நவம்பர் மாதத்தின் அதீத மழையானது, இரவு முழுவதும் வெளுத்துவாங்கி காலை ஆறரை மணிவாக்கில் சற்றே வேகத்தைக் குறைத்திருந்தது.

செல்லம்மாள் கல்லூரியிலிருந்து சின்னமலை நோக்கிச் செல்லும் அந்த அகலமான சாலையில், மெட்ரோ கான்ஃக்ரீட் பாலத்தின் மேலிருந்து ஆங்காங்கே அருவிபோல் மழைநீர் ஊற்றிக்கொண்டிருந்தது. பின்னால் வரும் வாகனங்கள் பற்றிய கவலையேதுமின்றி, அந்த நீரில் நனைந்துவிடாமல் விலகிச் செல்வதிலேயே குறியாய் இருந்தார்கள் வாகன ஓட்டிகள்.

மழைக்கோட், ஹெல்மெட் சகிதம் தீவிர சிந்தனையின் ஆக்கிரமிப்போடு வண்டியைச் செலுத்திக்கொண்டிருந்தான் ஜெகன். பின்னால், வேட்டியை மடித்துக் கட்டிய நிலையில் அவனது சித்தப்பா ராமதுரை அமர்ந்திருந்தார்.

ஒரு கையால் வண்டியின் பின்பக்கக் கம்பியை வலுவாகப் பற்றியிருந்த ராமதுரை, மறு கையில் வண்ணக் குடையொன்றைப் பிடித்திருந்தார். குடைக்குக் கட்டுப்படாத மழை, அவரது முதுகுப்பகுதியை முற்றிலுமாகவே நனைத்துவிட்டிருந்தது. போதாக்குறைக்கு, கடந்துசென்றுகொண்டிருந்த வாகனங்களனைத்தும் இருவர்மீதும் சாலை நீரை வாரியிறைத்துவிட்டுச் சென்றவண்ணமிருந்தன.

“சித்தப்பா, டீ காபி எதாச்சும் குடிச்சுட்டுப் போயிருவோமா?”

“அதெல்லாம் வேணாம்ப்பா. ஏழு மணிக்கெல்லாம் டோக்கன் வாங்கினாதான் சீக்கிரமா டாக்டரைப் பாத்துட்டு நைட்டு வண்டிய புடிக்க சௌரியமா இருக்கும்.”

“டோக்கனை வாங்கிட்டு உக்காந்துட்டீங்கன்னா அப்பறம் சாப்புட போகமாட்டீங்களே, அதுக்காகத்தான் சொன்னேன்.”

“அதெல்லாம் பாத்துக்கலாம் போ” – வந்த காரியத்தை முதலில் முடிக்கவேண்டுமென்ற பெரியவர்களின் வழக்கமான அடமிருந்தது ராமதுரையிடம்.

அண்ணா பல்கலைக்கழகத்தை நெருங்கிய வேளையில் மழை முழுவதுமாக நின்றுவிட, குடையை மடக்கிக்கொண்டார் ராமதுரை. காந்தி மண்டப பாலத்திற்குக் கீழே பயணிக்கத் துவங்கியபொழுதுதான் தூரத்தில் திடீரென முளைத்திருந்த மஞ்சள்நிற இரும்புத்தடுப்புகளைக் கவனித்தான் ஜெகன்.

‘யூ’ வளைவு மட்டுமல்லாமல், நேராகச் சென்று அடுத்த தூண் வழியாகக்கூட திரும்பி வரமுடியாதவாறு முற்றிலுமாக மறிக்கப்பட்டிருந்தது. கோட்டூர்புரம் சாலைக்குள் நுழைந்து சுற்றி வரும்வகையில் கோட்டை அரண் போல் வளைவாக அமைக்கப்பட்டிருந்தன அந்த பேரிகார்டுகள்.

பாலத்தின் பிரம்மாண்டமான தூணையொட்டி நின்றிருந்த போக்குவரத்து காவலரின் அருகே வண்டியை நிறுத்தி, “கேன்சர் இன்ஸ்டிடியூட் போகணும் சார். இந்த பேரிகார்டு கேப்ல கொஞ்சம் போய்க்கலாமா?” என பவ்யமாக வழிந்தான்.

