அள்ளக் குறையா அன்பாம் அமுதினைத் துள்ளியே என்னிடம் தா…
எனச் சொல்லவேண்டிய என் காதலர் புரு அஸ்தினாபுரம் போகிறாராம்.. மன்னரிடம் நீதியாம்… அரசகுமாரியைப் பணிப்பெண்ணாக்கி அழகு பார்த்துப் பின் அவளின் அழகைப் பார்த்த பொல்லாத யயாதி மன்னனிடம்.. நீதி கிடைக்குமா என்ன?
ஒரு நாளா? இரு நாளா? பதினெட்டு வருடம்.. தன்னுடன் இருந்து தன்னைக் கொடுத்தவள் எங்கே எனத் தேடாத நியாயவானிடம் கிடைக்குமா நீதி.?
சர்மியம்மாவிடமும் கன்னிகையிடமும் கண்களால் விடைபெற்று தூரத்து இருந்த நந்தவனத்தில் நுழைந்தேன்..புருவும் வந்தார்…
“அவசியம் நீங்கள் செல்லவேண்டுமா மன்னரே?”
“மன்னரா?”
“ஆம்.. என் இதயத்தில் இருப்பவர்.. எனில் அதான்..ஆனால் நான்…”
“நான் “– புரு தயங்கினார்… “உன்னை என்று தொட்டேனோ அப்போதே நான் உன்னவன் ஆகிவிட்டேன்..ஆனால் இப்போது?”
“இப்போது என்ன..ம் என்று ஒருவார்த்தை சொல்லுங்கள்..ஆனைமங்கலம் மட்டும்….” மட்டுமை அழுத்தினேன்.
“ஆனைமங்கலம் மட்டும் செல்லலாம் உங்கள் தாயார், கன்னிகாவுடன். சென்று என் தந்தையிடம் சொல்லலாம்..என் தந்தை மகராஜா இல்லை..ஆனால் பெருந்தனவந்தர்… உங்களைக் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்து வியாபாரமும் கற்றுத் தருவார்…”
”பின்?” …புரு சிரித்தார்
”சிரிக்காதீர்கள்…என்னை மணம் புரியுங்கள் என் காதலை ஏற்று என்னைச் சாந்தியடைய வையுங்கள்”
”நிர்மலா… அழுத்தமான மன நிலையில் உளறல்களாய்ச் சமைக்கிறாய் … ம்ஹும் மாமனாரின் தயவில் எல்லாம் வாழ்வது என்பது ஒர் ஆணுக்கு உகந்ததல்ல..தவிர இப்போது உன் காதலை ஏற்கமுடியாது என்று தானே சொன்னேன்…. ”
பின்னர் தான் நான் காதலைப்பற்றிப் பேசினேன்..பின் கோபித்துக் கொண்டு பாறையில் உட்கார்ந்தேன்… வந்து என் தோளைத் தொட்டிருக்கலாம்… இல்லை… ஒரு ஆறுதல் மொழி இல்லை.. என்னைப் பார்த்த வண்ணமே நின்றிருந்தார்..
“என்ன..பார்வை..?”
“இல்லை பெண்களின் கோபப் பார்வை சுடும் என்பதைப் படித்திருக்கிறேன் இப்போது தெரிகிறது..ஆனாலும் கண்களின் அழகு இருக்கிறதே…”
“போதும்..வேறு வார்த்தைகள் சொல்லுங்கள்”
“இப்போதைக்கு ஆனைமங்கலம் சென்று நீ உயிருடன் இருக்கிறாய் எனச் சொல்லப் போகிறேன்..”
“பின்?”
“அஸ்தினாபுரம் சென்று என் தாயின் அந்தஸ்தை நிலை நிறுத்தல்.. வரட்டா..?”
மெல்ல என் கையைப் பற்றி இழுத்து தன் இதழ்களினால் ஒரு குட்டி முத்திரை பதித்தார்..எனக்கு சர்வாங்கமும் நடுங்க அவரருகில் செல்ல முயற்சிக்க….”எல்லாவற்றிற்கும் காலம் இருக்கிறது நிர்மலா”…எனத் தள்ளிவிட்டுச் சென்றுவிட்டார்.. ஹும் இந்த ஆண்கள் கருங்கற் பாறைகள்.!. *
இருபது தினஙகள் கடந்து புருவிடமிருந்து தகவல் வராததினால் நாங்கள் அஸ்தினாபுரம் அடைந்தோம்.. நாங்கள் என்றால் நான் சர்மியம்மா க்ன்னிகா சில முனிகுமாரர்கள்
கோட்டைவாயிலைக் கடந்ததுமே குரல்…”ஏட்டி வதனா நீயா புள்ள வந்துட்டியா?”
