Home நாவல்தான வீர சூர கர்ணன் – 5

தான வீர சூர கர்ணன் – 5

by Iyappan Krishnan
0 comments
This entry is part 5 of 5 in the series தான வீர சூர கர்ணன்

கர்ணன் கொடையாளியா?
மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்

​சிவாஜி கணேசனின் ‘கர்ணன்’ திரைப்படத்தில் வரும் புகழ்பெற்ற பாடல் இது.

இப்படிப் கர்ணனின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து வரும் செவிவழிக் கதைகள் ஏராளம். கர்ணனின் கொடைத்தன்மை குறித்த உண்மையை வியாச பாரதத்தின் வழியே பார்க்கும் முன்பு, கொடை அல்லது வள்ளல் தன்மை என்றால் என்ன என்பதை வரையறுத்துவிடலாம்.

​கொடை என்றால் தியாகம். எந்தவொரு கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ இல்லாமல், மனம் உவந்து பிறருக்குத் தானமாகத் தருவது. தன்னிடம் இருப்பதைப் பிறர் நலனுக்காக, பிறர் வாடுவதைக் கண்டு தன் மனம் வாடி வறியோர்க்கு வாரி வழங்குவதே உண்மையான வள்ளல் தன்மை.

சீதக்காதி வள்ளல் பற்றிய கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். படிக்காசுப் புலவர் தன் வறுமைக்காக அவரிடம் சென்று உதவி கேட்க, ஏதோ காரணத்தால் உடனடியாகத் தர முடியாமல் போனது. ‘ஒரு வாரத்தில் தருகிறேன்’ என்று அனுப்பி வைக்கிறார் சீதக்காதி.

துரதிர்ஷ்டவசமாகப் புலவர் திரும்ப வரும் போது அவர் இறந்து விட்டார். அப்போது சீதக்காதியின் உறவினர் வீட்டிற்குள் இருந்து ஒரு மோதிரத்தைக் கொண்டு வந்து, இறக்கும் தருவாயில் சீதக்காதி, “புலவர் வந்ததும் கொடுக்கச் சொல்லி” இந்த மாணிக்கம் பதித்த பொன் மோதிரத்தைத் தந்தார் என்று சொல்லிப் புலவரிடம் தருகிறார்.

இதுவல்லவா வள்ளல் தன்மை? பிறரின் துயர் அறிந்து எந்தப் பிரதிபலனும் பாராது கொடுப்பதல்லவா கொடை?

​அப்படியானால் கர்ணன் யார் வந்து எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுத்தானா? இந்திரனே வந்து கவச குண்டலம் கேட்ட போது கொடுத்தானே? இது கொடை இல்லையா என்ற கேள்விகள் எழும். கர்ணனுக்கு எப்போது இந்தக் கொடைத்தன்மை ஏற்பட்டது? அவன் இயல்பிலேயே கொடைத்தன்மை கொண்டவனா என்றால், இல்லை. அவன் யார் எது கேட்டாலும் தருவேன் என்று உறுதி எடுத்ததன் பின்னணியே வேறானது.

​வனபருவத்தில் (பகுதி 255) இதற்கான விடை இருக்கிறது. தருமன் செய்த மாபெரும் இராஜசூய வேள்வியைப் பார்த்துப் பொறாமையால் மனம் வெதும்பிய துரியோதனன், தானும் ஒரு வேள்வியைச் செய்ய நினைக்கிறான். ஆனால் அது தருமன் செய்த யாகத்திற்கு ஈடாகாது என்று மற்றவர்கள் சொல்ல, கர்ணன் துரியோதனனுக்கு ஆறுதல் கூறுகிறான்.

​”கவலை வேண்டாம் துரியோதனா, அர்ஜுனனை நான் கொல்லாதவரை, நான் யாரையும் எனது பாதத்தைக் கழுவ விட மாட்டேன்; இறைச்சியை உண்ணாதிருப்பேன்; நான் அசுர நோன்பை நோற்பேன். எவர் என்னிடம் எதைக் கோரினாலும், அது என்னிடம் இல்லை என்று எப்போதும் சொல்ல மாட்டேன். பாண்டவர்களை அழித்த பின் நாம் ராஜசூய யாகம் செய்வோம்” என்று சபதம் செய்கிறான்.

ஆக, அவன் யார் எது கேட்டாலும் கொடுப்பேன் என்று முடிவெடுத்ததன் மூல காரணம், பாண்டவர்கள் மீதிருந்த பொறாமையும், அர்ஜுனனைக் கொல்வேன் என்ற வீராப்பும்தானே தவிர, அது அவனது இயல்பான ஈகைக் குணம் கிடையாது.

​சரி, கர்ணன் இந்திரனுக்குக் கவச குண்டலங்களைத் தந்தது தானமா, கொடையா என்பதைப் பார்ப்போம். இந்தக் கவச குண்டலங்கள் அவனுக்கு இயற்கையாக அமைந்ததல்ல; கர்ணன் பிறந்த போது, அதிதி என்ற தேவதையிடம் இருந்து வாங்கிச் சூரியன் கர்ணனுக்கு அளித்ததாகவே வனபருவம் (பகுதி 305) கூறுகிறது.

​பின்னர், இந்திரன் அந்தணனாய் நின்று கவச குண்டலங்களை யாசிக்க வருகிறான். இந்திரன் வரப்போகிறான் என்ற செய்தியைச் சூரியன் முன்னரே கர்ணனிடம் வந்து எச்சரித்து விடுகிறான். இந்திரன் வந்ததும், கர்ணன் உடனே கவசத்தை எடுத்துத் தந்துவிடவில்லை.

வனபருவம் (பகுதி 308) இதைத் தெளிவாகக் காட்டுகிறது.