“இல்லப்பா. பிளானிட்டோரியம் போயிதான் யூ-டர்ன் போட்டுட்டு வரணும்” – அவனது பதிலை எதிர்பார்க்காமல் சிக்னல் ஸ்விட்ச்சை அழுத்தத் தயாரானார் அந்த ‘கண்டிப்பான’ காவலர்.

“திரும்புனவுடனே இருக்கற ஆஸ்பத்திரிக்கு ஒரு கிலோமீட்டர் சுத்தி வரணுமாம்” – ராமதுரையிடம் முணுமுணுத்தபடியே வண்டியைத் திருப்பினான்.

“எப்புடிதான் தெனம் தெனம் இந்த மெட்ராஸ்ல வண்டி ஓட்றியோ தெரியல போ. ஒரு நாளைக்கி பின்னால உக்காந்துகிட்டு வர்றதுக்கே நாக்கு தள்ளுது நமக்கெல்லாம்” என்றார் அவர்.

சுற்றி வந்து, அதே சிக்னலில் பச்சை அம்புக்குறிக்காகக் காத்திருந்து, குழந்தைகள் பூங்காவிற்கு முன்னதாக இருந்த கேன்சர் இன்ஸ்டிடியூட்டிற்குள் நுழைந்தான். ராமதுரை மெதுவாக இறங்கிக்கொள்ள, பார்க்கிங் ஏரியாவினுள் சென்று வண்டியை நிறுத்திவிட்டு வந்தான்.

ராமதுரைக்கு ஆரம்பகட்ட குடல்புற்று உறுதியாகி, மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருந்தார். மருத்துவர்கள் குறிப்பிடும் தேதிக்கு பரிசோதனைக்கென கோட்டையூரிலிருந்து கிளம்பி ஜெகனின் வீட்டிற்கு வந்துவிடுவார். சொந்த அண்ணன் மகன் என்பதால் எந்தத் தயக்கமுமின்றி முழு உரிமை எடுத்துக்கொள்வார். ஒவ்வொருமுறையும் அடுத்த பரிசோதனை தேதியை முன்கூட்டியே சொல்லியனுப்பிவிடுவதால் ஜெகனும் அலுவலகத்தில் விடுமுறைக்குச் சொல்லிவைத்துவிடுவான்.

டோக்கன் பெற்றுக்கொண்ட ராமதுரை, அந்த அகண்ட ஹால் முழுதும் வரிசைக்கிரமமாய் போடப்பட்டிருந்த இரும்பு நாற்காலிகள் ஒன்றில் அமர்ந்துகொண்டார்.

“ஜெகன், நீ போயி கேண்டீன்ல சாப்ட்டு வந்துரு” என்றார்.

“கொஞ்சநேரம் ஆவட்டும் சித்தப்பா. சேர்ந்தே போயிருவோம்” என்றபடியே அவரருகில் அமர்ந்துகொண்டான்.

மருத்துவருக்காக நீண்டநேரம் காத்திருக்கவேண்டியிருந்தது. நெட்டி முறித்த ஜெகன், கொட்டாவி விட்டுக்கொண்டான்.

“வீட்டுக்கு வேணும்னா போயி ரெஸ்ட் எடுத்துட்டு மத்தியானத்துக்கு மேல வாயேம்ப்பா. எதுக்கு வெட்டியா இங்கேயே உக்காந்துகிட்டு…”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல சித்தப்பா, பாத்துட்டே போலாம்.”

மெதுவாக எழுந்து ஹாலைவிட்டு வெளியே வந்தான். வாசல் சுவற்றில் சாய்ந்து நின்றுகொண்டு, வேடிக்கைப் பார்க்கத் துவங்கினான்.

மூக்கு துவாரத்தில் வளைவாய் சிறு டியூப் போடப்பட்டு பிளாஸ்திரி ஒட்டியிருந்த மனிதர்கள், தலையை கர்சீப்பால் மூடி பின்புறம் முடியிட்டிருந்தவர்கள், சக்கர நாற்காலிகளில் அழைத்து வரப்படும் முதியவர்கள் என அனைவரையும் பார்த்தபடி நின்றிருந்தான்.