யார் பார்த்தால் ஆச்சி… பின் அம்மா வள்ளியம்மை… பின் அப்பா ருத்ராபதி
”அம்மா ஆச்சி அப்பா” என எல்லாரையும் அணைத்துக் கொண்டேன்..கண்களிலிருந்து நீர் கொட்டிக்கொண்டே இருக்க…
’அது சரி புள்ள..உன்னை உசுரோட கண்டோமே..அது என்ன.. நீ இங்கயே வருவ ந்னு அவர் சொன்னாக.. நாங்களும் அவரோடவே வந்தோம் ஆனா….”
“ஆனா என்ன ஆச்சி..பாட்டிம்மா..?”
“சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை”…என்றார் அப்பா துயரம் தோய்ந்த குரலில்.. “நான் கேள்விப்பட்டது உண்மையா இருக்கப்படாது …”
எங்கள் உரையாடலைக் கேட்ட சர்மிஷ்டை “வா வா போகலாம்…ஏதோ விபரீதம் போல இருக்கிறது..”
சடசடவெனத் தாவி நடந்து அரண்மனையில் உள்ள வீரர்களிடம் கேட்டு அந்தப்புரத்து நந்தவனத்தை அடைந்த சர்மியம்மா வியந்தார்கள்..
ஏனெனில் அங்கிருந்தவர் மன்னர் யயாதி…என் மாமனார்..ஆகப் போகிறவர்..ஆச்சர்யம் அவரது இளமை உடற்கட்டு புருவைப்போலவே.. பொலிவாக… அருகில் அதே துவேஷம் நிரம்பிய பார்வையில் தேவயானி… “வா சர்மி.. நம் மன்னரைப் பார்..”
“ஷர்மிஷ்டை வந்துவிட்டாயா…?” யயாதி சர்மியம்மாவின் கை பிடித்தார்…
எனக்கு எங்கிருந்து தைரியம் வந்தது எனத் தெரியவில்லை.. “மன்னா…”
“யார் நீ..யார் இந்த அழகி.?”.
“உங்கள் மகனின் எதிர்கால மனைவி…”
தேவயானியின் பார்வை என் மீது திரும்பியது…கொஞ்சம் அனுதாபமும் கொண்டது அவள் கண்கள்..
“புருவின் காதலியா.. அதோ அந்த மரத்தின் பின்னால் இருக்கிறான் உன் காதலன் போ போய்ப் பார்…” தேவயானியின் ஈவிரக்கமில்லாத சொற்கள்..
போனால்…அங்கே இருப்பது யார்..இது இது….?
முதுமையான உருவம்.. வெண்பருத்தி நிற நரை.. கண்கள் இடுங்க முகத்தில் சுருக்கங்கள்..உடலில் தளர்ச்சி… நடையில் தளர்ச்சி.. என் புருவா இது..?
“புரு என்ன ஆயிற்று?”…
“நான் சொல்கிறேன்” என்றவரைத் திரும்பிப் பார்த்தேன்.. வெண் தாடி வெண்மீசை கண்களில் கொஞ்சம் கனிவு எப்பொழுதும் சீற்றமாக மாறுமென்று தெரியாத கனிவு..மரவுரி ஆடை..
தலை தரையில் பட கால்கள் மண்டியிட்டு வணங்கினேன்…” சுக்ராச்சாரியார் “அசுர குருவே உம்மை நமஸ்கரிக்கிறேன்..ஒரு வரம் வேண்டும்..”
”என்ன வேண்டும் பெண்ணே? என் பெயர் எப்படித் தெரியும் உனக்கு?” வியப்பு தொனித்தது சுக்ராச்சார்யாருக்கு…
”ஒரு ஊகம் எனச் சொல்லமாட்டேன்.. காரணம் அன்பு அசுர குருவே.. என் அன்பு என் மாமியார் சர்மிஷ்டையின் அன்பைப் போன்றது. தூய்மையானது…தூய்மையானவள் நான் என்பதற்காகத் தான் என்னை நிர்மலா என்று என் தந்தை பெயர் வைத்தாரோ என்னவோ.
அன்பு தன்னலமற்றதாக எங்கும் வியாபிப்பதாக ஆழமானதாக இருக்கவேண்டும் இல்லையோ..அதனாலேயே அறிந்தேன்..
நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள் என நினைத்ததனால் தானே எனக்குக் கணவராகப் போகிறவரின் அருகிருக்கிறீர்கள்..அவருக்கு முதுமையைத் தந்தது நிச்சயமாக உங்கள் மகளைச் சந்தோஷப்படுத்த அல்ல..அன்பிருக்கும் இடத்தில் கோபம் இருக்காது… உங்கள் மகளுக்கு அகந்தையின் மேல் அன்பு.. உங்களுக்கோ அடக்கமுடியாத சினத்தின் மேல் அன்பு”
“பெண்ணே”
”நிர்மலா… என்று சொல்லுங்கள்..” நிமிர்ந்தேன்..” ஒரே ஒரு விண்ணப்பம்”
என்ன?”
