பானு முஷ்டாக்கின் ”ஹார்ட் லேம்ப் – தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்” – நூல் விமர்சனம்

கார்த்திகா வாசுதேவன்

கன்னடத்தில் ”இதய ஹனதே” தமிழில் ”இதய விளக்கு”

பானு முஷ்டாக்கின் “ஹார்ட் லேம்ப் மற்றும் இதர கதைகள்” சிறுகதைத் தொகுப்பு கடந்த 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசு வென்றிருக்கிறது.

இதை தீபா பஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

இந்தத் தொகுப்பானது ஒரே படைப்பில் இருந்து எடுக்கப்பட்ட சிறுகதைகளைக் கொண்டது  அல்ல. 1993 ல் இருந்து 2023 வரையிலும் பானு எழுதிய சிறுகதைத் தொகுப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றுள் சர்வதேச வாசகர்களுக்கு எவையெல்லாம் சிரமமற்ற வாசிப்பைத் தரக்கூடுமோ அத்தகைய கதைகளை மட்டுமே கொண்டு  இந்தப் படைப்பை உருவாக்கியதாக மொழிபெயர்ப்பாளரான தீபா பாஸ்தி தெரிவிக்கிறார்.

கர்நாடக மாநிலத்தின் மடிக்கேரியைச் சேர்ந்த தீபா ஒரு பத்திரிகையாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இருந்ததோடு இளமையில் தன் பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்தவர் என்பதால் இந்தச் சிறுகதைகளை அவரால் உணர்வுப்பூர்வமாகப் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. மொழிபெயர்ப்புக்காக வேறு சிலரும் முயன்ற போதும் பானு, தீபாவைத் தேர்ந்தெடுக்க புரிதலுடன் கூடிய அந்த அணுக்கமே காரணமாக இருந்திருக்கக் கூடும். மொத்தக் கதைகளும் முஸ்லீம் சமூகப் பெண்களின் பிரச்சனைகள் குறித்தே பேசினாலும் அந்தப் பிரச்சனைகள்  உலகப் பெண்கள் அனைவருக்கும் பொதுவானது என்பதே அவற்றின் சிறப்பம்சம்.

 தற்போது 77 வயதாகும் பானு முஷ்டாக் ஒரு பெண்ணிய செயற்பாட்டாளர் என்பதோடு தீவிர களப்பணியாளர், வழக்கறிஞர், மற்றும் எழுத்தாளருமாகப் பல பரிமாணங்களில் தன்னை கட்டமைத்துக் கொண்டவர். கன்னடத்தில் எழுதப்பட்ட இவரது பல படைப்புகள்  பின்னர் உருது, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன் இவர் கன்னடத்தில் தமது இலக்கியப் பங்களிப்பின் மூலம் சாகித்திய அகாடமி முதற்கொண்டு பல பரிசுகளை வென்றிருக்கிறார்.

இந்தத் தொகுப்பில் மொத்தம் 12 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

அவை;

1.ஷயிஸ்தா மஹாலுக்கான கல் பலகைகள்

2.நெருப்பு மழை

3.கருப்பு நாகங்கள்

4.இதயத்தின் முடிவு

5. சிவப்பு லுங்கி

6.இதய விளக்கு

7. உயர்ந்த குதிகால் கொண்ட காலணி

8.மென்மையான கிசுகிசுப்புக்கள்

9.சொர்க்கத்தின் சுவை

10.அந்தப் போர்வை

11. கோபி மஞ்சூரியனும் அரபு ஆசிரியரும்

12.ஓ கடவுளே ! ஒரு முறை பெண்ணாக இருங்களேன்!

இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஒருவிதம். ஆயினும் இதில் வரும் பெண்கள் அனுபவிக்கும் வலியும், நிராதரவும், சமூக அலட்சியங்களும், குடும்ப கைவிடுதல்களும் நாம் நாள்தோறும் நமக்கு அருகிலும், செய்தி ஊடகங்களிலுமாகக் காணக் கிடைப்பவையே! இதில் பணக்கார முஸ்லீம் பெண்களும் வருகிறார்கள். ஆனால், அவர்களும் தங்கள் வாழ்க்கை முறையின் நெருக்குதல்களுக்கு உட்பட்டு இறுதியில் தம்மைப் போன்ற பெண்ணினத்தின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்து கொள்ளத் தவறி குற்ற உணர்வில் உழல்பவர்களாகவே ஆகிப் போகிறார்கள்.

