Home இதழ்கள்இதழ் 14தான வீர சூர கர்ணன் – 6

தான வீர சூர கர்ணன் – 6

by Iyappan Krishnan
0 comments
This entry is part 6 of 6 in the series தான வீர சூர கர்ணன்

கல்வி மறுக்கப்பட்டதா?

கர்ணனின் வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லப்படும் மிகப்பெரிய அநீதியாகப் பலரும் கருதுவது அவனுக்குக் கல்வி மறுக்கப்பட்டது என்பதைத்தான். தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்த சூதனின் மகன் என்பதால் துரோணாச்சாரியார் அவனுக்கு வில்வித்தை கற்றுத்தர மறுத்துவிட்டார் என்றும், அந்த அவமானத்தால்தான் அவன் வேறு வழியின்றிப் பரசுராமரிடம் சென்று தான் ஒரு பிராமணன் என்று பொய் சொல்லிப் படிப்பு கற்றான் என்றும் ஒரு மாபெரும் கட்டுக்கதை நம்மிடையே உலா வருகிறது.

ஆனால், உண்மையில் நடந்தது என்ன?

சிவாஜி கணேசனின் ‘கர்ணன்’ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை இங்கே நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

ஆயுதப் பயிற்சிகள் முடிந்து அரங்கேற்றம் நடக்கும் இடத்தில் கர்ணன் சவால் விட்டுக் கொண்டே வருவான். அப்போது குறுக்கிடும் கிருபாச்சாரியார், அவனது குலம் மற்றும் கோத்திரம் என்ன என்று கேள்வி எழுப்புவார். அதற்குப் பதிலளிக்கும் கர்ணன்,

“துரோணரின் மாணவர்களில் நானும் ஒருவன்”

என்று கம்பீரமாகக் கூறுவான். அதன் பின் நடந்தது முக்கியமான ஒன்று, ஆம் கர்ணன் அந்த அரசர்களின் போட்டி அரங்கத்திலேயே தன் ஆற்றலையும் காட்டுவான். யாரும் அவனைத் தடுக்கவில்லை.

அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த ஒற்றை வசனத்திலேயே இதிகாசத்தின் உண்மை ஒளிந்திருக்கிறது. வியாச மகாபாரதம் கூறுவதும் இதைத்தான், துரோணர் கர்ணனுக்குக் கல்வியை மறுக்கவில்லை.

உண்மையில் அவரும் கர்ணனின் ஆசாரியர்களில் ஒருவர்தான்.

அஸ்தினாபுரத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் துரோணர் ஆயுதப் பயிற்சி அளித்தபோது, அந்தப் பயிற்சிப் பள்ளியில் கர்ணனும் ஒரு மாணவனாகவே இருந்தான்.

ஆதி பர்வம் – சம்பவ பர்வத்தில் இந்த நிகழ்வு மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“The ஆதி பர்வம் – சம்பவ பர்வம், பிரிவு CXXXIV

and the Andhakas, and princes from various lands, and the (adopted) son of Radha of the Suta caste, (Karna), all became pupils of Drona. But of them all, the Suta child Karna, from jealousy, frequently defied Arjuna…”

விருஷ்ணிகள், அந்தகர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளவரசர்கள் மற்றும் சூத குலத்தைச் சேர்ந்த ராதையின் மகனான கர்ணன் என அனைவரும் துரோணரின் சீடர்கள் ஆகினர் என்றும், ஆனால் அவர்கள் அனைவரிலும் கர்ணன் பொறாமையின் காரணமாக அடிக்கடி அர்ஜுனனுக்குச் சவால் விட்டான் என்றும் இதிகாசம் கூறுகிறது.

இதிலிருந்து ஒரு பேருண்மை வெளியாகிறது. கர்ணன் அடிப்படை வில்வித்தையைத் துரோணரிடம்தான் கற்றான். அங்கே எந்த சாதிப் பாகுபாடும் காட்டப்படவில்லை. கல்வி மறுக்கப்படவில்லை.

அப்படியென்றால், அவன் ஏன் பரசுராமரிடம் செல்ல வேண்டும்? அதற்கும் சாதியோ, புறக்கணிப்போ காரணமா என்றால் இல்லை, அவனது அதீத ஆணவமும், விஜயனை வெல்ல வேண்டும் என்னும் வெறியும், போட்டி மனப்பான்மையும், பேராசையுமே காரணம்.

அர்ஜுனன் தனது திறமையாலும், குருபக்தியாலும் துரோணரின் நன்மதிப்பைப் பெற்றுச் சிறந்த மாணவனாக உருவெடுத்தான். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத கர்ணன், எப்படியாவது அர்ஜுனனை வீழ்த்த வேண்டும் என்ற வெறியில் துரோணரை அணுகி, உலகை அழிக்கும் வல்லமை கொண்ட பிரம்மாஸ்திரம் என்னும் திவ்ய அஸ்திரத்தை தனக்குக் கற்றுத் தருமாறு கேட்டான்.

