மாலை சூரியன், இராவணன் தன் தோல்வியின் கோபத்தால் தன்னைச் சுட்டெரிக்கக்கூடும் என அஞ்சி மேற்கு மலைத் தொடர்களின் பின்னே ஒளியத் தொடங்கினான். அப்படி ஒளிந்து கொண்ட பின்பும், மண்டோதரியின் துயரநிலை அறிந்து அவள் இனி என்ன செய்யப் போகிறாள் என்பதைக் கவனிக்க தன் கிரணங்களை மட்டும் திரிகூட மலையில் படரவிட்டிருந்தான்.
திரிகூட மலையின் உச்சியில் அமைந்திருந்த மண்டோதரியின் அந்தப்புரம், அந்த மாலையின் மங்கலான ஒளியில் ஒரு பிரம்மாண்டமான சிறைச்சாலையைப் போலக் காட்சியளித்தது.
யாளிகளும், சிம்மங்களும், யானைகளும், இராட்சசப் பறவைகளுமென நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட கடினமானதும் அடர் நிறங்களைக் கொண்டதுமான பாறைத் தூண்களில் பதிக்கப்பட்டிருந்த மாணிக்கக் கற்களும், மரகதங்களும், நெய் விளக்குகளின் மெல்லிய ஒளியில் ரத்தத் துளிகள்போலவும், கண்ணீர்த் துளிகள்போலவும் மின்னின.
உள்ளே வருவதா வேண்டாமா எனத் தயங்கித் தயங்கிச் சாளரத்தின் வழியே வீசிய தென்கடல் காற்றில் வழமையான குளிர்மை இல்லாமல், உவர்ப்புச் சுவையும், கூடவே இலங்கையின் வரப்போகும் அழிவின் வாசனையும் கலந்திருப்பதாக மண்டோதரிக்குத் தோன்றியது.
அந்த அந்தப்புற மண்டபத்தில் மேரு பர்வதங்களைத் தாண்டிய நிலப்பரப்பில் தயாரான விலைமதிப்பற்ற பட்டுத் திரைகள் காற்றில் மெல்ல மெல்ல அசைந்தன. அகில் மரமும், வெட்டிவேரும், குங்கிலியமும் புகையிடப்பட்ட அந்த மாளிகை, இலங்கையின் மற்றுமொரு சாதாரண நாளாக இருந்திருந்தால் இது போல வேறொரு சொர்க்கம் இல்லை என்ற மனநிலைக்கு இந்திரனே வந்துவிடும் சூழ்நிலை கொண்ட அந்த இடத்தில், இப்போது மூச்சைத் திணறடிக்கும் ஒரு மௌனம் உறைந்திருந்தது.
இந்த அமைதி, ஒரு மாபெரும் பிரளயத்திற்கு முந்தைய பயங்கரமான பேரமைதி. அண்டங்கள் தோன்றும் போதிருந்த அமைதிக்கு இணையானதாக இருந்திருக்கக்கூடும்.
மண்டோதரியின் மனதிற்குள் ஆயிரம் வாள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. ஒரு பேரரசியாக, மூவுலகையும் நடுங்கச் செய்யும் மாவீரன் இராவணனின் பட்டத்து ராணியாக இருந்தும், ஒரு தாயாகத் தான் அடைந்துள்ள படுதோல்வியை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் தன் காதுகளை மூடி அந்த இரைச்சல்களைக் கட்டுப்படுத்த முயன்றாள். உள்ளிருந்து எழும் அந்த அகத்தின் ஓசை அவளைக் கூறு போட்டுக்கொண்டிருந்தது.
இலங்கை மாநகராகட்டும், இந்திர லோகமாகட்டும், அவர்களுக்கு முன் அவள் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தேவி, பேரரசி. யாருடைய பெயரைக் கேட்டால் அகிலமே நடுநடுங்கிடுமோ, அந்த இராவணேசுவரனின் மனைவி. ஆனால் இப்போது அவள் உள்ளுக்குள், தன் சொந்த ரத்தத்திற்காகத் தவிக்கும் ஒரு சாதாரணத் தாய்.
அவளுக்கு எதிரே, விபீஷணனின் மனைவியும், திரிசடையின் தாயாருமான சரமை அமர்ந்திருந்தாள். அவளது முகம் கவலையால் களையிழந்திருந்தது. அவளது கண்களில் பயமும், தர்மத்தின் வீழ்ச்சியைக் காணும் கையறுநிலையும் தேங்கியிருந்தன.
