ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 3 – ஹைக்கூ இலக்கணம்

ஹைக்கூ உருவான வரலாற்றைப் பார்த்த நாம், அடுத்து ஒரு ஹைக்கூ எப்படி எழுதப்பட வேண்டும் என்ற அதன் மரபான இலக்கணத்திற்குள் நுழைய வேண்டும்.

வெறுமனே மூன்று வரிகளில் எதை எழுதினாலும் அது ஹைக்கூவாகிவிடாது. ஜப்பானிய மரபில் இதற்கு மிகத் துல்லியமான, கறாரான சில விதிகள் இருக்கின்றன.

முதலாவது மற்றும் மிக முக்கியமான விதி அதன் வடிவம் சார்ந்த 5-7-5 என்ற கணக்கு. இதைச் சொற்களின் எண்ணிக்கை என்று பலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். உண்மையில் இது ஜப்பானிய மொழியின் ஒலியசைகளைக் (சொல்லோசை அல்லது அசை) குறிக்கும் கணக்காகும். உதாரணத்துக்கு நேர் நேர் – தேமா – இது இரண்டு அசை கொண்ட ஒரு சொல் அல்லது சீர்.

ஹைக்கூவிற்கு முதல் வரியில் ஐந்து ஒலியசைகள், இரண்டாம் வரியில் ஏழு ஒலியசைகள், மூன்றாம் வரியில் மீண்டும் ஐந்து ஒலியசைகள் என மொத்தம் பதினேழு ஒலியசைகளில் கவிதை முற்றுப்பெற வேண்டும். ஜப்பானிய மொழியின் கட்டமைப்புக்கு இந்தச் சுருக்கமான ஒலியசை இலக்கணம் மிகக் கச்சிதமாகப் பொருந்திப் போனது.

இரண்டாவது மிக முக்கியமான விதி பருவகாலக் குறியீடு. மரபான ஹைக்கூ என்பது இயற்கையோடு நேரடித் தொடர்புடையது. எனவே, கவிதையில் ஏதேனும் ஒரு சொல் கட்டாயமாக ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தை உணர்த்துவதாக இருக்க வேண்டும். உதாரணமாக, செர்ரி பூக்கள் வசந்த காலத்தையும், தவளை கோடையையும், நிலவு இலையுதிர் காலத்தையும், பனி குளிர்காலத்தையும் குறிக்கும் குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டன.

இந்தக் குறியீடு கவிதைக்கு ஒரு பரந்த காலவெளியை மிக எளிதாக வழங்கிவிடுகிறது. ஒரு சிறு பூச்சியையோ அல்லது மரத்தையோ குறிப்பிடும்போது, அது பிரபஞ்சத்தின் எந்தப் பருவத்தில் நிகழ்கிறது என்பதை இந்த ஒற்றைச் சொல் வாசகனுக்கு உணர்த்திவிடும்.

மூன்றாவது மற்றும் கவிதையின் ஆன்மாவாகக் கருதப்படும் விதி வெட்டுச்சொல். பதினேழு ஒலியசைகளில் ஓடும் ஒரு கவிதையை இரண்டாக வெட்டி, உணர்வை மடைமாற்றும் வேலையை இது செய்கிறது.

இரண்டு வெவ்வேறு காட்சிப் படிமங்களுக்கு இடையே ஒரு மௌனத்தை அல்லது சிந்தனைக்கான இடைவெளியை உருவாக்குகிறது. வாசகன் அந்த இடைவெளியில் தன் கற்பனையைக் கொண்டு நிரப்பும்போதுதான் கவிதை முழுமையடைகிறது.

தமிழில் நாம் இதை ஒரு ஆச்சரியக்குறியாகவோ அல்லது ஒரு சிறு கோடாகவோ புரிந்து கொள்ளலாம். பாஷோவின் தவளைக் கவிதையில், ‘பழைய குளம்’ என்ற வரிக்கான நிசப்தத்திற்கும், ‘நீரின் ஓசை’ என்ற வரிக்கான சலனத்திற்கும் நடுவில் உள்ள வெட்டுச்சொல்தான் அந்த ஹைக்கூவின் உயிர்நாடி. இந்த மூன்று விதிகளும் இணைந்ததுதான் ஒரு செவ்வியல் ஜப்பானிய ஹைக்கூ. குறைவான சொற்களில், இயற்கையின் ஒரு துளியைக் காட்டி, ஒரு பெரிய தத்துவத் திறப்பை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம்.

(தொடரும்)

Series Navigation<< ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 2 – ஹைக்கூவின் வேர்கள்

Author

Related posts

விசுவநாதபுரி – 1

மருத்துவர் பக்கம் – 35: பூட்டிய காருக்குள் நிகழும் மரணங்கள்

அசுரவதம் – பாகம் 22: ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி..