Home நாவல்அசுரவதம் : 5 – புதுவரவு

அசுரவதம் : 5 – புதுவரவு

by Iyappan Krishnan
1 comment
This entry is part 5 of 5 in the series அசுரவதம்

தண்டகரண்யத்தின் அடர்ந்த பசுமையில், காமவள்ளியும் வித்யுத்ஜிவாவும் தங்களுக்கென ஒரு புதிய உலகத்தை உருவாக்கியிருந்தனர். வனத்தின் மரங்கள் அவர்களின் தனிமையௌ மதித்து இலைகள் கொண்டு அந்த பிராந்தியத்தையே மூடி மறைத்து பாதுகாத்தன.

காமவள்ளியின் வயிறு லேசாக மேடிட்டிருந்தது. தாய்மையின் பேரொளி அவள் முகத்திலும், தாய்மைக்கே உரிய அதீத அழகு அவளை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. அவள் முகத்தில், புலர்ந்த விடியலின் ஒளி பரவியிருந்தது; கண்களில், கருவின் ரகசியத்தை சுமக்கும் மகிழ்ச்சி மின்னியது.

அவளிடம் தாய்மையின் ஆரம்ப பூரிப்பு மெல்ல மெல்ல மெல்ல உயிர்த்தெழுந்து அவளை பேரழகிகளுக்கெல்லாம் பேரழகியாக மாற்றிக் காட்டியது. வனத்து பறவைகளின் கீதம், அவர்களின் இருப்புக்கு இசையாக ஒலிக்கிறது. அவள் மெளனத்தில் கருவின் முதல் அசைவு வர இருக்கும் அந்த நொடிகளை எண்ணி குதூகலித்துக் கொண்டிருக்கிறாள்.

வித்யுத்ஜிவா அவளருகில் ஒரு பாறையில் அமர்ந்து, தன் தோளில் அவளை மென்மையாக சாய்த்திருந்தான். அவன் கைகள், அவளை ஒரு புனிதமான பொக்கிஷத்தைப் போல பாதுகாப்பாக அணைத்திருந்தன. அவன் கண்களில், காமவள்ளி வனத்தின் இளம் தெய்வமாகத் தெரிந்தாள்.

அவளது ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு புன்னகையும், அவனுக்கு வாழ்வின் முழுமையை உணர்த்தியது. தண்டகரண்யம் அவர்களின் வீடாக மாறியிருந்தது. அவர்கள் தங்கள் பழைய நாட்டை மறந்தனர், சுற்றத்தை மறந்தனர், உலகின் எல்லா பந்தங்களையும் வனத்தின் அமைதியில் கரைத்து, தங்களுக்கென ஒரு புதிய சொர்க்கத்தை உருவாக்கியிருந்தனர்.

தாய்மை அடைந்தப் பெண்கள் தெய்வத்திற்கு நிகரானவர்கள் என்றும், காமவள்ளி அந்த அம்சத்தை முழுவதும் அடைந்திருக்கிறாள் என பூரித்து நின்றான்.

“காமவள்ளி, நீ பேரழகி,” என்றான் வித்யுத்ஜிவா, அவன் குரலில் ஒரு கனிவும், ஆழ்ந்த பிரமிப்பும் தொனித்தது. காமவள்ளி அவனை உற்று நோக்கினாள். அவன் முகத்தில் அத்தனைக் கருணையும், பெருமிதமும் அன்பும் நிரம்பி வழிந்தன.

” ஆச்சரியமான விஷயந்தான்?”

” இதிலென்ன ஆச்சரியம், நீ பேரழகி என்பது ஆச்சரியமா?”

