கனகா அவசரமாக வீட்டுக்கு வெளியே வந்து தோட்டத்தில் நின்றபடி பொன்னியை அலைபேசியில் கூப்பிட்டாள்.
“அக்கா, நான்தான்.. மணி ஏழரை ஆச்சுதேன்னு அவருக்குப் போன் செஞ்சேன். குரல் சரியா இல்லை.. நீங்க வந்து பிள்ளைகளைக் கூட்டிட்டுப் போறீங்களா?” கெஞ்சுகிற குரல். கண்களில் பிடிவாதமாய்த் திரளும் நீர். உடல் முழுதும் இனம் புரியாத படபடப்பு. அடுத்து என்ன செய்வது என்று தனியாகத் திட்டமிடும் மூளை. அனைத்தையும் மறைத்துக்கொண்டு குழந்தைகள் முன் இயல்பாக இருக்க முனைகிற யத்தனம்.
அது புதிதாக உருவாகியிருந்த சிறிய குடியிருப்புப் பகுதி. நடுத்தர வர்க்க மக்கள் மனைகள் வாங்கி வீடுகளை எழுப்பிக் குடியேறிக்கொண்டிருந்தனர். அங்குதான் கனகாவும் மூன்று வருடங்களுக்கு முன் வீடு கட்டி வசித்து வந்தாள்.
பக்கத்துத் தெருவில் இருந்த பொன்னி அவளுக்கு அக்கா முறை. அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அதனால் கனகா பிள்ளைகளிடம் பொன்னியும் அவள் கணவனும் மிகவும் பிரியமாக இருந்தார்கள். அந்த உரிமையில்தான் கனகா அவளிடம் உதவி கோரினாள்.
கனகா பேசிவிட்டு உள்ளே வந்த ஐந்தாவது நிமிடம் பொன்னி வந்தாள். வீட்டினுள் நுழையும்போதே “பாலு, மேகலாகுட்டி” என்று அழைத்துக்கொண்டே வந்தாள். பிள்ளைகளுக்கு அவளைப் பார்த்தவுடன் உற்சாகம் மேலிட்டது.
“வாங்க பெரியம்மா” என்றான் பாலு.
“பாலு பெரியவன் ஆயிட்டான் கனகா. பிள்ளைக்கு வரவேற்கத் தெரிஞ்சிடுச்சு” சிரித்தபடியே அவன் கன்னத்தைத் தட்டினாள்.
“பதிமூணு வயசாகுது. தெரியணும்தானேக்கா.”
“அது சரி, கண்ணுங்களா, இன்னைக்குப் பெரியப்பாக்கு மில்லுல நைட் ஷிஃப்ட். நான் தனியா இருக்கணும். எனக்குத் துணைக்கு யார் வர்றீங்க?”
இருவரும் போட்டி போட்டுக்கொண்டு கிளம்பினார்கள். பாலுவுக்கு அங்கே போனால் WWF சேனல் பார்க்கலாம். இங்கே அம்மா பார்க்க விட மாட்டாள். பத்தரை மணிக்குத் தூங்கலாம். அம்மாவைப் போல் ஒன்பதரைக்குப் படு என்று உயிரை எடுக்க மாட்டாள். மேலும் தன்னை ஒரு துணை என்று பெரியம்மா கூப்பிடுவது அவனுக்குப் பெருமையாக இருந்தது. தன்னை ஆண் பிள்ளை என்று அரைகுறையாக உணரத் தொடங்கியிருந்த பருவம். அந்தப் பெருமையில் எட்டு வயது தங்கையைப் பார்த்து, “நீ எங்கே வர்ற? நான் பெரியம்மாக்குத் துணைக்குப் போறேன்” என்றான்.
மேகலா முழிக்க, பொன்னி அவளும் வரட்டும் என்று இருவரையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டாள்.
