைப் பறவைகள், அவனின் வருகையால் உண்டான அச்சக் கிறீச்சிடல் மூலம் இராவணன் வருகையைத் தெரிவித்தன.
அங்கு மாரீசன், மரவுரி அணிந்து தன் ஆசிரமத்தின் பக்கத்தில் இருந்த மரத்தின் கீழ் கண்களை மூடி அமர்ந்திருந்தவன், இராவணன் வருவதை உணர்ந்து எழுந்து வணங்கினான். வணங்கும் போது, இராவணன் மீதுள்ள அச்சத்தால் அவன் உடல் ஒரு சிறு நடுக்கத்துடன் அசைந்தது.
இராவணன் அதைக் கவனித்தான். கர்வம் மிகுந்து அவன் மனம் மகிழ்வில் குளிர்ந்தது.
“மாமனே, மாரீசா, உன் மாயவித்தை உலகறிந்தது. உன்னிடம் நான் உதவி கேட்டு வந்திருக்கிறேன். இப்போது எனக்கு உன் உதவி வேண்டும். உன்னை விட்டால் எபக்கு உதவும் தகுதி யாருக்கு உண்டு சொல்” என்று நைச்சியமாகப் பேச ஆரம்பித்தான்.
சீதையைப் பற்றியும் இராமனைப் பற்றியும் சூர்ப்பனகையைப் பற்றியும் அவன் சொல்லி முடித்தான். இராமன் பெயரைக் கேட்டதும் மாரீசன் உடல் அச்சத்தில் வேகமாக குலுங்கி அடங்கியதை அவன் கவனிக்கத் தவறவில்லை.
“மாமனே, என் மாமனே, நீ இப்போதே ஒரு தங்க மானாக உருமாறி, இராமனின் குடில் முன் செல்ல வேண்டும். உன் உடல் பொற்காசுகள் பதிக்கப் பட்ட மானைப் போல மின்ன வேண்டும்; உன் கொம்புகள் மாணிக்கங்களாக ஒளிர வேண்டும். அதன் மூலம் சீதையின் ஆசையைத் தூண்டி, அவள் மூலமாக இராம லக்குமணரை உன்னைப் பின் தொடரச் செய். அவர்கள் குடிலை விட்டு நீங்கியதும், நான் சீதையைக் கவர்வேன்” என்று இராவணன் தன் வஞ்சகத் திட்டத்தை விவரித்தான்.
மாரீசன் அதீத அச்சத்துடன் “இராவணா, இராமனை எதிர்ப்பது நெருப்போடு விளையாடுவது! நான் அவனை இரு முறை சந்தித்து, அவனது வீரத்தின் மகிமையை, பயங்கரத்தை உணர்ந்தவன்!” என்றான்.
அவன் குரல் நடுக்கத்துடன் ஒலித்தது.
“கேள் இராவணா, முதல் முறை விசுவாமித்திரரின் யாகத்தை அழிக்கச் சென்ற என் தாய் தாடகையை அவன் கொன்றான். நானும் சுபாகுவும் பழி வாங்க அவனை அழிக்கச் சென்றோம்.
தெரியுமா? அன்று இராமன் சிறுவன் தான். ஆனாலும் அவன் அம்பால் என் அண்ணன் சுபாகு மாண்டான். அதிர்ஷ்டவசமாகப் புறமுதுகிட்டு ஓடியதால் நான் உயிர் தப்பினேன். அன்று முதல், ‘ரா’ என்ற ஒலி கேட்டாலே, என் இதயம் உறைந்துவிடும் அளவிற்கு அச்சம் என்னைச் சூழ்ந்தது” என்று சொல்கையில் அவன் கண்கள் கடல் அலைகளைப் போலக் கலங்கின.