கர்ணனின் பேராசைத் தன்மையும், நிலையற்ற மனத்தையும் அறிந்த துரோணர், தகுதியற்ற ஒருவனின் கையில் அது கிடைத்தால் பேருபத்திரவம் விளைவிக்கும் என்பதால் மறுத்துவிட்டார்.

உண்மைதான், கர்ணனிடம் அர்ஜுனன் மீதான போட்டியும் பொறாமையும், அகந்தையும், அதர்ம சிந்தனையும் இருந்ததை ஆரம்பத்தில் இருந்தே துரோணர் நன்கு அறிந்திருந்தார். அவனது குணநலன்களின் அடிப்படையில்தான் அந்தப் பேராயுதம் மறுக்கப்பட்டதே தவிர, அவனது குலத்தின் அடிப்படையில் அல்ல.

தன் மகனான அஸ்வத்தாமனுக்குமே கூட போர்க்கலைகள் அனைத்தையும் துரோணர் கற்றுக் கொடுத்தார். ஆனால், பிரம்மாஸ்திரம் போன்ற மிக சக்திவாய்ந்த தெய்வீக ஆயுதங்களைக் கையாள மிகுந்த தவ வலிமையும், கட்டுப்பாடும், நேர்மையும் தேவை என்று அவனுக்கு அதை கற்றுத் தரவில்லை.

துரோணர் அஸ்வத்தாமனிடம் போர்க்கலைக்கான திறமையைக் கண்டாரே தவிர, அதற்குரிய மன அடக்கத்தையும், சாந்த குணத்தையும் காணவில்லை. அஸ்வத்தாமன் சற்றே அவசரக்காரனாகவும், கோபக்காரனாகவும், பழிவாங்கும் குணம் கொண்டவனாகவும் இருந்ததை துரோணர் அறிந்திருந்தார்.

பின்பு மகன் விடாப்பிடியாகக் கேட்டதால், துரோணர் அந்த அஸ்திரத்தை ஏவும் முறையை (ஆவாகனம்) மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். “நீ எக்காரணத்தைக் கொண்டும் இதை அவசரத்தில் ஏவக்கூடாது” என்று எச்சரித்தே கொடுத்தார்.

அப்படி இருக்க கர்ணன் போன்ற நிலைத்தன்மை இல்லாத வீரனுக்கு அவர் மறுத்ததில் தவறேதும் இல்லை.

ஆனால் தனக்குக் கிடைக்காத அந்த அஸ்திரம் எப்படியாவது அர்ஜுனனுக்குக் கிடைத்துவிடும் என்று அஞ்சிய கர்ணன், துரோணரை விட்டு நீங்கி மகேந்திர மலைக்குச் சென்றான். அங்கே தவமிருந்த பரசுராமரைச் சந்தித்து, தான் பிருகு வம்சத்தைச் சேர்ந்த ஒரு பிராமணன் என்று அப்பட்டமான பொய்யைச் சொல்லி அவரிடம் சீடனாகச் சேர்ந்தான்.

ஒரு அடிப்படை வாழ்வாதாரத்திற்காகவோ, ஆரம்பக் கல்விக்காகவோ அவன் இந்தப் பொய்யைச் சொல்லவில்லை. உலகை அழிக்கும் ஒரு பேராயுதத்தை, யாரும் எளிதாகப் பெற முடியாத, அரிதான பிரம்மாஸ்திரத்தை எப்படியாவது அடையத் தன் குருவை ஏமாற்றத் துணிந்தான்.

ஒரு நாள் பரசுராமர் கர்ணனின் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தபோது, அலர்க்கம் என்ற ஒரு கொடிய வண்டு அவனது தொடையைத் துளைத்தது. குருவின் உறக்கம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காகக் கர்ணன் அந்த வலியைக் பொறுத்துக்கொண்டு ரத்தம் சிந்த அமர்ந்திருந்தான். விழித்தெழுந்த பரசுராமர், ரத்தம் வழிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இத்தனை பெரிய கொடூரமான வலியை ஒரு க்ஷத்திரியனால் மட்டுமே தாங்க முடியும் என்பதை உணர்ந்த பரசுராமர், கர்ணனிடம் உண்மையைக் கேட்டறிந்தார். இந்த இடத்தில் பரசுராமர் நடந்துகொண்ட விதத்தையும், அவர் அளித்த சாபத்தின் தன்மையையும் நாம் நுட்பமாகக் கவனிக்க வேண்டும்.