அவர்கள் கிளம்பியவுடன் கனகா சமையலறைக்கு விரைந்தாள். இட்லி மாவைத் தட்டுகளில் ஊற்றி வைத்துவிட்டு கடகடவென நான்கு ஆம்லெட்களைப் போட்டு ஹாட்பேக்கில் வைத்தாள். தயாரான இட்லி, சாம்பார், சட்னி, ஆம்லெட் எல்லாவற்றையும் மேசையில் கொண்டு வைத்தாள்.
வாசல் கதவை லேசாகத் திறந்து வைத்தாள். அவள் கணவன் கதிரவன் வரும் வரையிலும் உட்காரலாம் என்று ஹாலில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டாள். மனம் முன்னும் பின்னுமாய் அலைபாய்ந்தது.
அவள் வீட்டில் கனகா மூன்று ஆண் பிள்ளைகளுக்குப் பிறகு பன்னிரண்டு வருடங்கள் கழித்துப் பிறந்தவள். எல்லோருக்கும் செல்லம் என்றால் அப்படியொரு செல்லம். பணவசதி குறைவு என்றாலும் மனவசதி படைத்த குடும்பம். காசு பணத்திற்குப் பதிலாகப் பாசத்தையும் நேசத்தையும் இறைக்கிற குடும்பம். அதுவும் அவளுக்கு ஒரு தலைவலி என்றால் கூட மொத்த வீடும் பத்தியம் போடும்.
கனகாவின் அப்பாவும் அண்ணன்களும் மளிகைக் கடை வைத்திருந்தார்கள். அவளுக்குத் திருமணப் பேச்சு தொடங்கியபோது பொன்னியின் கணவருக்கு நெருங்கிய சொந்தம் என்று கதிரவனின் வரன் வந்தது. பையனுக்கு அரசாங்க வேலை, விசாரித்த வரையிலும் எல்லோருமே நற்சான்றிதழ் வழங்கியதால் பேசி முடிக்கலாம் என்று முனைந்தனர். கனகாவுக்குத்தான் மாப்பிள்ளை போலீஸ் கான்ஸ்டபிள் என்றதும் சற்று பயமாகப் போய்விட்டது. அண்ணன்கள் “ரெண்டு மூணு ஸ்டேஷன்லயே ஆள் வச்சு விசாரிச்சுட்டோம்மா. ஒரு கெட்ட பழக்கம், வம்பு தும்பு இல்லை, துடியா இருக்கார்” என்று சொன்னதன் பேரில் சம்மதித்தாள்.
ஆனால் கதிரவன் நேரில் வந்ததும் அவளுக்கு அவனை மிகவும் பிடித்துவிட்டது.
திருமணம் முடிந்து இரு பிள்ளைகளும் பிறந்து இரண்டு வருடங்கள் முன்வரை வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஒரு நாள் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவன் உள்ளே வராமல் வெளியேயே நின்றான்.
“கனகா ..ஸ்ஸ்.. கனகா” என்று வெளியிலிருந்தே அழைத்தான்.
எட்டிப்பார்த்தவள் ஆச்சரியத்துடன் “ஏன் அங்கேயே நிக்கிறீங்க? உள்ள வாங்க” என்றாள்.
“பிள்ளைங்க தூங்கிட்டாங்களா?”
“மணி பத்தரை. தூங்காம என்ன…” என்றபடியே எழுந்து வெளியே போனாள்.
“சாரி கனகா. கொஞ்சம் குடிச்சிருக்கேன். அதான் பிள்ளைங்க தூங்கிட்டாங்களான்னு கேட்டேன். நீ உள்ள போய் படுத்துக்க. நான் இப்படியே ஹால்ல படுத்துக்கறேன்.”
கனகா அதிர்ந்து போனாள்.
“என்னங்க இது புதுப் பழக்கம்?”
“தவிர்க்க முடியாமல் போயிடுச்சு. எனக்கும் பிடிக்கல. இன்னைக்கு ஒரு நாள்தான். நீ பயப்படாத” என்றபடி உடை மாற்றிக்கொண்டு படுத்துத் தூங்கிவிட்டான்.