“மகாராணி… அசோகவனத்தில் அரக்கிகளின் காவல் எல்லை மீறுகிறது,” சரமை குரல் தழுதழுக்கத் தொடங்கினாள்.
“அந்த அப்பாவிப் பெண்ணின் கண்கள் பசியாலும், சொல்லொணாத் துயரத்தாலும் வாடிவிட்டன.”
“சரமை… என் தங்கையே…” என்று மண்டோதரியின் கை அவளின் கையை ஆதரவாக இறுகப் பற்றியது.
“ஆம் அக்கா… அரசரின் பார்வைக்காகக் காத்திருக்கும் அந்த அரக்கர் குலப் பெண்கள், அவளை நோக்கிச் சொல்லும் சுடுசொற்கள் எந்த ஒரு பெண்ணும் காதால் கேட்க இயலாதவை.”
“மகளே…. மகளே..” என்று வாய்விட்டே அரற்றினாள் மண்டோதரி.
“ஆம் அக்கா, நம் மகள் திரிசடைதான் அவளுக்குப் பக்கபலமாக, ஒரு நிழல்போலத் தொடர்கிறாள். ஒரு பெண்ணின் பாவம் பொல்லாதது. அதை அரசர் என்றுமே புரிந்துகொண்டவரில்லை.”
“திரிசடை…”
“அவள் அந்தப் பெண்ணுக்கு முடிந்தவரை ஆறுதல் சொல்கிறாள். ஆனால், ஒரு மென்மையான செண்பக மலரை, செங்கழுநீர்த் தாமரை மலரை எடுத்து நெருப்புக் குண்டத்தில் வீசியதைப் போலத் தவிக்கிறாள் சீதை.”
“அவள் உறுதியானவள் சரமை. அந்தப் பெண்ணின் மென்மைக்குப் பின்னால், மலைகளைப் பொடியாக்கும் ஒரு உறுதியும் இருப்பதை நான் உணர்கிறேன். அவள்… அவள்..”
அவள் என் மகள் என்ற உண்மை வாய் வரை வந்தும் பழுக்கக் காய்ச்சிய இரும்பிலான நெருப்புத்துண்டத்தை விழுங்குவது போல, வெளிவரத்துடித்த அந்த உண்மையை விழுங்கினாள்.
ஆனாலும் மண்டோதரிக்குச் சரமை விவரித்த ஒவ்வொரு வார்த்தையும் இதயத்தைச் சுக்குநூறாக உடைத்தது. மனித மனம் எவ்வளவு விசித்திரமானது! தான் ஈன்றெடுத்த குழந்தையே தன் கணவனால் சிறைவைக்கப்பட்டிருக்கிறாள், அதைத் தந்தை அறியாதிருக்கிறான் என்ற பேருண்மையை அரண்மனையில், அதுவும் இராவணனின் அருகில் இருந்தும் அவளால் வெளிப்படுத்த முடியவில்லை.
அதிகாரமும் அன்பும் முரண்படும் புள்ளியில் ஒரு பெண்ணின் இருப்பு எத்தனை கொடியது? தர்மம் என்று எதைக் கூறுகிறோமோ, அதுவே சில நேரங்களில் நம் கழுத்தை நெரிக்கும் கயிறாக மாறிவிடுகிறது.
அவள் சூர்ப்பனகை விவரித்ததால் மனதினுள் கண்ட காட்சி அவளை மீண்டும் மீண்டும் வதைத்தது. மூவுலகையும் வென்ற தன் கணவன் இராவணன், எந்த அகங்காரமும் இன்றி, அநாதையாகச் சிறைப்பட்டிருக்கும் சீதையின் காலடியில் வீழ்ந்து கிடந்ததை அவள் கண்கள் கண்டன. ஒரு பேரரசன், ஒரு சிறைவாசியின் காலடியில் தன் அத்தனை கர்வத்தையும் தொலைத்து நிற்பது எப்பேர்ப்பட்ட வீழ்ச்சி.
அவனது வீரம் தோற்ற இடம் அதுவல்ல; அவன் தன்னைத்தானே அழித்துக்கொள்ளத் தொடங்கிய புள்ளி அது. அதை வெளியில் சொல்லவும் முடியாமல், உள்ளே புதைக்கவும் முடியாமல் தவித்தாள் மண்டோதரி.