“ அது இல்லை, இத்தனை நாட்களாக, இந்த வனத்தில் உங்களுடன் அலைந்து திரிந்தேன், இத்தனை நாள் தெரியாத அழகு இப்போது உங்கள் கண்களுக்கு தெரிந்துவிட்டது ஆச்சரியந்தான்”

“அது… அப்படியல்ல என் தோழியே, நீ என்றுமே பேரழகி தான். என் கண்கள் என்றும் கண்டிராத, இனியும் காண முடியாத அழகி நீ. உனக்குத் தெரியுமா, உலகமே மிதிலையின் மகளான சீதையைப் பேரழகி என்று போற்றிக் கொண்டாடுகிறது. அந்தப் பெண்ணை நானும் கண்டிருக்கிறேன். ஆனால் என் மனதில் உன் அழகுக்கு ஈடான ஒருத்தரை இதுவரைக் கண்டதில்லை. நீ என் பொக்கிஷம்” அவன் கண்கள் உணர்ச்சியில் திளைத்திருந்தன.

கண்கள்.மயங்கிய நிலையில் சொன்னான்

“நீ என் உயிர், நீ என் ஒளி, நீ நான் உச்சரிக்கும் மந்திரம், நீ என் இசை” என்றான். அவன் கைகள் அவளை இறுக்கி அணைக்கத் தொடங்கியது.

” போதும் போதும் .. யார் கண்ணாவது பட்டுவிடப்போகிறது”

“இங்கே யார் இருக்கிறார்கள் நம்மைத் தவிர்த்து தேவி”

” வானத்தில் தேவர்கள்”

“இந்த அடர்ந்த மரங்கள் தாண்டி அவர்களால் பார்க்க முடியாது, இங்கே நாம், நாம் மட்டுமே” என்று சொன்னவன் சட்டென்று தன் கண்களை மூடினான். சருகுகள் மிதிபடும் ஓசை சற்றுத் தொலைவில் கேட்டது. அவன் கை தானாகவே இடையில் இருந்த குறுவாளைப் பற்றியது.

“இப்போது தானே சொன்னீர்கள், இது யாரும் வர முடியாத இடம் என்று, அது ஏதோ விலங்காக இருக்கக்கூடும். பாருங்கள் அங்கே மான்கள் ஓடுகின்றன” என்று கைகாட்டினாள்.

அவள் கை காட்டிய பக்கத்திறு நேர் எதிர் திசையில் இருந்து அவன் கேட்ட ஓசை வந்திருந்தது. அந்த திசை நோக்கி அவன் குறுவாள் வேகமாகப் பறந்தது.

ஆ என்னும் ஓசையோடு யாரோ விழுந்த ஓசை கேட்க, கூடவே ” தாக்க வேண்டாம் நாங்கள் இலங்கை வேந்தனின் தூதர்கள்” என்ற குரலும் வந்தது.

இருவரும் அந்தக் குரல் வந்த திசை நோக்கி நடந்தார்கள். ஒருவன் இடது மார்பில் தோளின் அருகில் குறுவாள் பாய்ந்திருக்க அவன் தரையில் வீழ்ந்துக் கிடந்தான். பக்கத்தில் அந்த இலங்கையின் இன்னொரு தூதுவன் அவர்கள் முன் மிகுந்த மரியாதையுடன் தலை தாழ்த்தி மண்டியிட்டு நின்றான்.

” யார் நீங்கள், நாங்கள் இருக்குமிடம் எப்படி அறிந்தீர்கள்” என்று கோபமாக வினவினான் வித்யுத்ஜிவா.

” இளவரசியாருக்கு, இலங்கை வேந்தனின் கட்டளைச் செய்தியை அறிவிக்க வேண்டி வந்திருக்கிதோம். இளவரசியார் அடிக்கடிச் செல்லும் பகுதி என்று இங்கிருக்கும் நம் குடிமக்கள் சொல்ல இங்கே தேடிக் கொண்டு வந்தோம்”

அவள் சற்று நெகிழ்ந்தாள். அவள் மீது அவளுடைய அண்ணன் கொண்டிருக்கும் அலாதி அன்பை அவள் அறிவாள்.

” அது என் அண்ணனின் வாய் மொழிச் செய்தியா இல்லை ஓலையா தூதுவனே?” என்றாள் காமவள்ளி.

” ஓலை தான் இளவரசி..”

” பின் அது கட்டளைச் செய்தி என்று உனக்கெப்படித் தெரிந்தது. ஓலையைப் படித்தாயா” என்ற அவளின் கண்களில் கொலை வெறித் தாண்டவமாடியது.