ஆனால் அந்த ஒரே நாள் வாரம் ஒரு நாளாகத் தொடர ஆரம்பித்தபோது கனகா நிஜமாகவே பயந்து போனாள். குடித்துவிட்டு வந்தாலும் யாரிடமும் எதுவும் பேசாமல் படுத்துத் தூங்கிவிடுவான். மறுநாள் அவளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு எப்போதும் போல இருப்பான். குழந்தைகளுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தவன் சில மாதங்கள் கழித்துக் குழந்தைகள் இருக்கையிலேயே உள்ளே நுழைவதும் தள்ளாடுவதும் என்றானபோது கனகா மிகவும் பதறிப் போனாள். அவளது கெஞ்சல்களும் கொஞ்சல்களும் விழலுக்கு இறைத்த நீராயின. அவன் பொதுவாக வார இறுதியான வெள்ளிக்கிழமைகளில்தான் குடித்துவிட்டு வருகிறான் என்பதைக் கவனித்தாள். குடித்திருக்கிறான் என்பது தெரிந்தால் உடனேயே ஏதாவது காரணத்தை வைத்து அவன் வருமுன் பிள்ளைகளைப் பொன்னி வீட்டுக்கு அனுப்ப ஆரம்பித்தாள்.
வாரம் ஒரு முறை என்பது வாரம் இரண்டு முறை என்று அதிகரித்தது. குடித்துவிட்டு வந்து அவளை உட்கார வைத்து நடுராத்திரி வரையிலும் ஏதாவது பேசிக்கொண்டிருப்பான். பிறகு குரல் உயர ஆரம்பித்தது. அற்ப காரணங்களுக்காக அவளுடன் சண்டை போடவும் கைநீட்டவும் ஆரம்பித்தபோது கனகா எப்படி இந்தப் பழக்கத்தை நிறுத்துவது, நன்றாக இருக்கிற குடும்பம் பாழாகிவிடுமோ என்று தீவிர மன உளைச்சலுக்கு ஆளானாள். அவன் குடித்துவிட்டு கலாட்டா செய்கிற அடுத்த நாளைக்கு வெளியில் அக்கம் பக்கத்தினரின் பார்வையையும் பேச்சுகளையும் தவிர்ப்பதற்காகக் கடைகளுக்குப் போவதை நிறுத்தினாள். அண்டை வீட்டாருடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டாள். பிறந்த வீட்டில் சொன்னால் வருத்தப்படுவார்கள் என்பதால் அங்கும் எதுவும் சொல்ல முடியவில்லை. தவிரக் கணவனுக்கு மானக்குறைவு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அக்கறையும் இருந்தது. முடியாமல் இறுதியில் பொன்னியிடம்தான் சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தாள்.
என்னதான் கனகா எச்சரிக்கையாக இருந்தாலும் பாலுவிடம் சில மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. அவனுக்கு நன்றாக இருக்கிற அப்பாவை விடக் குடித்துவிட்டு வருகிற அப்பாதான் கெத்தாக இருப்பது போல் தோன்றியது. வீட்டில் இருக்கையில் எப்போதும் அம்மாவுக்கு உதவி செய்யும் அப்பாவை விடச் சில நாட்கள் அம்மாவை அதிகாரம் செய்யும் அப்பாவைப் பிடித்தது. வீட்டில் ஆண்பிள்ளை என்பதனால் எப்படியும் நடக்கலாம் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்திருந்தது. அவன் தங்கை மேகலாவிடம் குடிக்கத் தண்ணீர் எடுத்து வா, சாக்ஸ் கொண்டு வா, சாப்பிட்ட தட்டை அலம்பி வை போன்ற ஏவல்களை எல்லாம் சொல்ல ஆரம்பித்திருந்தான். கனகா கணவனிடமும் மகனிடமும் தனித்தனியாக எவ்வளவு புத்திமதி சொல்லியும் எடுபடவில்லை. கதிரவனாவது தன் செய்கைக்கு வருத்தப்பட்டுப் பேசுவான். மாறாக பாலு எதிர்ப்பேச்சு பேசத் தொடங்கி இருந்தான்.