அருகிலிருந்த சூர்ப்பனகை ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். அவளது முகத்தில் முன்பிருந்த அந்த அகந்தையும், வஞ்சமும், குரூரமும் இப்போது துளிக்கூட இல்லை. பழிவாங்கும் உணர்ச்சி ஒரு மாயையைப் போல அவளை ஆட்கொண்டு, இப்போது அவளையே எரிக்கும் பெருநெருப்பாக மாறியிருந்ததை அவள் முழுமையாக உணர்ந்திருந்தாள்.
அளவற்றக் காமம் உலகின் சக்கரவர்த்தியாக இருந்தாலும் அவனை எவ்வளவு தூரம் குருடாக்கும் என்பதைத் தன் அண்ணன் இராவணன் மூலமாக இப்போது அவள் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
“சரமை சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை தேவி,” சூர்ப்பனகையின் குரலில் இப்போது ஒரு முதிர்ச்சியும், ஆழமான குற்றவுணர்ச்சியும் கலந்திருந்தது.
“ஆனால் மகளே… இந்தத் தீயை மூட்டியதே நீதானே” என்ற மண்டோதரியின் வெறுப்பு நிறைந்த குரலை அவளால் உணர முடிந்தது.
“அன்னையே, உண்மைதான். ஆனால் இராவணன் காலில் விழுந்து கெஞ்சியது நம் குலத்திற்கான பேரழிவுக்கான தொடக்கம் இது,” என்று அவள் சொன்னபோது, அவளது கண்களில் லேசாக நீர் திரண்டது.
ஒரு அரக்க குலத்துப் பெண் அழுவது என்பது இயற்கைக்கு முரணானது எல்லாம் இல்லை. மேலும் வலியும், இழப்பின் அச்சமும் யாரையும் மனிதத் தன்மைக்குக் கொண்டுவந்துவிடும்.
“இதிலிருந்து எப்படி மீள்வது?” மண்டோதரியின் குரலில் என்றுமில்லாத தளர்வு தெரிந்தது.
ஒரு தாயின், ஒரு மனைவியின் தவிப்பு அந்த வார்த்தைகளில் வெளிப்பட்டது.
“உண்மையைச் சொல்லிவிடுவதே உசிதம்” என்றாள் சூர்ப்பனகை. அதைக் கேட்டதும்,
“அடியேன் ஊகிப்பது சரி என்றால், திரிசடை தன் தமக்கையைக் காவல் காத்துக்கொண்டிருக்கிறாள்… இதுதானா அந்த உண்மை?” என்றாள் சரமை.
அந்த அறை ஆம் என்பது போல முழு அமைதி கொண்டது.
அதே நேரம், தென்கடல் வானில் ஒரு மாபெரும் தங்க நிறத்திலான கருடனைப் போலப் பறந்துகொண்டிருந்த அனுமனின் வேகம், ஏன் தடைபட்டது எனப் குழம்பி அங்கும் இங்கும் தன் கண்களை ஓட்டினான்.
வானில் எந்தத் தடையும் இல்லை, மேகங்கள் விலகி வெட்டவெளி நீலமாக விரிந்து கிடந்தது. ஆனால், கண்ணுக்குத் தெரியாத ஒரு பெரும் இரும்புச் சங்கிலி அவனைப் பின்னோக்கி இழுப்பது போல் உணர்ந்தான். சுற்றிலும் எந்த எதிரியும் இல்லை.
இடரில் இருந்து மீட்டுக் கொண்டுவா இராமா இராமா என்று அவன் மனம் சதா சிந்தித்துக் கொண்டே இருந்தது. அவனது பார்வையைச் சற்றே கீழிறக்கியபோது, கடலின் மேற்பரப்பில் விழுந்த அவனது பிரம்மாண்டமான நிழல், ஆழத்தில் ஏதோ ஒன்றால் கவ்வப்பட்டிருந்தது தெரிந்தது.
அந்த விசித்திரத்தை அவன் கண்டான். அவன் முன் நகர முயல, அவன் நிழல் எந்த அசைவும் இன்றி அங்கேயே இருந்தது. அது மட்டுமில்லாமல் அந்த நிழல் தன்னையும் உருவமிலாக் கயிறாகப் பிணைத்துள்ளது என்பதையும் அறிந்தான்.
அப்போதுதான் சுக்ரீவன் சொன்ன விவரங்கள் நினைவுக்கு வந்தது. அவள் சிம்ஹிகை என்னும் சாயாகிரகணி. வானில் பறப்பவர்களின் நிழலைப் பற்றி கீழே இழுத்து விழுங்கும் கொடிய அரக்கி அவள்.
