Home நாவல்அசுரவதம் : 9 – வஞ்சின வஞ்சி.

அசுரவதம் : 9 – வஞ்சின வஞ்சி.

by Iyappan Krishnan
1 comment
This entry is part 9 of 12 in the series அசுரவதம்

ண்டகாரண்யத்தின் அடர்ந்த காடு, நிலவொளியில் குளித்து, ஒரு அசாத்தியமான மௌனத்தில் உறைந்திருந்தது.

​கோதாவரி நதியின் அலைகள், பௌர்ணமி நிலவின் ஒளியில் வெள்ளிப் பளபளப்பாய் மின்ன, கரையோர மூங்கில் மரங்களின் நிழல்களை அலைகளில் நடனமாடச் செய்தன. வழக்கமாக இந்த இயற்கை எழில் காமவள்ளிக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கும்—அவள் கணவன் வித்யுத்ஜிவா உயிரோடு இருந்திருந்தால். ஆனால் இப்போது, மரங்களின் ஆடும் நிழல்கள் அவளுக்கு ஏதோ பிசாசுகள் தன்னைக் குறித்து அலைவது போல வெறுப்பையே அளித்தன.

​காட்டின் பறவைகள், இரவின் அமைதியில் கூடுகளில் அடங்க, காற்று மெல்ல இலைகளை அசைத்தது, அது அவளுக்கான ஒரு துக்கப் பாடலை முணுமுணுத்தது போலிருந்தது.

​அவள் தன் வனப்பைக் குறித்துக் கவலையற்று, தன் நிலையை உணராதவள் போல வாழ்ந்திருந்தாள். அவளைக் காண்போர், இவள் அழகின் மீது கவனம் செலுத்துகிறாளா என வினவும் வண்ணம் அவள் அழகு நிலைகுலைந்திருந்தது. அவள் தன் நகங்களைக் கூட நறுக்காமல் விட்டதால், அவை பெரிதாக வளர்ந்து, விரல்களில் முளைத்த முறம் போல் காட்சியளித்தன. இதனாலேயே, எல்லோரும் அவளை சூர்ப்பனகை என்று அழைக்கத் தொடங்கினார்கள். அவளுக்கோ எதுவும் பொருட்டாக இல்லை.

​இந்த இயற்கையின் அரவணைப்பில், காமவள்ளி தன் இரண்டு வயது மகன் சம்புகனை மடியில் தாங்கி, வித்யுத்ஜிவாவின் நினைவுகளை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்தாள்.

​சம்புகனின் கண்களும், அவனது அசைவுகளும் அவன் தந்தையை அப்படியே பிரதிபலித்தன. பழிவாங்கும் நினைவை அவள் விட்டுவிட நினைத்தாலும், இவனுடைய அச்சு அசலான செயல்கள் வித்யுத்ஜிவாவை நினைவூட்டி அவளை நிலைகுலையச் செய்தன.

​மேலும், யாரும் சொல்லித் தராமலே, சம்புகன் காலகேய மந்திரங்களை உச்சரித்தான். அவனது சிறு விரல்கள், காற்றில் மந்திரங்களை வரைந்தன. அவனது முணுமுணுப்பு, கோதாவரியின் அலைகளை ஒரு திரையைப் போல மேலெழுப்பி பின் வீழச் செய்தது.

​”அம்மா… அப்பா இன்னும் கொஞ்சம் நாள் இருந்திருக்கலாம் இல்லையா?” என்றான் சம்புகன்.

​மனமுடைந்து கதறினாள் காமவள்ளி.

​”சம்புகா, நீ என் உயிர், என் நம்பிக்கை. உன் தந்தையைக் கொன்றவனை, என் அண்ணன் இராவணனை, உன் கைகளால் அழிப்பாய், அதை நான் பார்ப்பேன்!” என்று காமவள்ளி ஆவேசத்துடன் கூறினாள்.

​அவள் குரல், கோதாவரியின் அலைகளுடன் கலந்து, காட்டின் இருளில் அடர்ந்துப் பரவியது. இரவுகளில், நிலவின் வெள்ளி ஒளியில், அவள் சம்புகனுக்கு வித்யுத்ஜிவாவின் வீரத்தையும், இராவணனின் கொடூரமான ஆணவத்தையும் கதைகளாகச் சொன்னாள்.