வாசலருகே நின்றிருந்த இளம்பெண்ணின் இடுப்பில் குழந்தையொன்று வலது கண் முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் பேண்டேஜுடன் இருந்தது. குழந்தையின் கன்னத்தை அன்பாகக் கிள்ளிவிட்டு, “கண்ல என்ன பிரச்சனை? எதாச்சும் குத்தியிருச்சா?” என விசாரித்தான் படித்த பெண்ணாகத் தெரிந்த அந்த நடுத்தரவர்க்க தாயிடம்.

“இல்ல சார். கேன்சர்” என்றாள் சோகக்குரலில்.

அதிர்ந்தான். ‘கண்ணிலா? அதுவும் இந்தப் பிஞ்சின் கண்ணிலா?’

“ஸ்போராடிக் ரெட்டினோபிளாஸ்டோமான்னு என்னமோ பேரு சொல்றாங்க. முடிஞ்சவரைக்கும் சரி பண்ண முயற்சி பண்றோம்கறாங்க. ஒருவேளை சரியாகலன்னா, உயிரைக் காப்பாத்தறதுக்கு கண்ணை ரிமூவ் பண்ணிதான் ஆகணும்னு சொல்லியிருக்காங்க சார்.” சோகம் இழையோட குரல் குறைத்துப் பேசியவளின் வலி ஜெகனையும் வெகுவாகத் தாக்கியது.

விளையாட ஆர்வம்காட்டிய குழந்தையைக் கீழே இறக்கிவிட்டாள். தட்டுத்தடுமாறி துறுதுறுவென இங்குமங்குமாக ஓடினான் குழந்தை.

“என்ன வயசாவுது?”

“ரெண்டு முடிய போவுது.”

அருகில் சென்று, குழந்தையின் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தபடியே சிரித்து விளையாடினான். ஜெகனின் கன்னங்களை வருடியும் தலையைக் கலைத்துவிட்டும் புன்னகைத்தது குழந்தை. மனம் வலித்தது அவனுக்கு. வெகுநேரம் விளையாடிக்கொண்டிருந்தான். தனது பாக்கெட்டிலிருந்த அலைபேசியைக் குழந்தை எடுத்தபொழுது தடுக்காமல் சிரித்தபடியிருந்தான்.

“சஞ்சய்… அங்கிளோட ஃபோனையெல்லாம் எடுக்கக்கூடாது, வச்சுடு.” குரல் கொடுத்த தாயைத் திரும்பிப் பார்த்துவிட்டு தயங்கியது குழந்தை. ஜெகனோ, வைத்துக்கொள்ளச் சொல்லி குழந்தைக்குச் சைகை செய்தான்.

தலைவலி காய்ச்சலைப் போல் அதீதமாய் பெருகிவிட்ட இந்நோய், பச்சைக்குழந்தைகளையும் விட்டுவைக்காத கொடுமையை நினைத்துக் கலங்கினான்.

‘நெகிழிப் பை உணவுகள், அடைக்கப்பட்ட பானங்கள், மசாலா பொருட்கள், கலப்பட உணவுகள் என பலவும் விதவிதமான புற்றுநோய்களை உருவாக்குவதாக மருத்துவர்கள் தெளிவாக எடுத்துச் சொல்லியும், அசட்டையான சூழல் நிலவுவது எதனால்? விழிப்புணர்வின்மையா அல்லது உலக மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் இல்லாததா? பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று குவிக்கும் கொடூரமான போர்களைக் கண்டும்காணாமல் இருப்பதைப் போலவே, உயிர்க்கொல்லி நோய்களிடமிருந்து மனிதர்களைக் காக்கும் விஷயத்திலும் உலக நாடுகள் கண்மூடிக் கடந்துசெல்வதற்கு என்னதான் காரணம் இருக்கமுடியும்?’ – பதில் தெரியாத கேள்விகள் அவனுக்குள் வரிசைகட்டின.

மருத்துவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்தார் ராமதுரை.

“டெஸ்ட்டுக்கு எழுதிக் குடுத்துருக்காருப்பா. முடிச்சுட்டு வந்து பாக்கணும்.”

பரிசோதனைகளுக்கு அழைத்துச் சென்றான். மனதில் அந்தக் குழந்தை வலுவாகப் பதிந்திருந்ததில், செல்லும் இடமெல்லாம் மனம் ‘உம்’மென்றே இருந்தது.