” இலங்கை வேந்தனின் ஓலையை பிரித்து படிப்பதும், எமனிடம் சென்று என்னை ஏற்றுக் கொள் என்று நிற்பது ஒன்று இளவரசி” என்றான் நிதானமாக.

” அப்படியானால்.. பின் எப்படி” என்றாள் இன்னுன் குறுவாளில் இருந்து கையை நீக்காமலும் குரலில் கொலை வெறியைக் கூட்டியபடியும் கேட்டாள்.

” மன்னர் சொல்லி அனுப்பினார் இளவரசி, இது கட்டளைச் செய்தி. விரைவாக கொண்டு செல் என்று”

சொல்லியபடி ஒரு பொற்குழலை நீட்டினான். அதன் இரு புறமும் அரக்கு மெழுகினால் மூடப்பட்டு இலங்கையின் இலட்சினை அழுந்தப் பதிக்கப்பட்டிருந்தது. காமவள்ளி அதை கைகளில் வாங்கினாள். இலங்கை திசைன்நோக்கித் தலை தாழ்த்தி வணங்கி அந்தக் குழலை கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

மெழுகினை உடைத்து ஓலையை எடுத்துப் படித்தாள். அலாதி ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்த அவளுக்கு உலகமே சுழலத் தொடங்கியது. ஒரு மரத்தின் கீழ் சாய்ந்து அமர்ந்தாள். அவள் கண்கள் ஆறாக, விசும்பினாள்.

” என்ன செய்தி காமவள்ளி, உன் அண்ணன் நம்மை இலங்கைக்கு அழைத்திருக்கிறாரா? தன் மைத்துனனைப் பார்க்க வேண்டுமா அவருக்கு” என்றான்.

அவள் ஏதும் பேசாது ஓலையை அவனிடம் நீட்டினாள். அவன் படித்தான்.

” இளவரசி, தங்களின் பதிலேதும் உண்டா அரசருக்கு? இந்த இன்னொரு தூதுவன் மாண்டதை நான் என்ன என்று அவரிடம் சொல்லுவது”

பேசும் நிலையில் அவளில்லை.

” காலகேய தானவர்கள் வீரத்தில் குறைந்தவர்கள் இல்லை. எந்தப் பகையையுன் எதிர்த்து நிற்கும் வலிமைப் படைத்தவன் நன் என்பதை உன் மன்னனிடம் சொல்”

என்றான் வித்யுத்ஜிவா நிதானமாகவும் உறுதி மிகுந்தக் குரலிலும்.

” மேலும் உன் நண்பன் இறக்கவில்லை. சற்றுப் பொறு” என்று கூறிவிட்டு, குத்தி நின்ற கத்தியை நீக்கி, சில பச்சிலைகளைப் பறித்து கசக்கி அழுத்தி, சில சொட்டுகளை அவன் வாயில் திணித்தபடி சொன்னான்.

” இன்னும் அரை நாழிகையில் இவன் எழுந்து நடப்பான். ஒரு வாரம் மட்டும் இடது தோளுக்கு அதிகம் வேலை இல்லாதபடி பார்த்துக்கொள்.”

என்று சொல்லிவிட்டு அந்த ஓலையைக் கையிலெடுத்து மீண்டும் உரக்கப் படித்தான்.

” காமவள்ளி, நீ நம் குலப் பகைவர்களான காலகேய தானவர் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவனுடன் மணம் முடித்திருப்பதை ஒற்றர்கள் அறிவித்தனர். இது அரச குற்றமாகும். உடனடியாக அவனை விடுத்து இலங்கை வந்து சேர்ந்துவிடு. இல்லையேல் அந்தக் கோழையை என்னுடன் நேருக்கு நேர் போரிட்டு வெல்லச் சொல். ஒரு நாட்டின் இளவரசியை மயக்கி, பணயமாக்கி அந்த நாட்டுக்குள் நுழைவது பேடித்தனம். அதை நான் அனுமதிக்க மாட்டேன். இது உலகாதிபதியான இராவணன் கட்டளை

“கேட்டாயா காமவள்ளி, உன் அண்ணன் சொல்லுவதை? நான் உன்னை மயக்கி வைத்துள்ளேனாம். உன்னைப் பணயமாக வைத்து இலங்கையை அடையப் போகிறேனாம். எத்தனை அறிவிலித்தனம் இது ” கோபத்தில் இரைந்தான், காடதிர நகைத்தான்.

” அத்தனைக் கேவலமானவன் என்றா நினைத்துவிட்டார் இலங்கையின் அதிபதி… “/

” அப்படிப் பேச வேண்டாம். என் அண்ணனுக்கு உங்களைப் பற்றித் தெரியாது, தங்களின் நற்பண்புகளை நான் எடுத்துச் சொல்கிறேன். அவர் சம்மதிப்பார்” என்று அவன் கைகளைப் பற்றி அழுதாள்.

” உன் அண்ணனைப் பற்றி உன்னை விட இந்த உலகம் நன்கு அறியும் காமவள்ளி”

” எனக்காக எதுவும் செய்யக்கூடியவர்கள் என் மூன்று அண்ணன்களும்”

” பகையை மீறியா? தானவர்களுக்கும் அரக்கர்களுக்கும் நெடுநாள் பகை காமவள்ளி, நாங்கள் தேவர்களுக்கு இணையான அறிவுக் கூர்மையும், உங்கள் அரக்கர் கூட்டத்திற்கு இணையான வலிமையும் கொண்ட தானவர்கள். அவன் எம் குலத்தைனதற்காகவே வெறுக்கிறான். அவன் அதிகாரத்திற்கு இணையான ஒரு அதிகாரத்தை அவன் என்றுமே ஏற்றதில்லை. ஏன் தேவர்களுமே எங்களை வெறுக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் போட்டி என வந்துவிடுவோம் என்று”

அவள் மௌனித்திருந்தாள். அவள் அறிந்த விஷயம் தானே அது.

” மேலும் தானவர்கள் தங்கள் அறிவையும் ஆற்றலையும் பெரிதாக எண்ணிப் போற்றுவதில்லை, நாங்கள் பகை வேண்டாம் என்றே ஒதுங்கி வாழ்கிறோம். அப்படியும் கூட இப்படித்தான் பகை தேடி வந்து நிற்கிறது”

வீழ்ந்திருந்த தூதுவன் முனக ஆரம்பித்தான்.

” பார் உன் நண்பன் பிழைத்துக் கொண்டான். அவனை அழைத்துக் கொண்டு போ.” என்றான் அமர்ந்திருந்த இன்னொரு தூதுவனிடம்.

” ஐயா, இளவரசியார் தரும் மறுமொழியாக எதைக் கொண்டு செல்வது”

” அவள் காலகேய தானவனான வித்யுத்ஜிவாவின் மனைவி, அவள் இலங்கைக்கு வரமாட்டாள் என்று சொல்லிவிடு. நேருக்கு நேர் நானும் தயாரென்றே சொல்”.
என்றான் காலகேய தானவன்.

தூதர்கள் அவ்விடம் இருந்து நகர்ந்ததும் அழுதுக் கொண்டிருந்தவளிடம் சொன்னான்

“நீ என் உயிர், நீ என் ஒளி, நீ நான் உச்சரிக்கும் மந்திரம், நீ என் இசை” என்றான் மிகுந்த உணர்ச்சிகளுடன்.

கூடவே அவள் இருகைகளைப் பிடித்து அழுத்தியவாறு இலக்கற்று எங்கோ பார்த்துக் கொண்டே சொன்னான்.

” விதி வலியது காமவள்ளி..”

விம்மலுடன் சொன்னாள் காமவள்ளி.

” இல்லை என் தோழனே, விதி கொடியது”

Series Navigation<< அசுரவதம் : 4 – மாயமான மாரீசன்

Author

You may also like

1 comment

சாந்தி மாரியப்பன் August 8, 2025 - 8:03 pm

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆவலைத்தூண்டுகிறது கதையின் ஓட்டம். அருமை..

Reply

Leave a Comment