​”உன் தந்தை ஒரு வீரன். அவனை வஞ்சகமாகப் பலிகொண்டவன் உன் மாமன். அவனது ஆணவம் இந்த உலகையே அழிக்கும். அவன் அழிய வேண்டும், அது உன்னால் மட்டுமே முடியும்!” என்று கூறினாள். அவள் கண்களில் கண்ணீரும் கோபமும் ஒருங்கே மின்னின.

​காட்டின் சாட்சி மரங்கள், அவளது வார்த்தைகளைக் கேட்டு, மெல்ல அசைந்து, அவளது துக்கத்தைப் பகிர்ந்து கொண்டன.

​ஒரு நாள், காமவள்ளி சம்புகனை, பிரம்மனை நோக்கி கடுமையான தவம் செய்ய அறிவுறுத்தினாள். கோதாவரியின் கரையில், தர்ப்பைப் புல் அடர்ந்த ஒரு புனிதமான இடத்தில், மூங்கில் மரங்களின் நிழலில், அவர்கள் மௌனமாக அமர்ந்தனர். தர்ப்பைப் புற்கள், நிலவொளியில் வெளிர் நிறத்தில் மின்னின, காற்றில் அசைந்து உயர்ந்து வளர்ந்து ஒரு கவசமாக நின்றன.

​காமவள்ளி, தன் மகனுக்கு வழிகாட்டி, “சம்புகா, உன் தந்தையின் ஆன்மா இந்தக் காட்டில் உன்னுடன் இருக்கிறது. பிரம்மனின் ஆசியால், நாம் இராவணனை அழிப்போம்,” என்று கூறினாள். அவளது குரல் இறுகி வரண்டிருந்தது.

​பௌர்ணமி நிலவு உதிக்கும் வேளையில், அந்த இடம் ஒரு தெய்வீக மௌனத்தில் ஆழ்ந்தது. நிலவு, வானில் ஒரு வெள்ளி வட்டமாக மிளிர்ந்து, கோதாவரியை ஒளிரச் செய்தது. பறவைகள் அமைதியாகின, மூங்கில் மரங்கள் காற்றில் புலம்புவதை நிறுத்தின.

​சம்புகன், தன் சிறு உடலை தர்ப்பைப் புல் மீது அமரவைத்து, கண்களை மூடி, தவத்தில் ஆழ்ந்தான். அவனது மந்திரங்கள் நிதானமாய், தெளிவாய், அவன் தந்தையைப் போலவே தீர்க்கமாய் இருந்தன.

​காமவள்ளி, அருகில் நின்று, தன் மகனின் தவத்தை கண்ணீருடன் பார்த்தாள். அவள் இதயத்தில் நம்பிக்கையும் அச்சமும் கலந்தன.

​திடீரென, வானில் ஒரு அசரீரி ஒலித்தது, காட்டின் மௌனத்தை உடைத்து, “சம்புகா, உன் தவம் வெற்றியடையும் தருணம். இந்தப் பௌர்ணமியில், ஒரு தெய்வீகக் கத்தி உனக்கு அருளப்படும். அது யார் மீது எய்யப்பட்டாலும், அவர்களைக் கொன்று, பின் மறைந்துவிடும். இதுவே உன் பழிவாங்கலின் ஆயுதம்!” என்றது.

​கோதாவரியின் அலைகள், இந்த வார்த்தைகளுக்கு எதிரொலியாக, ஓசைகளை எழுப்பின. காமவள்ளியின் இதயம் உற்சாகத்தில் துடித்தது. “சம்புகா, இந்தக் கத்தி உன் தந்தையின் ஆணவத்தை அழிக்கும்!” என்று அவள் முணுமுணுத்தாள். சம்புகன் மனம் இதெல்லாம் தாண்டி, ஆழ்ந்த நிலையில் உலகை மறந்திருந்தான். அவனைச் சுற்றி நடக்கும் எதுவும் அறியும் சக்தியற்று இருந்தான்.

​காமவள்ளி, மகன் விழித்ததும் உணவருந்த வேண்டுமென அவனைத் தனித்து விட்டு, உணவைத் தேடிச் சென்றாள்.

​அந்நேரம், வானிலிருந்து, ஒரு தங்க ஒளியில், ஒரு தெய்வீகக் கத்தி மெல்ல இறங்கி வந்தது. அதன் கைப்பிடி பொன்னால் ஆனதும், பல்வகை மணிகள் பதிக்கப்பட்டு, நிலவொளியில் மின்னியது. கத்தி, தர்ப்பைப் புல்லுக்கு மேலே, சம்புகனுக்குச் சமீபத்தில் நின்றது.