அனைத்துப் பரிசோதனைகளும் முடிவுற்று கேண்டீனுக்கு வந்திருந்தார்கள். இவர்கள் விரும்பிக் கேட்ட உணவு வகைகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்திருந்தது. எதைக் கேட்டாலும் இல்லையென்றார்கள். பெயருக்கு இரண்டு பஜ்ஜியைத் தின்றுவிட்டு காபியைக் குடித்துக்கொண்டார்கள்.

சோதனை முடிவுகளுடன் மீண்டும் மருத்துவரைப் பார்க்க வந்தபொழுது கூட்டம் அளவுக்கதிகமாக இருந்தது. ‘இத்தனைபேரையும் இன்றைக்குள் பார்த்து முடித்துவிடுவார்களா?’ என்றெண்ணியபடியே, ராமதுரையை அமரவைத்துவிட்டு வெளியே வந்தான்.

கைகளைக் கட்டிக்கொண்டு பிரதான வாயில் வரை ஆசுவாசமாக ஒரு நடைபோட்டான். உயிரைப் பற்றிய கவலை எதுவுமின்றி ஏராளமான நத்தைகள் மருத்துவமனையின் ஈரமான சாலையைக் கடந்துகொண்டிருந்தன.

“தம்பி.. அய்யா…”

குரலுக்குத் திரும்பினான்.

மருந்தக படிக்கட்டின் ஓரமாக அமர்ந்திருந்தாள் அந்த அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி. ஏதோவொரு உதவியை எதிர்பார்த்து அழைத்தது அவள் அழைத்த தொனியிலேயே தெரிந்தது.

“தம்பி, என் பையன கொஞ்சம் வர சொல்லணும்யா. ஒரு ஃபோன் போட்டு சொல்லமுடியுமா?”

“ம். நம்பர் சொல்லுங்கம்மா.” அவள் சொன்ன எண்களைப் பதிந்து டயல் செய்து, காதில் வைத்துக் காத்திருந்தான்.

“வண்டி எதுவும் ஓட்டிகிட்டு இருக்காப்ளயோ என்னமோம்மா. எடுக்கல” என்றவன், “கொஞ்சநேரம் பாத்துட்டு திரும்பவும் அடிக்கலாம்” என்றுவிட்டு அவளருகிலேயே அமர்ந்துகொண்டான்.

மிகவும் தளர்ந்து, வழக்கமான மூச்சுவிடுதல் இல்லாமல் சிறு போராட்டத்துடனே இருந்தாள் அவள். கையிலிருந்த மஞ்சள் நிற திருமண தாம்பூலப் பையில் மாத்திரை டப்பாக்கள் நிறைந்திருந்தன.

“முன்னல்லாம் டாக்டர் எழுதி குடுக்கற அன்னைக்கே மாத்திரையும் குடுத்துருவாங்க தம்பி. இப்ப என்னடான்னா ரெண்டு மூணு நாள் கழிச்சு இதுக்குன்னு தனியா ஒருநாள் வடபழனியிலேர்ந்து மெனக்கெட்டு வரவேண்டியிருக்கு.”

“ஓஹோ.”

“காசு குடுத்து வாங்கறதுன்னா அன்னைக்கே குடுத்துருவாங்க போலருக்கு. எட்டாயிரத்துக்கும் பத்தாயிரத்துக்கும் நாம எங்க போறது? கவர்மெண்ட் கார்டுலதான் வாங்கறோம். அதென்னமோ இப்பல்லாம் அந்த கார்டு நம்பரை மேல எங்கயோ அனுப்பனுமாம். அங்கேர்ந்து ‘சரி’ன்னு பதில் வந்ததுக்கப்பறம்தான் மருந்தை வந்து வாங்கிக்க சொல்லி மெசேஜு அனுப்பறாங்க. பாவம், பையனுக்கு வேலை சரியா இருக்கு. லைன்ல நின்னு வாங்கமுடியறதில்ல. வந்து எறக்கி வுட்டுட்டு போயிட்டான்னா நான் மருந்து மாத்திரையை வாங்கி வச்சுக்குவேன். அப்பறமா வந்து கூட்டிட்டு போவான்.”

