பல வருடங்களுக்கு முன்பு, மரபுக் கவிதை கற்றுவந்த புதிதில், ரியாத்தில் சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதராகத் தொண்டாற்றிய மறைந்த எம்.ஓ.ஹெச். ஃபாரூக் மரைக்காயர் இல்லத்தில் பாவேந்தர் நினைவேந்தல் நடைபெற்ற போது அதில் மரபுக்கவிதை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தேன்.
பொதுவாக, மனிதர்களைப் பற்றிப் பாடுவதில்லை என்ற கொள்கை கொண்டிருந்தாலும், பாவேந்தர் என்கிற புரட்சிக் கவிஞரைப் பற்றிப் பாடலாம் என்று தோன்றி, ஏற்றுக்கொண்டேன்.
ஆனால், எதிர்பாராத காரணங்களால் அந்நிகழ்வில் என்னால் கலந்துகொள்ள இயலாது போயிற்று. எனினும் அக்கவிதையை விழா ஏற்பாட்டாளருக்கு உடனே மின்னஞ்சலில் அனுப்பிவைத்து விழாவில் பாடும்படி கேட்டுக்கொண்டேன்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் அமைந்த அந்த மரபுக்கவிதை பலரின் பாராட்டையும் பெற்று பல்வேறு குழுமங்களில் உலா வந்து மகிழ்வளித்ததன் காரணம், அப்போதுதான் எண்சீர் விருத்தம் கற்று எழுதிய முதற் பாடல் என்பதுதான்.
பாவேந்தர் நினைவேந்தலாக அமைந்த அக்கவிதை இங்கே 👇
செவியுதிர கவிதையெலாம் விழுந்த காலம்
….செழிப்பான தமிழ்க்கவிதை இவரே செய்தார்.
தவிப்பினிலே வாய்களுக்குத் தண்ணீர் போல
….தமிழன்னை தாகத்தைத் தணித்த மைந்தர்.
கவிஞருக்குக் காட்டாக இவரே என்று
….கனற்கவிஞன் பாரதியும் சொல்லி வைத்தான்.
புவியினிலே பாரதிக்குப் பாதை நெய்தார்
….புரட்சியான கருத்தெல்லாம் இவரின் வேரே!
மிகையின்றிச் சொல்கின்ற ஒருவர் பெரியார்
….மேதினியில் இவரைத்தான் கவிஞர் என்றார்
வகையற்ற தமிழினத்தை வாழ வைக்க
….வரிசையிலே இவரைப்போல் கவிஞர் வந்தால்
திகைப்பற்றுத் தீர்த்திடலாம் தமிழர் இன்னல்
….தெளிவாக இவர்கவிஞர் முதலாய் ஈற்றாய்.
தகைமையிலே தமிழ்க்குடியின் மடமை போக்கி
….தன்மானம் மண்மானம் காத்திட் டாரே!
மதியொன்று முகங்காட்டும் முகில் கிழித்து
….மன்னுயிரும் மகிழ்ந்திடவே வானில் தோன்றும்
நதியொன்று நடைபோடும் பெருக் கெடுத்து
….நாட்டினிலே வளத்தினையே நல்கிப் போகும்.
அதுபோன்றே பாவேந்தர் கவிதை ஆம்ஆம்
….ஆழியிலே முத்தாக அமையக் கண்டே
இதமாகச் சொன்னவரோ அறிஞர் அண்ணா
….இனமானப் பாவேந்தைச் சுட்டி னாரே!
குயிலொன்று பாடுவதைக் கேட்க இனிக்கும்
….குளிர்கின்ற மனமெல்லாம் கோடி இன்பம்.
மயிலொன்று ஆடுவதைக் காண இனிக்கும்
….மயங்காதார் யாருந்தான் இருக்க மாட்டார்.
வியப்பாகும் அருவியதன் முழவு மினிக்கும்
….வண்டிசைக்கும் யாழினிக்கும்; உள்ளம் பூக்கும்
இயல்பாக பாவேந்தர் பாவு மினிக்கும்
….என்கின்றார் பேரறிஞர் தமிழின் தென்றல்.
இன்றிருந்தால் பாவேந்தர் யாது செய்வார்
….எழுந்திடுதே கேள்வியொன்று எண்ணிப் பார்க்க
கன்றினுக்குப் பாலின்றி கறத்தல் போல
….கனிதமிழர் நலம்நோகப் பிடுங்கு வோரை
வென்றுவரும் முழக்கத்தை கவிதை யாக்கி
….வேள்விகளாய் தம்பாடல் ஆக்கிக் கொள்வார்
நன்றிதுவோ எனக்கேட்பார் அவரின் நாவில்
….நர்த்தனமாய் தமிழ்மகளும் ஆடு வாளே!
*
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பெயருக்கேற்ப ஓரடிக்கு எட்டு சீர்கள் கொண்டது. பொதுவாக அரையடி, அதாவது நான்கு சீர்கள் காய் காய் மா தேமா என்கிற இலக்கணக் கட்டுக்குள் இருக்கும். (ஆனால் மேற்கண்ட என் பாடல் காய் காய் மா மா என்னும் வாய்பாடு).
அந்த அரையடி வாய்பாடு எல்லா அடிகளிலும் முழுவதுமாகத் தொடர்ந்து வரும். ஒன்றாம் சீரும் ஐந்தாம் சீரும் மோனை ஒன்றிவரும். ஒவ்வொரு அடியிலும் முதற்சீரின் இரண்டாம் எழுத்து ஒன்றிவரும் வகையில் அடியெதுகை வரும். மேற்கண்ட பாடலில் முதலாம் பத்தியில் ‘செவியுதிர’, ‘தவிப்பினிலே’, ‘கவிஞருக்கு’, ‘புவியினிலே’, என்ற சீர்களில் அடியெதுகை அமைந்துள்ளமை காண்க.
ஐந்துக்கும் மேற்பட்ட நெடிய அடிகளைக் கொண்டது என்பதால் கழிநெடிலடி எனப்படுகிறது.
மேலும்…
(தொடர்வோம்