பரசுராமர் ஆத்திரத்தில் கண்மூடித்தனமாக அவனைக் கொடூரமாகச் சபிக்கவில்லை. மாறாக, இவ்வளவு கொடிய வலியையும் குருவுக்காகப் பொறுத்துக்கொண்ட அவனது இயல்பைக் கண்டு வியந்து, உனக்கு நிகரான வீரன் உலகத்தில் எவரும் இருக்கமாட்டார்கள் என்று மனதாரப் பாராட்டினார்.

ஆனாலும், ஒரு குருவிடம் பொய் சொல்லிக் கற்பது என்பது தர்மத்திற்கு முரணானது.

பிராமணர்கள் அபிவாதே செய்வதை அறிந்தவர்களுக்கு இந்தப் பொய் ஒரு நாள் சொன்ன பொய் இல்லை என்பது தெளிவாக விளங்கும்.

ஒரு பிராமண மாணவன் குருகுலத்தில் இருக்கும்போது, தினமும் மும்முறை சந்தியாவந்தனம் செய்வதும், குருவை வணங்கும்போது அபிவாதே சொல்லித் தன்னை அறிமுகம் செய்வதும் வழக்கம். இதில் தன் கோத்திரம், ரிஷி பரம்பரை ஆகியவற்றைச் சொல்ல வேண்டும்.

ஆக இது ஒரு முறை சொன்ன பொய் அல்ல. பல வருடங்களாக, ஒவ்வொரு நாளும் தன் குருவின் கண்களைப் பார்த்துச் சொன்ன பொய். குருகுல வாசத்தில் குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவு மிகப் புனிதமானது. அதை ஒவ்வொரு நாளும் கர்ணன் தன் பொய்யால் அசுத்தப்படுத்திக் கொண்டே இருந்தான்.

வஞ்சகத்தால் பெறப்பட்ட ஒரு பேராயுதம் அவனிடம் நிலைக்கக் கூடாது என்பதால்,

“அஸ்திரங்கள் மீது கொண்ட பேராசையினால் நீ என்னிடம் வஞ்சகமாக (Deceit) நடந்து கொண்டாய்… எனவே இந்த பிரம்மாஸ்திரம் உன் இறுதி நேரத்தில் நினைவுக்கு வராமல் போகட்டும்.” என்று சபித்தார்.

ஆனால் திரைப்படங்களில் காட்டுவது போல, போர்க்களத்தில் அர்ஜுனனைக் கண்டதுமே கர்ணன் தான் கற்ற வித்தைகள் அனைத்தையும் மறந்துவிட்டு நிராயுதபாணியாக நிற்கவில்லை.

கர்ண பர்வத்தில் நடக்கும் இறுதிப் போரில் கர்ணன் அர்ஜுனனுக்கு எதிராகப் பிரம்மாஸ்திரத்தை மிகத் தெளிவாகவே ஏவுகிறான். அதுமட்டுமின்றி, அர்ஜுனனின் படைகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கும் கொடிய ‘பார்கவாஸ்திரத்தையும்’ கர்ணன் அந்தப் போரில் வெற்றிகரமாகப் பயன்படுத்துகிறான்.

அப்படியென்றால் பரசுராமரின் சாபம் எப்போதுதான் வேலை செய்தது?

வியாச பாரதம் மனித மனங்களின் ஆழத்தைத் தோலுரித்துக் காட்டும் அதன் உளவியலில் உச்சம் தொடுகிறது. கர்ணனுக்கு இறுதித் தருவாயில் நிகழ்ந்தது அது ஒரு மாபெரும் உளவியல் வீழ்ச்சி.

அந்த இறுதித் தருணத்தைக் கவனியுங்கள். கர்ணன் களத்தில் முற்றிலும் தனித்து விடப்பட்டிருக்கிறான். அவனது தேரோட்டியான சல்லியன் அவனைப் புறக்கணித்துவிட்டுச் சென்றுவிட்டான். சேற்றில் புதைந்த மாபெரும் தேர்ச் சக்கரத்தைத் தனி ஒருவனாகத் தூக்க முயன்று அவனது உடல் முற்றுமுழுதாகச் சோர்ந்து போயிருக்கிறது. மறுபுறம் அவனது வாழ்நாள் எதிரியான அர்ஜுனன் முழு பலத்தோடு சர்வ வல்லமையோடு நிற்கிறான்.

இந்தக் கொடும் தனிமைக்கும் உடல் சோர்வுக்கும் நடுவே, மாபெரும் உளவியல் தாக்குதலைக் கிருஷ்ணன் தொடுக்கிறார்.

திரௌபதியின் துகிலுரிப்பு, அரக்கு மாளிகைச் சதி, சூதாட்டம், சிறுவன் அபிமன்யுவின் கொடூரக் கொலை என கர்ணன் செய்த அத்தனை அதர்மங்களையும், பாவங்களையும் கிருஷ்ணன் அடுக்கடுக்காக அவனது முகத்திற்கு நேராக வீசுகிறார்.