”எனக்கும் சாபமிடுங்கள்.. நானும் கிழவியாகி இவருடன் இருக்கிறேன்…”
”இளமையாய் இருந்து கிழவனுக்குப் பணிபுரியலாமே பெண்ணே… “”சுக்ராச்சார்யார் சிரித்தார்…
”இல்லை..அது அப்படி இல்லை… கணப்பொழுது என்பது ஆயிரம் தாமரை இதழ்களை ஒன்றாக அடுக்கி அதில் ஒரு ஊசி நுழைத்து ஒரு இதழுக்கும் மறு இதழுக்கும் ஊசி செல்லும் நேரம் என்பார்கள்.. நான் பத்து நொடியாகிலும் என் புருவைப் பார்த்திருப்பேன் உடன் தோன்றியது தான் இது.. அவர் அவஸ்தைப் படும் போது நான் இளமையில் இருக்கலாகாது..இல்லை எனில்…”
”இல்லை எனில் என்ன செய்வாய் பெண்ணே… ” என்ன இது பெண்ணே பெண்ணே என்கிறார்..
புரு கிழவராக மாறியிருந்தாலும் அவரது வாள் கச்சையில் தான் இருந்தது..உருவிக்கொண்டேன் ”இங்கேயே நான் மரிக்கிறேன்.. உமது அகந்தையில் சஞ்சீவனி மந்திரம் இழந்தீர்.. இப்போது இன்னொரு பாவமும் உங்களைச் சேரட்டும்..”
வாள் என் கழுத்தைத் தீண்டுமுன் அது தடுக்கப் பட்டது..தடுத்தது யார் எனப் பார்க்கையில் என் விழிகள் விரிந்தன..
புரு.. என் புரு.. என் இளமையான காதலன் புரு மீண்டும் இளமையுடன்…
”சஞ்சீவனியை இழக்கவில்லை நான் பெண்ணே” என்றார் சுக்ராச்சார்யார்.
.” என் காரியம் எனக்கே கஷ்டமாகத் தான் இருந்தது..யயாதி ஆசைப்பட்டது நடக்கட்டும்.. ஆனால் இவன் கஷ்டம் கூடாது.. ஏன் தெரியுமா நிர்மலா ராணி..”
“நான் நிர்மல வதனா…சாதாரண தனவணிகரின் பெண்”
“இல்லை பிற்காலத்தில் உலகம் சொல்லிக்கொண்டே இருக்கும் பாண்டவ கெளரவ குலத்தின் தோன்றல் புருவின் ராணி தான் நீ..இது என் ஆசீர்வாதம்.”.
எனச் சுக்ராச்சார்யார் சொல்ல “அப்பா” – தேவயானி
“இல்லை தேவா.. நான் சொன்னது சொன்னது தான்.. நான் சொல்வது தெய்வம் சொல்கிறது”…எனச் சொல்லி முடித்தார் சுக்ராச்சார்யார்..
“புரு என் புரு” என்றவாரே அனைவருக்கும் முன் நான் எப்படி நாணம் மறந்தேன் எனத் தெரியவில்லை .அணைத்துக் கொண்டேன்…
“எல்லாமே…. நடக்கும் எல்லாமே வெறும் கதையாக எனக்குத் தெரிகிறது.. நீங்கள் எனக்குக் கிடைத்துவிட்டீர்களா நிஜம்மாகவா?..”
“ஆம் அன்பே என்றார் புரு.. ”இன்னும் நாம் படிக்க வேண்டிய கதைகள் நூறல்ல பலப்பல இருக்கிறது.. நம் கதைகளைப்பற்றியும் காலம் சென்றும் மக்கள் பேசிக்கொண்டிருப்பர்…. என்ற வண்ணம் என்னை மேலே இறுக்கப் பார்க்க “எல்லோரும் பார்க்கிறார்கள்” என்ற எண்ணம் தோன்ற டபக் எனத் தள்ளி விட்டு வெட்கம் மேலிட கன்னம் சிவக்க சர்மியம்மாவின் அருகாமைக்கு ஓடினேன்..
தள்ளி விட்டதைப் பார்த்த சர்மியம்மா கன்னிகா அனைவரும் சிரித்தார்கள்….
**
(முற்றும்)
References : 1. யயாதி – வி.ஸ. காண்டேகர்
2. மகாபாரதம் – ராஜாஜி