வரலாற்றில் பொருளாதாரம் – 29

போன அத்தியாயத்தில் சமயச் சண்டைகள், படையெடுப்புகள், போர்கள் ஆகியவை எவ்வாறு அன்றைய அரசாங்கங்களின் பொருளாதார நிலையைப் பலவீனப்படுத்தும் என்று பார்த்தோம். அதற்குப் பல்வேறு உலக வரலாறுகளிலிருந்து உதாரணங்களையும் பார்த்தோம். அந்த உதாரணங்களை அடிப்படையாகக் கொண்டு சோழப் பேரரசு எப்படி வீழ்ச்சியடைந்திருக்கும் என்பதைப் பார்ப்போம்.

இராசேந்திர சோழனின் போர்களுக்குப் பிறகு சோழப் பேரரசின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. கங்கை நதி நோக்கிய படையெடுப்பு, ஸ்ரீவிஜயம் மீதான கடற்படைத் தாக்குதல்கள் போன்ற இராசேந்திர சோழனின் பிரம்மாண்ட போர்கள் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தின. தொடக்கத்தில் படையெடுப்புகள் மற்றும் போர்களின் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் வழியாகச் செல்வங்கள் குவிந்தாலும், ஒரு பெரிய நிரந்தர ராணுவத்தைப் பராமரிக்கவும், கைப்பற்றிய பகுதிகளைக் கண்காணிக்கவும் பிற்காலச் சோழர்களின் கருவூலம் பெருமளவில் காலியானது.

இராசேந்திர சோழனின் தாக்குதலால் ஸ்ரீவிஜயப் பேரரசு பலவீனமடைந்தது. இது தொடக்கத்தில் தமிழ்த் திசைசார் வணிகக் குழுக்களுக்குச் சாதகமாக அமைந்தது. ஆனால், 11 மற்றும் 12-ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு வந்த சோழர்களால் தங்களது கடல் ஆதிக்கத்தைத் தக்கவைக்க முடியவில்லை. இதற்குக் காரணமாக இருந்தது என்னவென்றால், நிர்வாகப் பராமரிப்பு மற்றும் இராணுவப் படை பராமரிப்புச் செலவுகளுக்கு வேண்டிய அளவிற்குத் தேவையான வருமானம் அரசுக்கு இல்லாமல் போனதுதான். இதனால் தென்கிழக்கத்திய நாடுகளுடனான லாபகரமான கடல் வணிகத்தின் மீதான ஆதிக்கம் இல்லாமல் போனதால் பேரரசின் முக்கிய வருமானம் குறைந்தது.

சோழர்களின் பொருளாதாரம் காவிரிப் பகுதியின் விவசாய வருவாயையே பெரிதும் நம்பியிருந்தது. சாளுக்கியர்கள், பாண்டியர்கள் மற்றும் ஹோய்சாளர்கள் ஆகியோருடன் பிற்காலச் சோழர்கள் தொடர்ந்து நடத்திய போர்களால் விவசாய நிலங்கள் சேதமடைந்தன. மேலும், கோவில்களுக்கான நன்கொடைகள் மற்றும் தொடர் போர்ச் செலவுகளைச் சமாளிக்க மக்கள் மீது விதிக்கப்பட்ட கடுமையான வரிகள் ஆகியவை மக்களையும் சிறு பொருளாதார மையங்களையும் நிலைகுலையச் செய்தன.

இப்படியாகப் பல பிரச்சினைகளில் பண்டைய அரசுகள் சிக்கும் பொழுது, எங்கே நாட்டின் பொருளாதார நிலையோடு தங்களது பொருளாதார நிலையும் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயத்தில், வழக்கமாய் எல்லா இடங்களையும் போல் சோழர்களிடத்திலும் வாரிசு அதிகாரப் பிரச்சினை வந்தது. வாரிசுரிமைப் போட்டிகளால் பிற்காலச் சோழ மன்னர்கள் பலவீனமடைந்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு சோழர்களின் கீழ் இருந்த குறுநில மன்னர்களும், பாளையக்காரர்களும் தங்களைச் சுதந்திர அரசர்களாக அறிவித்துக் கொண்டார்கள். அப்படி அறிவித்துக் கொண்ட பிறகு சோழ அரசுக்குக் கட்ட வேண்டிய வரிகளை நிறுத்தினர்.

இறுதியாக, 13-ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் எழுச்சியும், ஹோய்சாளர்களின் ஆதிக்கமும் சோழ பொருளாதாரத்தை முழுமையாக வீழ்த்தின. பொருளாதார வீழ்ச்சிக்குப் பின் சோழர்கள் பலவீனமடைந்து சிற்றரசர்களாக ஆனார்கள். சோழர்கள் சிற்றரசர்களானது அவர்களுக்குச் சொற்ப பாதிப்பு இல்லை, அவர்கள் சார்ந்திருந்த சமய வழிபாட்டு மையங்களுக்கும் அவை பாதிப்புதான்.