“கர்ணா! திரௌபதியை ஏகவஸ்திரையாய் (ஒற்றை ஆடையோடு) சபைக்கு இழுத்து வந்து துகிலுரிந்தபோது உன் ‘தர்மம்’ எங்கே போயிருந்தது? அவளைப் பார்த்து ‘உனக்கு ஐந்து கணவர்கள் இருந்தும் நீ நாதியற்றவள், வேறு கணவனைத் தேடிக்கொள்’ என்று நீ கேலி செய்தாயே, அப்போது உன் தர்மம் எங்கே தூங்கிக் கொண்டிருந்தது?”

“யுதிஷ்டிரனைச் சூதாட அழைத்து, வஞ்சகமாக அவனது நாட்டைப் பறித்தீர்களே, அந்தச் சதியின் போது உன்னுடைய தர்மம் எங்கே போயிருந்தது?”

“போர்க்களத்தில் அநியாயமாக, ஆயுதமே இல்லாத சிறுவன் அபிமன்யுவை நீங்கள் ஆறு மகாரதர்கள் சேர்ந்து சூழ்ந்து நின்று கொடூரமாகக் கொன்றீர்களே, அப்போதாவது இந்தத் தர்மம் உனக்கு நினைவிருந்ததா?”

என்று கிருஷ்ணன் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் கர்ணனின் மனசாட்சியைச் சவுக்கால் அடிப்பது போலத் துளைக்கிறது.

ஒருபுறம் மரண பயம், மறுபுறம் கைவிடப்பட்ட தனிமை, அதற்கும் மேலாகத் தான் செய்த ஈனச் செயல்கள் அனைத்தும் தன் கண் முன்னே வந்து நிற்கும்போது ஏற்படும் மாபெரும் குற்றவுணர்ச்சி. இந்த மூன்றும் ஒருசேரத் தாக்கும் அந்த உச்சக்கட்ட மன உளைச்சலில், எந்தவொரு மனித மூளையும் ஸ்தம்பித்துவிடும்.

வியாச பாரதத்தில் – கிசாரி மோகன் கங்கூலி அவர்களின் மொழிபெயர்ப்பில்

“Hearing these words of Vasudeva, Karna was filled with shame and hung down his head. He could give no reply, but continued to fight with Partha.”

அதாவது,

கிருஷ்ணரின் வார்த்தைகளைக் கேட்ட கர்ணன், மிகுந்த வெட்கத்தாலும் குற்ற உணர்ச்சியாலும் தன் தலையைத் குனிந்து கொண்டான். அவனால் மறுப்பு ஏதும் சொல்ல முடியவில்லை என்று சொல்லி அடுத்து நகர்ந்துவிடுகிறார் வியாசர்.

அந்த அதீத பதற்றத்திலும், குற்றவுணர்ச்சியிலும் எப்படி ஒரு தியான மந்திரம் நினைவுக்கு வரும்?

பரசுராமரின் சாபம் பலித்தது என்பதைத் தாண்டி, குற்றவுணர்ச்சியாலும் மன உளைச்சலாலும் ஒரு மனிதனின் சிந்தனை எப்படி முற்றிலுமாகச் சிதைந்து போகும் என்பதற்கு இதைவிடச் சிறந்த தர்க்கரீதியான உதாரணம் இருக்க முடியாது. சாபம் என்பது அந்த உளவியல் வீழ்ச்சிக்கான ஒரு குறியீடு மட்டுமே.

ஆக, கர்ணன் கல்வி மறுக்கப்பட்ட ஓர் ஏழைச் சூதனும் அல்ல, அவனது வித்தைகள் முழுவதும் போர்க்களத்தில் மறந்துபோகவும் இல்லை.

பரசுராமர் கொடுத்த சாபத்தை நாம் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

“ஒரு பிராமணன் அல்லாதவனிடம் இந்த அஸ்திரம் நிலைக்காது”

என்று அவர் சொன்னதன் அடிப்படை இதுதான். பிராமணீயம் என்பது இங்கே சாதியைக் குறிக்கவில்லை. அது மன அடக்கத்தையும், தர்ம சிந்தனையையும், அக அமைதியையும் குறிப்பது.

தன் சுயநலத்திற்காகப் பொய்யுரைத்த அவனது அதர்மச் செயல்களும், அது தந்த குற்றவுணர்ச்சியுமே, அவனது இறுதி மூச்சின்போது அவனது மனதைச் சிதைத்து அழிவுக்கு ஆணிவேராக அமைந்தன என்பதே வியாச பாரதம் உரைக்கும் உளவியல் பேருண்மையாகும்.

(தொடரும்)

Series Navigation<< தான வீர சூர கர்ணன் – 5

Author

You may also like

Leave a Comment