திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 2

தெலுங்கு மூலம்ஜாஃபர் பாஷா

காலம் ஒரு இறக்கையை முறித்துவிட்டால் பறக்க முடியாத
ஒற்றைச் சிறகு தும்பிகளின் கூட்டத்தினிடையே போய் நின்று
ஜோடிச் சிறகுகளின் நிறம் மங்கிவிட்டதென்று புலம்பித் தள்ளுவாய்

அழுதுகொண்டிருப்பாய் இடையறாது
இன்றைய நாள் உன்னோடது இல்லையென்றோ உனக்கான நாள் வராதென்றோ

பழைய ஆழமான காயங்களைச் சுவர் புதிய காலண்டரால் மூடுவதுபோல்
யுகங்கள் பழமையான துயரங்கள்மீது துளிகளாய்ச் சிந்திகொண்டு
வெளியில் சிரிப்பது போல் நடிப்பாய்

நம்முடையதல்லாக் காலத்தில் கசந்த கலக்கங்களின் மரத்தில்
கண்ணீர்ப் பூக்கள் மலர்வது சகஜமே
ஒருவேளை இந்த இரகசியத்தை உனக்கு இன்னும் யாரும் சொல்லாமல் இருக்கலாம்

நடந்தால் விழுந்துவிடுவாயென்று பயம்
விழுந்தால் எழ மாட்டேனென்ற அவநம்பிக்கைப் பாலத்தின் மேல்
வாழ்க்கையைத் தவழ்ந்து கடந்து கொண்டிருப்பாய்.

அலட்சியமாய் அடியெடுத்து வைப்பதையே நடையென்று நினைத்துக்கொள்வாய்
தவிர
உண்மையில் எப்போதாவது
நிலத்திற்கும் காலிற்கும் இடையில் நடக்கும் உரையாடலை ரசித்தது உண்டா.?
குதிகாலுக்கும் மண் துகளுக்கும் இடையில் காதலைத் தளிர்க்கச் செய்ததுண்டா.??

புலிப் பயத்தால் காட்டை விட்டு வெளியேறிய மான் குட்டி
கடைசியில் தெரு நாய்களுக்கு இரையானதுபோல்
கல்லெறிந்தால் நொறுங்கிப் போகும் கண்ணாடியை மனசாகச் சுமந்திருக்கும் வரை காலம்
புலிநகமோ நாயின் பல்கோடோ தப்பித்துத் திரிவது அசாத்தியம்.

மறந்துபோக வேண்டும்
தீங்கினை நினைவுறுத்திய விடியலை
அந்த விடியலை உசுப்பிவிட்ட இதயத்தை
அனைத்தையும் மறந்துபோக வேண்டும்

வானக் கிண்ணத்திலிருந்த வெளிச்சத்தை எல்லாம் விழுங்கிவிட்டு
விக்கலோடு உன்முன்னால் வந்த இந்த இரவுக்கு
கொஞ்சம் போலக் கண்ணீர் புகட்டினாலும் சரி
விடிவதற்குள்ளே எல்லாவற்றையும் மறந்துபோக வேண்டும்

காலத்திற்குத் தாகமெடுக்கும்போதெல்லாம்
நெஞ்சின் ஈரத்தைக் கண் வாளியால் இறைக்கவிட வேண்டும்
அதன் பிறகே
நீர் வற்றிய கிணறு போன்ற தேகம்
ஊற்றெடுக்கும் கனவுகளின் நீரூற்றைக் கனவு காணும்

ஓர் எதிர்பாராக் கணத்தில் ஆயிரம் பற்களின் கோரமான வடிவத்தோடு
உன் முன் தோன்றும் கேள்வியைக் கண்டு நீ திடுக்கிடுவாய்
ஆனால் கேள்வி பன்மயமானது

சிதைத்துவிட்டு வெறிப்பிடித்தது போல் சிரிக்கும்போதே
நிலைநிறுத்தி நெஞ்சோடு அணைத்துக்கொள்ளவும் வல்லது

உண்மையில்
கனவிலும் துரத்தும் கேள்விகள் இருந்தால்தானே
விழித்திருக்கையில் வெற்றிகளை வேட்டையாட முடியும்.

“எல்லாம் நம்ம நல்லதுக்குதான்”

நீ எழுதவேண்டிய புத்தம் புதிய காவியத்திற்கு
அழகியத் தலைப்பும் இதுவே
தொடர்ந்து நீளும் உன் கண்ணீர்க் கதைக்குக்
கடைசி வாக்கியம் கூட இதுவே.

Series Navigation<< திருவை மு.இரா. கவிதைகள் – 7

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

Related posts

எண்ட் டோஹ் த்ரெ – 6

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 3 – ஹைக்கூ இலக்கணம்

தான வீர சூர கர்ணன் – 6