“இரண்டாம் முறை, என் நண்பர்கள் தூண்டுதலால் தைரியம் வரப்பெற்று தண்டகாரண்யத்தில், பழிவாங்கும் வெறியுடன், தீப்பொறிக் கொம்புகளுடன் ஒரு மிருகமாக மாறி என் நண்பர்கள் உதவியோடு இராமனைத் தாக்கினேன். ஆனால், இராமன் என் தோழர்களை அழித்து, என்னை அழிக்காமல் விட்டுவிட்டான். அவனிடம் புறமுதுகிட்டவர்களை அழிப்பது அவன் தர்மமில்லையாம். அதனால் அவன் அம்பு என் பக்கத்தில் பாய்ந்து, ஒரு எச்சரிக்கையாக மண்ணைத் துளைத்துச் சென்றது. அவனது அந்த இரக்கமே என்னை மாற்றியது. நான் அசுர வாழ்க்கையைத் துறந்து, இதோ இந்தத் தவ வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தேன்!” என்று மாரீசன் கூறினான்.
அப்படி அவன் சொல்லும் போதே, அவன் தலை வணக்கத்துடன் பஞ்சவடி இருக்கும் திசை நோக்கித் தாழ்ந்தது.
“இராவணா! இராமன் ஒரு மனிதன் அல்ல, தர்மத்தின் வடிவம், மாவீரன். அவனிடம் இருந்து நீ சீதையைப் பறிக்க முயன்றால், அவனால் உன் இலங்கையோடு நீயும் அழிவாய். இந்தக் காமத்தைத் துறந்து, உன் சாம்ராஜ்யத்தையும் உன்னையும் மக்களையும் காப்பாற்றிக்கொள்” என்று மாரீசன் கைகூப்பி அச்சத்துடன் எச்சரித்தான். அவன் கண்கள் இராவணனைக் கெஞ்சின.
கேட்டதும் இராவணன் சினத்தோடு ஓங்கி நிலத்தை மிதித்தான். அந்த வேகத்தில் அருகில் இருந்த அந்த ஆசிரமம் சலசலத்தது. அடக்க முடியாத சினத்துடன் கண்களில் தீப்பொறிப் பறக்கச் சொன்னான்.
“மாரீசா, உன் பயம் உன்னைக் கோழையாக்கிவிட்டதா? நான் யார் என்பதை மறந்தாயா? அகில உலகங்களும் கண்டு அச்சப்படும் இலங்கையின் மன்னன் நான். அந்த இராமன் ஒரு சாதாரண மனிதன், அவனை நான் அழிப்பேன். ஆனால், அது காலதாமதத்தை உண்டாக்கும் என்பதால் தான் உன் உதவியை நாடி வந்தேன்.
நீ என் கட்டளையை மீறினால், இந்த நொடியில் உன் உயிரைப் பறிப்பேன். இறுதி முடிவு உன்கையில்!” என்று மிரட்டினான். தன் வாளை உயர்த்தி, மாரீசனின் தோளில் தடவிக் கொடுத்தான்.
அவன் கண்களில் கொலைவெறி தாண்டவமாடியது.
மாரீசன், இராவணனின் மிரட்டலால் ஒரு கணம் மனம் உடைந்தான். ஆனாலும், அவன் மனதில் ஒரு தெளிவு பிறந்தது.
“எப்படியும் மரணம் நிச்சயம். இந்த இராவணனின் கையால் மரணம், வெறும் அழிவு. ஆனால், இராமனின் கையால் மரணம், மோட்சம். சீதையைக் கவர்வதற்கு நேரம் தராமல் உடனே மாண்டுவிட்டால், சீதையைக் காப்பாற்றலாம், கூடவே இராவணனின் சூழ்ச்சியையும் முறியடிக்கலாம்” என்று தெளிந்து அவன் உறுதி பூண்டான்.
அவன் மாய மானாக உருபெற்று பஞ்சவடியை நோக்கிச் சென்றான்.
தன் திட்டம் செயலாவதைக் கண்டு அவன் சென்ற திசையை மகிழ்வோடு பார்த்துக் கொண்டிருந்த இராவணனின் தோளை ஒரு கை பற்றியது.
“உன் எண்ணம் பலிக்காது இராவணா” என்றது அவன் பின்னிருந்து வந்த பெண்ணின் குரல்.
1 comment
அழிவை நோக்கிச்செல்பவனின் காதுகளில் அறிவுரைகள் ஏறாதுதான். விறுவிறுப்பாகச் செல்கிறது தொடர்.