​உடலோடு ஒட்டிப்பிறந்த கவசத்தையும் குண்டலங்களையும் இந்திரன் கேட்டதும் கர்ணன், “ஓ! அந்தணரே, நான் உமக்கு வீடு, தோட்டத்துடன் கூடிய நிலத்தையும், அழகிய காரிகைகளையும், பசுக்களையும், கழனிகளையும் கொடுப்பேன்; ஆனால் எனது கவசத்தையும், காது குண்டலங்களையும் உமக்குத் தர இயலாதவனாக இருக்கிறேன்! இவற்றாலேயே நான் கொல்லப்பட முடியாதவனாக இருக்கிறேன். இவற்றை இழந்தால் நான் எதிரிகளால் வெல்லத்தக்கவன் ஆகிவிடுவேன்” என்று பலவாறாக மறுக்கிறான்.

‘ஈ’ என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர்,
‘ஈயேன்’ என்றல் அதனினும் இழிந்தன்று;
‘கொள்’ எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்,
‘கொள்ளேன்’ என்றல் அதனினும் உயர்ந்தன்று;

​என்று புறநானூற்றில் வல்வில் ஓரியைக் கழைதின்யானையார் பாடியதுதான் உண்மையான வள்ளல் தன்மைக்கான இலக்கணம்.

ஆனால் கர்ணனோ, ‘ஈயேன்’ என்று பலமுறை மறுக்கிறான். கர்ணன் செய்த சபதம் என்ன? ‘யார் எது கேட்டாலும் தரமாட்டேன் என்று சொல்ல மாட்டேன்’ என்பதே. ஆனால் இங்கே கர்ணன் பலமுறை இந்திரனிடம் தன் கவசத்தைத் தரமாட்டேன் என்று உறுதியாகக் கூறுகிறான். சொன்ன சொல் தவறிய குற்றமும் சேர்கிறது.

​கர்ணன் எவ்வளவு மறுத்தாலும் இந்திரன் விடாப்பிடியாகக் கவசத்தையே கேட்கிறான். வேறு வழியின்றி, இந்திரனை அடையாளம் கண்டுகொண்ட கர்ணன் தந்திரமாகப் பண்டமாற்று முறையில் பேரம்பேச ஆரம்பிக்கிறான்.

“தேவலோகத்தின் தலைவனான நீயே எனக்கு வரங்களை அளிக்க வேண்டும். கவசத்தைக் கொடுத்தால் நான் அழிவைச் சந்திப்பேன். எனவே, எனது குண்டலங்களையும், சிறந்த கவசத்தையும் எடுத்துக் கொண்டு அதற்கீடாகத் தடுக்கப்பட இயலாத வாசவி (இந்திரசக்தி) என்னும் கணையை எனக்கு அளிப்பாயாக! இல்லையெனில், நான் அவற்றை உனக்குத் தர மாட்டேன்!” என்று பேரம் பேசுகிறான்.

​”எனக்கு நீ அர்ஜுனனை அழிக்க வல்ல அஸ்திரத்தைக் கொடு, அப்பொழுதுதான் நான் என் கவச குண்டலங்களைத் தருவேன்” என்று பேரம் பேசி வாங்குவதுதான் கொடையா? அதுதான் வள்ளல் தன்மையா? ஒரு சுயநலப் பண்டமாற்று வியாபாரத்தைத்தான் உலகம் மாபெரும் தியாகம் என்று கொண்டாடி வருகிறது.

இறுதி மூச்சில் கொடுத்த புண்ணிய தானம் உண்மையா?
​கர்ணனின் கொடைத்தன்மைக்கு உச்சக்கட்ட உதாரணமாகச் சொல்லப்படுவது அவனது மரணத் தருவாயில் நடந்ததாகச் சொல்லப்படும் புண்ணிய தானம். கர்ணன் மரணத் தருவாயில் தேரில் சாய்ந்து கிடக்கும்போது, கிருஷ்ணன் அந்தணராக வந்து அவனது புண்ணியங்களைத் தானமாகக் கேட்டதாகவும், கர்ணன் தன் நெஞ்சில் வழிந்த ரத்தத்தால் புண்ணியங்களைத் தாரை வார்த்துக் கொடுத்ததாகவும் பலரும் நம்புகின்றனர். ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலும் இந்தப் புனைவைத்தான் நமக்குக் கற்பித்தது.

​ஆனால், வியாச மகாபாரதத்தில் இப்படியொரு நிகழ்வு எங்குமே கிடையாது. கர்ண பர்வத்தில், அர்ஜுனன் செலுத்திய ‘அஞ்சலிகம்‘ என்ற அஸ்திரம் கர்ணனின் கழுத்தில் பாய்கிறது. (கவனிக்கவும், கவசம் மார்பைக் காக்கும், ஆனால் அஸ்திரம் அவன் கழுத்தைத் தாக்கியது). அவன் தேர்ச் சக்கரத்தின் அருகே உடனடியாக மாண்டு வீழ்ந்தான் என்றுதான் வியாசர் பதிவு செய்திருக்கிறார்.

​மரணத் தருவாயில் கிருஷ்ணன் அந்தணராக வருவது, புண்ணிய தானம் கேட்பது என்பதெல்லாம் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வந்த நாடகங்களிலும், வில்லிபுத்தூரார் பாரதத்திலும் சேர்க்கப்பட்ட அதீத கற்பனைகளே தவிர, இதிகாச உண்மை அல்ல.

​கர்ணன் தன் இயலாமையைப் பண்டமாற்று வியாபாரமாக்கியவனே தவிர, வியாச பாரதத்தின்படி அவன் ஓர் ஈடு இணையற்ற வள்ளல் அல்ல.

(தொடரும்)

Series Navigation<< தான வீர சூர கர்ணன் – 4

Author

You may also like

Leave a Comment