குடும்பம் சீரழியாமல் எப்படியாவது காக்க வேண்டுமென மறுகினாள் கனகா.
கதிரவனின் பைக் சத்தம் கேட்கவும் படுக்கையறைக்குச் சென்று தலைவலி தைலத்தை எடுத்துத் தடவி, போர்த்திக்கொண்டு படுத்துக் கண்களை மூடிக்கொண்டாள். உள்ளே நுழைந்தவன் அவளைக் காணாமல் தேடிக்கொண்டு வந்தான்.
“அதுக்குள்ள தூக்கமா? நான் வரும்போது எந்திரிச்சு வரணும்னு தெரியாதா?” குளறினான்.
“ரொம்ப தலைவலி, ரெண்டு முறை வாந்தி எடுத்துட்டேன். அதான் படுத்துருக்கேன்” என்றவள் அவனிடமிருந்து வந்த நெடி நிஜமாகவே குமட்டலை உண்டு பண்ண, எழுந்து குளியலறைக்கு ஓடினாள். அந்தச் சாக்கில் அன்றைய பொழுது தப்பித்துவிட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
மறுநாள் மாலை தெருவில் சிறு பிள்ளைகள் பட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள். பத்து வயது மாலு, அவள் தம்பி பாபு, ராஜா, குமார் ஆகிய நால்வரும் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அனைவரது கண்களும் மாலுவின் பட்டம் மீதே இருந்தன. அவள் அப்பா சிவப்பு நிறத்தில் மஞ்சள் வால்கள் வைத்த மிக அழகான பெரிய பட்டமாகச் செய்து கொடுத்திருந்தார். கெட்டி நூல் போடுவதற்கு முன் எடுக்க வேண்டாம் என்றதையும் மீறி அம்மாவிடம் கெஞ்சி எடுத்து வந்திருந்தாள்.
“டேய் ராஜா, என் பட்டத்தை ஏத்திக் குடுடா.. எனக்கு வர மாட்டேங்குது.”
ராஜாவும் குமாரும் சேர்ந்து பட்டத்தை மேலே ஏற்றி நூலை மாலுவின் கையில் கொடுத்தார்கள். “இப்படியே புடிச்சுக்கோ. இதுக்கு மேல ஏத்தாத.”
ஆனால் நல்ல காற்றில் பட்டம் அழகாக உயரே உயரே எழும்பியது.
குமார் கத்தினான்.
“டேய் அங்க பாருடா. ஒரு புளூ கலர் பட்டம் நம்ம பட்டத்தை விரட்டிட்டு வருது. ஏய், மாலு, சீக்கிரம் பட்டத்தைக் கீழே இறக்கு. அவன் டீல் போட வர்றான். சீக்கிரம் இறக்கு.”
அவன் கத்திக்கொண்டிருக்கும்போதே பட்டம் அறுபட அவள் கையில் இருந்த நூல் தொய்ந்து கீழே விழுந்தது. சற்று நேரத்தில் அவர்கள் கண்களிலிருந்து பட்டம் மறைந்துவிட்டது.
“யாரு பட்டம்டா அது? யார் இப்படி பண்ணினது?” மாலு கோபமாகக் கேட்டாள்.
“அது ரெண்டாம் தெரு பாலு அண்ணன் பட்டம். அவன்தான் நேத்து கடையில அந்தப் பட்டத்தை வாங்கிட்டு இருந்தான்” என்றான் ராஜா.
“பின்னாடி தெருதானே, வா, நாம போய்க் கேட்டு வாங்கிட்டு வரலாம்.”
“ஐயோ வேணாம், அவன் சண்டை போடுவான். தரமாட்டான். ரொம்பக் கேட்டா அடிச்சிடுவான். அவங்க அப்பா போலீஸ் வேற” என்று பயந்தான் குமார்.
மாலுவுக்குக் கோபம் வந்துவிட்டது.