இவள் இராகு, கேது என்னும் நிழல் கிரகங்களின் தாய். அவர்களுக்கே சூரிய சந்திரனை விழுங்கும் வல்லமையையும் தந்திரத்தையும் போதித்தவள்.
பொதுவாக நிழல் என்பது வெறும் இருளின் வடிவம் என்றில்லாமல், அது நம் இருப்பின், நம் கர்மாக்களின், நம் ஆழ்மனத்து இருளின் ஒரு பகுதி. கடந்தகாலம், பயம், ஆணவம், அகங்காரம் என்பதால் உருவாகும் நிழல் எளிதில் மனதில் இருந்து விடுபடக்கூடியவை அல்ல.
அலைபாயும் மனமுடைய மனிதனின் நிழலைப் பிடிப்பது என்பது அவனின் சுயம் மற்றும் அவனது செயல்களின் ஒட்டுமொத்த இயக்கத்தைப் பிடிப்பதற்குச் சமம். அதைத் தடுத்து நிறுத்தினால், ஒருவனின் ஒட்டுமொத்த இயக்கமும், அவனது இலக்கும் நின்றுபோகும்.
சலனமான மனது அந்தப் பிடியில் இருந்து விடுபட எவ்வளவு வேகமாக முயல்கிறதோ, அவ்வளவுக்கும் வேதனையுடன் மரணபரியந்தமும் அவதியுற்றுக் கொண்டே இருக்கும். அந்த இருளின் ஆழத்தில் மூழ்கித் தளைகளில் இருந்து விடுபடுதலே உண்மையான விடுதலை.
இங்கே அனுமனின் மனது நிச்சலனமானது. அவன் நடப்பதைக் கூர்ந்து கவனித்தான். சாயாகிரகணி இராவணனின் காவலரக்கிகளில் ஒருத்தி. மைநாகம் போன்றோ அல்லது சுரசை போன்றோ நல்ல நோக்கம் கொண்டவள் இல்லை.
இவளிடம் பேசுவதில் பயனில்லை என்பதாலும், இவளால் மேலும் பயணத்தின் தடை அதிகமாகிறது என்பதாலும், அவன் இவளை அழித்துவிட்டு விரைவாக இலங்கையை அடைய வேண்டும் என உறுதிபூண்டான்.
அந்த அரக்கியின் வாய் ஒரு பெரிய குகையைப் போலத் திறந்திருந்தது. இருண்ட அந்தத் தொண்டைக்குள் அண்டத்தையே உள்ளிழுத்து விழுங்கும் அளவிலான பெரும் சுழல்காற்று வீசியது. அவளது கண்கள் ரத்தச் சிவப்பில் தகித்தன.
அனுமன் கணநேரம் யோசித்தான். வெறும் உடல் பலத்தை விட நுட்பமான புத்திசாலித்தனமே இங்குத் தேவை என்பதை அவனது மதியூகம் உணர்த்தியது. இவளிடம் நேரடியாக எதிர்த்துப் போராடுவதை விட, அவளது தந்திரத்தையே அவளுக்கு எதிராகப் பயன்படுத்த முடிவு செய்தான்.
எதிர்க்க எதிர்க்க எதிரி தன்னை இன்னும் வலுவாக்கிக் கொள்ளவே முயல்வான். எதிர்ப்பு இல்லை எனும் போது எதிரிக்குள் எழும் அந்த அசட்டையான நேரமே எதிரியை வீழ்த்தும் சரியான தருணம். எதிரி நம் வலிமையை முழுமையாக அறியாதிருக்கும் அந்த நொடி முழு வீச்சுடன் தாக்கினால் எதிரி முழுமையாக வீழ்வான் எனத் தன்னுள் வியூகத்தை வகுத்தான் அனுமன்.
அவன் கண்ணெதிரே சாயாகிரகணி உயர்ந்து சரிக்குச் சரி நிற்க, தன் உடலை வானளவுக்குப் பிரம்மாண்டமாகப் பெரிதாக்கினான். அதைப் பார்த்த அவளும் விட்டேனா பார் என்று அவனை விழுங்குவதற்காகத் தன் வாயை மேலும் பெரிதாகத் திறந்தாள்.