​அதே நேரத்தில், பஞ்சவடியில் இருந்து இலக்குவனும் விறகுகள் சேகரிக்கவும் தர்ப்பைப் புல் அறுக்கவும் தன் இடம் விட்டு வெகுதூரம் வந்திருந்தான். காட்டின் அடர்ந்த பகுதியில், மூங்கில் மரங்களும், தர்ப்பைப் புல் களமும், நிலவொளியில் மனதை மயக்கும் வண்ணமாய் ஒளிர்ந்தன.

​இலக்குவன், தன் வில்லையும் கத்தியையும் எடுத்துக்கொண்டு, தர்ப்பைப் புல் நிறைந்த காட்டுக்குள் நுழைந்தான். ஜடாயுவின் எச்சரிக்கை, “இந்தக் காடு அரக்கர்களின் ஆதிக்கத்தில் உள்ளது” என்பது அவன் மனதில் இருந்ததால், அவன் கவனமாக முன்னேறினான்.

​திடீரென, அவன் கண்கள், தர்ப்பைப் புல் மத்தியில் ஒளிர்ந்த தெய்வீகக் கத்தியைப் பார்த்தன.

​”இது என்ன? அரக்கர்களின் மாயையைப் போலிருக்கிறதே!” என்று முணுமுணுத்தவன், அதை எடுத்து உற்று நோக்கினான். கத்தியின் மந்திர ஒளி, நிலவொளியுடன் கலந்து, அவனை வசீகரிக்க, எச்சரிக்கையுடன் அந்தக் கத்தியை அவன் கையில் எடுத்தான்.

​சம்புகன், தர்ப்பைப் புல் மத்தியில், தவத்தில் ஆழ்ந்திருந்தான். அவனது சிறு உடல் நிலவொளியில் ஒரு சிலையைப் போல இருந்தது.

​இலக்குவன் அவன் இருப்பதை அறியாது, ‘அரக்கர்களின் மாயை இந்தக் கத்தி, இது தனக்குத் தீங்கு விளைவிக்கும்’ என்று எண்ணி, கத்தியை வீசினான். அந்தக் கத்தி புற்களின் நடுவே இருந்த சம்புகனின் கழுத்தைத் தொட்டது. ஒரு நொடியில், தெய்வீகக் கத்தி, அவனது சிறு உயிரைப் பறித்தது. கத்தி, தன் பணியை முடித்து, ஒரு தங்க ஒளியாக வானில் மறைந்தது.

​இலக்குவனுக்கு அங்கே ஓர் உயிர் பறிபோனதும் தெரியாது. விறகுகளையும் தர்பைக் கட்டுகளையும் சுமந்துக் கொண்டு பஞ்சவடி திரும்பினான்.

​காமவள்ளி தன் மகனுக்கு உணவும் நீரும் கொண்டுவரச் சென்று திரும்பியபோது, தர்ப்பைப் புல் மத்தியில் சம்புகனின் உயிரற்ற உடலைப் பார்த்தாள். அவள் இதயம் உடைந்து, “சம்புகா! என் உயிரே!” என்று கதறி, அவனை மடியில் தாங்கினாள்.

​அவள் கண்ணீர், கோதாவரியில் கலந்து, நதியை நனைத்தது. “பிரம்மனே! உன்னை நம்பித் தவம் செய்தேன். ஆனால், நீ என் மகனையும் பறித்துவிட்டாயா? முதலில் என் காதல், இப்போது என் நம்பிக்கை!” என்று அவள் அலறினாள்.

​அவள் குரல், காட்டை அதிரச் செய்து, மரங்களை நடுங்க வைத்தது. பறவைகள், அவளது துக்கத்துக்கு எதிரொலியாக, கதறலுடன் பறந்தன.

​”என் மகனின் உயிரைப் பறித்தவன் யார்? இந்தக் காடு எனக்குப் பதில் சொல்லட்டும்!” என்று அவள் வாய்விட்டு அரற்றினாள்.

​கோதாவரியின் அலைகள் அவளது கதறலைப் பிரதிபலித்து, பல ஓசைகளை எழுப்பின. மூங்கில் மரங்கள் புலம்பின.

​காமவள்ளி, தன் மந்திர சக்திகளைப் பயன்படுத்தி, காட்டின் ஆன்மாக்களை விசாரித்தாள். அவை உண்மையைச் சொல்லின.