முதல் கதையான ”ஷயிஸ்தா மஹாலுக்கான கல் பலகைகளில்” வரும் ஜீனத், தன் கணவரின் நண்பரான இனாயத், அவரது மனைவி ஷயிஸ்தாவின் மேல் கொண்டுள்ள பெருங் காதலைக் கண்டு முதலில் பிரமிக்கிறாள். ஆனால், தொடர்ச்சியான பிரசவங்களால் 7 வது குழந்தையைப் பெற்று விட்டு உடல் நலிவில் ஷயிஸ்தா மரணிக்க அடுத்த  இரண்டே மாதங்களில் அதே இனாயத் தன் மூத்த மகளின் வயதை ஒத்த மற்றொரு இளம்பெண்ணை மனைவியாக்கி வீட்டுக்கு அழைத்து வந்ததை அறியும் போது ஜீனத் உள்ளம் துவண்டு விடுகிறாள். இனாயத்தின் மூத்த மகள் ஆஷிபாவின் எதிர்காலம் குறித்து ஷயிஸ்தாவுக்கு இருந்த அச்சங்களை மெய்ப்பித்து விடுகிறது இனாயத்தின் நடவடிக்கைகள். தாஜ்மஹாலே கட்டும் அளவுக்குத் தன் மனைவி மீது காதல் கொண்டிருந்த இனாயத் வெறும் இரண்டரை மாதங்களில் அதற்குக் கல்லறை கட்டி அங்கு தியாக விளக்காக தன் மகளையே குடும்பச் சுமைகளை ஏற்க வைத்து விட்டது அச்சமூகத்தின் பாலின சமத்துவமின்மையை அழுத்தமாகச் சுட்டிக் காட்டுகிறது.

 ”கருப்பு நாகங்களில்” வரும் படித்த பெண்ணான சுலேகா பேகம் தன் அறிவின் துணை கொண்டு தன்னிடம் வீட்டு வேலைக்காரியாகப் பணிபுரியும் ஆஷ்ரஃப்புக்கு உதவுகிறாள். ஆனால் அவளது உதவியால் பயனேதும் அற்றுப் போகிறது. காரணம் அந்தக் கதையில் இடம்பெறும் ஆண்களின் எதேச்சாதிகாரம் மற்றும் அலட்சியம். ஆஷ்ரஃப் மூன்று பெண்குழந்தைகளுடன் போதிய வருமானமின்றி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில் அவளது கணவனோ ஆண் குழந்தை இல்லை என்று காரணம் காட்டி அவளைக் கைவிட்டு விட்டு வேறொரு பெண்ணை மணந்து கொள்கிறான். இதற்கு அவனது சமூகத்தின் முத்தவல்லியின் (மசூதி பராமரிப்பாளர் மற்றும் பாதுகாவலர்) ஆதரவும் உண்டு என்பதால் அவன், இஸ்லாமிய விவாகரத்து சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு பொருளாதார உதவி வேண்டி நின்ற மனைவியையும், மகள்களையும் வெகுவாக அலட்சியப் படுத்துகிறான். இறுதியில் ஒரு மழைநாளில் மசூதிக்கு வெளியே நீதிக்காகக் காத்திருந்த ஆஷ்ரஃப் மழையில் நனைந்து நனைந்தே நோயுற்றிருந்த தனது சோனிக் குழந்தையை மரணத்துக்கு ஒப்புக் கொடுத்து விடுகிறாள். அந்த மரணம் அங்கிருக்கும் பெண்களின் கோபத்தைத் தூண்டி முத்தவல்லியை கேள்வி கேட்கவும் கடுமையாகச் சாடவும் வைக்கிறது. ஆனாலும் அது இழப்புக்கான சரியான ஈடாக முடியாது என்பதால் இறுதியில் முத்தவல்லியின் மனைவி தன் கணவரை வெறுத்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டு இப்படிப்பட்ட இரக்கமற்ற மனிதனுடன் வாழ விருப்பமற்று வீட்டை விட்டு வெளியேறுவதில் முடிவடைகிறது.

இந்தக் கதை மட்டுமல்ல, இதில் வரும் பிற கதைகளிலும் பெண்கள் எண்ணற்ற துயரங்களை அனுபவிக்கிறார்கள்.