“ஆசை எவ்வளவு பெரிதாகிறதோ, வீழ்ச்சியும் அவ்வளவு ஆழமாக இருக்கும்” என்பதை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை. உண்மையில் பேராசை என்பது தன்னைத்தானே தின்றுகொள்ளும் ஒரு மிருகம்.
அவள் அகங்காரத்துடன் மேலும் மேலும் தன் உடலைப் பெரிதாக வளர்க்க, அதுதான் சரியான தருணம் என நினைத்த அனுமன், சடாரெனத் தன் உருவத்தை ஒரு கட்டைவிரல் அளவுக்குச் சுருக்கிக்கொண்டான்.
வில்லிலிருந்து சீறிப்பாயும் அம்பு போல் அவளது திறந்த வாய்க்குள் நுழைந்தான். உள்ளே சென்ற மறுகணமே தன் உருவத்தை மீண்டும் பிரம்மாண்டமாகப் பெரிதாக்கி, அவளது குடலையும் உள்ளுறுப்புகளையும் தன் கூர்மையான நகங்களால் கிழித்தெறிந்துவிட்டு, அவளது வயிற்றைப் பிளந்துகொண்டு வெளியே வந்தான்.
தன்னை வீழ்த்த நினைத்தவளின் தீராத ஆசையையே, அவளுக்கான மரணக் குழியாக மாற்றினான் அனுமன். வலி பொறுக்க முடியாமல் ரத்தம் கக்கியபடி அலறிய சிம்ஹிகை, கடலின் ஆழத்தில் சுருண்டு விழுந்து மாண்டாள். கடல் நீர் செந்நிறமாக மாறியது.
தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்த அனுமன், நிழல் பிடிபட்டதால் ஏற்பட்ட தற்காலிகத் தடையைத் தாண்டி, ராமநாமத்தை உச்சரித்தபடி மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தான். தூரத்தில், திரிகூட மலையின் உச்சியில், கறுப்புப் பாறைகளால் கட்டப்பட்ட மாபெரும் அரண்களோடு, பொன்னால் வேயப்பட்ட மாட மாளிகைகள் கொண்ட பிரம்மாண்டமான தங்கக் கோட்டையாக மின்னிய இலங்கை மாநகரம் அவனது கண்களில் பட்டது.
இலங்கையின் மாளிகைகள் தங்கத்தால் செய்யப்பட்டவையோ, வைர மணிகளால் பொதிந்தவையோ அல்லது மின்னலைக் கொண்டு சமைத்த வெயிலால் ஆனவையோ என எதனால் இயற்றப்பட்டது என்று அறிய முடியாத அளவுக்கு ஒளி வீசிக்கொண்டிருந்தன எனப் பிற்காலத்தில் கம்பன் வியந்து பாடிய அந்த இலங்கை நகரின் அழகை அனுமன் தன் கண்களால் அளந்தான்.
அந்தி சாயும் நேரம். கடலின் அலைகள் இலங்கையின் கோட்டைச் சுவர்களில் மோதி ஆர்ப்பரித்தன. அந்தப் பேரொலி, வரப்போகும் போரின் முரசொலி போலக் கேட்டது.
வானத்திலிருந்து மெல்லக் கீழிறங்கி, இலங்கையின் பிரம்மாண்டமான முகப்பை அடைந்தான்.
“நில்… நில்… யார் நீ…” என்ற குரல் கேட்டு நின்றான்…
அவன் முன்னே மீண்டும் ஒரு தடை.
பின்குறிப்பு:
சிம்ஹிகை என்பவள் ராகுவின் தாய் மற்றும் அவளது நிழல் பிடிக்கும் சக்திதான் கிரகணமாக மாறுகிறது என்ற நாட்டுப்புறக் கதைக்கு, விஷ்ணு புராணத்தின் (அம்சம் 1, அத்தியாயம் 15) மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தின் (5-வது காண்டம்) படி, சிம்ஹிகை பிரகலாதனின் தந்தை இரணியகசிபுவின் சகோதரி ஆவார். இவள் விப்ரசித்தி என்ற அசுரனை மணந்து ஸ்வர்பானு என்ற மகனைப் பெற்றெடுத்தாள்.