சுவாசிப்பதில் சிரமமிருந்தும் தொடர்ந்து பேசியபடியேயிருந்தாள் அந்தத் தாய்.

“எவ்வளவு நாளா வந்துகிட்டிருக்கீங்க இங்க..?”

“அதாச்சுப்பா ரெண்டு வருஷம்.” கண்கலங்கியது அவளுக்கு.

பையிலிருந்து சிறு பாட்டில் ஒன்றை எடுத்து தண்ணீர் குடித்துக்கொண்டாள். மகனிடமிருந்து அழைப்பு வந்தது. அவளிடம் அலைபேசியை நீட்டினான்.

“ஹலோ, தம்பி… வர்றியாய்யா? ஆமாமா, கூட்டம் இல்ல, வந்தவுடனயே மாத்திரை வாங்கிட்டேன்… அப்புடியா, சரி சரி. ஒண்ணும் அவசரம் இல்ல. முடிச்சுட்டு மெதுவா வா. மெடிக்கல் படிக்கட்டுலதான் உக்காந்துருக்கேன்.”

அலைபேசியை ஜெகனிடம் கொடுத்துவிட்டு பேச்சைத் தொடர்ந்தாள்.

“போன வேலை முடியலையாம். வந்துர்றேன்னு சொன்னான்.”

“பையனுக்கு கல்யாணம் ஆயிருச்சாம்மா?”

“அதை ஏன்யா கேக்கற. கடவுளுக்கு கண்ணு இல்லன்னு திட்றது சரியாதான் இருக்கு. ரெண்டு வருஷத்துக்கு முன்னடி எனக்கு ரொம்ப முடியாம போயி, பொழச்சதே பெருசாபோச்சு. என் உசுரு போறதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சுடலாம்னு சொந்தத்துலேயே ஒரு பொண்ணை பாத்து அவசர அவசரமா எல்லா ஏற்பாடும் பண்ணுனேன்.. அந்தக் கடவுளு என்னடான்னா…” அழுதாள்.

சிறிதுநேர அமைதிக்குப் பிறகு, மூக்கை உறிஞ்சிக்கொண்டு, “எதிர்பாக்காததெல்லாம் நடந்து, கல்யாணம் நின்னு போச்சு.” பொலபொலவென கன்னத்தில் இறங்கி ஓடிய கண்ணீரை, சேலையை இழுத்து வழித்தெடுத்துக்கொண்டாள்.

“எந்த ஜென்மத்துல யாரு பண்ணுன பாவமோ, இப்ப நாளை எண்ண ஆரம்பிச்சாச்சு.”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாதும்மா. சரிபண்ணமுடியாத காலமெல்லாம் மலையேறிப் போச்சு. இப்பல்லாம்தான் எத்தனையோ பேரு இந்த நோய்லேர்ந்து சுத்தமா வெளியில வந்து நார்மலா இருக்காங்களே. பாத்துகிட்டேயிருங்க, பையனோட கல்யாணம், பேரன் பேத்திங்கன்னு எல்லாத்தையும் பாக்கதான் போறீங்க.”

சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே மகன் வந்து சேர்ந்தான். முப்பது, முப்பத்திரெண்டில் இருந்தான் அந்த இளைஞன்.

“என்னம்மா, ரொம்பநேரமா உக்காந்துருக்கியா?”

“அதுக்கென்னப்பா, வீட்டுக்கு போயும் சும்மாதானே உக்காந்துருக்கப் போறேன். ஒனக்கு வேல முடிஞ்சுச்சா இல்லியா?”

“போன எடத்துல ஆளைப் பாக்கமுடியலம்மா. லேட்டாகும்போல இருந்துச்சு, நாளைக்கிப் பாத்துக்கலாம்னு வந்துட்டேன்.”

“இந்தத் தம்பியோட ஃபோன்லேர்ந்துதாம்ப்பா உன்னை கூப்ட்டேன்.” ஜெகனை மகனுக்கு அறிமுகப்படுத்தினாள்.

“தேங்க்ஸ் சார்” என்றான். புன்னகையுடனே, “எங்க ஒர்க் பண்றீங்க?” என்றான் ஜெகன்.

