‘ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்’ என்ற புத்தகத்தில் ஆசான் சுஜாதா அவர்கள் தனது முன்னுரையில் ஒரு மிக முக்கியமான கருத்தைப் பதிவு செய்திருப்பார். ஹைக்கூ என்னும் கவிதை வடிவம் ஜப்பானிலிருந்து வந்து தமிழுக்கு ஏற்ப மேலும் மாறி, மிகமிகப் பிரபலமாகி, சுலபமாக்கப்பட்டு, அடையாளமிழந்து, சமூகச்சாயம் ஏற்றி, மூன்று வரிகளுக்குள் எழுதப்பட்ட எல்லாக் கவிதைகளும் ஹைக்கூ என்ற கேவல நிலைக்கு வந்துவிட்டது.
உண்மையான ஹைக்கூக்களை அடையாளம் கண்டுகொள்ள இம்மாதிரியான புத்தகங்கள் தேவை என்று தோன்றி இது எழுதப்பட்டது என்றும், இதைப் படித்தப் பின் பல ஹைக்கூக்கள் எழுதப்படாமல் இருந்தால் இப்புத்தகத்தின் குறிக்கோள் நிறைவேறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருப்பார்.
நான் அவ்வளவு கடினமான வார்த்தைகளை உபயோகிக்கப் போவதில்லை. நான் சொல்வதெல்லாம், முதலில் அது என்ன என்பதை அறிந்துகொள்ளுங்கள் என்பதுதான்.
பாஷோ முதலானோர் எழுதிய பல ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளைப் படித்துப் பாருங்கள். அதிலிருந்து ஒரு தெளிவு கிடைத்தப் பின் அந்த வடிவத்தில் எழுத முயலுங்கள்.
புதுக்கவிதைக்கு அடுத்தபடியாகத் தமிழில் அதிக கவனமும், அதே சமயம் அதிக அளவில் வடிவச் சிதைவும் பெற்ற கவிதை வகை என்றால் அது ஹைக்கூவாகத்தான் இருக்க முடியும். ஒரு சாதாரண வாக்கியத்தை மடக்கி மூன்று வரிகளில் எழுதிவிட்டால் அது ஹைக்கூவாகிவிடும் என்ற ஒரு மேலோட்டமான புரிதல் நம் சூழலில் நீண்ட காலமாக நிலவுகிறது.
கவிதைக்குரிய நுட்பங்களோ, மொழியின் ஆழமோ இன்றி, வெறும் வார்த்தை அடுக்குகளை ஹைக்கூ என்ற பெயரில் நாம் பல இடங்களில் கடந்து வந்திருக்கிறோம்.
பாலூட்டத் தெரியவில்லை
இன்றைய தலைமுறை
தாய்மார்களுக்கு
*
நீர்த்துளி
உயிர்த்துளி
செடிகளுக்கு
*
மல்லிகை
உதிர்ந்து கிடக்கும்
செடியின் கீழ்
மேலே உள்ள வரிகளைப் படிக்கும்போது, இவை வெறும் செய்திகளாகவோ அல்லது சமூகக் கருத்துகளாகவோ மட்டுமே நிற்கின்றன.
இதை நான் எந்தத் தரப்புக்கும் எதிரான விமர்சனமாக முன்வைக்கவில்லை, மாறாகக் கவிதை என்ற வடிவத்தின் மீதான விமர்சனமாகவே பார்க்கிறேன். ஆனாலும் இவற்றை ஹைக்கூ எனக் கொண்டாடவும் ஒரு கூட்டம் இருக்கிறது. இந்தக் குறையைத்தான் ஔவையார் அன்றே மிக நேர்த்தியாகச் சாடினார்
விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் – அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று.
சரி மீண்டும் ஹைக்கூவிற்கே திரும்புலாம். இப்படிப்பட்ட வரிகளை ஹைக்கூ என எழுதுபவர்கள் வைக்கும் பிரதான வாதம்,
“இது ஒரு நல்ல கருத்தைச் சொல்கிறதல்லவா?” என்பதுதான்.
நல்ல கருத்துகளைப் பகிர வேண்டும் என்றால், அதை ஒரு நேரடியான வாக்கியமாகவோ அல்லது அதற்கெனவே இருக்கும் புதுக்கவிதை என்ற வடிவத்திலோ சொல்லலாமே?
ஒரு கருத்தைச் சொல்வதற்காக மட்டுமே ஒரு வாக்கியத்தை மூன்று வரியாக வெட்டுவது எப்படி ஹைக்கூ ஆகும்?
ஹைக்கூவிற்கு என்று தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன. அதற்கெனச் சில இலக்கணங்கள், அது உருவாக்கும் அகச் சலனங்கள் என ஒரு நுட்பமான தளம் இருக்கிறது. அதன் அடிப்படையை முழுமையாக உணர்ந்து எழுதப்படும் ஹைக்கூக்கள் மட்டுமே காலத்தைத் தாண்டி நீடித்து நிற்கும்.
இராமாயணத்தில் ஒரு காட்சி வரும். அனுமன் மகேந்திர மலையிலிருந்து இலங்கையை நோக்கிப் பெரும் விசை கொண்டு எம்பிப் பாய்வான். அவனது வேகத்தின் ஈர்ப்பால், சுற்றியிருந்த மரங்களும், பாறைகளும், கற்களும் நாமும் அவனுடன் வானில் பறக்கிறோம் என்ற மிதப்பில் அவனுடனேயே மேலெழுந்து வரும். ஆனால், ஒரு சில நூறடிகள் கடந்ததும், அந்த வேகம் தணிந்து அவை ஒவ்வொன்றாகக் கீழே விழுந்துவிடும். அனுமன் மட்டுமே கடலைத் தாண்டுவான்.
இலக்கியமும் அப்படித்தான். தரமான படைப்புகள் மட்டுமே காலம் முழுவதும் நிலைத்து நிற்கும். போலிகளும் மேலோட்டமான வரிகளும் காலப்போக்கில் உதிர்ந்துவிடும். ஆனால், இப்படிப்பட்ட உதிர்ந்துபோகும் வரிகளைக் கொண்டே ஹைக்கூ என்னும் கடலை நிரப்பினால், அதனுள் மூழ்கி உண்மையான கவிதை முத்தெடுப்பது வாசகனுக்கு மிகப்பெரிய சிரமமாகிவிடும். அதனாலேயே இந்த ஆரம்பக்கட்ட அறிமுகமும், செவ்வியலான ஹைக்கூ நோக்கிய பயணமும் நமக்கு அவசியமாகிறது
(தொடரும்)