பாற்கடலைக் கடைந்தபோது இந்த ஸ்வர்பானுதான் தேவர் வடிவில் அமிர்தம் குடித்தான். சூரியனும் சந்திரனும் அவனைக் காட்டிக் கொடுத்ததால், விஷ்ணு அவனது தலையை வெட்டினார். வெட்டப்பட்ட தலை ‘ராகு’ என்றும், உடல் ‘கேது’ என்றும் மாறின. தாயான சிம்ஹிகையின் பெயரால் ராகுவுக்கு ‘சைம்ஹிகேயன்’ (சிம்ஹிகையின் மகன்) என்ற பெயரும் ஜோதிட சாஸ்திரத்தில் உண்டு. சூரிய, சந்திரர்களை நிழலால் ராகு பிடிக்கும் சக்திக்கு, அவனது தாய் சிம்ஹிகையின் நிழல் பிடிக்கும் பேராற்றலே மூல காரணம் என்று ஜோதிட வழக்காறுகள் கூறுகின்றன.
வடநாட்டு நாட்டுப்புறங்களில் புகழ்பெற்ற துளசிதாசரின் ராமசரிதமானஸ் (சுந்தரகாண்டம், பாடல் 3)-இல், “அவளது கபடத்தை அனுமன் உடனே அறிந்துகொண்டு, அவளைக் கொன்று கடலைக் கடந்தார்” (तासु कपटु कपि तुरतहिं चीन्हा। ताहि मारि मारुतसुत बीरा) என்று மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டாலும், இதன் அடிப்படையில் உருவான கிராமிய நாடகங்களில் (ராம்லீலா) அனுமன் அவளது வயிற்றுக்குள் புகுந்து உடலைச் சிதறடிப்பது போல நாடகத்தன்மைக்காக பிரம்மாண்டமாக வர்ணிக்கப்படுகிறது.
கம்பர் இவளை ராகுவின் தாய் என்கிறார். கேரள தோற்பாவைக் கூத்து மற்றும் கர்நாடக தொலு பொம்மலாட்டத்தில் இந்த கதைதான் மிக பிரபலம். நிழல் பொம்மைகளால் ஆடப்படும் ராமாயணத்தில், நிழலைப் பிடிக்கும் அரக்கியின் கதையை நிழல் பொம்மைகளே சொல்வது ஒரு அற்புதமான உருவகம். அங்கே அவள் இலங்கையைக் காக்க பிரம்மா வரம் கொடுத்து வைத்த காவல்காரி என்று சொல்வார்கள்.
ஒடிசா, வங்காள கடலோர மீனவர்கள் இன்றும் கடலில் திடீரென தோன்றும் பெரும் சுழல்களை “சிம்ஹிகையின் வாய்” என்றுதான் அழைக்கிறார்கள். சுரசையைப் போலவே சிம்ஹிகையும் கடலைக் காக்கும் தேவதை என்றும், மீனவர்கள் கடலுக்குள் செல்லும் முன் அவளுக்கு பலி கொடுக்க வேண்டும் என்றும் நாட்டுப்புறச் சடங்கு உண்டு.
இந்தோனேசியாவில் ராமாயணம் ‘வயாங் குலிட்’ என்னும் தோல் பொம்மை நிழலாட்டமாக ஆடப்படுகிறது. இரவு முழுக்க நடக்கும் அந்த ஆட்டத்தில் சிம்ஹிகை கதை வரும்போது, திரையில் அனுமனின் நிழல் பொம்மை திடீரென அசையாமல் நிற்கும். பொம்மலாட்டக்காரர் விளக்கை அணைத்து, “நிழல் பிடிபட்டது” என்பார். அதாவது நிழலை வைத்தே நிழலரக்கியைக் காட்டும் தொழில்நுட்பம்.
பல நாட்டுப்புறக் கதைகளில் சுரசை அக்கா, சிம்ஹிகை தங்கை. இருவரும் காசியப முனிவரின் மகள்கள். அக்கா வாயைத் திறந்து நேரடியாகப் பிடிப்பவள், தங்கை நிழலைப் பிடித்து மறைமுகமாக இழுப்பவள். ஒருத்தி பசியின் குறியீடு, இன்னொருத்தி பொறாமையின், கடந்த காலத்தின் குறியீடு. ஜைன ராமாயணங்களில் சிம்ஹிகை ஒரு சாபத்தால் அரக்கியான தேவதை என்றும் உண்டு.
இவை அனைத்தும் வாய்மொழி நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்துகள் மற்றும் பவிஷ்ய புராணம் போன்ற உப-புராணக் கதைகளின் வழியே தலைமுறை கடந்து மக்களிடையே பரவியுள்ளன.
(தொடரும்)