“அவங்க அப்பா போலீஸ்னா எனக்கு என்ன? என் பட்டத்தை எப்படி அவன் தராமல் போகலாம்? நான் போய்ப் வாங்கிட்டுதான் வருவேன். வேணும்னா கூட வாங்க. இல்லன்னா நான் மட்டும் போறேன்” என்றபடி தன் தம்பி பாபுவுடன் வேகமாக பாலுவின் வீட்டை நோக்கி நடந்தாள்.
மாலு சென்றபோது பாலு வீட்டுவாசலில் சுற்றுச்சுவர் கட்டுவதற்காகக் கொட்டப்பட்டிருந்த மணல் குன்று மேல் உட்கார்ந்திருந்தான். அவன் கூட இன்னும் இரண்டு பையன்களும் இருந்தார்கள். பக்கத்திலேயே அவனது நீலநிறப் பட்டமும் மாலுவின் சிவப்புப் பட்டமும் கிடந்தன.
மாலு நேராக அவன் எதிரே நின்று, “அண்ணா, அது என்னோட பட்டம். என்கிட்ட கொடுத்திடு” என்றாள்.
பாலு சிரித்துக்கொண்டே, “டீல் போட்டு எடுத்தாச்சுன்னா அது இனிமே என்னோட பட்டம். அதெல்லாம் தர முடியாது போ” என்றான்.
“இல்லண்ணா, எங்கப்பா எனக்குச் செஞ்சு கொடுத்த பட்டம் அது. குடுத்தாதான் போவேன்.”
“என்ன ரொம்ப பேசுற? பொம்பளப் பிள்ளைங்களை யாரு பட்டம் விட சொன்னது? அதெல்லாம் தர முடியாது. ஓடிப்போயிடு.”
அவன் சொன்னதையும் மீறி மாலு அவன் அருகில் போய்ப் பட்டத்தை எடுக்க முயற்சிக்க, பாலு கோபமாகி அவளைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டான். மாலு மணலில் சரிந்துகொண்டே வந்து விழுந்தாள்.
“டேய் பாலு, வேணாண்டா… அந்தப் பிள்ளை பட்டம் நமக்கு எதுக்கு… கொடுத்துடு.”
“சும்மா இருங்கடா… அதுக்கு என்ன அவ்வளவு திமிரு? என்கிட்டயே இவ்ளோ வாலாட்டுது.”
மாலு மணலைத் தட்டிவிட்டுக்கொண்டு எழுந்தாள். பேசாமல் மணல் மேல் ஏறித் திரும்பவும் தன் பட்டத்தை எடுக்க முயன்றாள்.
“சொல்லிக்கிட்டே இருக்கேன்… கொழுப்பா… பொம்பளைப் பிள்ளைன்னு பார்க்கிறேன்.. இல்லைன்னா அடிச்சு பல்லு கில்லு எல்லாம் பேத்துடுவேன்.”
மாலு பட்டத்தைக் கையில் எடுத்துவிட, அவள் கையிலிருந்து அதைப் பிடுங்கிக்கொண்டு முழங்காலால் வேகமாக அவளை உந்தித் தள்ளினான். மாலு நிலைகுலைந்து உருண்டு விழுந்ததில் பக்கத்தில் கொட்டியிருந்த சரளைக் கற்களில் ஒன்று நெற்றியில் குத்தி இரத்தம் வரத் தொடங்கியது. பாபு அதைப் பார்த்து ஓவென்று அழ, அந்தச் சத்தம் கேட்டு வெளியில் வந்த மேகலா நடந்ததைப் பார்த்துக்கத்திக்கொண்டே வீட்டிற்குள் ஓடினாள்.
“அம்மா, என் கிளாஸ் பாபுவோட அக்கா மாலுவை அண்ணன் பிடிச்சு தள்ளிடுச்சு. ரத்தம் கொட்டுதுமா.”
மாலு எழுந்தாள். சுற்றிலும் பார்த்தாள். வேலி ஓரத்தில் கிடந்த நீளக் காட்டாமணக்குக் குச்சியை கையில் எடுத்துக்கொண்டு பாலுவை நோக்கி ஓடினாள்.