​”பஞ்சவடியில் இருந்து, இலக்குவன் விறகு சேகரிக்கவும் தர்ப்பை அறுக்க வந்தனர். இலக்குவனின் கையில் இருந்த அந்த தெய்வீகக் கத்தி, தவறுதலாக உன் மகனைப் பலிகொண்டது,” என்று அவை முணுமுணுத்தன.

​காமவள்ளி, இலக்குவனின் பெயரைக் கேட்டதும், அவள் கண்களில் துக்கம் ஒரு பயங்கரமான கோபமாக மாறியது. “இலக்குவன்… நீயா என் மகனைப் பறித்தவன்? முதலில் என் காதலைப் பறித்த இராவணன், இப்போது என் மகனைப் பறித்த இலக்குவன்! இந்தக் காடு உங்கள் இருவரின் அழிவுக்கும் சாட்சியாகும்!” என்று அவள் கதறினாள்.

​காட்டின் மரங்கள், அவளது கோபத்துக்குச் சாட்சியாக, இருளில் மௌனமாக நின்றன.

​அவள், இராம-லக்ஷ்மணரைப் பற்றி விவரங்கள் சேகரித்தாள். முனிவர்களிடமிருந்தும், காட்டின் அரக்கர்கள் கூட்டத்தின் வழியாகவும் அவர்களின் வலிமையை அறிந்தாள்.

​”இராமன், விஷ்ணுவின் அவதாரம் என்று முனிவர்கள் கூறுகிறார்கள். இலக்குவன், அவனது நிழல், எந்த அரக்கனையும் வீழ்த்தும் வீரன்,” என்று கேள்விப்பட்டாள். அவள் மனதில், ஒரு கொடிய திட்டம் உருவானது. “இராவணனையும் இலக்குவனையும் அழிக்க, அவர்களையே அவர்களுக்கு எதிரான ஆயுதமாக்குவேன்,” என்று அவள் முடிவு செய்தாள்.

​கோதாவரியின் கரையில், நிலவொளியில், அவள் தன் மந்திரங்களை உச்சரித்து, தன் தோற்றத்தை மாற்றினாள். அவள் கூந்தல், காட்டின் இருளைப் போலக் கறுத்தது; அவள் கண்கள், தீயைப் போலச் சிவந்தன. அவள், கணவன் இறந்தபின் இதுவரையில் விட்டிருந்த அழகின் பேணலை மீண்டும் ஆரம்பித்தாள். காண்போர் மையல் கொள்ளும் வகையில், தன்னை ஒரு அழகுமிகுந்த பெண்ணாக உருமாற்றிக் கொண்டாள்.

​அவள், பஞ்சவடியை நோக்கி நடந்தாள். அவர்களின் இருப்பிடத்தை இரவில் நன்றாக ஆராய்ந்தாள்.

​தன் மனதில் அரக்கக் குணத்தை வலிந்து ஏற்றினாள். நய வஞ்சகத்தை முழுமையாக மனதில் நிரப்பினாள். மீண்டும் தன் இருப்பிடம் திரும்பினாள்.

​காடதிர நகைத்தாள்.

​எப்போதும் விழிப்பு நிலையில் தன் மனதை வைத்திருக்கும் இலக்குவனுக்கு, ஏதோ தீங்கு நேரிடப்போவதைக் குறித்த அச்சம் உதயமானது.

​”அண்ணா, இந்தக் காடு அரக்கர்களால் ஆபத்தானது. நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்,” என்று இராமனிடம் கூறினான்.

​இராமன், அமைதியாகச் சொன்னான், “தம்பி, விதி நம்மை வழிநடத்துகிறது. நம் கடமையைச் செய்வோம்.”

​விதி, இராம லக்ஷ்மணரையும், சூர்ப்பனகையையும் ஒரு மோதலின் பாதையில் இணைத்து, தன் கொடிய விளையாட்டைத் தொடர்ந்தது

Series Navigation<< அசுரவதம்:- 8 – வீழ்ந்தக் காதல்.அசுரவதம்: 10 – பழியின் பயணம். >>

Author

You may also like

1 comment

முத்துசுப்ரமண்யம் September 20, 2025 - 8:13 pm

சுவையான திருப்பம்! ரசித்தேன்.

Reply

Leave a Reply to முத்துசுப்ரமண்யம் Cancel Reply