அவர்களுக்குள் பேச்சு தொடர, அவனது தாய் கவனிக்காத வேளையாகப் பார்த்து, “கொஞ்சம் தனியா பேசலாமா?” என கிசுகிசுத்தான் ஜெகன்.

அவ்விடத்தைவிட்டு சற்றே நகர்ந்தார்கள்.

“முன்னபின்ன பழக்கம் இல்லாதவன், ஓவரா உரிமை எடுத்துகிட்டு பேசறதா நெனச்சுக்காதீங்க. உங்க குடும்ப சூழ்நிலை என்ன ஏதுங்கறதும் எனக்குத் தெரியாது…”

“சார்… எதுக்கு இவ்வளவு தயங்கறீங்க..? எதுவாயிருந்தாலும் சொல்லுங்க…”

”இல்ல, உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலன்னு அம்மா வேதனைப்பட்டாங்க. பாக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அவங்க இருக்கும்போதே கல்யாணத்தை முடிச்சுட்டீங்கன்னா இருக்கறவரைக்கும் சந்தோஷமா இருந்துட்டுப் போவாங்கள்ல…”

அவனது முகபாவனையில் மாற்றம் தெரிந்தது. மிடறு விழுங்கினான். சில விநாடிகள் மௌனமாகக் கடக்க, உதட்டைக் கடித்துக்கொண்டபடியே முகத்தை மறுபக்கமாகத் திருப்பிக்கொண்டான்.

ஜெகனுக்கு ஒருமாதிரியானது.

“தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்” என்றான்.

“அதெல்லாம் ஒண்ணும்…” சொல்லி முடிக்கும் முன்பே பொசுக்கென உடைந்தான் அவன். அவசரமாக கர்சீப்பை எடுத்து முகத்தை மூடிக்கொண்டான். உடல் குலுங்கியது. என்ன சொல்வதெனத் தெரியாமல் தவித்தான் ஜெகன். அந்த இளைஞனின் சுபாவம் அறியாமல் அறிவுறுத்திவிட்ட அவசரக்குடுக்கைத் தனத்திற்காக அவனிடம் மன்னிப்பு கேட்கத் தோன்றியது.

வாயைத் திறக்க எத்தனித்த வேளையில், “சொன்னா புரியமாட்டேங்குது சார் அவங்களுக்கு. டாக்டர் நேரடியா சொல்லலன்னாலும் புரியற மாதிரி தெளிவா சொல்லிட்டாரு. இன்னும் எத்தனை மாசமோ வருஷமோ தெரியல எனக்கு. தெரிஞ்சுகிட்டே எப்புடி சார் ஒரு பொண்ணோட வாழ்க்கையைக் கெடுக்கமுடியும், சொல்லுங்க?” என்றான்.

பலமாக அதிர்ந்து பதிலின்றி நின்றான். கலக்கத்துடன் அந்தத் தாயை ஒருமுறை பார்த்தான். அவளது அழுகை அனைத்தும் அவளுக்காக அல்ல என்பது தாமதமாகவே புரிந்தது.

கர்சீப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டபடியே தன் தாயை நோக்கி நடக்கத் துவங்கினான் அந்த இளைஞன்.

‘இந்த மருத்துவமனைக்குள் நுழைந்தபிறகு, எந்தவொரு மனிதரையும் ஏறெடுத்து பார்ப்பதோ, உரையாடுவதோ கூடாது. சித்தப்பா கிளம்பும்வரை வளாகத்தின் ஏதேனும் ஒரு மூலையில் முடங்கிக்கொண்டு, கண்களை இறுக மூடியபடியே அமர்ந்துகொள்ளவேண்டும்’ – இங்கிருக்கும் மனிதர்களின் கொடுமையான வலிகளைக் கேட்க சக்தியில்லாதவனாக தீர்க்கமான முடிவெடுத்தான்.

தன் மகனுக்கான மருந்துகளைப் பத்திரமாகப் பிடித்துக்கொண்டபடியே மெதுவாக வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டிருந்தாள் அந்தத் தாய். வண்டியை நன்றாகப் பிடித்துக்கொள்ளச்சொல்லி அறிவுறுத்திக்கொண்டிருந்தான் அந்த இளைஞன்.

Author

You may also like

Leave a Comment