பெரும் ராஜ்ஜியங்களை ஆண்ட அரசர்கள் சிற்றரசர்களாகும் பொழுது ராஜ்ஜிய நிலைதான் குறைந்திருக்குமே தவிர, அவர்களது வாழ்க்கை முறையில் இல்லை. அந்த வாழ்க்கைத்தரத்திற்குத் தேவையான பணத்தைச் சம்பாதிக்க வரித்தொகையை அதிகப்படுத்தி, பேரரசர்களுக்கு வரித்தொகையைக் கட்டியது போக மிச்சத் தொகையைத் தங்களது செலவுக்கு வைத்துக் கொண்டனர். இதனால் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் மீது அதிக வரி விதிப்பது, அப்படி வரி செலுத்த முடியாதவர்களிடமிருந்து அவற்றைப்பறிமுதல் செய்வது வழக்கமாக மாறியது. தானமாகக் கொடுக்கப்பட்ட விவசாய நிலங்கள் தரிசாகக் கிடப்பதும், உற்பத்தி குறைவதும் தொடர்கதையானது. இதன் மூலம் அரசுக்குக் கிடைத்துக் கொண்டு இருந்த வரிகள் மூலமான வருமானம் பெருமளவில் குறைந்தது.

என்னதான் வருமானம் குறைந்தாலும் ஆட்சிப் பராமரிப்புச் செலவுகள் குறையவில்லை. அதிலும் மக்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ஆன்மீகத் திருவிழாக்கள், பண்டிகைகள், சிறப்புப் பூஜை ஆகியவற்றைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசர்கள் இருந்தார்கள். இதனால் ஆன்மீக மையங்களுக்கு அதிக அளவில் பணத்தைத் தருவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

இதே சூழல் பாண்டியப் பேரரசிலும் எதிரொலித்தது. சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் எழுச்சி பெற்ற பிற்காலப் பாண்டியர்களிடமும் இந்தச் சமயச் சண்டைகள் தொடர்ந்தன. சைவம், வைணவம், சமணம் ஆகிய சமயங்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டிகள் ராஜ்ஜியத்தில் குழப்பங்களை அதிகரித்தன. மேலும், பாண்டிய மன்னர்களுக்குள் ஏற்பட்ட வாரிசுரிமைப் போர்களில் இந்தச் சமயப் பிரிவினைகளும், அவர்களுக்குப் பின்னால் இருந்த நிலவுடைமையாளர்களின் ஆதரவும் முக்கியப் பங்கு வகித்தன.

உதாரணமாகச் சுந்தரபாண்டியன் மற்றும் வீரபாண்டியன் ஆகிய இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாரிசுப் போர், நாட்டைப் பொருளாதார ரீதியாக முழுமையாகத் தடுமாற்றமடையச் செய்தது. இந்தப் போரின் பின்னணியில் இருந்த குழப்பங்களையும் நிதிப் பற்றாக்குறையையும் சாதகமாக்கிக் கொண்ட தில்லி சுல்தானகத்தைச் சார்ந்த மாலிக் காபூர் போன்றவர்கள் மூலம் தமிழகக் கோயில்களில் இருந்த செல்வங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன.

தொடர்ச்சியான சமயச் சண்டைகளால் பாதுகாப்புச் சீர்குலைந்ததால் பாசனக் கட்டமைப்புகளைப் பராமரிக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. சோழ, பாண்டியப் பேரரசுகளின் முதுகெலும்பாக இருந்த ஏரிகளும், அணைக்கட்டுகளும் முறையாகப் பராமரிக்கப்படாததால் விவசாய உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. வறட்சிக் காலத்தில் மக்களுக்கு உதவ வேண்டிய கோயில் கருவூலங்கள், சமயப் பகையின் காரணமாகக் கொள்ளையடிக்கப்பட்டோ அல்லது முடக்கப்பட்டோ கிடந்தன.

இவ்வாறு உற்பத்தியும் வர்த்தகமும் முடங்கி, வரி வருமான இழப்பால் பேரரசுகளின் இராணுவப் பலம் குன்றிய நேரத்தில், சோழ மற்றும் பாண்டிய அரசுகளால் அண்டை நாட்டு அரசுகளின் மற்றும் தில்லி சுல்தானகத்தின் படையெடுப்புகளை எதிர்கொள்ள முடியாமல் போனது. இதுபோன்ற பொருளாதாரச் சீர்குலைவுகளால் தமிழகத்தில் வலிமையான அரசாட்சி இல்லாமல் போனது. அப்படி இல்லாமல் போனதால் தமிழகத்தில் சோழ, பாண்டிய ஆட்சிகள் முடிவுக்கு வந்தன. இவற்றுக்குப் பின் தமிழகம் விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்குக் கீழ் போனது. இதனால் வணிக அதிகார மையம் என்பது ஒரே இடத்தில் தானென்றானது.

அடுத்து விஜயநகரப் பேரரசு எப்படி வீழ்ந்தது, அந்த வீழ்ச்சி எப்படி இந்திய நிலப்பரப்பின் மீதான ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது என்பதைப் பற்றிப் பேசலாம்.

தொடரும்…

Author

Related posts

கொரோனா

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 16: சீறிய கணை

மருத்துவர் பக்கம் – 28: எபோலாவும் சிகிச்சையும்