”சிவப்பு லுங்கியில்” வரும் ரஸியாவின் மனநிலை வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றினாலும் சற்று யோசித்துப் பார்த்தால் அது நம் அன்றாட வாழ்வில் காணும் கதாபாத்திரங்களில் ஒன்று என விளங்கும். நாம் எப்போதும் நமக்கென்றால் ஒன்று, பிறருக்கு என்றால் மற்றொன்று என்றே சிந்தித்துப் பழகியவர்கள். தன்னைப் பிறருக்கு குறிப்பாக தன்னிலும் கீழாக இருக்கும் வறியவர்களுக்கு சரிசமமாக பாவிப்பது என்பது எப்போதுமே இயலாத காரியமே! இதில் ரஸியாவும் அப்படித்தான்.  தன் குடும்பத்தைச் சார்ந்த 6 சிறுவர்களுக்குச் சுன்னத் சடங்கு செய்ய முடிவெடுக்கும் இந்தப் பணக்கார பெண் கூடுதல் போனஸாக தன் அக்கம் பக்கத்தில் வசிக்கும் ஏழைச் சிறுவர்களுக்கும் இலவசமாக அதே சடங்கை தங்கள் செலவில் செய்து உணவுப் பொட்டலம் தருவதாக கணவர் மூலமாக அருகிலிருக்கும் மசூதியில் அறிவிக்கிறாள். அவள் வீட்டுக் குழந்தைகளுக்கு மாத்திரம் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர் வாயிலாக பையன்களுக்கு அறுவை சிகிச்சை முறையில் சடங்கு நடத்தப் படுகிறது. அதே நேரத்தில் பிற ஏழைச் சிறுவர்களுக்கோ பாரம்பர்யமாக நாவிதத் தொழில் செய்து ஒரும் ஒரு இஸ்லாமியரை வர வைக்கிறார்கள். ஆனால், சாதாரணமாக நாவிதர் மூலம் சடங்கு செய்து கொண்ட அவளது சமையற்காரியின் பையனுக்கு அறுவைசிகிச்சை காயம் வெகு எளிதாகக் குணமடைந்து விடுகிறது. ஆனால் ரஸியாவின் மகனுக்கு அத்துணை வசதியான மருத்துவமனை அறுவை சிகிச்சையோ சிக்கலில் முடிந்து விடுகிறது. இவ்விதமாக ரஸியாவின் மன ஓட்டத்தின் வாயிலாக விரியும் இந்தக் கதையில் ஏழை மற்றும் பணக்காரர்களின் வாழ்க்கை முறை  ஏற்றத் தாழ்வுகள் குறித்த பார்வை நம்மை கனத்த மெளனத்தில் ஆழ்த்தி விடத் தக்கவை.

”நெருப்பு மழை” கதையில் வரும் முத்தவல்லி உஸ்மான் சாஹேப் தமக்கு மதம் அளித்த அதிகாரத்தையும், பதவியையும் கொண்டு தம் சமூக மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக மிகச்சுயநலமாகவே எல்லாவற்றையும் முடிவு செய்கிறார். அது காணாமல் போன முஸ்லீம் இளைஞன் நிசார் விஷயமாகட்டும் உடன் பிறந்த தங்கை ஜமீலா எழுப்பும் குடும்பச் சொத்து பகிர்மானப் பிரச்சனையாகட்டும் அல்லது மற்றொரு விதவைத் தங்கை  சகீனாவின் வறட்டு ஏழ்மைக்கு உதவாமை ஆகட்டும் எல்லாவற்றிலுமே இந்த மனிதர் தன் சுய லாபத்தை மட்டுமே கணக்கிடுகிறார். அல்லாவுக்கே அது பொறுக்க முடியாமலாகி மூளைக்காய்ச்சலில் அவரது மகன் பலியாகும் சூழல் நேர்கிறது. அப்போது குற்ற உணர்வுக்கு ஆளாகி என்ன செய்ய? இக்கதையில் நியாயவாதியான அவரது மனைவிக்கு கணவரைத் திருத்தும் அதிகாரம் இல்லாதது மலிந்து கிடக்கும் பெண்ணடிமைத் தனத்தின் ஒரு சோறு ஒரு பதம்.