கனகா பதறிக்கொண்டு வெளியே ஓடி வர, அப்போது வெளியே சென்றிருந்த கதிரவன் வண்டியில் வந்து இறங்கினான்.
பாலு அவளுக்கு இரத்தம் வந்தது கண்டு உள்ளுக்குள் கொஞ்சம் பயந்தாலும், “நான் யாரு தெரியுமா, எங்கப்பா மாதிரி” என்று நண்பர்களிடம் பெருமையுடன் சொல்லிக்கொண்டிருந்த எதிர்பாராத நொடியில் மாலு அவன் மேல் பாய்ந்தாள். மேகலா “அண்ணா” என்று பதற, கனகா அவள் வாயைப் பொத்தி கையைப் பிடித்துக்கொண்டு பேசாமல் நின்றாள்.
கதிரவன் என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்க்க, மாலு கீழே விழுந்தவனை சகட்டுமேனிக்குக் குச்சியால் விளாசத் தொடங்கினாள்.
“என்ன சொன்ன, பொம்பளைப் பிள்ளைக்குத் திமிரா, பல்லை உடைப்பியா.. எங்க கை பூ பறிச்சுட்டு இருக்குமா… உனக்கு பையன்னு கொம்பா முளைச்சிருக்கு? எங்களுக்குத் திருப்பி அடிக்கத் தெரியாதா? பொறுமையா இருந்தா என்ன வேணா செய்வியா? இப்போ தெருவில் வச்சு உன்னை அடிச்சுட்டேன்… இனிமே இதை மறப்பியா… இன்னொரு புள்ள மேல கையை வைப்பியா… மரியாதையா இருந்து மரியாதையை வாங்கிக்க.”
பாலு அதிர்ச்சியில் உறைந்துபோய்க் கிடக்க, கனகா கதிரவன் பக்கம் திரும்பியபோது அவன் தன்னையும் அறியாமல் ஒரு முறை தன் முதுகைத் தடவிக்கொண்டதைக் கவனித்துச் சட்டென்று பார்வையைத் திருப்பிக்கொண்டாள். மாலு கை ஓய்ந்து குச்சியைக் கீழே போட்டுவிட்டுத் தன் பட்டத்தை எடுத்துக்கொண்டு, “வாடா பாபு” என்று தம்பியை இழுத்துக்கொண்டு இரத்தம் ஒழுகுகிற நெற்றியுடன் திரும்பி நடந்தாள்.
கனகா கதிரவனை நேராகப் பார்க்க, அவன் அவள் முகத்தைப் பார்க்காமல் தவிர்த்துத் தலையைக் குனிந்தபடி வண்டியை ஸ்டாண்ட் போட முயன்றான்.
சட்டென்று கனகா மகளை இழுத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் ஓடினாள். பின்தெருவில் நடந்துகொண்டிருந்த மாலுவை கையைத் தட்டிக் கூப்பிட்டாள்.
“அய்யோ அக்கா, அவங்கம்மா…”
“சும்மா வாடா. பயப்படாதே.” மாலு வந்து வேலிக்கு வெளிப்புறம் நின்றாள்.
“இந்தா புள்ள மாலு, இதை வாங்கிக்க.”
அருகிலிருந்த செடியிலிருந்து இரண்டு ரோஜாப் பூக்களைப் பறித்து மேகலாவிடம் கொடுத்து மாலுவிடம் கொடுக்கச் சொன்னாள் கனகா. எம்பி அவள் நெற்றியைத் துடைத்து விட்டாள்.
மாலு புன்சிரிப்புடன் ரோஜாப்பூவுடனும் பட்டத்துடனும் நடந்து சென்றாள்.
அடித்து ஓய்ந்த அந்த கோடை மழையின் ஈரத்தில் குடும்பத்தில் நல்லறிவு துளிர்த்துவிடும் என்ற நம்பிக்கையுடன் வீட்டினுள் சென்றாள் கனகா.