”இதய விளக்கு” கதையில் வரும் மெஹ்ரூன் கணவனது எதேச்சாதிகாரத்திற்கு பலியாகும் மற்றுமொரு பெண். அவளை அவளது கணவன் மட்டுமல்ல, அவளது பிறந்த வீடு, சகோதர்களும் கைவிட்டு விடுகிறார்கள். மற்றொரு டெயிலர் பெண்ணுடன் முறையற்ற உறவில் இருக்கும் கணவன் இவளையும் பிள்ளைகளையும் புறக்கணித்து விட்டு அவளுடனே குடித்தனம் நடத்த முயல்வதை மெஹ்ரூன் எவ்வளவு விளக்கியும் அவளது குடும்பம் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவனத்தில் கொள்ளாது மீண்டும் அவளை கணவனுடன் சேர்த்து வைப்பதிலேயே குறியாக நிறகிறது. அவர்களைப் பொருத்தவரை அவள் ஒரு சுமை. ஒருமுறை இறக்கி வைத்த பிறகு அது இடம் விட்டு நகராமல் அங்கேயே இருப்பதுதான் அதற்கு மரியாதை. அங்கிருந்து மீண்டும் பிறந்தகம் வருவது அவர்களைப் பொருத்தவரை கெளரவபங்கம். ஆகையால் அவள் மீண்டும் கணவனது மிரட்டலுக்கு ஆளாகும் வகையில் புகுந்த வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படுகிறாள். இங்கு தவறு செய்பவனுக்குத் தண்டனை இல்லை. அதைப் பொறுத்துக் கொண்டு அவனுடன் இணக்கமாக வாழ முடியாத   மனைவிக்கு மட்டுமே தண்டனை. ஏனெனில், அவள் ஒரு பெண் தானே என்பதால். தனது போக்கிடமற்ற அநாதரவான நிலையை எண்ணி அப்பெண் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சிக்கையில் கடைசியில் மூத்த மகளே தம்பியைக் கையிலேந்தி வந்து அம்மாவின் தேவை தங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர வைத்து நிகழவிருந்த துர்மரணத்தை தடுத்து நிறுத்தியவள் ஆகிறாள். ஆக, குழந்தைகளின் பொறுப்பும் இங்கு பெண்ணுடையதாகவே ஆகி விடுகிறது.

இவை மட்டுமல்ல தொகுப்பில் உள்ள பிற கதைகளுமே ஒவ்வொரு விதத்தில் நாள்தோறும் இந்த பூமிப்பந்தில் பெண்கள் அனுபவித்து வரும் வெவ்வேறு விதமான பாரபட்சங்களை, அநியாயங்களை, துன்பங்களையே மையமாகக் கொண்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் மனதோடு பேசுகின்றன. சில கதைகளில் காணும் நபர்கள் நானறிந்த பெண்கள், ஆண்கள், மற்றும் சிறுமிகளின் சாயலையும் குணநலன்களையும்  ஒத்தவர்களாக இருக்கிறார்கள். ஆகையால் எளிதில் இக்கதைகளோடு ஒன்றி விட முடிகிறது.

கதையின் ஒரே குறையாக நான் உணர்ந்தது. அதை எழுதிய மொழியிலேயே வாசிக்க முடியாததைத்தான். அதற்காக கன்னடம் கற்றுக் கொள்ளும் ஆசையும் வந்தது. ஏனெனில், புக்கர் பரிசு மேடையில் கதாசிரியரும், மொழிபெயர்ப்பாளரும் உரையாடுகையில் கதைகள் அனைத்திலும் ஊடாடும் மெலிதான நகைச்சுவையை துன்பத்தில் தங்களை மீட்டுக் கொள்ளவும் தகவமைத்துக் கொள்ளவும் அச்சமூகப் பெண்கள் பயன்படுத்தும் வட்டார வழக்குச் சொற்களின் சுவையை ஆங்கிலத்தில் பூரணமாக ரசித்து விட முடியவில்லை. கூடுமான வரையில் கதைகளின் ரசம் குன்றாமலும் தென்னிந்திய மாநிலமொன்றில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கைமுறையின் இடர்பாடுகளை சர்வதேச வாசகர்களுக்கு இம்மொழிபெயர்ப்பின் வாயிலாகக் கடத்தி இருக்கிறார். அதை அவர்கள் ரசித்திருக்கிறார்கள் என்பதன் விளைவு தான் புக்கர் பரிசு.

பெண்கள் மட்டுமல்ல வாசிப்பின் ருசி கண்ட அனைவருமே நிச்சயம் வாசிக்க வேண்டிய படைப்புகளில் ஒன்று!

புத்தகம்: இதய விளக்கு (ஹார்ட் லேம்ப் – தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்)
ஆசிரியர்: பானு முஷ்டாக்
ஆங்கிலத்தில் : தீபா பஸ்தி
வெளியீடு: பெங்குயின் பதிப்பகம்

Author

Related posts

ரம்மியமான சாகுந்தலம்! – மகாகவி காளிதாசர்!

பொன்னந்தி – பி.பி. போர்க்கர்(மராத்தி)

கடல் அரக்கன், தேவதைப்பூ – இரு கதைகள்